Saturday, August 30, 2008

தாம் தூம்- கிளுகிளுப்பும் விறுவிறுப்பும்


ஜீவாவின் படங்களில் காட்சி அமைப்புகளுக்கு குறை சொல்ல இயலாது. இரம்மியமான காட்சிகளின் வழி இரசிகர்களின் மனதை படத்தில் இட்டுச் செல்வதில் அவர் திறமை பாராட்டத்தக்கது.

ஜீவாவின், பசுமையும் இளமையும் கொஞ்சும் காட்சிகளுக்காகவும், மனதை கவரும் வகையில் இருந்த இசைக்காகவும் இத்திரையை காண எண்ணி இருந்தேன். குசேலன் மற்றும் சத்யம் திரைப்படங்களின் ஏமாற்றத்தை தாம் தூம் தீர்த்து வைக்கிறது எனச் சொன்னால் அது மிகை இல்லை என்றே நினைக்கிறேன்.

அதிகப்படியான காட்சியமைப்புகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ ஆய்வு மாநாட்டிற்காக ரஷ்யா செல்லும் ஜெயம் ரவி எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதையாக அமைகிறது.

உள்ளம் கேட்குமே மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் மென்மையான காதல் சித்திரத்தை உலாவவிட்ட ஜீவா, தாம் தூம் திரையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்தும் கொடுத்திருப்பது சிறப்பாகவே இருக்கிறது. கட்டிடத்திற்கு கட்டிடம் தாவுவதையும், இளநீரை எட்டி உதைத்து கற்சுவரை உடைக்கும் வண்ணமும் இருக்கும் காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம். இவற்றை செய்ய கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது ஜெயம் ரவி அந்த ஏரியாவில் கை வைப்பது தவறு என்பதை உணர்ந்தால் நன்று.

தெனாலி படத்திற்கு அடுத்தபடியாக ஜெயராமிற்கு இப்படம் ஒரு நல்ல மைல்கல்லாக அமையும் என தெரிகிறது. அவரது பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். எப்படிபட்ட முக பாவனையையும் தன்னால் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக வரும் கங்கனாவை விட லஷ்மி ராய் அழகாக இருக்கிறார். கிராமத்து காட்சி அமைப்புகள் காதலை மையமாகக் கொண்டிருக்கிறது. முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவை காட்சிகள் அசத்தல். "உன் அப்பன் உன்ன பொண்ணு பார்க்க அனுப்பி வச்ச மாப்பிள்ளை இப்பதான் வந்து சேர்ந்திருக்கான்" என ஜெயம் ரவியை பார்த்து இரு கிழவிகள் அடிக்கும் லூட்டி இரசிக்கும்படி உள்ளது.

கங்கனாவின் நடிப்பு ஒவ்வாமலே இருக்கிறது. கிராமத்தைச் சுற்றி ஓடி ஆடி திரியும் பெண் மைதா மாவை போல் வெளிச்சமான கலரில் இருக்கிறார். கிராமத்து பெண்கள் இப்படி சுட்டித் தனம் செய்து திரிவார்களா எனச் சிந்திக்க வைக்கிறது.

தாம் தூம் திரை பாடல்கள் குசேலனை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது. ஆடியிலே முக்குளிக்கும் அழகே எனும் பாடல் கலக்கல். இப்பாடல் இரட்சகன் திரையில் வரும் கனவா இல்லை காற்றா எனும் பாடலை நினைவு கூரும் வகையில் உள்ளது. 'உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி முந்தானை படியேறவா' எனும் வரி 'டச்'.


இப்படத்தில் எனக்குப் புரியாத சில விடயங்கள்:

1)
ஒரு மாடல் எதற்காக போதை பொருள் கடத்துகிறாள், அக்கும்பலோடு தொடர்பு வைத்திருக்கிறாள்?
2)
'சின்னது சின்னது' என கேலி செய்யப்படுவதற்கான காரணம் தெரியாமலேயே போவது எதனால்?
3)
சிறையில் அடைக்க கொண்டுச் செல்லப்படும் ஜெயம் ரவி இருவரால் தாக்கப்படுகிறாரே அவர்கள் யார்? பாதுகாப்பில்லாத சிறையா? போலிஸாரின் திட்டமா?
4)
ஒரு நாட்டின் தூதர் குண்டர் கும்பலோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் நிலை எதனால் வந்தது?
5)
ஒரு ஆபத்தில் இருந்து தப்பி வரும் போது காதலின் நினைவு வந்து கைகளை தூக்கி பறப்பார்களா? (என்ன கொடுமை இது)

பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் ஜெயம் ரவிக்கு முக்கியப் பிரச்சனையாய் அமைவது மொழி. ரஷ்யர்கள் மொழி பற்று மிக்கவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை ஒரு தமிழ் எழுத்தாளர் கையெப்பமிடும் சமயம் ரஷ்யர் ஒருவர் கேட்டாராம். உங்களுக்கு எழுத்து கிடையாதா ஏன் ஆங்கிலத்தில் கையெப்பமிடுகிறீர்கள் என? அவர்களின் மொழி பற்று பாராட்டுதலுக்குரியது. நம்மில் எத்தனை பேர் தமிழில் கையெழுத்து போடுகிறோம்?

ஜெயம் ரவியின் எம்.குமரனுக்கு பிறகு தாம் தூம் சிறப்பாகவே இருக்கிறது. தைரியமாக பார்க்கலாம்.

Friday, August 29, 2008

புதைந்த நினைவுகள் (2)

பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும் வரை இடைப்பட்ட காலத்தில் அதிகமாகத் தமிழ் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கல்வி முறையின் மாற்றம் எனச் சொல்வதை விட நான் தான் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளவில்லையென சொன்னால் மிகவும் தகும்.

ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் சமயம் என் சனி ஞாயிறுகளை அதிகமாக வாசிப்பிற்கே செலவழிப்பேன். அப்படி படித்த புத்தகங்களில் பல என்னுள் இன்னமும் நீங்காமல் இருக்கின்றன. ஆனால் இப்போது அப்புத்தகங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே. விசாரித்துப் பார்த்ததில் பலருக்கும் அப்புத்தகங்களை பற்றிய தகவல்கள் தெரியாமலே இருக்கிறது.

இப்போதெல்லாம் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பதை தவிர்க்கிறேன். முடிந்த மட்டும் அவை என் சேகரிப்பில் இருப்பதே நலம் என நினைக்கிறேன். புத்தகங்களை இரவல் கொடுப்பதையும் முடிந்த அளவு தவிர்க்கிறேன். போன புத்தகங்கள் பல திரும்பாமலே தங்கிவிடுவது தான் இதற்குக் காரணம். அதனால் தான் நல்ல சேகரிப்புகளை இரவல் கொடுக்கவே மனம் வரவில்லை. நன்கு அறிந்த நண்பர்கள் ஓரிரண்டு பேர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

மலரே குறிஞ்சி மலரே

இது புத்தகத்தின் தலைப்பு இல்லை. எனக்கு 11/12 வாயதாக இருந்த சமயம் நயனம் என்ற வார இதழில் வந்த தொடர்கதையின் தலைப்பு. பத்திரிக்கைகளில் வரும் தொடர்களை படிக்க அதிக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இத்தொடரை முதல் முறை படித்த போதே அதன் தாக்கம் என்னுல் ஒட்டிக் கொண்டது.

தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. தோட்டத்தில் பிறந்து நன்கு படித்து வாழ்வில் முன்னேறி வரும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதலிலும் அதன் பின்னணிகளிலும் கதை நகர்கிறது. அவன் காதலிப்பது இரப்பர் பால் தொழிற்சாலை வைத்திருக்கும் ஒரு சீன முதலாளியின் மகளை.

பல எதிர்ப்புகளுக்குப் பிறகு முடிவில் காத்திருப்பது என்னவோ பெரும் சோகமே. அவர்கள் ஓடிப்போக நினைக்கும் சமயம் மெய் லின் எனும் அவன் காதலியின் வீட்டில் தீ பிடித்து அவள் இறந்துப் போகிறாள். பல வருடங்கள் கழிந்து அத்தோட்டத்திற்கு வருகை தரும் அந்த இளைஞனின் (கிழவன்) மனத் திரையில் பழைய சோகங்கள் படர்வதாக கதை முடியும்.

இக்கதாசிரியரின் பெயர் தியாகராஜன் என நினைக்கிறேன். வெளி தோற்றத்தை வைத்து மனிதனை எடை போடாதிருத்தலை பற்றி பல இடங்களில் மிகவும் அழகாகச் சொல்லி இருப்பார். இக்கதை நாவலாக வந்ததா என தெரியவில்லை. அப்படி இருப்பின் தெரிந்தவர்கள் சொல்லவும்.

கண்ணீர் சொல்லும் கதை

சஞ்சிக் கூலிகளாக மலாயா வந்தவர்களில் ஒருவரின் சுயசரிதமாக இந்நாவல் அமைந்திருக்கும். தோட்ட மக்கள் பட்ட கஷ்டங்கள். அவர்களுக்குள் அமைதியாக உருவாகிய அமைப்புகள், போராட்டம் எனக் கதை நகரும். கதையின் நாயகன் தாய் தந்தையின்றி வாழும் இளைஞன். அவன் சாதாரண தோட்டத் தொழிலாளி.

கால மாற்றத்தில் அவனுக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டு எதிர்பாரா விதமாக விபத்திற்குள்ளாகிறான். இறுதியில் பிச்சை எடுக்கும் நிலையில் தெருவுக்கு வந்த தமிழனுக்கு நம் தமிழினம் என்ன செய்கிறது எனக் கதை முடியும். இந்நாவலை எழுதியவர் இரா.ராஜேந்திரன் என ஞாபகம். ஆனால் குறிப்பாக சொல்ல முடியவில்லை.

ஊனம் ஒரு தடையல்ல

விசக் காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவன் ஒருவன் கால்கள் ஊனமாகிறான். சிறு வயதில் தந்தையைப் பறி கொடுத்த அவனுக்குத் தாய் மட்டுமே துணை. ஊனமாக இருக்கும் அந்த ஏழை மாணவனை சில மாணவர்கள் வெறுக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். அதை பொருட்டாக கொள்ளாமல் அவன் படித்து சாதனை புரிவது கதையின் சுருக்கம்.

கண்ணாடி மலை

பள்ளி விடுமுறையில் சுற்றுலா போகும் மணவர்களை சுற்றி கதை நடக்கும். இதை படித்த போது இம்மலை உண்மையாகவே பினாங்கில் இருக்கும் என நினைத்தேன். அப்பாவிடம் அழைத்துப் போகவும் சொல்லி இருக்கிறேன். பின்னாட்களில் தான் அது புனைவு என்பதை உணர்ந்தேன்.

மிஸ்திரி பெத்தா ராசிய (MISTERI PETA RAHSIA)

இது ஒரு மலாய் நாவல். அதன் அர்த்தம் ‘இரகசிய வரைபடத்தின் மர்மங்கள்' எனப் பொருள்படும். ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரசியம் குன்றாத மர்மக் கதை. நாயகனுக்கு ஒரு கெடுதலும் நடந்துவிடக் கூடாதே என நம் மனதுல் ஒரு உந்துதல் இருந்துக் கொண்டே இருக்கும். அதுவே கடைசி வரை கதையை நாம் கருத்தூன்றி படிக்கவும் துணை புரிகிறது.

இவற்றை தவிர்த்து மஞ்சள் வீடு, ஏணிப் படிகள் என இன்னும் பல பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றையும் பட்டியலிட இப்பதிவு போதாது. இங்கு சொல்லி இருப்பவை நான் மிக இரசித்தவை. இப்புத்தகங்கள் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

Wednesday, August 27, 2008

காமத்தை வெல்வது எப்படி?


சமீபத்தில் படித்த வல்லினம் மாதிகையில் ஒரு துணுக்குத் தோரணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதை எழுதிய ம.நவினுக்கு வாழ்த்துக்கள்.


காமம் வெல்வது பற்றி

காதலி சொல்லிக் கொண்டிருந்தாள்


முதலில் தன் முகம் மறக்கச் சொன்னாள்

அதில் துளைக்கள் அதிகமிருப்பதாகவும்

அவற்றில் அழுக்குகள் வெளியேறக்கூடுமென்றாள்


உதடு பற்றி கேட்டேன்

சுரக்கும் எச்சில் பற்றியும்

கிருமிகள் பற்றியும் நினைவுபடுத்தினாள்


என் பார்வையை விளங்கிக்கொண்டவளாக

மார்பை பசு மடியுடன் ஒப்பிட்டாள்

அத்தனையும் ஊளை சதையென்றாள்


என்னைத் தொடரவிடாமல்

தனது மூத்திரம் பற்றியும்

அதன் துர்வாடை ஒரு பிணத்திற்குச் சமமானது என்றாள்


எனது பார்வையில் நம்பிக்கை இழந்தவள்

பிரத்தியோக திரவம் ஒன்று தடவி

தனது தோலை சுருங்கச் செய்தாள்

ஒரு தீக்குச்சியில் தன்னை எரித்து சாம்பலாக்கினாள்


நான் பத்திரமாக விழுந்து கிடந்த

அவள் காமத்தை கையில் ஏந்திச்சென்றேன்.

Friday, August 22, 2008

சோறு தின்னே சாவுங்கடா!

காலை வேளையில் பணக்காரனைப் போலவும், மதியம் ஏழையை போலவும், இரவு பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிட வேண்டும் என்பார்கள். இன்றய அவசர உலகினில் நமது உணவு பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டுவிட்டன எனக் கூறினால் அது மிகை இல்லை.

காலையில் வேலைக்குத் தாமதமாக எழுபவன் காலைப் பசியாறலைத் தவறவிடுகிறான். மதியம் மூக்கு பிடிக்க சாப்பிடுகிறான். மதியம் தேனீரைப் பருகி இரண்டொரு பலகாரங்களைத் தினித்துக் கொள்கிறான். இரவில் மட்டுமே உணவை மனதார ருசி பார்க்கும் தருணம் கிடைக்கிறது. இதன் காரணமாக இரவு வேளைகளில் அளவிற்கு அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு தூங்கிப் போகிறான்.

உணவு உட்கொண்டப் பிறகு உறக்கம் கொள்வது மிகவும் தகாத பழக்கம் என்பார்கள். உணவு செரிமானம் ஆகாது. வயிற்றில் இருந்தபடி பாழ்பட்டுப் போகும். சிலர் காலையில் எழுந்தவுடன் அவர்களின் வாய் துர்நாற்றம் வீசுவதற்கு இது தான் காரணம். செரிமானம் ஆகாத உணவினால் மலச்சிக்கலும் உண்டாகிறது.


சீனர்களிடையே ஒரு பழக்கம் உண்டு. மாலை ஆறு அல்லது ஆறரை மணி வாக்கில் உணவை உட்கொள்வார்கள். பிறகு பிள்ளைகளை விளையாட விடுவார்கள். பெரியவர்கள் நடை போடுவார்கள். இது உணவு செரிமானத்திற்குச் சிறந்த வழி. இரவு பசியெடுத்தால் கனமில்லா உணவு வகைகளை கொஞ்சமாய் சாப்பிடுவார்கள். இது அவர்களின் காலாச்சாரத்தில் உண்டு. இன்றைய நாட்களில் சீனர்களும் இவ்வுணவு முறையைப் பின்பற்றுகிறார்களா என்பதும் கேள்வியே.

மனித வாழ்க்கைக்குக் காலை உணவு அத்தியாவசிமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை உணவை உட்கொண்ட பிறகே அன்றய நாட்களுக்கான வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட வழி செய்கிறது. நேரம் தவறி எடுத்துக் கொள்ளப்படும் காலை உணவு உடற் சோர்வையும் சோம்பலையும் ஏற்படுத்தும்.

குழந்தைகள் சரியான உணவு முறையை பேன சிறு வயது முதல் கற்பித்துக் கொடுத்தல் நலம். பெற்றோர்களும் முறையான உணவு வழக்கத்தை பின்பற்றுவாராயின், குழந்தைகளுக்கு அப்பழக்கம் இயல்பாக அமைந்துவிடும். நாம் உண்ணும் உணவானது உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அறிவாற்றலின் வளர்ச்சிக்கும் வித்தாக அமைய வேண்டியது அவசியம். வாயோடு மணக்க குடலோடு கடுக்கவும் இருப்பின் அது சரியான உணவாகாது.



காலம் தவறாமலும், நினைத்த நேரங்களில் கண்டதை சாப்பிடாமலும், செரிவான உணவு வழக்கைத்தை அமல்படுத்துவோர் மிகவும் சொற்பமே. இதற்கு பெருமளவில் நாம் சொல்லும் பதில் தான் என்ன? கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மனித வாழ்க்கையே ஆகும்.

காலை உணவு மூளைக்கு சாப்பாடு என்பது அறிவியல் அறிஞர்கள் கூற்று. உதாரணமாக ரொட்டி வகைகளில் இருக்கும் ஊட்டச்சத்து மூலையில் துரித செயல்பாட்டுக்கும் உடல் உற்சாகத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன.

ஒரு ஆய்வின்படி காலை பாசியாறையை சாப்பிடமல் பள்ளி வரும் மாணவர்களை விட சாப்பிட்டு வரும் மாணவர்களே படிப்பில் சிறந்து விளங்குவதாகக் குறிபிட்டுள்ளார்கள். இவ்வாய்வின் மற்றுமோர் தகவலின்படி காலை உணவு அத்தியாவசியம் இல்லாதது எனும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறதாம். இது மிக வேதனையளிக்கக் கூடிய விடயமாய் அமைகிறது. ஏன் இப்படி? காலையில் உட்கொள்வதைவிட ஒரே வேலையாக மதியம் சாப்பிட்டுவிட்டால் போதும் என நினைக்கிறார்கள்.

பள்ளிச் செல்லும் மாணவர்களில் பெருவாரியானவர்கள் காலை பசியாறுவது இல்லை. 10 மணி வாக்கில் பள்ளியில் கொடுக்கப்படும் ஓய்வு நேரத்தில் உணவு எடுத்துக் கொள்கிறார்கள். அப்படித் தேர்வு செய்யும் உணவு வகைகளில் ருசி மிகுந்தவற்றை தேர்வு செய்கிறார்களே தவிர அவை ஆரோக்கியமான உணவு வகைகள் தானா என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

இதனால் மாணவர்களின் அறிவாற்றல் பாதிப்பிற்குள்ளாகிறது. பால் மற்றும் பழச்சாறு வகைகளில் காலை உணவாக உட்கொள்ளுதல் நலம். ஆனால் சிலருக்கு பால் குடித்தால் வாந்தி வரும் என்பார்கள். காலை உணவு ஒவ்வாது எனவும் சொல்வார்கள். தொட்டில் பழக்கம் இடுகாடு மட்டும் என்பதை போல் கடைசி காலம் வரை இப்படிபட்ட பழக்கங்களோடு இருப்பவர்களும் உண்டு.

அதை விடக் கொடுமையாக எந்நேரமும் சோறு மட்டுமே உணவாக கொள்ளும் ஆட்களும் உண்டு. சோறு சாப்பிட்டால் மட்டுமே இவர்களுக்கு வயிறு நிறையும்.

Food Facts Asia நடத்திய ஆய்வின்படி, காலம் தவறி காலை உணவை எடுப்பவர்களின் உடல் எடை அதிகரிப்பதாகவும். நேரப்படிக் காலை உணவைக் கொள்பவர்களின் எடை சீரான முறையில் இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனையடுத்து காலை உணவை தவிர்த்து நேரடியாக மதிய உணவை உட்கொள்ளும் பிறிவினர் உடல் எடையால் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். காலை உணவை தவிர்த்தவர்கள் மதிய உணவு வேலைக்குக் காத்திருப்பார்கள். பசியும் அதிகபடியாக இருக்கும். இதனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் எண்ணம் எழும். அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடையும் கண்மண் தெரியாமல் எகிறிவிடுகிறது. அதை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் அவஸ்தைக்குள்ளாகிறது.

உணவு மனிதனின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று. மனித வாழ்க்கையின் அச்சாணியாக விளங்குகிறது. சரியான உணவு முறையைத் தேர்ந்தெடுத்து சிறப்பான முறையில் வாழ்வது நம் கையில்.

Monday, August 18, 2008

நெஞ்சோடு சில ராகங்கள்


அவளைச் சந்தித்த
மணித் துளிகளோடு நெஞ்சம்
வட்டம் போட்டுத் திரிகிறது.
அவளோடு இருந்திடவே எண்ணம்
திட்டம் போட்டுத் தவிக்கிறது.

கையோடு கை- சேர்த்து
விரலோடு விரல் கோர்த்து
புரியாத கோலம் பல பல
வரைந்த பொழுதுகள்.

கோலத்திலும் கவிதை
பிறக்கும் விந்தை கண்டேன்.
பார்வையிலும் தேன் துளி
சிந்த உன்னுள் விழுந்தேன்.

காதலெனும் மதத்தை
ஏற்ற பின்
இனமெனும் வேறுபாடுகள்
இல்லையடி பெண்ணே.

காந்த உதட்டில்
கபடி ஆடத் தடைகள் போடுகிறாய்.
காதல் கடிதம் போதவில்லை என்று
காதோடு முறையீடு செய்கிறாய்.

தள்ளி நிற்கும் என்னை
கிள்ளிச் சீண்டிப் பார்ப்பதேன்?
பக்கம் வந்த என்னை
தர்க்கம் செய்து தடுப்பதேன்?

உன் கரம் வருடி
உச்சி முகர்தலும் இன்பம்
உன் கோபம் கண்டு
உனைக் கொஞ்சுதலும் இன்பம்

காதலின் கொடுமையான இன்பம் நீ
காதலின் இன்பமான கொடுமையும் நீ!

Saturday, August 09, 2008

ஒரு கப்பலின் கதை- டாக்டர் ஜெயபாரதி


சமீபத்தில் டாக்டர் எஸ்.ஜெயபாரதி ஐயாவால் எழுதப்பட்ட ஒரு கப்பலின் கதை எனும் நீள் கட்டுரையை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தகவல் நிறைந்த இக்கட்டுரையை மிக சுவாரசியமாக கொடுத்திருப்பது ஜெயபாரதி ஐயாவின் தனித் தன்மை.

நீங்கள் இங்கே படித்து முடிக்கும் ஒவ்வொரு சொற்களிலும் சரித்திரம் படிந்து வருவதை உங்களால் உணர முடிகிறதா? இறந்த காலம் முக்கிச் செய்தியை பரப்புமாயின் அது சரித்திரத்தைப் படைக்கிறது. நடந்து முடிந்த செய்தியை நன்முறையில் சமர்ப்பித்தலும் மிக முக்கியமல்லவா. இக்கட்டுரையின் வழி புதிய சந்த்தியினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நன்தகவலை சிறப்பான முறையில் ஜெயபாரதி ஐயா சொல்லியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

பலதுறைகளில் வல்லுனராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கும் கடாரத் தமிழ் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி ஓர் ஓய்வு பெற்ற மருத்துவ இயக்குனர். தற்சமயம் சுங்கைபட்டாணியில் மனைவியுடன் வசித்து வருகிறார். பல பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதி புகழ்பெற்றவர். பல நூல்களை எழுதி இருக்கிறார். ஆறாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் இவர் வாசித்த குமரிக்கண்டம், சிரிப்பு ஆகிய கட்டுரைகள் இவருக்கு தமிழ்கத்தில் புகழ் வாங்கித் தந்தன.

தற்சமயம் இவரது இருபத்திரண்டு நூல்கள் தயாரிப்பில் உள்ளன. அவற்றில் ‘இராஜேந்திர சோழரின் கடார படையெடுப்பு’, ‘புராணங்களில் விண்வெளி நாகரிகங்கள்’ ‘சித்தர்கள் ஒரு பார்வை’ போன்றவை மிக முக்கியமானவய்.

அவரது ஒரு கப்பலின் கதை எனும் நீள் கட்டுரையில் ஆரம்ப காலத்தில் மேடான் –பினாங்கு மற்றும் சென்னைக்கு பயண சேவையை வழங்கி வந்த எஸ்.எஸ்.ரஜூலா எனும் கப்பலின் கதையை ஆராய்ந்துக் கொடுத்திருக்கிறார்.

அக்காலத்தில் இரு கரைகளுக்கும் இடையே மக்களை சுமந்து சென்று வந்த ரஜூலா எனும் கப்பல் இறுதியாக உடைபட்டது எனும் வரியை படிக்கும் போது நாமக்கு அக்கப்பலை பார்க்கும் வாய்பில்லாமல் போனதை எண்ணி மனம் ஏங்குகிறது.

அக்காலகட்டத்தில் ரஜூலா மிகப் பெரிய கப்பலாக கருதப்பட்டது. அதன் வேகம், தன்மை, என அனைத்து சித்தரிப்புகளையும் ஜெயபாரதி ஐயா கொடுத்திருப்பது நாமும் கப்பலின் ஒரு பயணியெனவும், அக்கப்பலை பார்க்கும் மக்களில் ஒருவனாகவும் மாறிவிடுகிறோம்.

யார் கண்டார்கள், என் முன்னோர்கள் கூட அந்த ரஜூல கப்பலில் மலாயாவிற்கு வந்திருக்கலாம் இல்லையா? திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது போல் அக்கப்பலில் வந்தவர்கள் வசதிபட பொருள் தேடிக் கொண்டு திரும்பி இருக்கிறார்கள். தலையில் முக்காடோடு திரும்பியவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் அவரவர் உழைப்பு அல்லவா? ஏற்றி வந்த கப்பல் என்ன செய்யயும்.

ரஜூலாவை ‘ரிப்பேரே ஆகாத கப்பல்’ என குறிப்பிட்டிருக்கிறார். இது அக்காலத்தில் மக்கள் வேலை மீது காட்டும் அக்கரையை எடுத்துரைக்கிறது. அது மட்டுமன்றி கடல் போக்குவரத்துக்களில் ஏற்பட்ட முக்கிய விடயங்களையும் ஆசிரியர் விளங்கக் கூறி இருக்கிறார். அவர் வைத்திருக்கும் நினைவாற்றலுக்கும், சேகரித்து வைத்திருந்திருக்கும் தகவலுக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும்.

51 ஆண்டுகள் பயண சேவையை வழங்கிய ரஜூலவை பாழைடைந்தவுடன் உடைத்துவிடுகிறார்கள். அதன் பின் எம்.வி.சிதம்பரம் மற்றும் பூங்காராயா என்னும் கப்பல்கள் சேவையை வழங்கி இருக்கின்றன. கால ஓட்டத்தில் உருவான விமான சேவையால் கடல் பயணம் வெகுவாக பாதிப்படைந்தது.
ரஜூலாவின் மகத்தான சகாப்தம் மறைந்துவிட்டது. எத்தனையோ பேர்களுடன் அவர்களுடைய நம்பிக்கைகளையும் அவர்களின் வெற்றிகளையும் சுமந்து சென்ற கப்பலல்லவா என ஆசிரியர் முடித்திருப்பது நெஞ்சை வருடும் வரியாக இருக்கிறது.

ஜெயபாரதி ஐயாவுடன் அதன் பின் வந்த பூங்கா ராஜா கப்பலின் தகவல்களை கொஞ்சம் விசாரித்துப் பார்த்தேன். அக்கப்பலை பற்றிய சில காது வழி தகவல்கள் மட்டுமே சிக்கியுள்ளன. மேலும் தகவல் கிடைக்குமாயிம் பதிவிடுகிறேன்.

கப்பலின் கதையை இணையத்திலும் படித்து மகிழலாம்.

ஒரு கப்பலின் கதை நான்கு பாகங்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது. சன்னலின் வலது பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் NEXT சுட்டியை அழுத்தி அடுத்த பகுதியை படிக்க முடியும்.

நன்றி: டாக்டர் எஸ்.ஜெயபாரதி

Friday, August 08, 2008

ஒலிம்பிக் போட்டி: ஓர் உலகம், ஒரு கனவோடு

1896-ஆம் ஆண்டு கிரேக்க தலைநகர் எத்தென்சில் முதல் முறையாக தொடங்கப்பட்டது தான் உலக நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்று தங்களின் திறனை வெளிபடுத்தி பதக்கங்களை குவிக்கும் ஒலிம்பிக் போட்டி.
இன்று 08.08.08 தேதி இரவு 08.08 மணிக்கு உலகமே அதிர்ந்து கவரும் வண்ணம் தொடங்க உள்ளது 29-ஆவது ஒலிம்பிக் போட்டி.

ஓர் உலகம், ஓர் கனவு எனும் சுலோகத்துடன் இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. உலக நாடுகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட சுலோகங்களில் இருந்து மிக சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. முன்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. 1916, 1940, மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில் உலகப் போர் காரணமாக இப்போட்டி நிறுத்தப்பட்டது.

இருப்பினும் இப்போட்டி கைவிடப்படாமல் தொடர்ந்து நடத்தப்பட்டது. தெர்ந்தெடுக்கப்படும் உலகின் சிறந்த நாடு இப்போட்டியை நடத்தும்.
1896-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டி தற்போது 29-வது தவனையை எட்டியுள்ளது. இம்முறை போட்டியை சீனா ஏற்று நடத்துகிறது.

இவ்வாண்டின் போட்டியை ஏற்று நடத்துவதற்கான தேர்தலில் தேர்வு பெற்ற பெய்ஜிங்கிற்கு பாரிஸ், ஒஸாகா, இஸ்தான்புல், டொரெண்டோ ஆகிய நகரங்கள் பெரும் போட்டியை கொடுத்தன. இருப்பினும் இருதியில் சீனாவின் பெய்ஜிங் நகரம் இத்தேர்தலில் வெற்றி பெற்றது.
ஒலிம்பிக் சுடர் ஓட்டம்:

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு உலகம் முழுவதும் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடத்தப்படும். உலக நாடுகளை வலம்வந்தப்பின் இச்சுடர் இறுதியில் போட்டி தொடங்கும் நாளில் உபசரனை நாட்டின் அரங்கில் ஏற்றப்படும்.
‘ஒருங்கிசையின் பயணம்’ என்ற கருப்பொருளில் உலகம் முழுவதும் வலம் வந்து. கிட்டதட்ட 130 நாட்களுக்கு நடைபெற்ற ஒலிம்பிக் சுடர் ஓட்டம் மொத்தம் 137,000 கிலோ மீட்டர் தூரமாகும். உலக நாடுகளை சுற்றி வந்த ஒலிம்பிக் சுடர் நாளை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்றப்படும்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டதிற்கான அறிகுறியாக இந்தச் சுடர் விளங்கும் என்பது குறிப்பிடதக்கது.
போட்டியின் தொடக்கம்:

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 28 போட்டிகள். 302 பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. கடந்த 2004-ஆம் ஆண்டின் கிறீஸ் போட்டியை காட்டினும் ஒரு போட்டி எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

உலக நாடுகளிலிருந்து 10000 மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று பதக்கத்திற்காக போராட உள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து 400 கோடி ரசிகர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை கண்டு ரசிக்க போகிறார்கள்.

பறவைகள் கூண்டு அரங்கங்கள்:

இவ்வருட ஒலிம்பிக் போட்டியை சிறப்பான முறையில் நடத்துவதற்கு பிரதான தேசிய அரங்கமான ‘பெர்ட் நெஸ்ட்’ எனப்படும் பறவைகள் கூண்டு பிரமாண்டமான விளையாட்டு அரங்கம் பெய்ஜிங்கில் கட்டப்பட்டுள்ளது.

175கோடி செலவில் கட்டப்பட்ட இந்தப் பறவைகள் கூண்டு அரங்கின் வேலைகள் கிட்டதட்ட ஆறு ஆண்டுகள் நடந்தன. இதுவரையில் ஒலிம்பிக் போட்டி கண்டிராத அரங்கமாக இது விளங்குகிறது.

258,000 சதுரமீட்டர் பரப்பலவை கொண்ட இந்தப் பறவை கூண்டு அரங்கத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகட்கள் அமர்ந்து போட்டியை கண்டு களிக்க முடியும்.

இந்த அரங்கத்தை தவிர்த்து போட்டிகள் நடை பெருவதற்காக மற்றும் பல அரங்குகளை சீன அரசாங்கம் கட்டியுள்ளது. போட்டிகளுக்காக வீரர்கள் தங்களை தயார் செய்து கொள்வதற்காக மொத்தம் 59 பயிற்சி மையங்கள் உலகத் தரத்துடன் கூடிய நவீன கருவிகள் மற்றும் களங்களோடு உருவாக்கப்பட்டுள்ளன.
அமேரிக்கா நடப்பு சாம்பியன்:
எதென்சில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமேரிக்க குழிவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். இக்குழுவினர் 36 தங்கம், 39 வெள்ளி 27 வெங்கலம் என மொத்தம் 102 பதக்கங்களை வென்று சாதனைபடைத்தனர்.


இரண்டாவது இடத்தை சீனா, மூன்றாவது இடத்தை ரஷ்யா, நான்காவது இடத்தை அஸ்திரேலியா, ஐந்தாவது இடத்தை ஜப்பான் ஆகிய நாடுகள் கைபற்றின.

இவ்வாண்டு போட்டியின் உபசரனை நாடாக விளங்கும் சீனா குழுவினர் இவ்வாண்டு போட்டியில் அதிக பதக்கங்களை வென்று பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீனாவிற்கு அமேரிக்க குழுவினர் பெரும் சவாலாக இருப்பார்கள் என கருதப்படுகிறது.
அதிர்ச்சி:
ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது எனும் மகிழ்ச்சியில் உலகலாவிய மக்கலும் , சீன நாட்டினரும் மூழ்கி இருந்தாலும் மறுபக்கம் அதிர்ச்சியும் கவலையும் இருந்துதான் வருகிறது.

இதில் முதன்மையாக தீபத் தனிநாடாக பிரகடனம் செய்யக் கோரி அங்குள்ள புத்த மதத்துறவியர்கள் தீபத் தலைநகரில் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இது சீனாவிற்கு முதல் அடியாக இருந்தது.

கடந்த மே மாதம் 12-ஆம் தேதி சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த பூகம்பத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணம் அடைந்தது சீனாவை தவிர்த்து உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நேற்று முந்தினம் மீண்டும் சிசுவானில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதில் யாரும் மரணமடையவில்லை என்றாலும் காயமடைந்து இருக்கிறார்கள்.

இது போன்ற பல பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் தொடர்ந்து வெற்றிகரமாக போட்டியை நடத்தவுள்ளனர் சீன நாட்டினர். சிறப்பான முறையில் பாதுகாப்பு அளிப்பதற்கு சீன போலிஸ் படையினருக்கு கடந்த காலங்கள் தொடங்கி பிரத்தியோக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சுடர் தொடங்கியது முதல் அவ்வோட்டங்களுக்கு எந்த நாடும் ஆதரவு தரக்கூடாது என்று தீபத் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இருப்பினும் அந்த ஓட்டம் வெற்றிகரமாக் முடிவடைந்து இன்று பெய்ஜிங்கிற்கு வந்தடைந்துள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் வெற்றிகரமாக தொடங்கட்டும்.



பி.கு: பதிவில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. தமிழ்மண கருவிபட்டை மாயமாய் மறைந்துவிட்டது. அதானல் மீள் பதிவு செய்திருக்கிறேன். நண்பர்கள் மன்னிக்கவும்

Tuesday, August 05, 2008

பெர்மூடா முக்கோணமும் புரியாத புதிர்களும்

1492ஆம் ஆண்டு அமேரிக்க கண்டத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கிருஸ்டப்பர் கொலம்பசும் அவர் மாழுமிகளும் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த மகிழ்ச்சியானது சூரியனைக் கண்ட பனி போல அதிக நாள் நீடிக்காமல்போனது அவர்களின் துர்ரதிஷ்டம் தான்.

நடு சமுத்திரத்தில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த சமயம் கொலம்பசின் திசை காட்டும் கருவி நிலை இல்லாமல் சுழன்றது. கொலம்பஸ் கப்பலின் வெளியே வந்து பார்த்தார். வான்நிலை மிக சீராக இருந்த்து. இந்நிகழ்வு கொலம்பஸுக்கு குழப்பத்தைக் கொடுத்த்து. எதனால் திசை காட்டும் கருவி அப்படிச் சுழல்கிறது எனும் கேள்வி அவரை துளைத்தது.

சில நாட்களுக்கு பின் நெருப்பு பிண்டங்கள் கடலில் குதித்தெழுவதை கொலம்பசின் குழுவினர் கண் கூட கண்டிருக்கிறார்கள். இந்நிகழ்வு அவர்களின் கப்பலில் இருந்து சற்று தூரத்தில் தான் நிகழ்ந்திருக்கிறது. அதன் பின் ஒரு மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்துவிட்டது.

இவை அனைத்தும் கொலம்பஸ் தனது அமேரிக்க கண்ட பயண குறிப்பேட்டில் வரைத்து வைத்த தகவல்கள். தாம் வந்திருக்கும் இடம் சாதாரண பூமி இல்லை என்பதை கொலம்பஸ் உணர்ந்தார். அவ்விடம் மர்மம் நிறைந்த நிலம் என்பதை அறிந்தார்கள்.

கொலம்பஸுக்கு பல வினோத பரிட்சயங்களை அளித்த அவ்விடம் இன்னமும் தனது மர்ம முடிச்சுகளை கட்டவிழ்காமல் தான் இருக்கிறது. அமேரிக்காவின் மயாமி, ஜமைக்காவின் பொயெர்டோ மற்றும் பெர்மூடா என இணைபடும் இம்முக்கோன இடத்தின் இரகசிய சித்தாந்தங்கள் இன்னமும் பலரின் ஆரய்ச்சிக்குட்பட்டு தான் கிடக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்து இன்றளவில் பெர்மூடா முக்கோணம் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் மர்மங்களை அறிவார் இல்லை.




கொலம்பஸின் பொர்மூடா முக்கோண குறிப்பை வைத்துப் பார்க்கையில் அவர் பெரும் பாக்கியசாலி. ஏன் என்று கோட்கின்றீர்களா? அதன் பின் அவ்விடத்தை கடல் மார்கமாகவும், ஆகாய மார்க மாகவும் கடந்த பல கப்பல்களும் வானூர்திகளும் தடம் தெரியாமல் மறைந்து போனது.

1880ஆம் ஆண்டு அட்லாண்டா எனப்படும் அமேரிக்க போர்க்கப்பல் மாயமாய் மறைந்த நிகழ்வு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. பெர்மூடா கடலருகே 300 இராணுவ வீரர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த அட்லாண்டா திடீரென எவ்வித தடயமும் இல்லாமல் காணாமற் போனது.

இதனை தொடந்து 1.2லட்சம் பரப்பளவைக் கொண்ட பெர்மூட பகுதில் செல்லும் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும் மாயமாய் மறைந்து போவதை அறிந்தார்கள்.

1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பகல் வேலையில் பெர்மூட கடல் பகுதியை ரோந்து வந்த 5 விமானங்களின் ராடார் தொடர்பு திடீரென துண்டிப்புக் கண்டது. இந்நிகழ்வின் விசாரனையின் போது படை கேப்டன் ‘பிரச்சனை ஏற்பட்டுவிட்ட்து’ எனக் கடைசியாக கூறியுள்ளார். அதன் பின் அவ்விமானங்களின் நிலை அறிவார் இல்லை.இந்த 5 கப்பல்களையும் கண்டுபிடிக்கும் பொருட்டு Martin PBM-3 Mariner எனும் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்விமானமும் தனது 30 படைவீர்ர்களோடு காணாமல் போனது.

இம்மர்மங்கள் தொடர்பாக 1973ஆம் ஆண்டு UFO எனப்படும் பறக்கும் தட்டுகளின் ஆய்வாளர் ஒருவர் வெளியிட்ட தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென மறைந்து போகும் இவ்வகை சம்பவங்களுக்கும் வேற்றுக் கிரக வாசிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், வேற்றுக் கிரக வாசிகள் பெர்மூடா முக்கோன பகுதியை தங்களின் பூமி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இத்தகவல் உலக மக்களின் கடும் விமர்சனத்திற்குள்ளானது குறிபிட தக்கது.

பெர்மூட முக்கோனப் பகுதியின் மர்ம முடிச்சுகள் பல விதமான வர்ணனைகளோடு உலக மக்களின் பார்வைக்குள்ளானது. அவ்விடத்தை பூமியின் சிறந்த புவியீர்பு பகுதி எனக் கூறினார்கள், கடலடியில் ஏற்றபடக் கூடிய அதிர்வுகளின் தாக்கம் நிறைந்த பகுதி எனவும், அமேரிக்க இராணுவம் ஆவ்விடத்தை தனது அனுவாயுத சேதனை பகுதியாக பயன்படுத்தியதில் இப்பாதிப்புகள் ஏற்படுகிறது எனவும் கருத்துக் கொண்டுள்ளார்கள்.

இதை தவிர்த்து, வெற்றுக் கிரக வாசிகளின் பூமி ஆராய்ச்சி தளம், கடற் கன்னிகளின் நகரப் பகுதியெனவும் கூறுவது மக்களிடையே இப்பகுதி தொடர்பாக அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. மக்களின் கவனத்தை ஈர்க்கவும், பீதியை கிழப்பவும் ஏற்படுத்தப்பட்ட புரட்டு எனக் கருதினார்கள்.

பெர்மூட முக்கோனத்தை பற்றிய பல கருத்துக் கணிப்புகள் இருந்தாலும், இன்றளவில் எந்தத் தகவலும் திருப்திகரமாக அமையவில்லை. கெலம்பஸின் குறிப்போடு 500 ஆண்டுகளுக்கு மேல் கடந்தாகிவிட்டது. ஆராய்ச்சிகள் முழுமையடைய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதால் பெர்மூடா முக்கோணம் இருமாப்புடன் தனது மர்மத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அண்மைய தகவலாக தேசிய பூகோலவியலின் கூற்றின் படி பெர்மூடா பகுதியில் எந்த அபாயமும் இல்லை என்றும் மேற்சொன்னவை புரட்டு என்றும் குறிபிடுகிறார்கள். கடலில் மறையும் கப்பல்களை சுற்றினும் ஒரு தகதகப்பை போன்ற ஆவியை பரவவிட்டு கண்களுக்கு புலப்படாமல் சொய்யும் நூதனம் தான் அது என்கிறார்கள். இது அமேரிக்க இராணுவத்தினர் கையாண்ட முறை.

அப்படி என்றால் கொலம்பஸ் தனது குறிப்பேட்டில் குறித்ததும் பொய்யான தகவலா? அல்லது அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படும் பொய்யா? பெர்மூடாவைச் சுற்றிப் பார்க்க நீங்கள் தயாரா?

பி.கு: இப்பதிவு நீண்ட நாட்களுக்கு முன் எழுதியது. மன நிறைவு இல்லாத காரணத்தால் பதிப்பிக்கவில்லை. நேரமின்மை காரணமாக புதியதாக எதுவும் எழுதவில்லை. இக்கட்டுரையை பதிப்பித்துவிட்டேன்.

Saturday, August 02, 2008

குசேலன் ஒரு *** படம்- ‘ச்சே’ ரகம்

முதல் காட்சியை முடித்துக் கொண்டு வெளியேறியவர்கள் முகத்தில் மன நிறைவின் அறிகுறி ஏதும் காணவில்லை. கொஞ்சம் விட்டால் திரையரங்கையே கொழுத்திவிடும் வெறித்தனமான அனல் ஒன்று அவர்கள் கண்களில் எரிவதைக் கண்டேன்.

50 வயதை கடந்த பெரியவர் ஒருவர் அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்தார். அடுத்தக் காட்சிக்குத் தயாரகிக் கொண்டிருந்த நபர் அவரது நண்பர் போல. சந்தோஷமாக அவரிடம் கேட்கிறார்.

“படம் எப்படிய்யா?”

“என்னா *** படம் எடுத்து வச்சிருக்கானுங்க ****ங்க. கடுப்பு *** தான் இருக்கு.”

என்னடா மனுசன் இப்படி பேசுகிறாரே என முகம் சுழிக்கச் செய்தது. அவர் தலையைப் பார்த்தேன். அவர் சொல்லியது நன்றாகவே பழுத்திருந்தது. படத்தையும் அதிகமாகவே பழுக்கவிட்டு விட்டார்கள் போல. சரி அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள் என பார்ப்பதற்காக உள்ளே நுழைந்தேன்.

நட்பை மையமாக வைத்துப் பல படங்கள் வெளியாகி இருந்தும். இதை கொஞ்சம் மாறுபட்ட கோனத்தில் கொடுக்க வேண்டும் என்ற அக்கரையை யாரும் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. ரஜினி என்ற சொல் மட்டும் போதும் மக்களை மயக்கிவிடலாம் என்ற மமதையில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

1) படத்தின் ஆரம்பத்தில் இசைக்கும் குழலோசை நட்பின் இலக்கனத்தை சொல்கிறது. காற்று எங்கிருந்தாலும் குழல் அதை மறப்பதில்லை. அது வீசும் போதெல்லாம் அழகிய நாதத்தை எழுப்பிவிடும். இரு நண்பர்களும் ஒருவருக்கொருவர் மறக்காமல் இருக்கிறார்கள். சூழ்நிலை அவர்கள் சந்திக்கத் தடுக்கிறது.

2) சிகை திருத்தக் கடையில் ஒட்டிய முடிகளுடன் உள்ள சீப்பையும், ஒரு நடிகனின் அலங்கார பொருட்களையும் மாறி மாறி காண்பித்து நண்பர்கள் இருவருக்கும் இருக்கும் தூர அளவை சித்தரிக்க முயற்ச்சித்திருக்கிறார்கள்.

3) சில காட்சியமைப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன. ஆனால் தேவையற்றதாகவும் இருக்கிறது.

4) வடிவேலுவின் நகைச்சுவை ‘உவ்வேக்க்க்’ ரகம். சிரமப்பட்டு சிரிக்க வைக்கிறார். இந்திரலோக பாதிப்பு இன்னும் விட்டொழியவில்லை போல.

5) எல்லோரும் சொல்கிறார்கள் கடைசி பதினைந்து நிமிடம் படம் சூப்பராக அமைந்திருக்கிறதென்று. ‘செண்டிமெண்ட்’ காட்சிகளை மட்டும் வைத்து காலத்தை கடத்துவது வேதனைக்குறியது.

6) பசுபதியின் நடிப்பு சிறப்பாகவே இருக்கிறது. வெயில் திரையில் கொடுத்த அதே ரசம் என்பதால் கொஞ்சம் மாறுதல் படைக்க முயற்சி செய்திருக்கலாம். “அவரை தெரியும்னு சொன்னதுக்கே என்ன இந்த நிலமைக்கு கொண்டு வந்துட்டிங்க” எனும் காட்சி அனுதாபத்தோடு சிரிக்க வைக்கிறது.

7) பிரபு- என்ன கொடுமை வாசு இது. காவல் அதிகாரியாக வருகிறார். உடை தைப்பதற்கு துணி போதவில்லை போலும். ஒரு காட்சியில் காவல் உடையில் பிதுங்கி போய் நிற்கிறார். ஜப்பானிய காட்டூனில் ‘டோரேமோன்’ இப்படிதான் இருக்கும்.

8) நயந்தாரா நமிதா இடத்தை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். கூச்சப்படாமல் மார்பகங்களையும் தொடையையும் காட்டி விருந்து படைத்திருக்கிறார். குடுபத்தோடு வந்திருந்தவர்களுக்கு நல்ல சூடு. குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது அவர்களுக்கு கேடு.

9) இசையமைப்பாளரின் முயற்சி பாராட்டிற்குறியது. ஆனல் எடுபடாமல் போனது வேதனைக்குறியது. முதல் பாடல் ‘வெயிலோடு விளையாடி’ எனும் வெயில் திரை பாடலை நினைவுகூறச் செய்கிறது.

10) படத்தில் மீனா, கீதா, சுந்தராஜன், லிவிங்ஸ்டன் வரும் காட்சிகள் மிக மிக எரிச்சல்.

பாதி படத்தில் என் பின்னால் அமர்ந்திருந்த நண்பர்களுக்குள் பேச்சு.

“என்னடா மச்சான் தூங்குற”. சிரித்துக் கொண்டே கேட்கிறான் ஒருவன்.

“டேய் ஏன் டா ரஜினி படம்னு சொல்லி கூட்டிட்டு வந்து உயிர வாங்குறிங்க, என்னால முடியல, படம் முடிந்த்தும் எழுப்பிவிடு”.

இடைவேளையின் போது சரோஜா பட ‘சப்போர்டிங்’ திரைகண்டது. பின்னாலிருந்து “ஏய் படத்த முடிங்கடா” என்ற சவுண்டு.

படம் முடிந்த போது எல்லோர் முகத்திலும் இலவு வீட்டிற்கு போய் வந்த உணர்ச்சி. குசேலன் திரைபட இருக்கை, மரணப் படுக்கை.

மகாகாவி காளிதாஸ் படத்தை ‘எடிட்’ செய்து கொடுத்திருப்பதை போன்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் குசேலன் ஒரு ‘குஜிலி’ படம் ச்ச்சே… குப்பை படம்.

பி.கு: *** என்பது சூப்பர் ஸ்டார் என அர்த்தம். நீங்கள் கெட்ட வார்த்தையை போட்டு படித்திருந்தால் நான் பொறுபல்ல.

குளிர்கால காதல்



வெண்சுருட்டில்லாமல்
புகைகக்கும் சுவாசப்பை
இசைப்பயிற்சியின்றி தாளம் போடும்
வெள்ளை பற்கள்.
கூட்டுப் புழுவென
போர்வைக்குள் அடங்கும்
மனிதர்கள்.

சோம்பல் முறித்த காற்று
தூக்கம் கொண்டு
தரையில் படுத்துவிடும்.
மீன்கள் ஓடைக்கு
விடுமுறை கொடுத்து
எரிமலைக்கு பயணம் போகும்.
ஆதவனையும்
ஊதி அணைத்து விடும்
குளிர் பனிக்காலம்.

சூடு தேடிய உடல்கள்
சிக்கிமுக்கி கற்களாகும்.
கூடு தேடிய கிளிகள்
திக்கித் திணறி பாடும்.

குளிர்காலத்தில் குளியல்
உடலுக்கு கொடுக்கும்
மரணதண்டனை.
மதுக் கிண்ணமும்
மாமிசப் படையலும்
சுவைக்கச் சொல்லும் சிந்தனை.

பூக்களும்
மூச்சிழுக்க முடியாமல்
தலை கவிழ்ந்து கொள்ளும்
அதிகாலையில்....

என் காதலிக்காக தேடுகிறேன்
எங்காவது தப்பி பிழைத்திருக்கும்
ஒரு ஒற்றை ரோஜாவை.
நான் பூவோடு வரும்
கனவில்அவள்.
புன்னகை ரோஜாவை
பரிசளிக்க போகும்
மகிழ்ச்சியில் நான்.

Friday, August 01, 2008

நாசி லெமாக் எனும் உணவு

மலாய்காரர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் நாசி லெமாக் மிக பிரசித்திப் பெற்றது. நாசி என்பது சோறு. லெமாக் என்றால் கொழுப்பு என அர்த்தம் கொள்ளும். இவ்வுணவிற்கான சோற்றை கொலுப்புச் சத்து நிறைந்த தேங்காய் பாலில் நிரை கட்டிச் சமைப்பதால் நாசி லெமாக் என அழைக்கப் படுகிறது.

மலேசியா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கபூர் மற்றும் புருனய் போன்ற நாடுகளிலும் இவ்வுணவு கிடைக்கிறது. இதை தவிர்த்து கிளாந்தான் திரங்கானு போன்ற வட மலேசிய மாநிலங்களின் இதனை ‘நாசி டகாங்’ என அழைக்கிறார்கள். அவர்கள் ஊதா நிறம் மற்றும் பழுப்பு நிறத்திலான புழுங்கள் அரிசியை இவ்வுணவிற்கு பயன்படுத்துகிறார்கள். இநதோநேனேசியவில் இதனை நாசி ஊடுக் என அழைப்பதாக கேள்வி.அக்காலகட்டங்களில் மலாய்காரர்கள் அதிகமாக விவசாயம் மற்றும் மீன் பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். வருமானமும் நிலையற்றதாய் இருந்தது. கொழுப்புச் சத்து நிறைந்த நாசி லெமாக் உணவு அவர்களை நீண்ட நேரம் பசியை கட்டுபடுத்த உதவியது.
நாசி லெமாக் பெரும்பாலும் காலை உணவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. மிதமான வேலை செய்பவர்களுக்கு நாசி லெமாக் சிறந்த உணவல்ல. அது சோர்வையும் தூக்கத்தையும் உண்டு பண்ணூம். ஆனாலும் அதை கணக்கில் கொள்ளாமல் காலையில் மூக்கு பிடிக்க வெட்டிவிட்டு அலுவலகத்தில் தூங்குபவர்களும் உண்டு.
முன்பு நாசி லெமாக் ஒரே வகையாக தான் இருந்தது. கால மாற்றத்தில் இந்த உணவிலும் மாற்றம் உண்டாகிவிட்டது. தற்சமயம், நாசி லெமாக் டாகிங், நாசி லெமாக் ஆயாம், நாசி லெமாக் ரெண்டாங் என பல பிரிவுகளாக பிரிந்து ஒரு நாவலை படைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. காலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களிலும் நாசி லெமாக் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

நாசி லெமாக், கார நெத்திலி பிரட்டல், வெள்ளரி, வெக வைத்த அல்லது பொரித்த முட்டை, பொரித்த நெத்திலி, மற்றும் வருத்த நிலக் கடலை எனும் கலவைகளைக் கொண்டு செய்யப்படும். இடத்திற்கு தகுந்தாற் போல் இதன் விலையும் மாறுபடும். நாசி லெமாக் சாப்பிடும் போது குளிர் பானங்களை குடிப்பதை விட சூடான காபி அல்லது தேனீர் வகைகளை அருந்த எடுத்துக் கொண்டால் கூடுதல் சுவையை உணர முடியும்.

சீன தேச பயணத்தின் போது விமாத்திலும் நாசி லெமாக் விற்கக் கண்டேன். அதன் விலை ரிங்கிட்15 ஆக இருந்தது. அது முடிந்து போன பட்சத்தில் விமான பணியாளர்களை கடிந்துக் கொண்ட பயணிகளையும் கண்டேன். நாசி லெமாக் துரித உணவு வகையை சேர்ந்த பண்டமாக்க் கருதப்படுகிறது. உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் நாசி லெமாக் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மரடைப்பு உள்ளவர்கள் நாசி லெமாக் சப்பிடுவது மிகுந்த பங்கத்தை விளைவிக்கும்.

நாசி லெமாக் சாலையோர கடைகள் முதற் கொண்டு நட்சத்திர விடுதிகள் வரை சுலபமாக கிடைக்கும் உணவு. சாலையோரங்களில் வாழை இலையில் மடித்து விற்பனை செய்வார்கள். சமைக்கும் போது சேர்க்கப்படும் “செண்டோல்’ எனப்படும் இலையின் வாசனை வாழை இலையோடு சேர்ந்து மூக்கை துளைக்கும், நாக்கில் எச்சில் ஊறும். அதன் சுவை சமைப்பவரின் கைவண்ணத்திலும் சாப்பிடுபவர்களின் நாக்கிலும் அடங்கி இருக்கிறது.

சிலருக்கு நாசி லெமாக் ஒவ்வாது. முக்கியமாக நாசி லெமாக் ரெண்டாங் வயிற்றை கலக்கிவிடும். சிலருக்கு ரெண்டாங் சேர்த்து சாப்பிடுவதில் அலாதிப் பிரியம். எனக்கு நாசி லெமாக் ஈக்கான் பிலிஸ் (கார நெத்திலி பிரட்டல்) சாப்பிட விருப்பம். சில நேரம் அதுவே காலை உணவாகவும் அமையும்.