Thursday, January 24, 2019

2018-ஆம் ஆண்டு வாசித்த நூல்கள் (11-20)

வாசிக்கும் நூல்கள் குறித்து தொடர்ந்து எழுதி வர வேண்டும் என கருதினேன். காலச் சூழலில் அதற்கான வாய்ப்புகளை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. நூல் பட்டியல் தொடர்பாக கடந்த மார்ச்சில் ஆகக் கடைசியாக எழுதியது. சென்ற ஆண்டினை கடந்துவிட்டதால் நூல்களின் கணக்கறிக்கையை எழுதி முடித்துவிடலாம். கீழே எனது பட்டியல். ஆர்வம் இருப்போர் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். முதல் 12 புத்தகங்கள் தொடர்பான குறிப்புகளை எனது மார்ச் பதிவில் காணலாம். கீழ் காணும் பட்டியலில் சில நூல்களை விரிவாகவும் எழுதி இருக்கிறேன்.


11. ISIS கொலைகாரன் பேட்டை

பா.ராகவன் சர்வதேச அளவில் இருக்கும் மாய வலைகளை எழுதி முடித்து ஓய்வதற்குள் முலைத்துவிட்டிருக்கும் இயக்கம் ஐ.எஸ். அமெரிக்கா பெருசா இரஸ்யா பெருசா எனும் இடைவிடாத போட்டியில் சிரியா எனும் தேசத்தை சுடுகாடாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். கொலைகளை இரசிக்கும் சமூகங்கள் இங்கே உருவாகிக் கொண்டிருக்கின்றன. மனிதத்தை பேசும் எத்தனையோ உலக அமைப்புகள் இருந்தும் குழந்தைகளைக் கூட காப்பாற்ற முடியாத வக்கற்றவர்களாகவே அவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ் இயக்கத்தின் அரம்பம் முதல் டிசம்பர் 2016 வரையிலான நிகழ்வுகளை விரிவாக பேசுகிறது இந்த நூல்.

12. ஏ.ஆர்.ரஹ்மான்

ரஹ்மான் ஒஸ்கார் விருதுகளை வாங்கும் நிகழ்விலிருந்து இந்த நூல் தொடங்குகிறது. விருது வாங்கும் போது அவர் பேசிய வரிகள் ‘வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் என்முன்னே இரண்டு பாதைகள் இருந்தன, வெறுப்பு அல்லது அன்பு, நான் எப்போதும் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் இன்றைக்கு இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறேன்’. இந்த வரிகளே இந்நூலை ஒரே வீச்சில் படித்து முடிப்பதற்கான உத்வோகத்தை கொடுக்கின்றன. அவரது வெற்றிக் கதையின் பல சம்பவங்கள் நம்மை நெகிழ வைக்கிறது. இந்த நூல் எழுத்தாளர் என்.சொக்கனின் படைப்பு. இணையத்தில் மின் நூலாகவும், ஒலி நூலாகவும் இலவசமாகக் கிடைக்கிறது.

13. First they killed my father

இது 2000-ஆம் ஆண்டில் வெளி வந்த நூல். 2017-ஆம் ஆண்டில் திரைக்கதையாக்கப் பட்டுள்ளது. கம்போடியாவின் பிரசித்திப் பெற்ற இரு இடங்கள் ஃனோம்ப் பேன் மற்றும் சியம் ரிப். இன்றய நிலையில் இவ்விரு இடங்களும் இரு வேறு சரித்திர நிகழ்வுகளை நமக்குக் காட்டுகிறது. மண்டை ஓட்டுக் குவியலின் காட்சியாக ஃனோம்ப் பேன் ஒரு வீழ்ச்சியின் அரசியலையும், கோவில் கோபுர நகரங்கள் நிறைந்த சியம் ரிப் அப்பிராந்தியத்தின் முன் காலத்து மாட்சியையும் காட்டுகிறது.

இந்த நூல் ஒரு சிறுமியில் பார்வையில் போர் கால வாழ்வியலை பதிவு செய்கிறது. போல் போட் காலத்தில் நடந்த கொடுமைகளை நாம் வாசிக்கவும், திரையில் காணவும் அதீத உணர்சிவய படுகிறோம். இந்த சுயசரிதத்தில் வரும் லோங் போன்ற சிறுவர் சிறுமியர் அதைப் பார்த்தும் அனுபவித்தும் கடந்து வந்திருக்கிறார்கள்.

டாம் ரைடர் படப் பிடிப்பிற்காக சியாம் ரிப் சொன்ற ஏஞ்சலினா ஜோலி அங்கிருக்கும் ஏழ்மை நிலை கண்டு அம்மக்களுக்கு தன்னார்வளாராக பல தொண்டுகளை செய்து வந்தார். இந்த நூல் இவரை மிக பாதித்திருக்கக் கூடும். 2017-ஆம் ஆண்டு திரைபடமாக வெளியீடு கண்டது. திரைப்படமும் சிறப்பாகவே காட்சி அமைக்கப்பட்டுள்ளது. போல் போட் காலத்தில் வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முனைந்த ஆகிரா எனும் தனிமனிதன் தொடர்பாக எழுதி இருந்தேன். வாசிக்க விரும்புவோர் இந்த உரலில் காணலாம் http://vaazkaipayanam.blogspot.com/2014/01/blog-post.html

14. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ் மகன்

எதிர்காலத்தில் இந்த நாவல் தொடங்குவதாக அமைகிறது. சடாரென்று 2017 வந்து. மீண்டும் கற்காலம் சென்று பிறகு திருவள்ளுவரை சந்தித்து என பயனிக்கிறது. இதை எப்படி தொடர்பு படுத்திக் கொள்வது எனும் சந்தேகம் வாசகனை தொடர்ந்து ஆட்கொள்கிறது. அதற்கான முழுமை நாவலை வாசித்து முடிக்கையில் நமக்கு கிடைக்கிறது. தமிழ்மகனின் சிறுகதை மற்றும் நாவல் என முன்பு வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த நாவலில் இவர் அளித்திருக்கும் தளம், நடை என அனைத்தும் மாறுபட்ட முயற்சியாக உள்ளது. முற்றிலும் ’நன் லீனியர்’ முறையிலான கதை அமைப்பு.

நாவலில் நாயகன் தேவ் ஜப்பானில் ஏற்படும் சுனாமியில் பாதிக்கப்பட்டு அவரது மூளையில் தமிழ் மொழி தொடர்பான பல தகவல்கள் சம்பவங்கள் என நினைவை ஆக்கிறமிக்கின்றன. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான ஆய்வே இந்நூல் நெடுக பேசப்படுகிறது. இது நாவல் என்பதைக் கட்டினும் தமிழர் மற்றும் தமிழ் மொழி மீதான பண்பாட்டு படையெடுப்புகளையும் மொழி ஆக்கிரமிப்புகளையும் பதிவு செய்திருக்கும் ஆவண நூலாகவே தெரிகிறது.

கால ஓட்டத்தில் தமிழ் மொழி சந்தித்த பரிணாமங்கள், உலகளவில் அதல் பயன்பாடு என்பதோடு ஆரிய மொழி கலப்பு, ஏதனால் ஆரியம் தமிழ் மொழியின் முக்கிய எதிரியாக அமைந்துள்ளது என்பதுமாக இந்நாவல் பேசுகிறது.

15. சிறிது வெளிச்சம்

தேசாந்திரி மற்றும் துணையெழுத்து போலவே இந்த நூலின் கட்டுரைகள் அமைந்திருந்தன. சிறிது வெளிச்சம் என்பது கு.பா.ராவின் சிறுகதை தலைப்பு. அக்கதை ஒரு பெண்ணின் மீதான கருணை எனும் சிறுது வெளிச்சத்தை பேசுகிறது. அதே போல் எந்த வெளிச்சமும் படாத ஏகப்பட்ட சம்பவங்களும், மனிதர்களும் நம்மை சுற்றி நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் சமூகத்தின் சாமனியர்கள். அந்த சாமனியர்களின் உலகில் நிகழும் மனிதத்தை இந்த நூல் பேசுகிறது.

தேசாந்திரி மற்றும் துணையெழுத்து கட்டுரை தொகுப்பு போலவே இருந்ததால் வாசிக்க கொஞ்சம் அயற்சியை ஏற்படுத்தியது. பல சுவாரசியமான சம்பவங்களையும் மனிதர்களையும் இந்நூல் காட்ட தவறவில்லை.

16. உப்பு நாய்கள்

இந்நாவல் முதல் பாகத்தில் இரு வேறு சம்பவங்களையும் இரண்டாம் பாகத்தில் மூன்று வெவ்வேறான சம்பங்களையும் பதிவு செய்கிறது. பொதுவெளியில் பார்க்கப்படாத மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் யுக்தி என்பது பல எழுத்தாளர்களால் தற்சமயம் கையாளப்படுகிறது. இருப்பினும் இந்நாவலில் புரட்டப்படும் ஒரிரு பக்கங்களிலேயே தொடர் பாலில் நிகழ்வுகளென, பாலியல் வரற்சியின் மிகுதியில் வாழும் மக்களென அச்சமூகம் காட்டப்படுகிறது. போதைக் கடத்தல், ஆள் கடத்தல், திருட்டு, பாலியல் வியாபாரம் என பல சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் பேசப்படும் மற்றுமொரு சம்பவம் நாய் இறைச்சி விநியோகம். நள்ளிரவில் நாய் வேட்டையாடி இறைச்சித் துண்டுகளாக்கி உணவு அங்காடிகளில் விற்றுவிடுகிறார்கள். அது எப்படி பயனீட்டாளரை சென்றடைகிறது என்பது வேறு விசயம். நாய் இறைச்சியை உணவாக கொள்வது கொரியா, சீனா மற்றும் வேறு சில இந்தோ சீன நாடுகளில் சாதாரணமான நிகழ்வாகும். அது அவர்களின் காலாச்சாரத்தை ஒன்றியது. ஆனால் இந்நாவலின் கலத்திற்கு அது அந்நிய செயல். அதனால் அதை ஒரு அபூர்வ நிகழ்வென புனைத்துள்ளார் போலும். இந்நாவலின் பெரும்பகுதி வன்முறை சமூகத்தை பற்றியே பேசுகிறது. அது வாசகனை கவரும் சூழலில் இல்லை.

17. Way Back in to Korea

கொரியா செல்வதற்கு முன் வாசித்த நூல். கொரிய மக்களின் வரலாற்றியல் வாழ்வியல் என இரு தளங்களையும் இந்நூல் பதிவு செய்கிறது. இதை வாசித்த போதே இந்தியர்களோடு அவர்களுக்கு இருக்கும் தொடர்பை உணர முடிந்தது. இந்நூல் தொடர்பாக முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பாண்டிய மன்னர்களை போல் கொரியாவிலும் இரட்டை கயல் சின்னம் பயனில் இருந்துள்ளது.

போரின் கொடுமையை பேசும் இடமாக (DMZ) அமைந்துள்ளது. இந்த இராணுவமற்ற மண்டலம் நெடுங்காலமாக மனிதர்களின் தாக்கமற்ற அழகு பூங்காவாக மறி உள்ளது. வட , தொன் கொரியா எனும் சொல் பிரயோகத்தை கூட கொரிய மக்கள் விரும்புவதில்லை. ஒருவருக்கு மற்றொன்று விரோத பொருள். கொரிய போரினால் பிளவுபட்ட குடும்பங்கள் ஏறாளம். ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் சந்தித்துக் கொள்ளும் தினங்கள் உண்டு. கொரியாவை பற்றி தெரிந்து புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

18. இரவுக்கு முன்பு வருவது மாலை - ஆதவன்

ஆதவனின் சிறுகதைகளை எனக்கு அறிமுகப் படுத்தியது நண்பர் முரளி. அந்த வாசிப்பு புது அனுபவமாக இருந்தது. பல முறை ஆதவனின் சிறுகதைகளை சிலாகித்து உரையாடி இருக்கிறேன். என் பெயர் ராமசேஷன், காகித மலர்கள் போன்றவையும் நல்ல வாசிப்பு அனுபவத்தையே கொடுத்தன.

இரவுக்கு முன்பு வருவது மாலை அதாவனின் 5 குறுநாவல்களை அடக்கிய நூல். 2012-க்கு பின் மீண்டும் ஆதவனை இப்போது வாசிக்க கொஞ்சம் போர் அடிக்கும் பேர்வழியாக தெரிந்ந்தார். இதில் 'சிறகுகள்' எனும் குறுநாவல் எனை வெகுவாக கவர்ந்தது. ஒரு பெண் பாத்திரமாகவே மாறி இக்கதையை இயற்றியுள்ளார். 1970-களில் ஒரு பெண்ணின் பார்வையில் பெண் சுதந்திரம் எந்த நிலையில் இருந்துள்ளது என்பதை இக்கதையின் வழி அறியமுடிகிறது. அது போக கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் எனும் அலுவலக அரசியல் பேசும் கதையும் பிடித்திருந்தது.

19. சமணர் கழுவேற்றம் - ஒரு வரலாற்றுத் தேடல்

சமணர்கள் கழுவேற்றம் சரித்திர நிகழ்வென குறிபிடப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பதையே இந்த நூல் பேசுகிறது. மிகமிக நீண்டதொரு விளக்கம் தான். ஒரு மேற்கோள் பாட நூல் வாசிப்பதை போல் இருந்தது. சமண சமயம், சமணர்களின் கலாச்சாரம் போன்றவற்றை அறிந்துக் கொள்ள இந்த நூல் உதவும்.

20. இட்லியாக இருங்கள்

பொதுவாகவே தன்முனைப்பு தூண்டல் போன்ற இத்தியாதிகளை நான் நம்புவதில்லை. Emotional Intelligence எனும் பதத்தை உள்வாங்கி அறிந்துக்கொள்ளவே அந்த நூலினை வாங்கினேன். ஆச்சரியமாக இதில் பேசப்பட்ட விசயம் எனக்கு மிக பிடித்துப் போனது. ஒவ்வொரு பக்கமும் சுய பரிசோதனை கூடங்களாகின. நாம் வெந்த இட்லியா இல்லை வேகாத இட்லியா என்பதை தேடிக் கொண்டே போகிறோம். வாசிக்கவும், இதன் பேசு பொருளும் உற்சாகமான அனுபவத்தைக் கொடுத்தது.


தொடரும்...

No comments: