Friday, January 18, 2019

ஏ.கே. செட்டியார் படைப்புகள் – தொகுதி 1


இந்த நூலை வாசித்தது 1938 ஆண்டின் முதல் சென்று வரலாற்றைத் திரும்பி பார்த்து வந்தது போல் இருந்தது. எவ்வளவு பயண அனுபவங்கள். இந்த அனுபவம் மொத்தமும் ஒரு மனிதனை எப்படி எல்லாம் பக்குவ படுத்தியுள்ளது. ஏ.கே. செட்டியார் நமக்காக பதிவு செய்து வைத்திருப்பது ஏராளம். தாமக்குத் தெரிதவற்றை தமிழ் மக்களுக்காக எடுத்துச் சொல்லி இருக்கிறார். 80-களில் இவர் மறைவிற்குப் பின் இவரின் படைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுள்ளது. ஒரு சில படைப்புகள் அச்சில் வரமலேயே போய்விட்டன. செட்டியாரின் படைப்புகளை இரண்டு தொகுதிகளாக தொகுத்து மீண்டும் நம் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.

முதல் தொகுதி சுமார் 1000 பக்கங்களை கொண்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி இதன் முன்னுரை 42 பக்கங்களுக்கு உள்ளது. இந்த நூலை வாசிப்போர் முன்னுரையை தவற விட வேண்டாம். அது மிகைக்காக எழுதப்பட்டதல்ல. இந்த நூலை கூர்ந்து உணர்ந்து கொள்ள வழி செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

ஏ.கே.செட்டியாரின் இயற் பெயர் அ.கருப்பஞ் செட்டியார். வணிக நுணுக்கங்களிலும், செல்வங்கள் குவிப்பதிலும் முனைப்புக் காட்டும் தனவணிக சமூகத்தில் பிறந்த ஏ.கே. செட்டியார் விதிவிலக்காக வாழ்ந்துள்ளார். இவரின் முதல் படைப்பு 1928-ஆம் ஆண்டு வெளிவந்த சாரதாம்பாள் – ஒரு சிறு தமாஷ் எனும் சிறுகதை. இந்த சிறுகதையும் முதல் தொகுதியின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மொழி நடையே நமக்கு மிக வித்தியாசமாகவும் தமாஷாகவும் உள்ளது. ஏனெனில் அப்போதைய மொழி நடையை இந்நாளில் யாரும் பயன்படுத்துவதில்லை. புனைவை விட பயணக் கட்டுரைகளையும், துறை சார்ந்த கட்டுரைகளையுமே நிறைய எழுதி இருக்கிறார்.

பர்மாவில் தமிழர்கள் அதிகமாக வசித்த கால கட்டத்தில் தனவணிகன் எனும் வார/மாத இதழ் அங்கே வெளிவந்துள்ளது. ஏ.கே.செட்டியார் ரங்கூனில் சில காலம் தங்கி அதன் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இது நடந்த கால கட்டம் 1930-களில். ரங்கூனில் இருந்து ஜப்பானுக்கு சொன்று புகைப்பட கலையை கற்றறிகிறார். ஜப்பான் பயணாம் அவருக்கு பயணத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.

ஏ.கே.செட்டியார் அதிக அளவில் கடல் வழியே தூர தேசங்களுக்கு பயணம் செய்துள்ளார். இவர் பயணம் செய்த காலகட்டத்தில் பல ஆசிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் அடிமைகளாக இருந்தன. இன துவேசத்திற்கு பஞ்சமில்லாத கால கட்டம். செட்டியார் நிறத்தால் கருப்பு. செல்லும் இடங்களில் அவரை கருப்பின அடிமை என கருதி மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். கப்பலிலோ அல்லது விமானத்திலோ முதல் வகுப்பில் பயணம் செய்ய முடியாது. நட்சத்திர விடுதிகளில் தங்க முடியாது என படுத்தி எடுத்துள்ளனர் வெள்ளையர்கள். அனைத்தையும் சகித்துக் கொண்டு கடந்து வந்திருக்கிறார்.

 தென் ஆப்பிரிக்காவை இன வெறியின் புகழிடம் எனக் குறிப்பிடுகிறார் செட்டியார். பேருந்தில் பயணம் செய்த கருப்பினத்தவரை ஒரு வெள்ளையர் எட்டி உதைத்து விரட்டிய கட்சி இவரை பயப்பட செய்துள்ளது. அதை படிக்கும் நமக்கும் திக் என்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா இன வெறி மட்டுமின்றி செழிப்பான பழ வகைகளுக்கும் புகழ் பெற்ற இடமென குறிப்பிடுகிறார். தென் ஆப்பிரிக்கவில் வசிக்கும் தமிழர்கள் இன்னமும் 1860-ஆம் ஆண்டின் தமிழை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை கேட்க நகைச்சுவையாக உள்ளது என எழுதியுள்ளார். போர்த்துகீசியர்கள் ஜாவா இன அடிமைகளை தென் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சேர்த்த குறிப்புகளையும் கொடுத்துள்ளார்.

இரங்கூனில் இருந்த சமயம் இவர் ஜப்பான் எனும் நூலை எழுதி இருக்கிறார். அக்காலகட்டத்தில் ஜப்பான் நூல் தடை செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் புகைப்பட கலையை படித்தது போல், நியூ யார்க்கில் புகைப்படம், நிலற்படம் எடுக்கும் கலைகளையும் கற்றுக் கொள்கிறார். அந்நாட்களில் கேமராவை இயக்கவும் படங்களை உருதுளக்கவும் தொழில் நுட்பம் தெரிய வேண்டும். கற்ற கலையை சரிவர பயன்படுத்த காந்தி தொடர்பான ஆவணப் படத்தை எடுக்கிறார். இந்திய தேசம் முழுக்க பயணம் மேற்கொண்டு செய்திகளை சேமிக்கிறார். காந்தி போகும் இடங்கள் சென்று காணொளி பதிவு செய்கிறார். காந்தியின் வெளிநாட்டு பயண காணொளிகளையும் புகைப்படங்களையும் அமேரிக்கா, ஐரோப்பா வரை பயணம் செய்து சேமித்து அந்த படத்தை எடுத்து முடிக்கிறார்.

செட்டியார் எடுத்த காந்தி ஆவணப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. அந்நாளில் ஆந்திர பிரதேசம் இல்லை. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் ஒரே மாநிலத்தில் வசித்ததால் இருமொழியில் இப்படம் வெளியீடு கண்டது. லாகூர் போன்ற பாக்கிஸ்தான் மாநிலங்களும் பிரிடீஸ் இந்தியாவின் கீழ் ஒரு குடையில் இருந்துள்ளது.

செட்டியாரின் சில கட்டுரைகள் அபரிமிதமாக உள்ளன. விளம்பரம் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 1940-களில் எழுதப்பட்ட கட்டுரையில் அவர் கொடுத்திருக்கும் தரவுகள் வியப்பளிக்கின்றன. விளம்பர உலகின் பரிமாணத்தை ஆரம்பம் முதல் மிக நேர்த்தியாக எழுதி இருக்கிறார். அக்கட்டுரை நிச்சயமாக ஏகபட்ட நூல்களை மேற்கோள் காண கோரியிருக்கும் என்பதை உணர முடிகிறது.

பஸ் பிரயாணம் எனும் நூலுக்காக அவர் தரவுகளை தேடிய விதத்தை குறிப்பிட்டுள்ளார். செட்டியார் அவர் பயணம் செய்த நாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கும், தூதரகங்களுக்கும் கடிதம் எழுதி நூல்களையும் தகவல்களையும் திரட்டி பஸ் பிரயாணம் கட்டுரைகளை எழுதி முடித்திருக்கிறார்.

திருசிராப்பள்ளி தொடர்பான பழைய கட்டுரைகளை தேடி பதிப்பித்துள்ளார். அது 1873, 1898, 1901 மற்றும் 1919 ஆண்டுகளில் தமிழ் முன்னோடிகளால் எழுதப்பட்டவை. அவற்றை வாசித்து உணர்ந்துக் கொள்ள அகராதி தேவைப்படுகிறது. தடிமனான சமஸ்கிருதம் கலந்த தமிழில் அவை எழுதப்பட்டுள்ளன. செட்டியார் தமது கட்டுரையில் பயண குறிப்புகளை வாசிக்க இலக்குவாகவே எழுதியுள்ளார். இருந்தும் சில சொல் வழக்குகள் இன்று நம்மிடம் புழக்கத்தில் இல்லை.

ஏ.கே.செட்டியார் 1983-ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவர் திருமணம், பிரிவு தொடர்பான தகவல்களை பதிப்பாசிரியரால் கண்டறிய முடியவில்லை . இறுதிகாலத்தில் அவருடைய சேமிப்பு நூல்களை நூலகத்திற்கும், பள்ளிகளுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். ஏ.கே.செட்டியார் நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஆளுமை. இந்த முதல் பாகத்தின் ஏகபட்ட கட்டுரைகளை நாம் வாசித்து உவகை அடைய முடியும். நாம் பிறந்திராத காலத்தில் நிகழ்ந்த அச்சம்பவங்கள் அறிவிற்கு புதிய தகவல்கள். சிறிது இடைவெளிக்கு பின் இரண்டாம் பாகத்தை வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

No comments: