Wednesday, July 30, 2008

தங்க விலை யார் காரணம்?


தங்க விலைக்கு தங்கம் தான் நிகராக இருக்க முடியும். தங்கத்தின் விலை ஏற்றம் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்கிறது. தங்கம் என்பது என்ன? அது ஒரு உலோக வகையை சேர்ந்தக் கணிமம்.

தங்கத்தில் குறை இருப்பினும் அது தன் தரத்தில் குறை காணாது என்கின்றார்கள். மனிதனின் உயர்ந்த குணத்தை உணர்த்திச் சொல்ல ‘தங்கமான மனிதன்’ என்கிறார்கள். தங்கம் போற்ற தக்கதா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு ஏற்பட்டது? அது அழிந்து வரும் கணிமம் என்பதனாலா? உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு யார் காரணம்?

மேற் காணும் கேள்விகளுக்கு மனிதனும் அவனது பேராசை போக்கும் தான் காரணம் என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதுதான் உண்மை. தங்கம் என்பது பூமியில் இருக்கும் மண், கல், மரம், செடி கொடி போன்ற வரிசையில் வரும் ஒரு சாதாரண பொருளே. தங்க விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அதை விலை கொடுத்து வாங்காமல் இருக்க வேண்டும். இவ்வழி மட்டுமே தங்க விலை குறைய திறவு கோலாக அமையும்.

தங்கத்திற்கு மவுசு ஏற்பட்ட சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். மனித நாகரீக வளர்ச்சிக்கு வியாபரம் முக்கிய வர்த்தமானமாக அமைந்திருக்கிறது. வியாபார மாற்றுக்கு தங்கத்தையும் அதனை அடுத்து வெள்ளியையும் உயயோக படுத்தி இருக்கிறார்கள்.

அக்காலகட்டங்களில் யுத்தம் ஏற்படுவது பொதுவான ஒன்று. வெற்றிக் கொண்ட நாடு தோல்வியடைந்த நாட்டை தன் வசமாக்கிக் கொள்ளும். அந்நாட்டில் கிடைக்கும் செல்வங்களை எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக் கொள்வதில் தங்கம் தான் முதலிடம் வகிக்கும். இது தான் மனிதன் தங்கத்திடம் அடிமையான முதல் படி. அரச குலத்தில் தங்கத்தின் உபயோகம் அதிகம் இருந்தது. இதன் வழி தங்கத்தை வைத்திருப்பவர்கள் உயர்ந்தவர்கள் எனும் போக்கு ஏற்பட்டது. முக்கியமாக இந்தியர்களிடையும், எகிப்தியர்களிடையும் தங்கத்தின் மவுசு அதிகமாக இருந்தது. தனது நாட்டின் செல்வச் செருக்கை காட்டவும், வளம் பெற செய்யவும் தங்கம் அதிகமாக தேவைபட்டது.

பின்னாட்களில் தங்கத்தின் தாக்கம் நாம் தற்சமயம் புழகத்தில் பயன்படுத்தும் பணமென உருவெடுத்தது. நாகரீகத்தின் வளர்ச்சி வியாபாரத்தை பெருக்கியது. மக்கள் நாணய மாற்று வியாபாரத்தை பரவளாக அமல்படுத்த ஆரம்பித்தார்கள். தங்க நாணயமே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

இம்மாறுதல் தங்கத்தை பத்திரபடுத்த உற்படுத்தியது. இக்காலகட்டத்தில் மக்களிடையே திருட்டு அதிகரித்தது. அதை தடுக்க தங்க வியாபரிகளும் அடகு கடைகளும் உருவாக்கப்பட்டன. மக்கள் தங்கத்தை அடகு கடைகளில் பத்திரப்படுத்தி வைத்து அதில் பெரும் சான்றிதழை நாணய மாற்றுக்கு பயன்படுத்தினார்கள்.

நாளடைவில் ஒரு குறிபிட்ட நபர்களிடையே தங்கம் அதிகரித்தது. தங்க விலையை அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டார்கள். தங்கத்தின் மேல் இருக்கும் அலாதி பிரியத்தில் மக்களும் அதனை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அதன் விலையும் செல்லில் அடங்க ஏற்றத்தை நாடிக் கொண்டிருக்கிறது.




முக்கியமாக நம் இந்தியர்களிடையே தங்க ஆபரணம் அணிவதை பெருமையாக நினைக்கிறார்கள். ஒரு நற்காரியங்களுக்கு வருபவர்கள் புது புது வடிவில் தங்க ஆபரணங்களை அணிந்து வருகிறார்கள். அதை பார்க்கும் மற்றோர் நபர் தானும் அப்படிபட்ட அணிகலனையோ இல்லை அதைவிட அழகான ஆபரணத்தை வாங்க ஆசைக் கொள்கிறார்கள். தங்கத்தின் விலை அடாது ஏகிறினாலும் நம்மவர்கள் விடாமல் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் தங்க விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?

தீட்டு பட்டுருச்சி!


"ஆயா.... பையனுக்கு பொஸ்தகம் வாங்கனும், ஐயா கிட்ட கேட்டிருந்தேன்",
தலையை சொரிந்தபடி நின்றிருந்தான் குப்புசாமி.

குப்புசாமி அந்த கிராமத்தில் தோட்ட வேலை பார்ப்பவன். இது போக மதிய வேளைகளில் கிராமத்தார்கள் சொல்லும் சிறு சிறு வேலைகளை செய்து கைகாசு வாங்கிக் கொள்வான். கஷ்டபடும் குடும்பம்.

அவன் ஆயா என அழைத்தது சின்ன தாயி எனும் கிழவியை. கிழவியின் குடும்பம் வசதிபடைத்தது. கிழவி குப்புசாமியை நீசனை பார்ப்பது போல பார்த்தாள்.

"மாச கடைசி ஆனா ஆளாளுக்கு வந்துடுங்கடா, சண்டால பசங்களா, நாங்க என்ன காச மரத்துலயாடா நட்டு வச்சிருக்கோம்", கடுகடுவென வார்த்தைகளை கொட்டினாள் கிழவி.

"எல்லாம் இந்த குணா பையன சொல்லனும். அவனவன வைக்க வேண்டிய எடத்துல வச்சாதானே, கண்டவனுங்ககிட்ட பழகுறது, இப்ப என்னடானா வீட்டு வாசல்ல வந்து நிக்குறானுங்க" கிழவி முனங்கிக் கொண்டே பணம் எடுக்க போனாள்.

குப்புசாமியின் காதில் அது கேட்காமல் இல்லை. கிழவியின் புத்தி அவன் அறிந்தது தான். அதுவும் இல்லாமல் தற்சமயம் பணம் அவனுக்கு முக்கியம். யார் என்ன சொன்னால் என்ன. பயனுக்கு புதிய நோட்டு புஸ்தகம் வாங்க வேண்டும்.

வேண்டா வெறுப்பாக குப்புசாமியிடம் பணத்தை நீட்டினாள் கிழவி. அதை வாங்கிய குப்புசாமியின் கை அவள் மீது பட்டது. கிழவி ஆத்திரமடைந்தாள்.

"எட்டி நின்னு வாங்கிக்க முடியாதாடா எடுபட்ட பயலே" ஏசியவாரு கையை சேலையில் துடைத்தாள்.

குப்புசாமி முகம் சுளிக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் கிளம்பியதும் துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள் கிழவி.

"என்ன பாட்டி, இன்னிக்கு இவ்வளோ சீக்கிரம் குளிக்க போற?" கிழவியின் பேத்தி கண்மணி கேட்டாள்.

"அந்த கீழ் சாதிக்காரப் பய கை என் மேல பட்டுறிச்சுடீ".


"நீ திருந்த மாட்ட பாட்டி".


"அடி போடி தீட்டு பட்டுறிச்சுனு சொல்றேன். இப்பதான் பேச வந்துட்டா".

வேகமாய் குளியலறையை நோக்கிச் சென்றாள் கிழவி. எதிர் பாரா விதமாக தடுக்கி விழுந்து தலையில் பலமான காயம் பட்டது. சற்று நேரத்தில் கிழவி உயிரை விட்டாள்.

****

"டேய் குப்பு! பெரியவர் வீட்டு கிழவி மண்டய போட்டுறிச்சி. உன்ன பந்தல் போட கூப்பிடுறாங்க".

குப்புசாமி மறுபடியும் கிழவி வீட்டை நோக்கி ஓடினான். பந்தல் போட்டு மற்ற வேலைகளை முடித்து திரும்புவதற்குள் அவனுக்கு சோர்ந்துவிட்டது. வீட்டுக்குள் நுழைந்த குப்புசாமியிடம் அவனது மகன் கேட்கிறான்.

"அப்பா நோட்டு புஸ்தகம் வாங்கிட்டியா?"


"டேய், செத்து போன கிழவி கொடுத்த காசு டா, பொஸ்தகம் வாங்கினா தீட்டாகிடும், அடுத்த சம்பளதில் அப்பா வாங்கி கொடுக்கிறேன் சரியா".

உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி.

கன்னித் தமிழின் கண்ணீர்- பா.விஜய்

கவிஞர் பா.விஜய் அவர்களின் அடுத்த அக்னிப்பிரவேசம் படித்திருக்கிறீர்களா? எனக்குப் பிடித்த கவிதை தொகுப்பு நூல்களில் இதுவும் அடங்கும். நீண்ட கவிதைகளைக் கொண்ட குறுந் தொகுப்பு நூல்.

அணைத்தும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய சீர்திருத்த கவிதைகளாக இருக்கும். சில இடங்களில் தமிழக அரசியலையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இந்நூலில் எனக்கு பிடித்த ஒரு கவிதையினை இங்குச் சமர்ப்பிக்கிறேன்.

இந்த சமூகம் இருக்கிறதே

சமூகம்

இது

கரும்புக்குக் காத்திருந்தவனுக்கு

சக்கை தரும் சமூகம்


அவன் வீட்டு

அடுப்புக்கு நெருப்பு வைப்பதாய்

இறுதியில்

அவனுக்கே நெருப்பு வைக்கும்


இது

தமிழுக்கு மட்டுமென்ன

தங்க மகுடமா சூட்டும்?


கடையேழு வள்ளல் மட்டும்

கவனிக்காது இருந்திருந்தால்

நமது கவிராஜர்கள்

இலக்கியம் பேசியதாலேயே

இளைத்துப் போய் இருப்பார்கள்.


இவர்கள்

தினசரி இங்கே

திருவோடுகள் ஏந்தினால் தான்

மாதம் ஒருமுறை

கஜானா

கண் திறக்கும்


இப்போதோ

நமது தமிழ் மயில்

உள்ள போகன்கள் எல்லாம்

உலோபிகளாகிவிட்ட காரணத்தால்

விரைவிலேயே

விறைத்துப் போகவிருக்கிறார்கள்.


தமிழிலுள்ள எழுத்தையெல்லாம்

தங்கத்தில் பொறித்தல் வேண்டுமாம்

கேட்டுப் பாருங்கள்

அவன் தங்கத்தை

எழுத்து வடிவத்தில்

பார்த்தவனாக இருப்பான்.


சமுத்திரமாய் இருந்த

சங்கத்தமிழ் முதல்

இப்போதைய

இலக்கியம் வரைக்கும்

இடுப்பில் ஈரத்துணியோடு

இருந்த்வர்கள் எத்தனைப் பேர்?


ஒவ்வொரு கவிஞனின்

இரும்புப் பெட்டியிலும்

இருப்பதெல்லாம் என்ன?

கறையான்களிடம் காப்பாற்றப்பட்ட

ஒரு சில

ஓலைச்சுவடிகளைத் தவிர!


தமிழ்

தனக்கும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.


தமிழனின் கண்களில்

விழுந்த தூசை

துடைப்பதற்கு வந்தவன் கையில்

ஆயுதம்

நமக்கோ கைகளில்லை.


அதனால் தான்

சரித்திரம் என்கிற நதி

ஒரு கரையில் சோலையிலும்

ஒரு கரையில் பாலையிலும்

ஓடிக் கொண்டிருக்கிறது.


நமது அறிஞர்களோ

நல்லதொரு சமுத்திரத்தில்

அலைகளைப் பிடிக்க

வலைகளை வீசுகிறார்கள்.


தமிழுக்காக வாழ்ந்து

தமிழுக்காக இறந்தவன் ஒருவன்

இப்படி எழுதினான்.


தமிழில்

எவ்வளவுக்கு எவ்வளவு

இளமை இருக்கிறதோ

அவ்வளவுக்கு அவ்வளவு

வறுமையும் இருக்கிறது.


ஒன்று மட்டும் உறுதி

தமிழைக் காப்பாற்றுங்கள் என

தானாக சென்று எவனையும்

அழைக்கவும் முடியாது.

அப்படிக் காப்பாற்ற வந்தவன்

பிழைக்கவும் முடியாது.


காரணம் தமிழில்

கல்வெட்டுகள் இருக்கிறதே தவிர

பொன்வெட்டுகள் இல்லை.


தமிழ்ச்சாதி

சிந்தை பொங்கி

சித்ததானம் செய்யலாம்.

ஆயின்

அதற்கு இன்னமும்

ரத்ததானம் செய்தல்

அவசியமாக இருக்கிறது.


போகிற போக்கைப் பார்த்தால்

தமிழ்க் கருவூலமே என்று

வருத்தம் உண்டாகிறது.


தோனியைப் போலல்லாமல்

ஆணியடித்ததைப் போல்

அமர்ந்தே கிடந்தாலும்

அரசாங்க உத்தியோகம் தேவலை.


ஆம்

மாதம் ஒருமாரியாவது

அரசாங்க மேகம்

அபிஷேகம் செய்கிறது.


நமது தமிழ்

தானும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.

Monday, July 21, 2008

புதைந்த நினைவுகள் (1)


நண்பர் பரிசல்காரர் அவியல் எழுதுவது போல நானும் புதைந்த நினைவுகளை எழுதலாம் என்றிருக்கிறேன்.

இதை இங்கு எழுதும் போது கூட திரு.சுஜாதா சொல்லிய வரி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. உயிர் என்பது என்ன? நம் நினைவுகள் தான் உயிர். எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்.

********
அன்று கொஞ்சம் உடல் நலம் இல்லாமல் போனது. மருந்தகத்திற்கு போயிருந்தேன். மருந்தகங்களையோ, மருத்துவ நிலையங்களையோ பார்த்தால் ஒரு நினைவு சட்டென மின்னல் வெட்டும். இப்படியெல்லாம் இருக்காங்கய்யா என நினைத்துக் கொள்வேன்.

வட மலேசிய பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த சமயம். ‘i-robot’ படம் வெளிவந்தது. யாரும் படம் பார்த்துக் கதையை சொல்லும் முன் நாம் பார்த்துவிட வேண்டும் என எண்ணினேன். வார விடுமுறையில் திரையரங்கு போக திட்டமிட்டேன்.

சரியாக நான் திரையரங்கு போக நினைத்திருந்த நாளில் business ethic பாடம் சம்மந்தமாக ஒரு கட்டொழுங்கு கருத்தரங்கு நடக்கவிருப்பதாகவும் கலந்துக் கொள்பவர்களுக்கு மொத்தத்தில் 5 புள்ளிகள் வழங்கப்படும் என கூறிவிட்டார்கள். என்னடா இது விடுமுறை நாட்களில் கூட இப்படி எதையாவது சொல்லி உயிரை வாங்குகிறார்களே என கருவிக் கொண்டேன்.

சரி நம்மிடம் தான் ‘டிசிப்பிலின்’ கொட்டிக் கிடக்கிறதே. ஏன் கருத்தரக்கிற்கெல்லாம் போய் நேரத்தை வீனாக்க வேண்டும். ‘பட்டையை போட்டுவிடலாம் என முடிவு செய்தேன். ஆனாலும் 5 புள்ளிகள் வேண்டும் அல்லவா. வேண்டும் என்றால் வருகை பதிவேட்டில் கையெப்பமிட வேண்டும்.
கருத்தரங்குகளின் போது ஒவ்வொருவரும் வந்தார்களா என அதிகம் கவனிப்பார்கள். நண்பர்களிடம் சொல்லி கையெழுத்து போட சொன்னால் பிரச்சனையாகிவிடும். ஒரே வழி மருத்துவர்கள் கொடுக்கும் ஓய்வு நாள் சான்றிதழ் தான். ஆனாலும் அரசாங்க அங்கிகாரம் இருக்கும் சான்றிதழைத் தான் எடுத்துக் கொள்வார்கள். இந்த பாடத்தின் பேராசிரியர் கொஞ்சம் நல்லவர். எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்வார்.

என் மலாய்கார நண்பன் ஒருவன் வட மலேசிய மாநிலத்தைச் சேர்ந்தவன். மருத்துவ சான்றிதழ் எங்கே சுலபமாக கிடைக்கும் என சொன்னான். அந்த ஊரிலேயே இருப்பவர்களுக்கு அதிகம் தெரியும் அல்லவா. நானும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.

அந்த நண்பன் சொன்னபடியே பழைய கட்டிடம் அது. அந்த ‘கிளினிக்’கின் பெயர் போட்டு இருந்தது. உள்ளே போனேன் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு சீனக் கிழவன் இருந்தார். டாக்டர் இருக்கிறாரா என கேட்டேன். உள்ளே போய் அமரச் சொன்னார்.

உள்ளே அமர்ந்திருந்தேன். அந்தக் கிழவன் தான் வந்தார். என் நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது. “அந்த ‘கிளினிக்கில்’ ஒரு சீன கிழவன் இருப்பான், அவன் தான் டாக்டர், அவன் தான் நர்ஸ், அவன் தான் மருந்து கொடுக்கிறவன்.” ஆஹா அவன் தான இவன் என நினைத்துக் கொண்டேன்.
அந்த டாக்டர் வந்தவுடன் என்னிடம் கேட்டார்.
“mau berapa hari cuti?” (உனக்கு எத்தனை நாள் விடுப்பு வேண்டும்?)

நிற்க. நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் இப்போது தான் முதல் முறையாக இங்கே வந்திருக்கேன். என்ன காரணத்திற்கு வந்திருக்கிறேன் என கூட கேட்காமல் எத்தனை நாள் விடுப்பு வேண்டும் என கேட்கிறார். யார் கண்டார்கள். யாரவது உண்மையிலேயே நோய் காரணமாக வர மாட்டார்களா? எடுத்த எடுப்பில் இப்படியா கேட்பார்கள்.

இன்று ஒரு நாள் போதும் என கூறினேன். எழுதிக் கொடுத்தார். கிளினிக் வெறிச்சேடிக் கிடந்தது. இரண்டு பழைய வானொலிகள் ஒரு ஓரமாக இருந்தது. இப்படி ‘எம்.சி’ எழுதிக் கொடுத்து தான் இந்த கிளினிக் ஓடுகிறது என புரிந்துக் கொண்டேன். அவருடன் பேச்சுக் கொடுத்தேன்.

“இந்த இடம் உனக்கு போரடிக்கவில்லையா? ரொண்டு ‘ரேடியோ’ இருக்கு அதையும் திறந்து வைக்கவில்லை”.

“இல்லை நான் எப்போதும் பிசியா இருப்போன். ஆட்கள் வந்து போய் கொண்டு இருப்பார்கள்”, என்றார்.

அடப்பாவி. நாக்கு கூசாம பொய் சொல்றியே என நினைத்துக் கொண்டேன்.

“சரி அடையாள அட்டையைக் கொடு, யாராவது போன் செய்து கேட்டால் சொல்ல வசதியாக இருக்கும்” என்றார்.

நான் எங்கிருந்து வருகிறேன். அப்படி போன் செய்தால் யார் செய்வார்கள் என்றேல்லாம் கேட்கவில்லை. அடையாள அட்டையை வாங்கிக் குறித்துக் கொண்டார்.

விலையை கேட்டேன்.

“ஒரு நாள் விடுப்பு என்றால் 5 ரிங்கிட்”.

இதில் நாள் கணக்கு ஒரு கேடு என நினைத்துக் கொண்டேன். கிளினிக்கிற்கு வரும் முன் லேசான இருமல் இருந்தது, இருமல் மருந்து வாங்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த கிளினிக்கின் நிலமையைப் பார்த்து நொந்து போனேன்.

இங்கே மருந்து வாங்கி சாப்பிட்டு ஏதாவது நோய் வந்து தொலைந்தலும் தொலையலாம். மருந்து வாங்காமல் அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் ஒன்று மட்டும் நினைத்துக் கொண்டேன். இனி ‘எம்.சி’ எடுப்பதென்றால் இங்குதான் வர வேண்டும். நண்பர்களிடமும் செல்லி வைக்க வேண்டும். ஆபத்து அவசர கால மருத்துவ விடுப்பு எடுக்க இந்த இடம் வசதியாக இருக்கும்.

அங்கிருந்து திரையரங்கிற்கு போனேன். நான் பார்க்க நினைத்த படம் திரையிடப்படவில்லை. சோகத்தின் உச்சகட்டமாய் இரண்டு ‘டின் பியர்’ வாங்கி அடித்து விட்டு அறைக்கு போய் படுத்து உறங்கிப் போனேன்.

Wednesday, July 16, 2008

தமிழுக்கு நிறம் உண்டு


நேற்றய தினம் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள். இன்றைக்கு தமிழை ஆண்டுக் கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலேயே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடக்கூடிய வல்லமை வாய்ந்தவராக வைரமுத்து திகழ்கிறார்.

அவருடைய கவிதைகள் பல எனக்கு மிக அத்துப்படி. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் நினைவில் இருந்து அழியாது. முக்கியமாக அம்மா, கூடு மற்றும் உலகம் எனும் கவிதைகள் படிக்க படிக்க திகட்டாது. அவருடைய தமிழுக்கு நிறம் உண்டு எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இருந்து ஒரு கவிதையை இங்கே எழுதிப் போகிறேன்.

பிற்சேர்க்கை

ஒன்று:
சொல்லுங்கள் புலவரே!
முத்துக்கள் பிறக்கும்
இடம் பத்து…

மேகத்தில் பிறக்கும்
சங்கில் ஜனிக்கும்
சிற்பியில் இருக்கும்
தாமரையில் உயிர்க்கும்
வாழையில் கிடைக்கும்
மூங்கிலில் முளைக்கும்
தந்தத்தில் வெடிக்கும்
நாகத்தில் தெரிக்கும்

“ஒன்றை மறந்தீரே…”
“என்னது?”
“உழைப்பவன் நெற்றி”

இரண்டு:

சொல்லுங்கள் அறிஞரே!
மூடநம்பிக்கை
எவை எவை?
கழுதை கத்துதல் சுபம்
விதவை எதிர்வந்தால் பாவம்
மொட்டையடித்தால் முக்தி
உள்ளங்கை அரித்தால் வருவாய்
காலையில் காணும் கனவு பலிக்கும்
“ஒன்றை மறந்தீரே!”
“என்னது”.
“மந்திரியிடம் மனு”

மூன்று:

சொல்லுங்கள் ஜோசியரே!
இருட்டில் செய்யத்தகாதவை
எவை எவை

முடிவெட்டலாகாது
நகம் களைதலாகாது
பேன் பார்த்தலாகாது
அழுக்குத்துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது

“ஒன்றை மறந்தீரே!”
“என்னது?”
“தொலைக்காட்சி ஆகாது”


நான்கு:

சொல்லுங்கள் பண்டிதரே!
பார்க்க முடியாதவை எவை?

அலையற்ற கடல்
இறவாத உடல்
ஆகாயம் இல்லாத ஊர்
நீர் கலவாத மோர்’
திரையரங்கில் தேசிய கீதம்
பிழைக்கத் தெரிந்த கவிஞன்
கைதொடாத காதலன்
வாழைமரத்தில் ஊஞ்சல்
உலோபியின் புன்னகை

“ஒன்றை மறந்தீரே”
“என்னது”
“ஜனநாயகத்தின் சத்தியம்”


நன்றி: தமிழுக்கு நிறம் உண்டு

Sunday, July 13, 2008

திருடியது யார் - சிறுகதை

('திருடியது யார்' சிறுகதையை கடந்த வருடம் வலைப்பதில் பிரவேசிப்பதற்கு முன் எழுதினேன். ஏதோ ஒரு தைரியத்தில் மலேசிய நண்பன் நாளிதழுக்கும் அனுப்பி வைத்தேன். 09.09.2007 ஞாயிறு நண்பனில் இக்கதை வெளிவந்தது. இப்பொழுது இக்கதையை படிக்கும் போது எப்பேர்பட்ட கொலை வெறி கதையை எழுதியிருக்கின்றோம் என்ற வருத்தமும் ஏற்படுகிறது. அந்தக் கொலை வெறி கதையை நீங்களும் அனுபவித்துப் பாருங்கள்.)
“என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார்.

குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரு தனியார் நிறுவணத்தில் பணி புறிந்து வருகிறான். மகேனின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த அதே கவலை,

“ என்னடா கப்பல் கவுந்த மாதிரி இனமும் சோகமா இருக்க, அதன் எல்லாம் சரியாயிடுச்சே, பின்ன என்ன கவலை”, என்று மகேனை பார்த்தான் குமார்.

“இல்லடா குமார் நீ கொடுத்த கார்டுல பணம் எடுக்க முடியலடா, பாக்கி பணம் ரொம்ப குறைவா இருக்கு”, என்றான் மகேன். தன் நண்பனின் பதில் குமாரின் காதுகளில் இடி போல் விழுந்தது.

சமீபத்தில் மகேனுக்கு சிறு பண பிரச்சனை எற்பட்டது. கடந்த வருடம் தான் சேமித்து வைத்திருந்த தொகையை முன் பணமாக செலுத்தி அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டை வாங்கி சந்தோஷமாக தன் குடும்பத்தாருடன் குடி புகுந்தான். வாடகை வீட்டுக்கு பணத்தைக் கொடுப்பதை விட, வங்கியில் சொந்த வீட்டுக்கு மாதத் தவனைச் செலுத்துவது அவனுக்கு ஒரு வித திருப்தியே அளித்தது.

சிறு பிராயத்தில் தந்தையை இழந்த மகேனுக்கு இடைநிலை கல்வியை தொடரும் தம்பியும், மூட்டு வலியால் பாதிக்க பட்ட தாயாரும் உள்ளனர். இரு மாதங்களுக்கு முன்பு தனதுத் தாயாரின் உடல் நிலை பாதிக்க படவே, அவனுக்கு அதிகமான மருத்துவ செலவுகள் எற்பட்டது மட்டுமல்லாமல் வீட்டுத் தவனையும் சரிவர செலுத்த முடியாமல் கால தாமதம் ஆனது. வங்கியிலிருந்து மூன்றாம் நினைவுருத்தல் கடிதம் வந்ததும் தன் நண்பன் குமாரின் உதவியை நாடினான் மகேன்.

குழப்பத்தில் இருந்த தன் நண்பனின் தோளில் கையை வைத்தான் மகேன், “டேய் என்னடா, என் மேல சந்தேகப்படுரியா? நான் பொய் சொல்லல, நிஜமா நான் பார்க்கும் போது பணமே இல்லைடா”, என சங்கடமாகக் கூறினான் மகேன்.

“சேய்! என்னடா இப்படி பேசற, உன் குணம் எனக்கு தெரியாதா, நான் அந்த பணத்தை எந்த காரியத்துக்கும் பயன்படுத்தல. அதான் ரொம்ப குழப்பமா இருக்கு, வா என்ன செய்யலாம்னு யோசிப்போம்”, என தன் வேலைகளை நிறுத்திவிட்டு வந்தான் குமார். தன் மடிக் கனிணியை திறந்து அவன் செய்த வரவு செலவுகளை சரி பார்த்தான், தான் அந்த வங்கியின் பணத்தை உபயோகிக்கவில்லையென தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

இரு நண்பர்களும் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்த உணவகத்தில், இனம் புரியாத அழுத்தத்துடனும் குழப்பத்துடனும் அமர்ந்திருந்தார்கள். குமார் தனது ஊழியர்களை தொடர்பு கொண்டு, வியாபார வரவு செலவுகளை குறித்து வைத்து அந்த வங்கி கணக்குடன் ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தான். அவன் செலவு செய்யவில்லை என்பதையே ஊழியர்களும் குறிப்பிட்டார்கள். பலமுறை யோசித்து, மேழும் குழப்பம் அடைந்த அவன் தனது சட்டைப் பையில் இருந்த வெண்சுருட்டை பற்ற வைத்தான்.

“சரி இன்னும் ஒரு வழிதான் இருக்கு, வா ‘பேங்’ போய் என்ன பிரச்சனைனு கேட்டு தெரிஞ்சிக்கலாம்”, என்று தன் நண்பனை அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்றான் குமார்.

வங்கிகளில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகள் உடனுக்குடன் கனிணி செயல்பாட்டால் பதிவு செய்யப் பட்டிருக்கும். கடந்த நாட்களில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகளை வேண்டிய சமயத்தில் பதிவு எடுத்து வைத்துக் கொள்ள வசதிகள் செய்துத் தரப் பட்டுள்ளன.

“போன வாரம்தான் சார் எல்லா பணத்தையும் வெளியாக்கிருக்கிங்க” என கூறி பற்றுவரவு கணக்கு வழக்குகளை குமாரின் முன் வைத்தார் வங்கியின் குமாஸ்தா. தனது சேமிப்புப் பணம் அனைத்துமே தொடர்ந்து ஆயிரம் ஆயிரம் ரிங்கிட்டாக வெளியாக்கி முடிக்கப் பட்டிருந்ததை பார்த்த குமார் மேழும் பேரதிர்ச்சியடைந்தான்.

வங்கி மேலதிகாரியிடம் நடந்தவற்றை விளக்கிக் கூறினான், தன் பணம் மீண்டும் கிடைக்காது என்ற பட்சத்தில், வங்கியின் நிர்வாகம் சரியில்லாததால்தான் தான் பணத்தை இழக்க நேர்ந்தது என கோபத்தில் தகராறு செய்தான். வங்கி நிர்வாகத்தினர் பணம் காணமற் போனதற்கும் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதில் விடாப் பிடியாக இருந்தார்கள்.

கஷ்டப் பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதில் மனம்முடைந்தவன் தன் வங்கி கணக்கு வழக்குகளை ரத்து செய்து விட்டு கிளம்பினான். மகேனுக்கோ தன்னால்தான் தன் நண்பனுக்கு இவ்வளவு சிரமம் எற்பட்டது என் நினைத்து மன வருத்தம் ஏற்பட்டது.

காவல் நிலையத்தில் முழு விவரமும் புகார் செய்யப் பட்டு இருவரும் வீடு திரும்பும் வழியில் பல சிந்தனைகள் குமாரின் மனத் திரையில் சிறகடித்தன. பாதுகாப்பாக வங்கியில் வைத்த பணம் எப்படி காணமற் போக முடியும். இந்த ஒரு கேள்விக்கே அவன் மனம் பதிலைத் தேடி அலைந்து திரிந்தது. வேறு என்னதான் செய்ய முடியும், பாடு பட்ட பலன்கள் யாவும் பஞ்சாய் பறந்து போனால் யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும். வங்கி ஊழியர்கள் யாராகினும் பணத்தை எடுத்து விட்டிருப்பார்களா? இப்படியாக மனம் எதையெதையோ எண்ணியது.

“சாரிடா மகேன், என் பிரச்சனையில உன்ன மறந்துட்டேன், இந்த ‘செக்க’ வச்சி உன் கடனை அடைச்சிடு, பயபடாத இது வேர பேங்க் அக்காவுண்ட், கண்டிப்பா பிரச்சனை இருக்காது”, என்று சட்டைப் பையில் இருந்த காசோலையை நீட்டினான் குமார்.

“என்னடா நீ! நீயே கஷ்டத்துல, இருக்க எனக்கு வெற தண்ட செலவு தேவயா? பரவாலடா, நான் வேறு இடத்துல பணத்தை புரட்டிக்கிறேன்”, என்று நண்பனின் காசோலையை வாங்க மறுத்தான் மகேன். அவனை சமதான படுத்தி காசோலையை கொடுத்து விட்டு விடைபெற்று வீடு திரும்பினான் குமார்.

புதிய நாள் கண்திறந்து பத்து நாழிகை கழிந்திருந்தது, ஈப்போ நகரம் வேலைப் பளுவால் கனத்து காணப்பட்டது. இவையனைத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தது ஒரு உருவம். நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டிருந்த கையடக்கத் தொலைபேசி உறங்கி கொண்டிருந்தவரின் உறக்கத்தை சற்றும் கலைக்கவில்லை.
ஏழாவது முறையாக ஒலியெழும்பிய போது அவரது கைகள் போர்வையிலிருந்து எட்டிப் பார்த்து ஓசை எழுப்பிய கருவியை அலசியது. தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து முடித்தவர் சட்டென கிளம்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் தனது காரில் காற்றோடு காற்றாக மறைந்தார்.

“வாங்க மிஸ்டர் மாதவன், உங்க விடுமுறை முடியறதுக்கு முன்னதாவே உங்கள வேலைக்கு வர சொன்னதற்கு மன்னிக்கனும், முக்கியமான கேஸ் ஒன்ன சீக்கரமா முடிக்க உத்தரவு போட்டுடாங்க, அதான் உங்கள அழைக்க வேண்டியதா போச்சி”, என்றார் காவல் அதிகாரியான அமீர்.

“பரவாயில்லை சார் நீண்ட நாள் விடுமுறை எனக்கும் போரடிச்சி போச்சி, நேத்து ‘நைட்டுதான்’ ஊர்லெருந்து வந்தேன், தூங்க ‘லேட்டாச்சி’ அதான் நீங்க போன் பண்ணுனது தெரியாம அசந்து தூங்கிட்டேன், நீங்கதான் என்ன மன்னிக்கனும்”, என்றார் மாதவன்.

மாதவன் சிறப்புப் போலிஸ் பிரிவினில் பணிபுரியும், திறமையும், தைரியமும் மிக்க காவல் அதிகாரி. பல சிக்கலான புகார்களை நூதனமான யுக்திகளை கையாண்டு கண்டுபிடித்தவர். இதனால் காவல் இலாக்காவினரிடம் அவருக்கெனெ தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது.

“சரி மாதவன், இந்த ‘பைல்ஸ்’ எல்லாம் கடந்த மூனு மாதமா இந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு வந்த ‘கேஸஸ்’,” என்று மாதவன் முன் சில புகார் பதிவுகளை எடுத்து வைத்தார் அமீர்.

“இங்க இருக்கறது எல்லாமே இந்த ஈப்போ நகரத்த சுற்றியுள்ள ‘பேங்’ சம்மந்தப் பட்ட புகார்கள். ‘பேங்’ல உள்ளவங்களுக்கோ, ‘டேப்பாசிட்டர்கோ’ இந்த பணம் எப்படி காணமல் போனதுனு தெரியல. சிக்கலான கேஸ்ஸாக இருக்கறதால தடயங்கள் கிடைக்கவும் சிரமமா இருக்கு. என் சந்தேகமெல்லாம் இது பலரால் செய்யப் பட்டிருக்கலாம் என்பதுதான். கூடிய சீக்கரத்தில் இதை நாம் கண்டிபிடிச்சி தடுக்கனும், இதனால் பலர் பாதிக்க பட்டிருக்காங்க” என சினிமாவில் வரும் போலிஸ் அதிகாரி போல எடுத்துரைத்தார் அமீர்.

“சரி சார் இந்த ‘கேஸ’ நான் எடுத்துக்கிறேன்”, என்று கர்வமற்ற தன்னம்பிக்கையுடன் கூறினார் மாதவன். “ஓகே மாதவன் இந்த ‘கேஸ்’ சம்மந்தமா எந்த உதவியா இருந்தாலும் என்னை நாடலாம்”, என்று மேழும் ஊக்கம் கொடுத்து அனுப்பினார் அமீர்.

தலைமை காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டவர் அருகிலிருந்த உணவகத்தில் தனது மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். சுமாராக ஐந்து மணிவாக்கில், ஒரு நிறைவான தூக்கத்தை முடித்துவிட்டேன் என்பதற்கடையாளமாக நெட்டி முறித்து எழுந்த மாதவன், தன் எதிர் மேஜைமீதிருந்த புகார்களை பார்த்தார்.

அழுது முடித்திருந்த அந்திமழையின் சாரல் காற்று, தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்த மாதவனின் முகத்தை இதமாக வருடிச் சென்றதும் தனக்குள் ஒரு புத்துணர்வு எற்படுவதை உணர்ந்தார். அவரது சிந்தனைகள் தனக்கு கொடுக்கப் பட்டிருந்த பொறுப்பை நோக்கி ஓடியது. அனைத்து புகார்களும் ஒரே மாதிரியாகவும், அருகருகே உள்ள ஊர்களில் நடந்திருந்தாலும் அனைத்தும் சம்மந்த பட்ட ஒரே நபராலோ அல்லது நபர்களாலோ மட்டுமே செய்திருக்கக் கூடும் என முடிவெடுப்பது தவறு. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதையாகி விடுமோ என அஞ்சினார். அவை வெவ்வேரு ஆட்களாலும் செய்யப்பட்டிருக்கலாம் அல்லவா!

சில விஷயங்கள் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனியென மாதவனுக்கு புலப்பட்டது. சம்பவங்கள் பாதிக்கப் பட்ட நபர்களை அறியாமலே நடந்திருக்கிறது. வங்கியின் சேமிப்புப் பணம் பறிபோயிருக்கிறது என்றால் முக்கிய தகவல்களான உறுப்பினர் எண் மற்றும் ரகசிய ‘பின் கோர்டுகள்’, ஆகியன அடுத்தவருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த ரகசியங்கள் தொலைவது எவ்வகையில் சாத்தியமாகும். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். மேலும் தெளிவான தடயங்களை புரட்ட பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து விசாரிக்க முடிவு செய்தார்.

இறுதி நபராக குமார் விசாரணைக்கு அழைக்கப் பட்டான். “கடைசியாக இந்த ‘பேங்’ சம்மந்தப் பட்ட விபரங்களை என்ன விஷயமா பயன்படுத்துனீங்க சொல்ல முடியுமா?” என்றார் மாதவன்.

“கண்டிப்பா ஞாபகம் இருக்கு ‘சார்’, வியாபாரத்துக்காக ‘இன்டர்நெட்’ வழியா பொருட்கள் வாங்க பார்த்தேன், சரியான தகவல்களை கொடுத்தும் வாங்குவதற்கு பிரச்சனையா இருந்ததால ரத்து செஞ்சிட்டேன்” என ரத்தின சுருக்கமாக தன் பதிலைக் கூறி விடைப் பெற்று சென்றான் குமார்.

“விசாரனையில் சில முக்கிய தடயங்கள் நமக்கு கிடைச்சிருக்கு, பாதிக்க பட்ட எல்லோரும் தன் பணம் காணமற் போனதை உணர்வதற்கு முன்பு, பணம் கட்டவோ, அல்லது பொருள் வாங்கவோ, இணையம் வழி வங்கிச் சேவையை பயன்படுத்திருக்காங்க. இதனால அசம்பாவிதம் நடந்திருக்கும் என நான் நினைக்கிறேன். கணினி தொழில் நுட்ப நிபுணர்களின் உதவி இருந்தால் என் வேலையை தொடர சுலபமாக இருக்கும்” என்று அமீரிடம் விசாரனனயின் ஆய்வை கூறினார் மாதவன்.

“ ‘ஓகே’ மாதவன் நாளைக்கே எற்பாடு பண்ணிடலாம்”, என்றார் அமீர். பத்திரிக்கைக்கு இந்த விசாரனை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டாமெனவும், இதனால் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் சிரமங்கள் எற்படலாமெனவும் கூறினார் மாதவன்.

“இணையத்தின் வழி இப்படிபட்ட பிரச்சனைகள் நடக்க வாய்ப்புகள் இருக்கு ‘சார்’ , ஆனால் வங்கியின் இணைய சேவையும் பலத்த பாதுகாப்புடன்தான் செயல்படுத்தப் படுகிறது, இப்போதய நிலைமைக்கு நாம் யாரையும் சந்தேகிக்க முடியாது, பாதிக்கப்பட்டவர்கள் இறுதியாக எப்பொழுது வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி இருக்காங்கனு சற்று ஆராய்ந்தால் முக்கிய தகவல்களை திரட்ட வசதியாக இருக்கும்”, என்று மாதவனிடம் விளக்கிக் கூறினார் கணினி நிபுணர் அர்ஜூன்.

அடுத்த அரைமணி நேரத்தில் பாதிக்கப் பட்ட நபர்கள் இறுதியாக இணையத்தின் வழி வங்கியுடன் தெடர்புக் கொண்டதை ஆராய்ந்து பார்த்தார் அர்ஜுன். பாதிக்கப் பட்டவர்கள் வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி முடித்த பின்பு அவர்களது பெயர் மற்றும் ரகசியப் பின் கோடுகளைப் பயன்படுத்தி வேறொரு கணினியின் மூலம் அவர்களது வங்கி கணக்கு வழக்குகள் மறுபடியும் திறக்கப் பட்டிருந்தது. பாதிக்கப் பட்டவர்கள் கூறிய திகதி மற்றும் நேரத்திற்கு பிறகும் இணையம் வழி வங்கியின் கணக்கு வழக்குகள் பார்வையிட பட்டிருந்தது. இதை விட சுவாரசியமாக புகார் கொடுத்தவர்கள் அனைவரது கணக்கு வழக்குகளும் ஒரே இணைய சேவையின் மூலம் திறந்து பார்வையிடப் பட்டிருந்ததே.

“இந்த ‘IP Address’ எந்தத் தொலைபேசி தொடர்பின் வழி இணையத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது என்பதை வைத்து நாம் அவர்களின் முகவரியை அறிந்து கொள்ள முடியும்”, என்ற திருப்தியான பதிலை மாதவனிடம் கூறினார் அர்ஜுன்.

முகவரியை அறிந்து கொண்ட மாதவன் மேலும் சில காவல் அதிகாரிகளுடன் புறப்பட்டார். ஒரு அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதியில் தன் வாகனத்தை நிறுத்தி வைத்தவர், தன் சக நண்பர்களுடன் தேடி வந்த வீட்டை நோக்கிச் சென்றார். கதவைத் தட்டியவுடன், இருபது வயது மதிக்கதக்க இளைஞன் வெளியே எட்டிப் பார்த்தான். மாதவன் தான் விசாரனைக்கு வந்துள்ளதாக சொல்வதற்கு முன்பே, தன் நண்பர்களிடம் ‘போலீஸ்’ என கூச்சலிட்டு தன்னுடன் இருந்த இரு நண்பர்களுடன் தப்பிக்க முயன்றான். போலிசாரின் தர்ம அடிகளுடன் மூவரும் கைது செய்யப் பட்டார்கள். அவர்களது குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப் பட்ட பொருட்கள் அனைத்தும் கைபற்றப் பட்டன.

விசாரணையின் போது தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்ட அந்த மூவரும் படித்து முடித்த பின்பு வேலையில்லாததால் இந்த குற்றத்தை புரிய தூண்டுதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வங்கியின் இணைய அகப்பக்கத்தை போன்ற போலி அகபக்கத்தை உறுவாக்கி, தவறுதலாக அதில் நுழையும் பயனீட்டாளர்களின் முக்கிய தகவல்களை திரட்டியுள்ளார்கள். அந்த தகவல்களின் அடிப்படையில், இணையம் வழி கணக்கு வழக்குகளை ஆராய்ந்து, சட்டவிரோத முறையில் போலி வங்கி அட்டைகளை செய்து பணத்தைத் திருடியிருக்கிறார்கள், என திரு.அமீரிடம் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு சமர்பித்தார் மாதவன்.
தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, குற்ற செயல்களையும் அதிகரிக்கவே செய்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் குற்றச் செயல்களை தடுக்க முடியும், என பொறிக்கப் பட்டிருந்த பத்திரிக்கை செய்தியை படித்த மாதவன், பச்சை விளக்கு விழுந்தவுடன் பத்திரிக்கையை பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு தன் காரை செலுத்தினார். நிறைவாக வேலையை முடித்தத் திருப்தியுடன் ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறார் மாதவன்.

நூல் வெளியீடு: கிள்ளான் & ஈப்போ

ஜூலை 14, திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், அரச நகர் கிள்ளானில் உள்ள லக்சமனா அரங்கில் ‘வேராக நீ; நிழலாக நான்’ எனும் நூல் வெளியீடு காண்கிறது.
சிறுகதை எழுத்தாளர் எஸ்.எம்.ஆறுமுகம் தான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து வேராக நீ-நிழலாக நான் என்னும் பெயரில் வெளியிடுகிறார். மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் சிறப்புரை ஆற்றும் இந்த நிகழ்வில் எழுத்தாளர் ப.சந்திரகாந்தம் நூலாய்வுரை வழங்குகிறார்.

இலக்கிய ஆர்வாலர்களும் தமிழன்பர்களும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குபடி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


*****

'மலேசிய இந்தியர்கள் ஓராய்வு' எனும் நூல் எதிர்வரும் 27 ஜூலையில் வெளியீடு காண்கிறது. க.கலைமுத்து எழுதிய இந்நூல் ஈப்போ காயிங் சங்க மண்டபத்தில் மாலை 4 மணியளவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இந்நூல் விலை ரி.ம 40 வெள்ளிக்கு சந்தையில் விற்பனைக் காணவுள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் இந்நூல் அமெரிக்க டாலர் 20க்கு விற்கப்படும். நிகழ்வின் அன்று இந்நூலை வாங்க விரும்புபவர்கள் ரி.ம 30 வெள்ளிக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

மலேசிய தமிழ் அன்பர்கள் இந்நூல் நிகழ்வில் கலந்துச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, July 10, 2008

மாயாக்கள் இருந்தார்களா?

பல நூற்றாண்டுகளுக்கு முன், தெளிவற்ற காரணத்தோடு, ஒரு இனம் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறது. அந்த இனத்தின் பெயர் மாயா. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை. நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள் நிறைவடையவில்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்துக் கட்டுமாணங்களும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது.

வேண்டுதல்களும், மாய மந்திர வேலைகளும் நின்றுவிட்டது. அன்று முதல், இவ்வினத்தின் மூதாதைகளின் புத்திசாலிதனமும், கற்பித்தலும் காற்றோடு கலந்துவிட்டது. மிச்சம் மீதி இருந்த மாயா இனத்தவர்களுக்கு எழுத்தின் மீதும் படிப்பறிவின் மீதும் கண் பார்வையற்று போயிற்று. அவர்களுக்கு வாழ்க்கை நேறியும் மறந்து போயிற்று. அவ்வினம் மிருகத்தன்மையை அடைந்தது. மேற் கூறியவை மெக்ஸிகோ நாட்டின் காட்டுப் பகுதியில் மர்மமாய் தோன்றி மறைந்த மாயா நாகரிக அராய்ச்சியாளர்களின் அறிக்கை.

1000 வருடங்களுக்கும் மேலாக இவ்வளவு ஆச்சரியமும், அற்புதமும் நிறைந்த நாகரிகம் புதைந்து கிடந்த்தை யாரும் கண்டறியவில்லை. 1839-ஆம் ஆண்டு, அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான John Lloyd Stephens தமது உதவியாளர் ஒருவரின் துணையோடு அங்கே செல்கிறார். பாழடைந்த பழமைமிக்க நகர பகுதி அங்கே உதித்து மறைந்ததை அவர் கண்டுபிடிக்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள் படர்ந்திருந்த கட்டிடங்கள் கலைதிறன் மிக்க வேலைபாடுகளோடு உறுதியோடு இருக்கக் காண்கிறார். அடுத்ததாக அவர் ஒரு விசித்திரத்தை காண்கிறார். அவ்விடத்தில் மனிதர்கள் யாரையும் காண முடியவில்லை. நீண்ட காலமாக அவ்விடம் நாதியற்று கிடந்திருக்கிறது.

அன்று முதல் அவ்விடம் ஆராய்ச்சிக்குள்ளாகிறது. ஆராய்ச்சியின் மேல் ஆராய்ச்சிகள் நடந்து புதைந்து போன மாயா இனத்தவரின் வரலாற்றைத் தோண்டி எடுக்கிறார்கள். மாய இனத்தவர்கள் ஆச்சரியமிக்க நாகரிகத்தை உருவாகியுள்ளார்கள், பலப் பல துறைகளில் அறிவு திறன்மிக்கவர்களாக திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளர்ராத காலத்தில் நடந்தவை.

இந்த கண்டுபிடிப்பின் மகிழ்ச்சியில், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விந்தையும் உதித்தது. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய செய்து பின்னர் எதற்காக அதைவிட்டு மறைந்தார்கள் என்பதே அவர்களின் வியப்பாகும்.

மாயா இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது உலகிற்குப் பயனுள்ள பல துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அழிக்கப்பட்டது.
இச்செயல் உலகிற்கு மாயா இனத்தவரை பற்றிய பல உண்மைகளை உணர்த்த முடியாமலும் செய்துவிட்டது. அது நமக்கு பெரும் நஷ்டமும் கூட. தற்சமயம் நமக்கு வெளிபடையாக கிடைத்திருப்பது அந்நாகரித்தை பற்றிய சிறு துளியளவு கண்டுபிடிப்புகள் மட்டுமே. இவையாவும் அவ்விடத்தில் கிடைக்கப் பெற்ற சில துண்டு எழுத்துகளின் வடிவில் கிடைத்தவையாகும்.

இந்த மர்ம நகரில் பெரும் கற்களைக் கொண்ட கட்டிட வேலைபாடுகள் உள்ளன, பெரிய அளவிளான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றதக்க கலைத்திறன்களாகும். இவை தற்போதய தொழில்நுட்பத்தைவிடவும் மேலானவையாகவே கருதப்படுகிறது.

எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி நுட்பத்தை குறிக்கிறது. இதைத் தவிர்த்து கட்டிடங்களின் உட்புறமும் வெளிப்புறமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை பற்றிய விடயங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.



மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்தது? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்ததும், அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் எவ்விதமான தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தகய நகரத்தை அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே.

அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்டப் பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.

900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயாக்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குக் காரணம் மாயா நகரப் பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்றுக் கிடந்தது தான்.

இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயாக்களின் வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். மாயாக்களின் கலைத் திறன் மிகவும் நுட்பமானது, சிற்பக் கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan, Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் மிகவும் திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை.

Bonamak என்ற இடத்தில் அமைந்த மாயாக்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயாக்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

மாயாக்களின் எழுத்தின் அடிப்படையில், இச்சிற்பங்களை வடிவமைத்தவர்கள் தங்களது பெயரை சிற்பத்தின் எதாவது ஒரு இடத்தில் பொறித்துள்ளார்கள். இதனால் சிற்பிகள் மாயாக்களின் காலத்தில் பேற்றதக்கவர்களாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. சிற்பகலை வருங்கால சந்ததியினருக்கு இவர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என முன்னதாகவே இவர்கள் அறிந்திருக்கின்றனர்.

மாயாக்களால் நுட்பமாய் செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே இருக்கின்றன. பிரமிடு, வழிபாட்டு இடங்கள் மற்றும் வியாபார தளங்கள் இந்நாகரிக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன. இவையே ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்தை அறிந்து கொள்ளச் சிறந்த தடயமாய் அமைந்தது.

மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் .

ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த இன்னோரு விசயம் மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதானங்கள் ஆங்கில எழுத்தின் ‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

மாயாக்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது.
1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வான் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன.

சுவாரசியமான ஒரு நாவலில் கடைசிப் பக்கம் இல்லாமல் போனால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது மாயாக்களின் வரலாறும். மேலும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

Wednesday, July 09, 2008

ஈப்போ நகர் வெள்ளைக் காபி

வெள்ளைக் காபிக்கு பெயர் போனது ஈப்போ நகரம்(IPOH WHITE COFFEE). வெள்ளைக் காபி எனது விருப்ப பானமும் கூட. சூடாக பருகுவதை விட பனி கட்டிகள் போட்ட பானமாக குடிக்க சுவை மிகுதியாக இருக்கும்.

காபி வெள்ளையாக இருக்குமா என கேட்கின்றீர்களா? வேள்ளைக் காபி சமைக்க பயன்படுத்தும் காபி கொட்டைகளை வெண்ணையில் நன்கு ‘ரோஸ்ட்’ செய்துவிடுவார்கள். இந்த செய்முறை, காபியின் இயற் தன்மையான கருப்பு நிறத்தை மாற்றி வெண்மை நிறமாக காட்டுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பேராக் மாநிலம் ஈய மண் உற்பத்தியில் பெயர் போனதாக திகழ்ந்தது. அச்சமயத்தில் ஈப்போ நகரின் ஈய ஆலை சீன தொழிலாளர்கள், காபி கொட்டைகளை வெண்ணையில் ‘ரோஸ்ட்’ செய்து பருகும் வழக்கத்தை கொண்டவர்களாக இருந்தார்கள். இதனால் வெள்ளை கபி என்றால் ஈப்போ என்றாகிவிட்டது.
நான் கெடா(கடாரம்) மாநிலத்தில் இருக்கும் வட மலேசிய பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம் வெளி மாநிலங்களில் வெள்ளை காப்பி அறிமுகம் ஆனது. ஆனால் அதன் இயற்கையாக வசனைத் தன்மையும் சுவையும் குறைந்தே காணப்பட்டது.
தற்சமயம் சிறிய பாக்கெட்டுகளில் வெள்ளை காபி விற்பனைக்கு உள்ளது. சீனி, கிரிமர் என கலவையை சேர்த்து விற்க்கப்படும் வெள்ளை காபி இயற்கையான சுவையோடு இருக்கிறது. சாதரன THREE-IN-ONE MIX கலவை காபியை குடிப்பதற்கும் வெள்ளை காபி THREE-IN-ONE MIX கலவைக்கும் நிறய மாறுபடுகள் உள்ளதை குடிப்பவர்கள் உணரலாம்.

நேற்று வெள்ளை காபி குடிக்க தொன்றிற்று. ‘ஸ்ட்ராங்கா’ ஒரு வெள்ளை காபி வெண்டும் என சொல்லிவிட்டு அமர்ந்திருந்தேன். வெள்ளைக் காபியும் வந்தது. கொஞ்சம் தான் குடித்தேன். பாதி கிண்ண காபியை அப்படியே வைத்துவிட்டேன். புதிதாக வந்திருந்த காபி கலக்கும் ஆள் அதிகமாக சீனியை சேர்த்துவிட்டிருந்தான்.

எனக்கு அதீத இனிப்பு பிடிக்காது. முன்பு காபி போடும் சீனக் கிழவனுக்கு உடல் நலம் இல்லையாம். அதனால் புதிய ஆள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறான். புதியவனிடம் சீனியை குறைத்து போட சொல்லியிருக்க வேண்டும். புதியவன் கலக்கும் முறையில் வெள்ளை காபியின் பழைய சுவை இல்லாமல் இருக்கிறது. இனி வெள்ளை காபி எனக்கு பிடிக்காமல் போகலாம்.

Tuesday, July 08, 2008

ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை


மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை எனும் புத்தகம் ஜானகிராமன் ஐயா அவர்களால் எழுதப்பட்டது. இதில் வரும் கவிதை ஒன்றை என்றேன்றும் என்னால் மறக்க முடியாது. இன்றும் கூட இப்புத்தகம் என் கண்ணில் படுகையில் இக்கவிதை வரிகள் என் எண்ண அலைகளை ஆக்கிரமிக்கும். லேசான சோகம் ஒன்று என்னை ஆட்கொள்ளும்.

ம‌லாயாவின் பொருளாதார‌ம் முப்ப‌துக‌ளில் ப‌டுவீழ்ச்சி க‌ண்டிருந்த‌து. இர‌ப்ப‌ரின் விலை மிக‌ மோச‌மாக‌ வீழ்ச்சி க‌ண்டிருந்த‌தால், அத‌ன் உற்ப‌த்தியை அதிக‌மாக‌வே குறைத்துவிட‌ நேர்ந்த‌து. அதனால் த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ள் ப‌ல‌ர் திரும்ப‌ இந்திய‌ நாட்டிற்கே க‌ட்டாய‌மாக‌ அனுப்பி வைக்க‌ நேர்ந்த‌து.

அந்நிலையில் பால்ம‌ர‌ம் சீவும் தொழிலாளி ஒருவ‌ன் துரையையும் கிராணியையும் க‌ங்காணியையும் ம‌க்க‌ளையும் விட்டுப் பிரிய‌ ம‌ன‌மில்லாம‌ல் க‌ண்ணீர் சிந்துவ‌தாக‌ ஒரு தொழிலாளியின் நோக்கு நிலையில் ரா.சுப்பிர‌ம‌ணி ஐய‌ர் என்ப‌வ‌ர் ஒரு க‌விதையை இய‌ற்றியுள்ளார். இக்க‌விதையில் தோட்ட‌புற‌ பின்ன‌னி, வாழ்விய‌ல் கூறுக‌ள், ம‌ண்ணின் ம‌ன‌ம் ஆகிய‌ன‌ சிற‌ப்பாக‌ வெளிப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.


போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
க‌ண்ணாடித்துரையும் போனார்
க‌ங்காணி வீர‌ன் போனார்
பின்னாடி கிராணி போனார்
தாங்காம‌ல் நானும் போரேன்
என்ன‌மோ பின்னாலே எப்போதூன்னை
காண‌ப்போரேன்
(போய்)

ப‌வுனுக்கு ப‌வுன்விலையாய்
பாலுவித்த‌க் கால‌ம் போச்சே
புளிவிலைக்கும் தோற்றுப் போச்சே
பாலுவெட்டும் நிறுத்த‌லாச்சே
யார்செய்த‌ மோச‌ம் பாராய்
எவ‌ரிட்ட‌சாப‌ம் கூறாய்
(போய்)

ரொட்டிப்பால் ஒருவிலையும்
ஒட்டுப்பால் ஒருவிலையும்
ப‌ட்டைக்கு ஒருவிலையும்
(பாலு) கொட்டைக்கு ஒருவிலையும்
த‌ங்க‌ம்போல் விலைத‌ந்தாய்
ப‌ங்க‌மாய் நிலைகுலைந்தாய்
(போய்)

தீபாவ‌ளி ப‌டியென்றும்
பொங்க‌லுக்குப் பொடியென்றும்
சீராய்கொடுத்த‌ எந்த‌ன்
சிரித்த‌முக‌த்துத் துரை
கையைத்தான் விரிகிறாரே
காசென்று கேட்டாலிப்போ
(போய்)


க‌ற்ப‌க‌மென்று சொல்வார்
க‌ண்ட‌தில்லை இவ்வுல‌கில்
க‌ற்ப‌க‌ம் என்று சொல்ல‌
க‌ண்க‌ண்ட‌ ம‌ர‌மும் நீயே
கால‌மே கோல‌மோ
காப்பாற்றுவார் இல்லையே
(போய்)

உன்னைந‌ம்பி வாழ்ந்த‌வ‌ர்க‌ள்
எத்த‌னை பேர்க‌ளுண்டு
அத்த‌னை பேர்க‌ளுமே
அழுதுகொண்டு போகுறாரே
உயிர‌ள‌வும் ம‌ற‌க்க‌மாட்டேன்
ஊருக்குப் போய்வாரேன்
(போய்)


ஆதார‌ம் ம‌லேசிய‌த் த‌மிழ் க‌விதை மாநாடு
ம‌ல‌ர் 2000 ப‌க்க‌ம் 153

ந‌ன்றி : திரு.ஜான‌கிராம‌ன் (ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை)

Monday, July 07, 2008

எங்கடா போச்சு உன்னோட கம்பளிப் பூச்சி?

நான் இந்தக் கேள்வியைப் பல முறை சந்தித்திருக்கிறேன். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும் என்பார்கள். அதை போல் தான் என் மீசைக் கதையும்.

சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போது சங்கடப்பட்டும் போய் இருக்கிறேன்.

“என்ன வயசாகுது தம்பி உனக்கு”

“24”

“ஆமாவா? நம்ப முடியல, சின்னப் பையன் மாறி இருக்க”.

இதற்காக நான் என் பிறப்புப் பத்திரத்தையா எடுத்துக் காண்பிக்க முடியும். அடப் போங்கய்யா என சொல்லி அமைதியாக இருந்துவிடுவேன்.
பல தருணங்களில் என் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள், “டே மீசை வச்சி பாருடா. மெச்சூர்ட் லுக் வரும்”. என் நண்பர் வட்டதிலும் சிலருக்குதான் என் சோகக் கதை தெரியும். தெரியாத ஜந்துக்கள் அடிக்கடி இப்படிச் சொல்லித் தொலையும்.

அப்பொழுது 16 வயது இருக்கும். நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம். மீசை அரும்பாக மலர்ந்துக் கொண்டிருந்த்து. சீராக இருந்தது. ‘ஆட்டோகிராப்’ பட்த்தில் வரும் சேரனை போல் அதை பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்.

அந்தச் சமயம் என் பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் ஒரு சீனர். பெரும்பாழும் சீனர் மற்றும் மலாய்கார்களை பார்த்தோமானல் மீசை வைக்க மாட்டார்கள். மீசையும் வளராது இதில் விதிவிளக்காக இருப்பவரும் உண்டு.

பள்ளியில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு தான் இந்த மீசை பிரச்சனை வரும். ஒரு வாரந்திரப் பரிசோதனையின் சமயம், அந்தக் கட்டொழுங்கு ஆசிரியர் மீசையை வழிக்கச் சொல்லிவிட்டார்.

நானும் அடி வாங்காமல் இருக்க மறுநாள் மீசையை வழித்துவிட்டு வந்தேன். (அந்த வாத்தி நல்லா இருக்கட்டும்). அப்போது ஆரம்பித்த்து பிரச்சனை. மீசை சீராக வளர மறுத்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வளரும். கட்டையும் நெட்டையுமக வளரும். இதனால் பல முறை நெந்து போய் இருக்கிறேன்.
இப்பொழுதெல்லாம் மீசையை வழிப்பதில்லை. அளவாகக் கத்தரித்துவிடுவேன்.

Sunday, July 06, 2008

ஒரு தாயின் மனம்


நினைவுகளை சுமக்கிறாள்
ஒரு தாய்!
பசிக்கு அழுதிடுவானோ
எனக் கனவு
கலைந்த
பச்சை உடல் காலம்!
விளையாடுகையில்
விழுந்திடுவானோ எனப்
பதறிய மாலைப் பொழுதுகள்!
தேர்வுக்காகத்
தேக்கி வைத்த
தூக்கத்தோடு
தேனீர் கலக்கிய இரவுகள்!
கல்லூரியில்
சேர்த்த போது
கண் கலங்கிய
இள நரைக் கிழவி,
திருமணம் செய்வித்து
கடமை முடிந்த
நெகிழ்ச்சியில் திளைந்திருந்தாள்!
இன்று அவள்
இறுதி மூச்சை
சுவாசிக்க மறந்து போனாள்
முதியோர் இல்லத்தில்.

Thursday, July 03, 2008

நூல் நயம்: சாண்டில்யனின் ராஜ யோகம்


உடையார் நாவல் வந்து சேரும் இந்தத் தறுவாயில் சாண்டில்யனின் ”ராஜ யோகம்” எனும் நாவலை வாசித்து முடித்தேன். கடல் புறாவைப் போல வளவளவென இழுவையாக இல்லாமல் கனகச்சிதமாகச் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்திருக்கிறார் சாண்டில்யன்.

பொன்னியின் செல்வனைப் படித்து முடித்த போது, சரித்திர நாவல் என்றால் சோழர் கதைகளை மட்டுமே படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். தவிர்க முடியாத காரணத்தின் பேரில் மற்ற நூல்களையும் படிக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியனை போட்டியை மையமாகக் கொண்டு இந்நாவல் தொகுக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியன் மணிமுடியைத் தன் இளய மனைவியின் மகனான வீரபண்டியனிடம் கொடுக்க நினைக்கிறான். பட்டத்து ராணியின் முதல் மகனானவன் சுத்தரபாண்டியன். பதவியாசையின் பேரில் தந்தையையும் கொல்லத் துணிகிறான். பாரபட்சம் பார்க்காமல் பல கொடூரங்களை புரிகிறான்.

இக்கதையின் நாயகன், நாயகி எனும் கற்பனைப் பாத்திரங்கள் அவசியத்தின் பேரில் படைக்கப்பட்டிருந்தாலும், அப்துல்லா வாஸப் எனும் சரித்திர ஆசிரியன் தான் உண்மையான நாயகன்.

வாஸப் தனது சரித்திர ஆராய்ச்சிக்காகப் பாரசீகத்திலிருந்து பாண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறான். பாண்டிய நாட்டில் காலடி வைக்கும் வாஸப் எதிர்பாரா விதமாக அரசியல் சிக்கலில் அகப்பட்டுக் கொள்கிறான்.
பல முயற்சிகள் செய்தும் கடைசியில் பண்டிய நாட்டு மன்னனை காப்பாற்ற முடியாமல் போகிறது. அரியணை மீது இருந்த பேராசையில் மகனே தன் தந்தையை குத்திக் கொல்கிறான். நாட்டில் தாயாதிச் சண்டை எற்படுவதற்கு முன் பாண்டிய மண்ணிலிருந்து கிளம்புகிறான் வாஸப்.

கடல் புறாவில் இருந்ததைவிட இந்நாவலில் சிருங்கார ரசமும், பெண் வர்ணனையும் சற்றுத் தூக்கலாகவே இருக்கிறது. ஒரு அத்தியாயத்தில் சாண்டில்யன் ராஜ யோகத்தை எழுதுவதை மறந்து காம சூத்திரத்தை எழுதுகிறாரா என்ற எண்ணமும் உண்டானது.

இந்நாவலை படித்து முடித்த போது சில வரிகள் என்னுள் நீங்காமல் இருந்தது அவை:

ஒரு கட்டத்தில் நாயகனான இளம்பிரிதி வாஸப் தொழுகை புரியும் சமயத்தை காத்து நிற்கிறான். அப்போது எதிரியிடம்:

“தொழுகை ஆண்டவனை பற்றியது. அவனுக்குப் பெயர்கள் பல இருக்கலாம். அவன் ஒருவன் தான். நதிகள் பல உற்பத்தியானாலும் கடைசியில் கடலைச் சேருவது போல, தொழுகை யார் செய்தாலும் அது ஒருவனான ஆண்டவனைச் சேர்கிறது. இது இந்து மதம் சொல்லும் தத்துவம். தொழுகை- அதை யார் செய்தாலும் அதை காப்பது இந்துவின் கடமை”.

இளம்பிரிதி வாஸப்புடன் உரையாடுகையில்:

“வாஸப்! மரணம் நகைப்புக்கு இடமானதா”

“ஆம் இளம்பரிதி, நிரந்தரமானது அது ஒன்றுதான். நிச்சயமாய் எந்த மனிதனுக்கும் இன வித்தியாசம் இன்றி வருவது அது ஒன்றுதான். அதை நினைத்து மனிதன் நடுங்குகிறான். நடுங்குவதற்காக அது விடுவதில்லை. ஆகவே அதை அலட்சியப்படுத்துவது தான் விவேகம். நகைப்பதுதான் அறிவின் அடையாளம்.”

அடுத்ததாக:

“இனப்பற்று, மொழிப்பற்று இல்லாத சமுதாயம் சக்தியுடன் வளர முடியாது”

ஒரு கட்டத்தில் இளம்பிரிதி நாயகியான அல்லியுடன் காதல் மொழி பேசுகிறான். அது வாஸப் காதில் விழவும் வாஸப் நினைக்கிறான்:

“மண்ணாசையும் பெண்ணாசையும் யாரை விட்டது. பெண் அருகில் இருக்கும் போது எந்த ஆண்மகன் ஆபத்தை பற்றி நினைக்கிறான்”.

இப்படி இன்னும் பல சுவாரசியமான வரிகள்.
அடுத்த்தாக அரசர்களுக்கு ஜாதகத்தில் கூறப்படும் ராஜ யோகங்களை பற்றியும் ஒரு கட்டத்தில் விவாதிக்கிறார்கள்:

அவையனது, அபவாத ராஜயோகம், அனுபவ ராஜயோகம், ஸ்வத ஸித்த ராஜ யோகம், சாமான்ய ராஜயோகம், விஷய போக ராஜயோகம், அதிகார ராஜயோகம் மற்றும் பகுமான ராஜயோகம்.

இது மட்டும் இல்லாமல் பல பரிமாணங்களில் அலசி ஆராய்ந்து பண்டிய நாட்டில் அந்நாளய சூழலை நமக்கு ராஜ யோக விருந்தாகப் படைத்திருக்கிரார் சாண்டில்யன்.

Wednesday, July 02, 2008

மௌனத்தின் சில வார்த்தைகள்


உன் பார்வையில்
எத்தனை மௌன மொழிகள்!
விழியோரம் வழிந்திடும்
இரகசியப் பார்வை!
இதழோடு இதழ்
உரசிடும் மெல்லிய புன்னகை!
உள்மனம் உன்னை
நெருங்கச் சொல்கிறது!
நீயோ- பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் ஓடுகிறாய்
எப்போதோ பார்க்கும் உன்னை
தப்பாமல் நினைக்கிறேன்
சிக்காமல் செல்லும் உன்னை
சிறையெடுக்கத் தவிக்கிறேன்
சிவனில் பாதி சக்தியாமே!
எனக்குச் சக்தி கொடுப்பாயா?
பெண்ணே!
காதலித்தால் கவிதை வருமாமே!
கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?
காதலெனும் (க)விதையை
விதைத்துவிட்டேன்
நல்ல மரம் வளர
நீர் ஊற்று
நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு.