Wednesday, January 13, 2010

கொசுறு 13/01/2010

சில தினங்களுக்கு முன் நண்பரோடு காலை சிற்றுண்டிக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்ட பிறகு நண்பர் சப்பாத்தி பொட்டலம்கட்ட ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தார். கடையில் வேலை செய்யும் சர்வர் இவரது ஆடரை கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. மறுமுறை சொன்னபோதும் தலையை தலையை ஆட்டிக் கொண்டு சென்றார்.

பணம் செலுத்த வந்த போது, “அண்ணே ரெண்டு சப்பாத்தியா போட்டாச்சு எடுத்துக்கிறிங்களா?” என்றார்.

என் நண்பர் வேண்டாம் என மறுத்துவிட்டு ஒன்றுக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு வந்தார்.

நமது வியாபார தளத்துக்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களே முதன்மையானவர்கள். நமக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள். அவர்களை நம்பிதான் நாம் வாழ வேண்டும்- இக்கூற்று மாகாத்மா காந்தியால் சொல்லப்பட்டது. பலவிடங்களிலும் இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள்.

வியாபாரத்தின் அடைவு நிலை என்பது கிடைக்கும் இலாபத்தால் மட்டும் கணக்கிட்டு முடிப்பதில்லை. அதிக இலாபம் திருட்டுக்குச் சமம் என்பார்கள். தயாரிப்புக்கும் பொருள் அல்லது கொடுக்கப்படும் சேவை எந்த அளவுக்கு அதை பெற்றுக் கொண்ட பயனீட்டாளரை திருப்திபடுத்தியது என்பதே அடைவு நிலையின் உச்சம்.

தொழில் துறை , விவசாய துறை , சுற்றுலா துறை , சேவை துறை என வியாபரங்களின் விரிவாக்கம் நாளொரு வண்ணமும் செழிப்படைந்து வருகிறது. வியாபாரத்தின் வழியே கொள்ளை பணத்தை ஈட்டுவது சாத்தியம் எனும் எண்ணம் பலரும் உண்டு. ஏற்புடைய கருத்தாயினும் பணம் கிடைத்தால் போதும் எனும் நோக்கில் எப்படி வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாமா?
*****

சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி எனும் புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்திருக்கிறேன். நீல நிற அட்டையுடனான புத்தகம். இதற்கு கூட புத்தகமா என அதை புரட்டி பார்க்க கூட எத்தனிக்கவில்லை.

அன்று புத்தக கடையில் புதிய வடிவ அட்டையில் இருக்கக் கண்டதும் எடுத்துப் பார்த்தேன். சிறுகதை எழுதுவது எப்படி என்பது சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு நூல். தலைப்பின் காரணத்திற்காகவே இப்புத்தகம் சிறுகதை எழுதுவதை சொல்லிக் கொடுக்கும் புத்தகம் என நம்பி பலராலும் வாங்கப்பட்டிருக்கிறது.

உணரபட்டவை: சாணியடி சித்தர் சொன்னதை போல் முகப்பை பார்த்து புத்தகத்தை எடை போட கூடாது. வடிவமைப்பும் முக்கியமான ஒன்று என்பதை அறியமுடிகிறது. சமீப கால புத்தக முகப்புகள் சிறப்பாகவே வடிமைக்கப்பட்டு வெளியாகின்றன.
************எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. எப்போதாவது கவிதை அல்லது செய்திகளை எழுதி வைப்பதுண்டு. கடந்த ஆண்டு செய்தி சேகரிப்பதும் கவிதை எழுதுவதும் பலமாக குறைந்து போனது. டைரிகளும் புத்தம் புதிதாகவே இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் கிடைத்ததை போல 2010-ஆம் ஆண்டுக்கான டைரி ஒன்று கூட கிடைக்கவில்லை. இதைத் தான் எண்ணம் போல் வாழ்கை என்பார்களோ? ;-)

**************

சீனி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றம் நமக்கு புதிதில்லை. பயனிட்டாளர் பொது இயக்கத்திடையே இதைச் சொல்வோமானால், மக்கள் மத்தியில் இனிப்பு நீர் வியாதி அதிகரிப்பதை தடுக்க இதுவே சிறந்த வழி என்பார்கள். ஏற்கனவே சொன்ன காரணம் தானே.

கிரெடிட் காட்டின் நிலை இன்று வரை புரியாமலே இருக்கிறது. இது போக தனிபட்ட சேவை வரிகள் இணைக்கப்படுமென ஊடகங்கள் வெளியிடும் தகவல்களால் தலை சுற்றுகிறது.
**********

பேஸ்புக் (முகரை புத்தகம்னு சொல்லலாமா?) வலைபக்கம் சுவாரசியமாக இருக்கிறது. வேடிக்கை, விளையாட்டுகள் என நேரம் நாசமாய் போகிறது. புத்திக்கு உறைத்தாலும் எண்ணத்தை கட்டுபடுத்த முடியவில்லை. இணையப்பக்கம் வரும் போதெல்லாம் திறந்து வைத்துக் கொண்டிருக்கச் சொல்கிறது.

மலேசிய மாணவர்களிடையே தேர்ச்சி விகிதமும், படிப்பில் ஆர்வக் குறைவு ஏற்பட்டுள்ளதற்கும் பேஸ்புக் போதை முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக மலாய் நாளேடு ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. பயனிட்டாளர்களிடையே அதீத போதையை கொடுக்கும் இவ்வலைப்பக்கத்திற்கு எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பது சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய பொருட்களிடையே இருக்கும் மோகம் நாளடைவில் குறைந்துப் போகும் தானே?
**************

இயக்குநர் அமிர் நடித்திருக்கும் யோகி மற்றும் ரேனிகுண்டா போன்ற படங்கள் யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களாக அமைந்திருக்கின்றன. வன்முறையின் உச்சம் என சிலர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. வேட்டைகாரன் படத்தில் விஜயின் அலம்பல்களை கைதட்டி இரசிப்போருக்கு இப்படங்கள் வன்முறையாகத் தான் தெரியும் போல.
******************

தமிழ் நாட்டில் புத்தக திருவிழா களைகட்டி இருப்பதை அறிய முடிகிறது. சென்ற வருடத்தைப் போலவே சாரு, ஜெயமோகன், எஸ்.ரா எனும் அதே பெயர் வரிசைகளே இவ்வருடமும் அதிகபடியாக பேசப்படுகிறது.


கடந்த ஆண்டின் புத்தக சந்தையின் போது ஆடர் கொடுத்த மாயவலை இரண்டு மாதங்களுக்கு
முன் தான் என் கைக்கு கிடைத்தது. படித்து முடிப்பதற்குள் தொண்டை தண்ணி வற்றிப் போய்விடும் போல.

மாயவலை ஆறு வருட ஆய்வின் பதிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் வேற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் விதமாகவே செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை புரிதலுக்கு மாயவலை சிறந்த புத்தகம் என்றே கூற முடியும். பா.ராவின் எழுத்து நடை கவரும் வகையில் அமைந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

*****************
அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துகள்.

Sunday, January 10, 2010

எப்போதும் பெண் (நாவல்) - சுஜாதா



புத்தகம்: எப்போதும் பெண்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை

"இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்.'' - முன்னுரையில் சுஜாதா.

தாய், சகோதரிகள், தோழிகள், பின்நாட்களில் மனைவி என ஆணின் வாழ்க்கை முறை அமைகிறது. இதில் பொரும்பாலான இடங்களில் பெண் என்பவளுடனான தொடர்பு நிலை தொடர்ந்து நிலைக்காமலும், பாதியாகவும் முடிவடைந்து விடுகிறது. பெண்ணின் சுதந்திரம் ஒரு வரையரைக்குட்பட்டு இருப்பதனால் இந்நிலை எற்படும் சாத்தியங்கள் அதிகம் இருக்க முடியுமென நாம் சொல்லலாம்.

அப்பா, அண்ணன்கள், தம்பிகள், தாத்தா, மாமா, கணவன், அம்மா, அக்காள் என அவளை சார்ந்த முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வயது நிலையிலும் பெண் என்பவளின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதை அவள் விரும்புகிறாளா அல்லது ஏற்றுக் கொள்கிறாளா என்பதையும் அவளை சூழ்ந்தவர்கள் அறிந்துக் கொள்ள விரும்புவது கிடையாது. இது தான் சமூக நியதி எனும் கட்டாயங்கள் திணிக்கப்படுகிறது. பெண் என்பவளின் சுதந்திரம் அவளால் விரும்பப்பட்டது அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை காட்டினும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டது என்பதே தகும்.

பெண் பாலியல் வன்முறைகளுக்கு எதிரானா சட்ட திட்டங்கள் தேவையற்று போய்விடும் நிலை மனித நாகரீகத்தின் அதீத வளர்ச்சியின் பின்னும் தீர்ந்தபாடில்லை. அது இன்னமும் மெருகூட்டப்பட்டு, சீர்திருத்தப்பட்டு
நீதி எனும் பெயரில் உபயோகிக்கப்படுகிறது. பெண்ணை போகப் பொருளாக பார்க்கவும் உபயோகிக்கவும் ஆண்களுக்கான கட்டளைகள் அவனது மரபணுவின் வழியாக செலுத்தப்பட்டுவிடுகிறது. பெண்களிடம் தோன்றும் காமத் தேடல்களை அவன் விரும்பச் செய்கிறான். ஆண் என்பவனுக்கு ஏன் அப்படி தோன்ற வேண்டும்? அவனுள் ஏற்படும் பௌதிக மாற்றமும், பெண்ணின் பருவ வளர்சிகளும் அவனை இத்தூண்டுதலுக்கு ஆளாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சுஜாதாவின் எப்போதும் பெண் எனும் நாவல் பெண்னை பற்றிய அடிப்படை புரிதலை நமக்கு நயமாக விவரித்துள்ளது என்பது மிகையற்றது. பெண்ணின் வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் காரணங்கள் யாவை என்பதினை எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார். வளர்ச்சி அல்லது மாறுதல்கள் என்பன பெண்ணின் உடல், உள்ளம் மற்றும் செயல்பாடுகள் யாவற்றிலும் அடங்கியுள்ளது. அவளின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் சில கட்டமைப்புகள் சூழ்ந்துக் கொள்கின்றன. ஒரு வரையரைக்குட்பட்ட தீர்மானங்களையோ செயல்பாடுகளை மட்டுமே அவளால் செய்ய முடிகிறது.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், ஓரிரு வயது வித்தியாசங்களுடன் ஒரு தாய்க்கு பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வளர்கப்படும் விதம் ஒரே விதமான சூழ்நிலையைக் கொண்டது. இருப்பினும் இருவரின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும் அது வேறுபாட்டை கொடுக்கிறது. இந்நிலைக்கான சாத்தியங்கள் நமக்கு குழப்பத்தை கொடுக்கின்றன. பிறப்பின் நியதி என இதை நாம் பொதுப்படையாக சொல்லிவிடுகிறோம்.

மூன்று ஆண் குழந்தைகளை பெற்று இல்வாழ்க்கையில் சலித்துப் போன ஒரு ஆண் தூக்கம் வராமல் போரடித்துப் போன இரவொன்றில் தன் மனைவியை சுகிக்க, விந்து அவளின் கரு முட்டையை தேடி ஓடுகிறது. நாவலின் முதல் பக்கத்தில் இதை படித்தவுடன் முடிவு வரை எப்படி கொண்டுச் செல்வார் எனும் தீர்மானத்தை ஓரளவேனும் யூகிக்க முடிந்தது. இக்கதையின் முடிவு எனக்கு அளப்பறிய பாதிப்பை கொடுக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும் இதன் வாசிப்பு புதிய அனுபவமாகவும், சுவாரசியமாகவும் இருக்கவேச் செய்தது.

இதை கதையென்றோ, நாவல் என்றோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் படித்துப் பாருங்கள் என ஆரம்பிக்கும் சுஜாதாவின் முன்னுரை இக்கதைக்காக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையை நமக்கு தெளிவிக்கிறது. நன்னெறிகளையும், நீதிக் கதைகளையும் விரும்பிப் படிபவர்கள் விரசமான எழுத்து என இப்புத்தகத்தை ஒதுக்கக் கூடும். நகைச்சுவை, எழுத்துநடை, சுவாரசியம் என தனக்கே உரிய பாணியில் கொடுக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம் எல்லோராலும் நிச்சயம் படிக்கக் கூடிய ஒன்றெனவே சொல்லமுடிகிறது.