Friday, June 21, 2013

மோசமான புகை மூட்டம்- மலேசியா, சிங்கப்பூர் மக்கள் பரிதவிப்பு

இந்த ஓரிரு நாட்களில் மலேசியவின் பல மாநிலங்களிலும் சிங்கை, இந்தோனேசியா, தென் தாய்லாந்து பகுதிகளில் சிலவும் கடுமையான புகை மூட்டத்தால் பாதிப்படைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போதய நிலவரம் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. 

பொதுவாக இந்த மாதிரியான புகை மூட்டம் எல்லா ஆண்டுகளிலும் இருக்கும் ஒன்றே. இந்த ஆண்டு அதன் நிலை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. இன்றய நிலையில் நான் வசிக்கும் ஜேகூர் பகுதிகளில் புகை மூட்டத்தின் அடர்த்தி 327-லை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இங்குள்ள சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 

இதே போன்ற நிலையை 1997-ல் கண்டிருக்கின்றேன். இந்த புகை மூட்ட பிரச்சனை இயற்கை பேரிடர் என்பதை காட்டினும் மனிதர்களின் செயலால் செயற்கையாக ஏற்பட்ட ஒன்றே. இந்தோனேசியாவின் சுமாத்ரா எனும் பகுதியில் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட காட்டு தீயினால் கட்டுக்கடங்கா இந்த புகைமூட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 

புகைக்கு பயந்து வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைக்க வேண்டி உள்ளது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளி வரும் போதும் திறந்த வெளிகளில் இருக்கும் போதும் முகமுடி அணிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்றய நிலையில் வேலை செய்யும் போதும் முகமுடி அவசிய பொருளாகிவிட்டது. இது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட தண்டனைய என்பதை ஐயம் இல்லாமல் சொல்லலாம்.

என்ன தான் முகமுடி அணிந்திருந்தாலும் கண் எரிச்சலையும் தொண்டையில் ஏற்படும் அறிப்பு தன்மையையும் தவிர்க்க முடியாத நிலையில் இருப்பது வருத்தமே. 

சுமாத்ராவில் ஏற்பட்ட காட்டு தீ, தற்போதைய சீதோசன நிலையினால் உண்டானதாக கூறப்படுகிறது. இருந்தும் அதன் பின்னணியில் உள்ள முதாலாளிதுவத்தின் செயல்பாடுகளையும் மறுக்க இயலாது. வணிகம் பொருட்டு காடுகள் அழிக்கப்படுவதாலும் இப்படி புகை மூட்டம் ஏற்படுகிறது என்பதே உண்மை.

நிலைமை மேலும் மோசமாகும் பட்சத்தில் செயற்கை மழையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது மலேசிய அரசு. தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் சுகாதார மையங்களை ஆங்காங்கு திறக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

புகைமூட்டத்தின் அளவுகோள்:
0 - 50 மோசமில்லா நிலை
51 - 100 மத்திமம்
101 - 200 ஆரோக்கியமற்ற நிலை
201 - 300 மிகவும் ஆரோக்கியமற்ற நிலை
301 - 400 ஆபாத்து நிலை
401 - 500 மிகவும் ஆபத்தான நிலை
> 501 ஊரடங்கு நிலை
இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் இங்கிருக்கும் புகைமூட்டத்தின் அடர்த்தி 310 ஆக உள்ளது.


ஏற்படக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகள்:
1. தொண்டை அரிப்பு, இருமல்
2. சுவாச பிரச்சனை, மூக்கில் அடைப்பு
3. கண் எரிச்சல்
4. தோல் எரிச்சல்
5. நெஞ்சு வலி



கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகள்
1. வெளியே செல்லும் போது முகமூடி அணிந்துக் கொள்வது நலம்.
2. முடிந்த அளவு வெளியே செல்லாமல் இருக்க முயற்சியுங்கள்.
3. அடிக்கடி சுத்தமான நீரை அருந்த வேண்டும்.
4. வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைத்திருங்கள்.
5. புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
6. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
7. முகத்தினையும், கைகளையும் அடிக்கடி சுத்தமான நீரினில் கழுவுவது நலம்.
8. கண்களுக்கான சொட்டு மருந்து, ஈரமான டெட்டால் முக காகிதங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம்.
9. மோசமான தாக்கத்திற்குட்பட்டோர் நிச்சயமாக மருத்துவ பரிசோதனைக்கு செல்வது அவசியம்.
10. புகை மூட்ட அடர்த்தி நிலையையும் செய்திகளையும் கவனம் எடுத்து தெரிந்து கொள்ளுங்கள்.

Wednesday, June 19, 2013

அரசியல் எனக்குப் பிடிக்கும்

நூல்: அரசியல் எனக்குப் பிடிக்கும்
நயம்: அரசியல்
ஆசிரியர்:ச.தமிழ்ச்செல்வன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்


அரசியல் எனக்குப் பிடிக்கும். இந்த குட்டி வாக்கியம் சில காலத்திற்கு முன் நான் வாசித்த ஒரு சிறு நூலின் தலைப்பாகும். காரம் குறையாத கடுகை போன்றது தான் இந்த நூலின் தன்மையும். கவனிக்க தக்க இந்த நூல், வாசகனுக்கு தெளிவான விளக்கத்தை உதாரணங்களோடும் சம்பவங்களோடும் மிக சுவாரசியமாக படைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன்.

அரசியல், சமூகம், பொருளாதாரம் எனும் மூன்று கூறுகள் உலக வாழ்க்கையில் எல்லா மாந்தர்களுக்குமான முக்கிய அம்சமாகும். விரும்பினாலும் விரும்பாவிட்டாமும் இவற்றில் இருந்து எந்த ஒரு மனிதனும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. 

இன்றய நிலையில் அரசியல் ஒரு தீண்ட தகாத பொருளாகவே பார்க்கப்படுகிறது. பொது வெளியில் அரசியலின் இருண்ட பக்கம் மக்களிடையே ஒரு கசப்புத் தன்மையை ஏற்படுத்தி உள்ளது. உலகாளாவிய அரசியல் ஆனாலும் அல்லது உள்ளூர் அரசியல் ஆனாலும் அங்கிருக்கும் அரசியல் தன்மை என்பது ஏற்றமும் தாழ்வும் சேர்த்தே விமர்சிக்கப்படுவதை நாம் காணலாம். இதுவே அரசியலின் ஆரோக்கிய தன்மை என்பதாக நான் காருதுகிறேன்.

இப்புத்தகம் கிருஷ்ண பிரபுவால் எனக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சில புத்தகங்களை வாங்க அவரிடம் உதவி கேட்ட பொழுது இன்னும் சில முக்கியாமாக புத்தகங்களையும் சேர்ந்து அனுப்பி வைத்திருந்தார்.

இந்த புத்தகத்தில் அரசியல் தொடர்பான ஒரு விரிவான பார்வையை வாசகனுக்கு வைக்கிறார் தமிழ்ச்செல்வன். அரசு, அரசியல், அரசாங்கம் என்பதன் விளகங்கள் இந்நூலினை வாசிக்க ஆர்வம் கெள்ள செய்கிறது. 

அரசியல் என சொல்லும் போது உங்கள் கண் முன் தோன்றும் காட்சி என்னவாக இருக்கும்? அரசியல் தலைவரின் முகமோ, அரசின் அலுவலகமோ உங்கள் மனக் கண்ணில் காட்சியளிக்கலாம். அரசியல் கட்சிகள் இல்லாத போதும் அரசாங்கம் நம்மை ஆட்சி செய்தே வருகிறது. 

இராணுவம், காவல்துறை மேலும் இதர அரசு நிர்வாகங்களும் நாட்டின் சட்ட திட்டங்களை பாதுகாக்க வழிவகுக்கிறது. நீதி, நிர்வாகம், இராணுவம், போலீஸ் இதையெல்லாம் நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதில்லை. இருந்தும் நமது விருப்பம், தேர்வுகளுக்கு அப்பால் இரும்புப் பிடியாக நம்மீது இடையறாது ஆட்சி செலுத்திக்கொண்டே இருக்கிறது அரசு என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இதுவே கம்யூனிச முறையில் நமது பார்வை இரண்டே சொல்லுக்குள் அடங்கிவிடுகிறது. ஒன்று இடது சாரி அரசியல் மற்றொன்று வலது சாரி அரசியல். ஆட்சி, அரசு, அரசாங்கம் என்பதை பொய்யாக்கும் ஒரு கோணத்தை கம்யூனிச மேதை கார்ல்மாக்ஸ் குறிப்பிடுகிறார். நாட்டின் சொத்துடைமை அல்லது பொருளாதாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை அரசியல் நிர்ணயம் செய்கிறது.

அரசியல் என்பதன் கோனங்களையும் ஒரு விரிவான பார்வையையும் நமது புரிதலையும் சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த நூல் நிச்சயமாக நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

Monday, June 17, 2013

'பிக்கினி' அழகிகளின் சூரிய குளியல்

விரைவு படகில் இருந்து எடுக்கப்பட்ட படம்
சொகுசு கப்பல்களில் பயணம் செய்வதை நான் கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லை. அதில் பயணம் செய்ய சில ஆயிரம் ரிங்கிட்டுகளையாவது செலவு செய்ய வேண்டும். அது போக அப்படியான சொகுசு பயணங்களில் நாட்டமும் குறைவாகவே இருந்தது. கப்பலில் ஏறி சுற்றி முற்றி கடலை தானே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். 5/6 நாட்கள் செலவளித்து கடலை பார்த்து மறை கழண்டு போக வேண்டுமா என்ற எண்ணமும் இருந்தது.
 
இப்படியாக இருந்த எண்ணத்தில் எனது பணியானது பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியுள்ளது. நான் பணி புரிந்த கிழக்கு கரை மாநிலத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி வரையினும் தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக சுற்றுலா துறைக்கு விடுப்பு கொடுத்துவிடுவார்கள். இம்மாதங்களில் அதிக அளவில் மழை பெய்யும் . மேலும் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும்.


நீச்சல் குளத்தை ஒட்டிய ‘பார்’ வசதி
கற்றின் அழுத்தம் கூடுவதால் கடல் அலைகள் உயர்ந்து இருக்கும். அக்டோபரின் இறுதிகளில் இதன் தாக்கத்தை காண முடியும். அப்படி ஒரு முறை பயணம் செய்து கடல் மயக்கத்திற்குட்பட்டேன். 'புவி ஈர்ப்பின்’ நிலையின்மையால் இப்படி ஏற்படுவதாக அறிகிறேன். அதிகமான அலைகளின் தாக்குதலுகுற்படும் படகில் இருப்பவர்களுக்கு இப்படி ஏற்படும். மிக மோசமாக கடல் மயக்கத்திற்குட்படுவோர் வாந்தி, பேதிக்கு ஆளாகலாம். அடிக்கடி பயணம் செய்வோர் கடல் மயக்கத்தில் இருந்து தன்னை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள முடியும். ‘NOVOMIN' எனும் மாத்திரை இப்படியான பயண மயக்கங்களை தடுக்க உதவும்.

நீச்சல் குளத்தின் ஒரு பகுதி
மார்ச் முதல் அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருவார்கள். திரங்கானுவில் பயணிகளின் கவனத்தை ஈர்த்த இரு முக்கியமன தீவுகள் ‘ரெடாங்’ மற்றும் ‘ஹெந்தியான்’ ஆகும். மலேசியாவில் நிச்சயமாக பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இரு தீவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

‘ரெடாங்’ தீவினில் விடுமுறையை கழிக்க செலவு சற்று அதிகமாகும். ‘ஹெந்தியன்’ தீவில் இதை காட்டினும் குறைந்த விலையில் விடுமுறையை கழிக்கலாம். இங்கு வருகை புரியும் பயணிகளில் அதிகமானோர் வெளிநாட்டினர். பள்ளி விடுமுறையற்ற காலங்களில் உள்நாட்டு பயணிகளை காட்டினும் வெளிநாட்டு பயணிகளே அதிகம் இருப்பார்கள்.

ரெமி மார்ட்டின்
‘ரெடாங்’ தீவுக்கு சிங்கபூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து நேரடி விமான போக்குவரத்து உள்ளது. தரை வழி பயணம் மேற்கொள்வோர் ’குவாலா திரங்கனு’ அல்லது ‘மாராங்’ போன்ற படகு துரைமுகத்தை அடைந்து விரைவு படகு ஏறி இந்த தீவுகளுக்குச் செல்ல முடியும். அப்படி பயணிப்பது நிச்சயமாக அதிகமான நேரத்தை எடுக்கும். கரையிலிருந்து இத்தீவை அடைய 2 மணி நேரங்கள் ஆகும். பொதுவாக வெளி மாநிலங்களில் இருந்து தரை வழி பயணம் செய்து வருவோர் தனது அரை நாள் அல்லது ஒரு நாளை அத்தீவை சென்றடைய பயன்படுத்த வேண்டி இருக்கும்.

சுழழுந்து இறங்குமிடம்
STAR CRUISE சொகுசு கப்பல் வாரத்திற்கு இரு முறை தென் சீன கடல் வழி பாதையை பயன்படுத்தும். சிங்கப்பூரில் இருந்து புரப்படும் இக்கப்பல் ‘ரெடாங்’ தீவில் ஒரு நாள் சுற்றுப் பயணிகளுக்காக நிறுத்தப்படும். பிறகு அங்கிருந்து வியட்நாமுக்கு பயணித்துவிடும். ரெடாங் தீவினில் நிறுத்தப்படும் சமயம் அக்கப்பலை பரிசோதனை செய்ய சில அதிகாரிகளுடன் செல்வேன்.


13 மாடிகள் கொண்ட இக்கப்பலில் கிடைக்காதது எதுவும் இல்லை என்ற இரகத்தில் தான் அமைத்திருக்கிறார்கள். மலேசிய கடல் எல்லையில் இமிகிரேஷன் சோதனைகள் முடிந்தவுடன் அதன் பயணிகள் ரெடாங் தீவின் கடற்கரைகளுக்கு விரைவு படகேறி செல்வார்கள். இக்கப்பலில் இருக்கும் போது ஒரு 5 நட்சத்திர விடுதியில் இருப்பதை போலவே நீங்கள் உணர்வீர்கள். அதன் சன்னலின் வழி எட்டி பார்த்தால் மட்டுமே நீங்கள் கடலில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். இதன் 13-வது மாடியில் ஒரு நீச்சல் குளமும் அதனை ஒட்டிய ‘பார்’ வசதியும் இருக்கும். அதே போல் அதன் இடது பக்கம் கூடை பந்து மைதானமும், சுழழுந்து இறங்கும் இடமும், சிறிய ’கோல்ப்’ மைதானமும் இருக்கும்.


மீன்களுக்கு தீனியிடும் சிறுவன்
இந்த கப்பலின் முக்கிய அம்சமாக சூதாட்டமும் உள்ளது. அது போக அரை நிர்வான நடனங்களும், கேலிக்கை விளையாட்டுகளும் இன்னும் பிற மேட்டுக்குடி வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. பணி நிமித்தம் வரும் அதிகாரிகளுக்கு இலவச தங்கும் அறையும், உணவும் கொடுக்கப்படும். கப்பலில் இருக்கும் வணிக பொருட்களை வாங்கினால் சிறப்பு கழிவும் உண்டு. இதில் என்னை கவர்ந்தது வாசனை திரவியங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய வாசனை திரவியங்கள் மிகையாகவே சேர்ந்துவிட்டது.


விமான பயணம் செய்து இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் முதலிடம் வகிப்பது இந்தாலி மற்றும் இங்கிலாந்துகாரர்கள். வெகுவான எண்ணிக்கையில் ஜப்பானியர்களும் வருகை புரிகின்றனர். பெர்ஜாயா விடுதி வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய புகழிடமாக உள்ளது. இதன் கடற்கரையும் விடுதியினால் நிர்வகிக்கப்படுகிறது. தனியாரினால் நிர்வகிக்கப்படும் கடற்கரை நெடுகினும் வெளிநாட்டு பயணிகள் குப்புர படுத்து சூரிய குளியல் எடுக்கிறார்கள்.


எழில் மிகு கடற்கரை
ரெடாங் தீவின் கடற்கரை மிக மிக எழிலாக அமைந்துள்ளது. மூன்று பக்கம் மலைகள் சூழ்ந்திருக்க கடல் நீர் கிரிஸ்டல் கற்களை போல் மின்னுகிறது. உலர்ந்த வெள்ளை மணல் இள நீல வண்ண கடல் நீருக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

கடல் குளியலை தவிர்த்து, ஸ்னுர்கலிங், டைவிங் நடவடிக்கைகள் இங்கு பிரபலம். நீச்சல் தெரிந்தவர்கள் மீன்களுக்கு தீனி போட்டு அவற்றோடு நீந்தி இரசிக்கலாம். டைவிங் தெரிந்தவர்களுக்கு பல வண்ண கோரல்களை ஆழ்கடலில் மூழ்கி இரசிக்க வாய்ப்பு கிட்டும்.
படகு துரை

கப்பலின் மேல் மாடி நீச்சல் குளம்












இரவு வேளைகளில் ‘லாங் பீச்’ எனும் பகுதி குதுகல மனிதர்களின் கூச்சலில் கலைகட்டும். ஆடல் பாடல் என கடற்கரையோர மதுபான கடைகளில் விருந்துண்டு மகிழ்கிறார்கள். இந்த மாதிரியான கடல் நடவடிக்கைகள் 8 மாதங்கள் மட்டுமே ரெடாங் தீவினில் நடைபெறுகிறது. எதிர் வரும் நான்கு மாதங்கள் காற்றும் மழையுமாக இத்தீவு தன்னை தானே சுத்தம் செய்துகொள்கிறது. 

பயணங்கள் தொடரும்... 

Thursday, June 13, 2013

BEAUTIFUL BOXER - பாலியல் மாற்றத்திற்கான முயற்சியில்...


கடைநிலை மக்களின் வாழ்வில் ஒன்றிய சில கலாச்சாரங்கள் சுவாரசியம் மிகுந்தவை. மன அமைதிக்காகவும் உல்லாசமாக பொழுதைக் கழிக்கவும் ஆரம்பம் முதலே மனிதன் பல வழிகளை கண்டறிந்து வந்திருக்கிறான். காலப்போக்கில் 'ஃப்பியூடலிசம்' எனும் கட்டமைப்பில் பல பிரிவினர்களாக வகுக்கப்பட்டது நாம் சொல்லிக் கொள்ளும் நாகரீக வளர்ச்சியின் காரணம் தான். வலுத்தவன் உயர்ந்தவன் என்றும் வலுவற்றவன் கடைநிலையன் என்றும் கருதப்பட்டனர். உணர்ச்சிகள் ஒன்று தான். எவராக இருந்தாலும் மன மகிழ்ச்சியும் அமைதியும் தேவைப்படுகிறது.

தன் நிலைக்கும் சக்திக்கும் ஏற்ப, தன் பண்பாட்டிண் வழி அறிந்ததை பொழுதைக்கழிக்கவும், சமுதாய கூடலுக்காகவும் பயன்படுத்திக் கொண்டார்கள். 'எவளுஷன் ஃப்ரேசேஸ்' எனப்படும் இதன் வளர்ச்சி பல நிலைகளில் உண்டானது. அதை விளக்கிப் பேசி மாளாது. கலைகள் உண்டானதின் ஆரம்ப நிலை இது எனக் கொள்ளலாம்.

கலைகள் ஒவ்வொரு சமூகத்திலும் பல நிலைகளில் பல பிரிவுகளாக விரிந்துக் கிடக்கின்றன. ஆசிய கண்டத்தில் அந்நியர் கைகளில் அகப்படாத நாடென தாய்லாந்து பிரசித்துப் பெற்று விளங்குகிறது. இவர்களின் கலைகளில் உலகம் அறிய புகழ் பெற்றவற்றுள் 'தாய் கிக் பாக்சிங்' மற்றும் 'முய் தாய்' என்பதினை குறிப்பிட்டு சொல்லலாம். தாய்லாந்தியர்களின் விட்டுக் கொடுகாத மனப்போக்கு இவற்றின் உலகளாவிய வெற்றிக்குக் காரணமாக இருக்கக் கூடும். 

வாரத்தில் சில தினங்கள் கடலோரங்களில் ’தாய் கிக் பாக்சிங்’ நடைபெறும். நன்முறையில் பயிற்சிப் பெற்ற தாய் பாக்சிங் வீரன் சுமார் ஆறடி உயரம் இலகுவாக எகிரிக் குதிக்கவும் தனது குதிக்காலில் குதித்தபடியே சில மணி நேரங்கள் தன் உடல் எடை முழுதினையும் தாங்கி நிற்கவும் வலு பெற்றவனாக இருக்க வேண்டும். இந்த பாக்சிங் பயிற்சியின் ஆரம்ப நிலைகளை நாம் எளிதில் காணலாம். பயிற்சி பெற்ற வீரர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி முறையினை காண சாதாரண மக்களுக்கு அனுமதி கிடைப்பது சிரமம்.

ஆறு அல்லது ஏழு வயது மதிக்க தக்க ஒரு சிறுவன் உதட்டுக்கு சிவப்புச் சாயமிட்டு, கன்னங்களுக்கு வண்ணம் பூசி, கண்களுக்கு மையிடப்பட்டு திருநங்கையர்களுக்குறிய அடையாளங்களோடு இளம் ’தாய்பாக்சிங்’ வீரனாக விளையாட்டு களத்தில் இறக்கப்படுகிறான். ''நீயும் அந்த மாதிரி புகழ் பெற வேண்டும்" என வாழ்த்துச் சொல்லி அனுப்புகிறார்கள். அச்சமயம் அங்கே தோன்றும் அவள், அச்சிறுவனின் மேல் இருக்கும் கோமாளித் தனமான அலங்காரங்களை அகற்றிவிட்டு "நீ நீயாக இருக்க கற்றுக் கொள். நீ உயர்வடைவாய். உனக்கு கடவுளின் ஆசி கிடைக்கட்டும்" எனச் சொல்கிறாள். 'பியூட்டிபுஃல் பாக்சர்' எனும் தாய்லாந்திய திரைப்படத்தின் ’கிளைமக்ஸ்’ காட்சி இது.

விழிம்பு நிலையில் இருக்கும் ஒரு தாய்லாந்து சிறுவன் தன் விருப்பப்படி வாழ நினைக்கிறான். எதிர்மறையான பாலியல் உணர்வுகளை ஆரம்பம் முதல் உணர்கிறான். தன் விருப்பத்துக்கு செயல்பட பல தடைகள். காரணம் சமூகத்தைச் சார்ந்த வாழ்க்கை. கடைநிலையில் வாழும் மனிதன் அடுத்தவருக்காவும் தன்னை வாழ்ந்து கொள்ள முற்படும் நிலை அவனது சமூகத்திலும் இருக்கவே செய்கிறது. கையில் கிடைக்கும் உதட்டுச் சாயத்தை, குளியலறைக்குள் சென்று சில நொடிகள் பூசிப் பார்த்து இரசிக்கிறான். யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதே எனும் பயத்தில் அதை விருட்டென அழித்துவிட்டு வருகிறான். 

ஆண்கள் இருக்குமிடத்தில் சட்டையை கழட்டக் கூசுகிறான். பெண்களின் ஆடையை அணிந்து கொள்ள விருப்பம் கொள்கிறான். நினைப்பதை அடைய முடியாத நிலை. அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பணம் இருந்தால் மட்டுமே முடியும். உலகத்தில் பல தேவைகளுக்கு அது தானே பதிலாக இருக்கிறது. 

பாக்சிங்கில் ஈடுபட அவனுக்கு ஆர்வமிருக்கிறது. தான் திருநங்கையாக வேண்டும், சிகிச்சை செய்து கொள்ள வேண்டும், பெண் ஆடை அணிய வேண்டும் எனும் அலாதியான எண்ணமே அவன் வளர்ச்சிக்கு வித்தாகிறது. ஏளனங்களையும் கேளிப்பேச்சுகளையும் மென்மை குணம் கொண்ட ஒரு வீரனாக மனதில் வலிகளோடு ஏற்றுக் கொள்கிறான். அது அவனது இலட்சியத் தடைகள். கடந்தாக வேண்டிய நிலையெனக் கருதுகிறான்.

படத்தின் காட்சி அமைப்புகள் அருமையாகவே இருக்கிறது. தாய்லாந்தின் கிராம வாழ்க்கை, ஆசிரம வாழ்க்கை, விளையாட்டு நடக்குமிடம், இரவுச் சந்தை என இரசிக்கும் வகையில் உள்ளன. நாயகனுக்கான திருநங்கையரின் குரல் இயல்பாக இருக்கிறது. மென்மையும், அமைதியும் நிறைந்த பேச்சும் காட்சிகளுக்கு ஏற்ற இசை பின்னணியும் படத்தில் ஒன்றித்திருக்க வகை செய்திருக்கிறதென்றால் மிகை இல்லை. 

ஜப்பானில் நடைபெறும் பாக்சிங் போட்டியில் வெற்றியடைகிறான். இரவில் அவனை மகிழ்விக்க ஒரு மங்கை அனுப்பப்படுகிறாள். அவள் உடல் காட்டி நிற்க ''நான் இதற்குத் தகுதியற்றவன்" என அவளை கட்டி அழும் காட்சிகள் நம் மனதை உலுக்கச் செய்கிறது. மனிதனின் உணர்ச்சிகள் எவ்வளவு மென்மையானது என்பதை அச்சில நொடிகளில் நாமும் உணர முடிகிறது.

திருநங்கையர்கள் மீது ஒரு பரிதாப நிலை ஏற்பட இப்படம் எடுக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் சமூகத்தில் அவர்களும் ஒரு அங்கத்தினரே. அவர்களுக்கான உரிமையை அவர்கள் எடுத்துக்கொள்ள கூட கூசும்படியான நிலையை சமூகம் உருவாக்கிவிட்டது. பாலியல் மாற்றத்தை தீண்டத்தகாத ஒன்றாகவே நாம் காண்கிறோம். 

பாலியல் உணர்ச்சிகளின் மாற்றத்தை உணர்ந்த ஒருவர் ஒன்று தன் உண்மை அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அல்லது சமூகத்தை ஒதுக்கி ஒடுக்கப்பட்ட தனி உலகில் வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. இல்லையேல் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ தன்னை பல மடங்கு உயர்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அந்நிலையை அடைய அவர்கள் போராட வேண்டியது கொஞ்ச நஞ்சமல்ல. மக்களின் ஒடுக்கும் பார்வையால் இப்படியாக தனக்குள் இருக்கும் திறமைகளையும், உணர்வுகளையும் வெளிகாட்ட முடியாமல் தனக்குள் தன்னை புதைத்துக் கொண்டு அடுத்தவருக்காக வாழ்ந்துக் கொண்டிருப்பவர் எத்தனையோ.

** இப்பதிவினை 2009-ஆம் ஆண்டில் எழுதினேன். இப்பொழுது மீள் பதிவு செய்யப்படுகிறது.

Monday, June 10, 2013

குட்டிப் புலி - ஜாதி விளம்பரம்




தனிபட்ட ஜாதிகளின் அடையாளங்களை மக்களின் பார்வைக்கு வைப்பதில் தமிழ் சினிமா கடந்த ஒரு நூற்றாண்டாக போராடி வருகிறது. உயர் ஜாதிகளின் உயர்வையும் கீழ் ஜாதிகளின் தாழ்வையும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாகினும் சினிமாவில் பார்த்து சிலாகித்துக் கொள்கிறோம். அந்த வரிசையில் இரசிகர்கள் மேலும் ’ஆனந்தமடைய’ திரைக்கு வந்திருக்கும் படம் குட்டிப் புலி.

சுப்ரமணியபுரத்தில் தொடங்கிய சசிக்குமார் ஒரு தனிபட்ட சாதிக்கு விளக்கு பிடித்துக் கொண்டிருப்பதை தனது ஒவ்வொரு படத்திலும் காட்டி வந்தார். குட்டிப் புலியாகிய சமீபத்திய படத்தில் ஒரு படி மேலே போய் ஒரு சாதியினர் செய்யும் கொலைகளுக்கு வக்கலாத்து வாங்கி அவர்களை குல தெய்வமாக்கியுள்ளார். சசிக்குமார் இயக்கும் / நடிக்கும் படங்கள் யாவும் இந்த சாதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது போலும். இந்த படத்தின் இயக்குனர் புதியவரான முத்தையா. இவர் இயக்குனர் ஹரியை போல சில பல முயற்சிகள் மேற்கொள்வார் என இப்போதே சொல்லி வைப்பதை காண முடிகிறது.

முந்தய படங்களில் துரோகம் எனும் ஒரு கருத்தினை மட்டும் கையில் வைத்திருந்த சசிக்குமாரின் படங்கள் போதிய பாரட்டையே பெற்று வந்தது. ஆனால் அப்படங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட சாதியில் நடக்கும் சம்பங்களை விவரிப்பதாக அமைத்திருந்தார். ஒரு வேளை தனது வாழ்வியல் சூழ்நிலையில் இருந்து இக்கதைகளை அமைத்திருக்கக் கூடும் என நாம் நம்பலாம். அக்கதைகளின் போக்கு நட்பின் துரோகம், குடும்ப துரோகம் என சென்றுவிடுவதால் அவரின் சாதி போதனைகள் கதையோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டது. 

ஒரு சாதியின் வாழ்வியல் முறைகளை பதிவு செய்வதை மறுப்பதற்காக இதை சொல்லவில்லை. வெங்கடேசனின் காவல்கோட்டம் போன்ற நல்லதொறு படைப்பு சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளது. காவல் கோட்டம் முழுக்க முழுக்க கள்ளர் சாதியின் வாழ்வியல் முறைகளை சரித்திர பதிவாக கொண்டுள்ளது. அச்சரித்திர நாவலின் ஒரு சிறு பகுதியை தழுவி எடுக்கப்பட படம் அரவான். அதில் நாயகன் தன் சிரசை அருவாளில் வெட்டிக் கொள்வதாக படம் முடியும்.

தேவர் சாதியினரை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் அருவாளை அதன் சின்னமாக கொண்டிருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் நேர்த்தி கடனாக இருக்கக் கூடும் என நினைக்கின்றேன். தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணியான கமல்ஹாசனும் இதை தான் சூடம் காட்டி பொட்டு வைத்திருக்கின்றார்.

தனது சாதிய விளம்பரத்துக்கு குட்டிப் புலி அம்மா மகன் பாசத்தை ‘மேக் ஆப்’ செய்து கொண்டுள்ளது. ஊதாரியாக திரியும் மகனை மெச்சோ மெச்சென்று மெச்சி கொண்டு திரிகிறார் அம்மா. ஆணி போயி ஆடி போயி ஆவணி வந்தா என் மகன் ’டாப்பா’ வருவான் என கூறும் அதே அம்மா தான். எல்லா படங்களிலும் இவர் இப்படி தான் நடிப்பார் என்பதை இதிலும் நிருபித்துள்ளார். தென் மேற்கு பருவகாற்றில் தூக்கிய அருவாளோடு அழைத்து வந்து நடிக்க வைத்திருப்பார்கள் போல. 

படத்தின் ஆரம்பமே ஒரு அருவா வெட்டு சம்பவத்தில் ஆரம்பமாகிறது. எப்படி ஆரம்பிக்கிறதோ அதே மாதிரியே முடிவும் உள்ளது. சரி ஆரம்பமும் முடிவும் தானே அருவா வேட்டு என நீங்கள் ஆனந்தபட்டுக்கொள்ள வேண்டாம். இடைபட்ட 2 மணி நேரமும் யாரவது எதையாவது கர கரவென அருத்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே அந்த அரிவாள் நம் கழுத்திலும் வந்து நிற்பது காசு கொடுத்து படம் பார்க்கும் நமது பாவமாக தான் இருக்க முடியும்.

ஒரு காட்சியில் ‘நீங்க ஆடுளாம் வெட்டுவிங்களா?’ என நாயகி கேட்க ‘அவன் ஆளையே வெட்டுவான்’ என சிலாகிக்கிறார் அம்மா. இந்த படத்தின் ‘டுவிஸ்டு’ என்னவென்று கேட்கிறீர்களா. எந்த ஒரு ‘டுவிஸ்டும்’ இல்லாமல் நம்மை மண்ட காய வைத்திருப்பதே மிகப் பெரிய டுவிஸ்ட்டு. 

இந்த படத்தில் நகைச்சுவையின் பெயரிலும் சில கொடுமைகள் நடந்துள்ளன. அவற்றை வெண்திரையில் கண்டு இரசிக்கவும். இன்னும் ஓரிரு தினங்களில் ஆதித்யாவில் வந்துவிடும். ‘ரொமான்ஸ்’ என சொல்லப்படும் காட்சிகள் அனைத்தும் இளையராஜாவின் பாடல்களுக்கு குத்தகை விட்டிருக்கிறார்கள். இந்த படத்திற்காக சசிகுமார் என்ன இழவிற்கு உடல் மெலிந்துள்ளார் என்பதும் புரியவில்லை. 

வேலை வெட்டி இல்லாத மகன். அவனை போற்றி புகழும் அம்மா. அவனின் வீர தீர செயல்களுக்கு மயங்கும் காதலி. மகன் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக வில்லனின் தலையை துண்டாக அருத்து எடுக்கிறார் அம்மா. பிறகு அம்மா குலதெய்வமாகிவிடுகிறார். எங்களின் குலதெய்வங்கள் இப்படிதான் தியாகங்களின் வழி உறுவாகினர் என மெய்சிலிர்க்கும் சில வசனங்களை போட்டு நாம் அமர்ந்திருந்த சீட்டுக்கு ஒரு குண்டை போட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

ஆச்சி. பேச்சி, மூச்சி என கூறிக் கொள்ளும் தனது குல தெய்வங்கள் இப்படி ’தியாக’ கொலை செய்தவர்கள் என இயக்குனர் கூற முயற்சி செய்கிறார என புரியவில்லை. அப்படி இருப்பின் அவர் குறிப்பிடும் சாதியினர் வழிபடுவது கொலைகாரர்களை என்றள்ளவா ஆகிறது. சமூக முன்னேற்றத்திற்கு கிஞ்சித்தும் உதவிடாத சாதிய நம்பிக்கைகளை இன்றய தலைமுறையினரிடையே விதைப்பதாகவே இதை காண முடிகிறது. 

1990களின் இறுதியில் வெளியான THE KEYS AKKA MAGA எனும் ஆல்பத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கா மக எனும் அப்பாடல் THE KEYS மலேசிய இசைக் குழுவினரால் இயற்றப்பட்ட முதல் பாடலாகும். காலம் தாமதித்த ஒரு அங்கிகாரமாக அப்பாடல் மீண்டும் மக்களின் பார்வைக்கு வந்துள்ளது. 
பி/கு: இந்த படம் தான் பார்ப்பேன் என அடம்பிடித்து செல்பவர்கள் கூடவே ஒரு பழுத்த எழும்மிச்சை பழத்தையும் கொண்டு செல்லவும். படம் முடிந்த பின் உச்சாந்தலையில் தேய்து கொள்ள வசதியாக இருக்கும்.

Friday, June 07, 2013

ONLY 13 - தாய்லாந்தின் விபச்சார உலகம்


TOO MANY WOMEN
FROM TOO MANY COUNTRIES
SPEAK THE SAME LANGUAGE
OF SILENCE

புத்தகம்: ONLY 13 - THE TRUE STORY OF LON
நயம்: சுயசரிதம்
பக்கம்: 330 PAGES
பதிப்பகம்: BAMBOO SINFONIA PUBLICATIONS

புத்தகத்தின் சில வரிகள்:
1. My culture holds all women to be not only inferior — but expendable.
2. My mother knows only two things; Old men want to sleep with me, and she wants money.
3. I tried to commit suicide twice because I wanted to see my father in heaven, so he could stop searching for me.


தாய்லாந்து பயணத்தின் போது சாலையோர ஒட்டுக் கடைகளை கணிசமாக காண முடியும். வருத்த புழு பூச்சி வகைகளும் காரம் மிகுந்த உணவு பண்டங்களும் சாலையோர கடைகளில் பிரபலம். இது போக பொரித்த எலி, தவளை, பாம்பு போன்றவற்றையும் காணலாம்.

பயணிகளுக்கு இது விசித்திர உணவாக இருக்கும். அந்த வியாபாரியிடம் கேட்டீர்கள் எனில் ‘விட்டமீன் விட்டமீன்’ என சொல்வான். அவற்றை சுவை பார்க்கும் பயணிகள் ‘இட்ஸ் நைஸ்’ என சொல்வதையும் காணலாம்.

இந்த உணவு பண்டத்தின் வரலாற்று பின்னணி தாய்லாந்தின் எல்லையில் இருக்கும் ’ஈசான்’ (Issan) எனும் வறுமை மிகுந்த மாநிலத்தில் தொடங்குகிறது. தாய்லாந்தின் உடல் வியாபார மையங்களில் இருக்கும் 80% பெண்கள் இந்த ஈசான் பகுதியில் இருந்து வந்தவர்கள். இன்னமும் வந்துக் கொண்டிருக்கிறார்கள். தாய்லாந்து பெருநிலத்தில் ஈசான் எனும் மாநிலம் கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளின் எல்லையில் உள்ளது.

பால்வினை தொழிலில் ஈடுபடும் தாய்லாந்து பெண்களுக்கு தினமும் பிறந்த நாள் வரும், ஊரில் இருக்கும் அம்மாவோ அப்பாவோ உடல் நலமற்று இருப்பார்கள். தன்னிடம் ’ஜொல்லு’ வடிக்கும் ஆண்களிடம் பணம் பறிக்க ஏவப்படும் வியாபார உத்திகள் இவை. இதை அறியாமல் போகும் பின்நவீனதுவ எழுத்தாளன் குட்டியின் ஜாக்கெட்டில் பணத்தை சொருகிவிட்டு மெக்கோங் நதியை இரசித்ததாய் கூறிக்கொள்வது தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மைல் கல்லாக அமைந்துள்ளது.

ஈசான் போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் தன்னை தாய்லாந்து மக்கள் என கூறிக் கொள்வதில் வெட்கப்படுகிறார்கள். தாய்லாந்து அரசாங்கமும் இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொள்வதில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் கம்போடிய இராஜியத்தில் இருந்து தாய்லாந்தில் சேர்க்கப்பட்ட பகுதியாக இது கருதப்படுகிறது. இதனால் இன்னமும் அவர்கள் முழு தாய்லாந்தியர்களாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி வாழ் மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். விளைச்சல் குறைந்து போகும் நாட்களில் வயலில் இருக்கும் புழு, கூட்டுப்புழு, பாம்பு, எலி போன்றவை இவர்கள் சாப்பாட்டுக்கு வழி செய்கின்றன.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வந்த காலத்தில் இப்பகுதி வாழ் மக்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள். விபச்சாரத்தை நாடிவரும் சுற்றுப் பயணிகளின் பண வாசனை இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்ள செய்தது. ’லேடி பாய்ஸ்’ எனப்படும் திருநங்கைகளும் தாய்லாந்தில் அதிகமாக உள்ளதற்கு காரணம் பொறுப்பற்ற இந்த சுற்றுலாத் துரையே. குடும்ப வருமையின் காரணம் தன்னை பெண்ணாக்கிக் கொண்ட ஆண்களின் கதைகளையும் இங்கு அதிகம் காண முடிகிறது.

ஒன்லி 13 எனப்படும் புத்தகம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்ட ஒரு பெண்ணின் சுயசரிதையை நமக்கு விளக்குகிறது. இந்த சுயசரிதம் ‘லோன்’ எனும் பெண்ணால் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தாய்லாந்தின் Krabi எனும் ஊருக்குச் சென்றிருந்த சமயம் ONLY 13 THE TRUE STORY OF LON மற்றும் LADYBOYS எனும் இரு புத்தகங்களை அதன் விமான நிலையத்தில் வாங்கினேன்.

லேன் எனும் சிறுமி ‘உபோன்’ எனும் ஊரில் பிறந்தவள். அவளது வாழ்வில் நிகழும் சில கசப்பான சம்பவங்களால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். பாங்கக் வந்தடையும் அவள் கிடைக்கும் வேலைகளை செய்து தனது வாழ்வை தொடர முயற்சிக்கிறாள்.

பாங்காக்கில் பெயர் போன பாலியல் தொழில் வீதியில் மது பான கடையில் (கோ கோ பார்) சுத்தம் செய்யும் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்யும் போது அவள் காணும் காட்சிகள் நாளடைவில் அவளை பாலியல் தொழிலுக்கு ஈர்கச் செய்கிறது. தாய்லாந்தில் மெத்த படித்த ஒருவன் சம்பாதிக்கும் பணத்தை காட்டினும் பாலியல் தொழிலில் எவ்வளவு அதிகமான பணம் கிடைக்கிறது என்பதை ஒப்பீடு செய்கிறாள் லோன்.

’கோ கோ பார்களில்’ வேலை செய்யும் பெண்கள் தங்களுக்கான கஷ்டமர்களை தேர்ந்தெடுக்கும் முறைகளையும் தொழில் உக்திகளையும் மிகச் சிறப்பாக விளக்குகிறது இந்த நூல். மூன்றாம் உலக நாடுகளின் இந்த அவல நிலைக்கு மேலை நாடுகளின் பங்களிப்பு என்னவென்பதை நாம் அறிய முடிகிறது. ’கோ கோ பார்களில்’ காதலை தேடும் வெளிநாட்டு ஆசாமிகள் அந்நாட்டின் பாலியல் தொழிலாளர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். அப்படி இருந்தும் பாங்காக், பட்டாயா, புக்கேட் போன்ற பாலியல் தொழில் மலிந்து காணப்படும் இடங்களில் வெளிநாட்டு பயணிகளின் வருகை மிகுந்தபடியே உள்ளது. ஆண்களுக்கு ஏற்படும் சுக்கில தோஷத்தின் கொடுமையை இது நமக்கு உணர்த்துகிறது.

தனது சுயசரிதத்தில் லோன் தன்னை ஒரு தாய்லாந்துகாரியாக ஒப்புக் கொள்ள மறுக்கிறாள். உபோன்/ஈசான் நிலத்து மக்களின் வருமை மிகுந்த வாழ்வு ஏனைய தாய்லாந்து மக்களிடையே ஒரு மோசமான பார்வையை ஏற்படுத்தியுள்ளதை இதற்கு காரணம் காட்டுகிறாள். தனது 13-வது வயதில் வீட்டை விட்டு ஓடும் லோன் 14-வது வயதில் தனது கன்னி தன்மையை ஒரு சுவீஸ் கிழவனுக்கு விற்பனை செய்கிறாள். இதற்காக அவளக்கு கிடைக்கும் பணம் 1200 அமேரிக்க டாலர்கள். ஆண்டு முழுக்க நான் பணி புரிந்த மதுபான கடையை கூட்டி பெருக்கினாலும் எனக்கு இவ்வளவு பணம் கிடைத்திருக்காது என அடுத்த கட்டங்களுக்கு இவளது பாலியல் தொழில் பயணிக்கிறது.

18 வயதுக்கும் குறைவானோர் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தாய்லாந்தில் சட்டபடி குற்றம், இருந்தும் கையூட்டுகளின் வழி இந்த சட்டம் கண்னை மூடிக்கொள்கிறது. பாங்காக்கில் இருந்து பட்டாய செல்லும் லோன் அவளுக்கு விருப்பம் குறைவான பணம் காய்க்கும் காதல்களால் பல நாடுகளுக்கு பயணம் செய்கிறாள். தனது பாலியல் வியாபாரத்தில் அங்கும் பணம் சம்பாதித்து தன் அம்மாவுக்கு கொடுக்கிறாள்.
ஈசான் குடும்பங்களின் முதலாவதாக பிறக்கும் பெண்ணின் குடும்ப சுமை பெரிது. அக்குடும்பங்களில் ஆண்களின் பங்கு குடிப்பதும், சூதாடுவதும், இனப்பெருக்கம் செய்வதும் என அமைகிறது. பெண்ணாக பிறப்பவளின் வாழ்வு குடும்பத்திற்காக பொன் முட்டையிடும் வாத்தாக அமைகிறது. 

லோன் வாழ்க்கையின் விரக்தியில் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அதிலும் அவளுக்கு தோல்வியே எஞ்சுகிறது. பல பல இன்னல்களினால் மனதாலும் உடலாலும் சேர்வடையும் லோன் ‘பைபோலா டிசார்டரினால்’ பாதிப்படைகிறாள். அவளின் ஆரோக்கிய நிலை இன்றளவும் கேள்விக்குட்பட்டே உள்ளது.

லோனின் ஆரோக்கிய பாதிப்பிற்கு பின் மருத்துவ உதவிகள் செய்த கென் எனும் இங்கிலாந்துகாரரால் இந்த நூல் எழுதி முடிக்கப்படுகிறது. லோன் ஆரோக்கிய பாதிப்பில் இருக்கும் போது சொல்லப்படும் தகவல்கள் கென்னின் விளக்கத்தில் மாறுபாடடைவதை வைத்து லோனின் மன பாதிப்பை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த புத்தகம் மூன்றாம் உலக நாடுகளில் பாலியல் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க பங்களிக்கும் ஒவ்வொருவரின் முகத்திலும் அறைவதாக அமைகிறது. இருந்தும் ‘செக்ஸ் பயணிகளின்’ வருகையை இது இம்மியும் குறைக்கப் போவதில்லை என்பதே உண்மை.

Monday, June 03, 2013

கடலின் மொழி - மரணம், கடத்தல், கொலைகள்

சோலை மலரொளியோ உனது
சுந்தர புன்னகைதான்
நீலக் கடல் அலையோ
உந்தன் நெஞ்சின் அலைகளடி - பாரதி

புன்னகை மனிதர்களிடம் இருக்கும் ஓர் அழகிய அம்சம். அது அன்பின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டு வருகிறது.  

இந்த பகுதியில் நான் எழுத நினைப்பது திரங்கானுவின் (Terengganu) கடல் மற்றும் தீவுகள் சார்ந்த செய்திகள்.  இதை சென்ற பதிவின் தொடர்ச்சியாக படிக்கலாம். அதை தவிர்த்து படிப்பவர்களுக்கும் சிரமம் இருக்காது என்றே கருதுகிறேன். 

திரங்கானுவின் கடலோர பகுதிகளில் குளிப்பதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. காரணம் இதன் கரையோர பகுதிகள் மிக ஆழமானவை. அதை மீறி சில விபத்துகள் நடந்து பார்த்திருக்கிறேன். இந்த மாநிலத்தின் பெரும்பாலானோர் மலாய்காரர்கள். கொஞ்சம் சீனர்கள். மிகக் கொஞ்சமான இந்தியர்கள். அவர்களில் 95% வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தம் அனுப்பப்பட்ட அரசு ஊழியர்கள். இதை தவிர்த்து மாணவர்கள், நல்லொழுக்க கட்டுப்பாட்டில் இருக்கும் குற்றவாலிகள், தனியார் நிறுவன ஊழியர்களையும் காண முடிகிறது. 

குடியுரிமை இலாக்காவின் குவார்டர்ஸ் எனது வசிப்பிடமாக இருந்தது. கடற்கரைக்கு பக்கத்தில் அமைந்த அரசு குடியிப்பு அது. நான் பணி புரிந்த அலுவலகம் குடியிருப்பிலிருந்து 5 நிமிட தூரத்தில் இருந்தது. 

நான் அங்கு தங்கிய காலகட்டத்தில் உணவு பிரச்சனைகள் இருந்ததில்லை. அங்கிருந்த உணவு வழக்கத்திற்கு என்னை பழக்கிக் கொண்டேன் என்றே கருதுகிறேன். இங்கு வசிக்கும் பெரும்பான்மையினர் முடிந்த அளவிற்கு எல்லா வேளைகளிலும் சோறு சாப்பிடுகிறார்கள். அதாவது காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை சோறு மட்டுமே. விதவிதமான டிசைன்களில் அரிசி சார்ந்த சமையல்கள் இங்கு கிடைக்கின்றன. உணவு சார்ந்த செய்திகளை வேறொரு தனிப் பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

’லோக்கல் பூட்’ சலித்துப் போன நன்நாள் ஒன்றில் இந்திய உணவுக்கு நாக்கு ஏங்கியது. எனது தேடுதல் வேட்டையில் அங்கிருந்த இந்திய மற்றும் மாமாக் (இந்து முஸ்லிம்) உணவகங்களை அறிந்துக் கொண்டேன். Tanjung KTT எனும் உணவகத்தை சிலாங்கூர் (Selangor) மாநிலத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் வழிநடத்தி வந்தனர். திரங்கானுவில் நான் கண்ட முதல் தமிழ்ப் பெயர் பலகை இந்த கடையில் மட்டுமே. சில நாட்களில் நான் அங்கு ரெகுலர் கஸ்டமராகிவிட்டேன். பல நண்பர்கள் அங்கு நட்பு வட்டத்தில் பெருகினர்.   

நன்நடத்தை கண்காணிப்பில் வந்திருந்த இளைஞன் ஒருவனை இந்த கடையில் சந்தித்தேன். இந்த சம்பவம் நடந்தது 2010-ஆம் ஆண்டு. ஒரு தமிழ் குடும்பம் மூட்டை முடுச்சுகளோடு வந்திருந்தார்கள். அவர்களுக்கு திரங்கானுவில் யாரையும் தெரிந்திருக்கவில்லை. தேடி பிடித்து KTT உணவகத்திற்கு வந்திருந்தனர். 

அப்போது நானும் என் நண்பரும் உணவருந்திக் கொண்டிருந்தோம். பொதுவாக இப்படி மூட்டை முடிச்சுடன் வருகிறவர்கள் பிள்ளைகளை ’யூனிவர்சிட்டியில்’ அல்லது ’போலிடெக்னிக்கில்’ சேர்க்க வந்தவர்களாக இருப்பது வழக்கம். வந்திருந்தவர்கள் தன் பையன் நன்நடத்தை காரணமாக இங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரத்தில் திரங்கானுவில் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளதாக சொன்னார்கள். அந்த பையன் குடும்பத்தில் கடைசி மகன். எல்லோரும் அவன் மீது மிகுந்த பாசத்தோடு இருந்ததையும் காண முடிந்தது. 

அவன் இருபது வயது இளைஞன். அவனது ஊர் கோவில் திருவிழாவில் சண்டை சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு நன்நடத்தை கண்காணிப்பிற்கு திரங்கானு அனுப்பட்டிருக்கிறான். அவனுக்கு தங்கும் இடம் தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக உணவகம் வைத்திருந்த அந்த சகோதரர் ஏற்பாடு செய்து கொடுத்தார். “ஐயா புள்ளைய உங்களை நம்பி விட்டுட்டு போறோம். பார்த்துக்குங்க” என்றார் அவன் அம்மா. “உங்க புள்ள கையையும், நாக்கும் சும்மா இருந்தா இங்க எந்த பிரச்சனையும் வராது”, என்றார் என் நண்பர்.

நன்நடத்தையில் இருப்பவர் குறிப்பிட்ட ஊரை தாண்டி செல்ல கூடாது. இரவு எட்டு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடது. குறிப்பிட்ட நாளில் காவல் நிலையத்தில் தன் இருப்பை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். அந்த இளைஞன் ஒரு உணவகத்தில் வேலை செய்து கொண்டு அங்கு தங்கி வந்தான். பார்க்கும் சமயங்களில் மிக மரியாதையோடு பேசுவான். நன்நடத்தை கண்காணிப்பில் இருக்கும் வேறு சில ஆட்களோடு சில முறை அவனை வெளியில் கண்டிருக்கிறேன்.

ஒரு நாள் திடீரென அவனது மரண செய்தி கிட்டியது. சம்பவ இடத்திற்கு வேறு சில நண்பர்களோடு சென்றிருந்தேன். மொத்தம் 5 பேர் கடலில் மூழ்கி இறந்திருந்தார்கள். அந்த கடல் பகுதி அவனக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. ஒவ்வொரு பிணமான தேடி எடுக்கப்பட்டது. அந்த இளைஞனின் பிணம் மறு நாள் தான் கிடைத்தது. பாறைகள் நிறைந்த அக்கடல் பகுதியில் அவன் உடல் முட்டி மோதி மோசமாக சதை கிழிந்து இரத்தக் கசிவுடன் காணப்பட்டது.


அங்கிருந்த மலாய்க்கார குடியானவர் ஒருவர் மரணச் சம்பவங்கள் அங்கு வருடாவருடம் நிகழும் ஒன்றென கூறினார். இப்படி ஏற்படும் மரணங்கள் அமானுஷ்ய சங்கதிகளோடு சேர்த்து பேசப்படுகிறது. கடலில் இருந்து ஏதோ ஒரு இசை கருவி மீட்டும் சத்தம் கேட்ட ஓரிரு நாட்களில் இப்படி துர்மரணங்கள் நடப்பதாக அவர் சொன்னார். அந்த இளைஞனின் மரணத்திற்கு இரண்டு வாரத்தில் அந்த இடத்தில் மீண்டும் மூன்று சுற்று பயணிகள் மரணித்திருந்ததை பத்திரிக்கையில் படித்தேன். குளிக்க தடை செய்த இடத்தில் குளிப்பதே இந்த மரணங்களுக்கு காரணம். பயணிகள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். பேய் பிசாசுகளை குறை சொல்வதில் அர்த்தமில்லை.

முன் சொன்னது போல் இந்த மாநிலத்தின் பிரதான சாலைக்கும் கடல் பரப்புக்குமான தூரம் மிக குறைவு. மழைக் காலங்களில் கடல் வெள்ளம் சாலை வரை முட்டிச் செல்லும். காற்றழுத்தம் மிகுந்த மழை நாட்களில் இப்படி நடப்பதாக கேள்விபட்டேன். பொதுவாக திரங்கானுவின் சாலைகள் துடைத்து வைத்ததை போல் சுத்தமாக இருக்கும். வெள்ளம் ஏற்பட்ட பின் சாலைகள் தன் தலையில் குப்பையை கொட்டிக் கொண்டதை போல் காட்சியளிக்கும். கிழக்குகரை நெடுஞ்சாலை வேலைகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. அனேகமாக 2013 இறுதிக்குள் அந்தச் சாலைகள் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும் என நம்பப்படுகிறது.  

ஒரு சமயம் ஏராலமான இரப்பர் கட்டிகள் ஆலைகளால் கரைக்கு ஒதுக்கப்பட்டது. சுற்றுவட்டார மக்கள் அவற்றை சேகரித்து விற்பனைக்கு எடுத்துச் சென்றனர். எப்படி இரப்பர் கட்டிகள் அங்கு வந்ததென அறிவார் இல்லை. தென் சீன கடல்பகுதியில் சென்ற கப்பலில் இருந்து விழுந்திருக்கலாம் அல்லது யாராவது கொட்டிவிட்டிருக்கலாம். இரப்பர் கட்டிகளில் ரிஷி மூலம் யாருக்கும் தெரியாமலே போனது.

தென் சீன கடல் பகுதிகளில் மீன் பிடி தொழில் பிரசித்தி பெற்றது. மலேசியர்களை தவிர்த்து, தாய்லாந்து, பிலிப்பின், கம்போடியா மற்றும் வியட்நாம் நாட்டுக்காரர்களும் இக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். கடல் எல்லைகளுக்குட்பட்டே அந்தந்த நாட்டவர்கள் மீன் பிடிக்க முடியும். இருப்பினும் எல்லை மீறல்கள் நடக்கவே செய்கிறது.


முகவரி இல்லாத பிணங்களும் இங்கு கரை ஒதுங்குவது உண்டு. கடளுக்குள் நடக்கும் கைகலப்பில் சில கொலைகளும் நேர்கின்றன. கொலை செய்தவனும் கொலை செய்யப்பட்டவனும் யார் என்றே தெரியாமலே போவதும் உண்டு. வெளிநாட்டவர் மரணித்திருப்பார் எனில் கண்டு பிடிப்பதில் பல சிக்கல்கள் உண்டு. எந்த நாட்டவர் என அடையாளத்தை தேடுவதற்கே நெடு நாட்களாகும்.

வழமை போல் அலுவலக வேலையில் இருந்த ஒரு நாள் இரு இந்தோசீன இளைஞர்கள் குடியுரிமை இலாக்காவின் விசாரனைக்கு கொண்டு வரப்பட்டார்கள். இரண்டு நாட்களாக போகும் இடம்  தெரியாமல் கடற்கரை ஓரம் படுத்து உரங்கி இருக்கிறார்கள் அவர்கள். விசாரனையின் போது இருவரும் வியட்நாமியர்கள் என தெரிய வந்தது. அந்த பகுதியில் வசித்த மக்கள் புகார் கொடுத்து அவர்கள் விசாரனைக்கு அழைத்து வரப்பட்டனர். ஒருவனுக்கு 15 வயது மற்றொருவனுக்கு 19 வயது. பல ஆண்டுகளாக கரையை பார்க்காமல் கப்பலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்திருக்கின்றார்கள். அவர்களது முதலாளி ஒரு தாய்லாந்துகாரன். (பொரும்பாலன தாய்லாந்து மீனவர்கள் வியட்நாமியர்களை வேலைக்கு அமர்த்தில் கொள்வதை பின்நாட்களில் அறிந்தேன்). வருமானம் ஏதும் இல்லாமல் உழைத்திருக்கிறார்கள். கரை தெரிந்த ஒரு நாள் இருவரும் கடலில் குதித்து கரைக்கு தப்பி இருக்கிறார்கள்.

கடல் சார்ந்த வணிகத்தில் நிகழும் மேலும் ஒரு குற்றச் செயல் டீசல் திருட்டு. அரசாங்கத்தினால் மலேசிய மீனவர்களுக்கு கொடுக்கப்படும் டீசல் விலை 1.20 ரிங்கிட். மலேசிய சந்தையின் உண்மையான விலை 1.80 ரிங்கிட். தாய்லாந்தில் 3.00 ரிங்கிட், பிலிப்பின் 2.70 ரிங்கிட் என ஏனைய நாடுகளில் டீசல் எண்ணையின் விலை மிக அதிகம். இப்படி கொடுக்கப்படும் மலிவான டீசல் உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. பலமான முயற்சிகள் பல எடுக்கப்பட்டும் இந்த கடத்தல் சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்தபடியே உள்ளது வருத்தத்துக்குறியது. மேலும் போதை பொருள் கடத்தல்களும் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன. 

அலைகள் ஒவ்வொரு முறையும் கடலை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதன் எழிலை இரசிக்கும் மனிதர்களிடம் தனது துயர சம்பவங்களையும் சொல்ல முயற்சித்துக் கொண்டுள்ளது.

பயணங்கள் தொடரும்...