Wednesday, November 26, 2008

மலேசியாவில் தமிழ் பள்ளிகளை மூடிவிடலாமா?

ஒவ்வொரு 5 ஆண்டு கால ஆட்சியின் போதும் தமிழ் பள்ளி பிரச்சனைகளை முதன்மையாக கொண்டு, 'நான் அதை செய்தேன்', 'நான் இதை செய்தேன்' என பேசியே தீர்த்துவிடுகிறார்கள் சிலர். தமிழர்கள் பழம்பெருமை பேசுவதில் திறமைசாலிகள் என சும்மாவா சொன்னார்கள். அது அரசியல் அப்படி தான் இருக்கும் என சிலர் சுலபத்தில் சொல்லிவிடலாம்.

எதையுமே அடிப்படையில் சிந்தித்து செயல்படாத இனம் தமிழரினம் என்பது இந்தத் தமிழ் பள்ளி பிரச்சனைகளில் கண்கூடு. வருமுன்னர் காவாதார் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூரு போலக் கெடும் என்பது வள்ளுவர் வாக்கு. 50 வருடங்களுக்கு முன்பிருந்த 1000 தமிழ்பள்ளிகள் இன்றய நிலையில் 500-ஆக இருப்பதற்கு காரணம் என்ன? அதற்கு முன் சில ஐயப்பாடுகளை காண்போமாக.

தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு இனமான பற்று எவ்வகையில் உள்ளது? போதுமான வருமானம், நிரந்தர வேலை எனும் நோக்கோடு சிலர் ஆசிரியர் தொழிலை தேர்வு செய்யலாம். இப்படியானவர்களுக்கு 'நீ படித்தால் படி, படிக்காவிட்டால் போ. எனக்கென்ன கவலை' எனும் எண்ணம் இருக்கலாம்.

எதிர்காலத்தைப் பற்றிய சரியான திட்டமிடும் சிந்தனை இல்லாமல். பிரச்சனைகள் எழும்பும் போது மட்டும் வாய்கிழிய பேசி நாயகனாக மாறும் அரசியல் தலைவர்களின் போக்கு எப்படிபட்டது? தமக்கு புகழ் கிடத்தால் போதும் பிரச்சனை வரும் வரை காத்திருக்கலாம் என்பதை போன்றதல்லவா?

தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து முழு உதவியும் கிடைப்பதில்லை. ஆசிரியர்களின் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வழி இவ்விடயங்கள் எந்த அளவுக்கு தீர்வு காண முடிகிறது? முக்கிய தரப்பினரின் பார்வைக்கு இதை கொண்டு செல்ல முடியாவிடில் அச்சங்கத்தின் அவசியம் என்ன?

அரசாங்கம் ஒரு கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது என்றால் சீன சமூகத்தினர் அதை பலமான முறையில் சீர்தூக்கிச் செயல்படுகிறார்கள். 90% சீன பிள்ளைகள் சீன பள்ளிகளில் தான் பயில்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் நிலை என்ன? தமிழ்ப் பள்ளி என்றவுடன் சிலரது முதல் கேள்வி 'தமிழ் சோறு போடுமா' என்பது தான்.

தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை மலாய்/ ஆங்கில கல்வி முறைக்கு அனுப்புவதில் ஆர்வம் கொள்வது அடுத்தவருக்கு கோணலான தூண்டுதல் இல்லையா? இச்செயல், ஒர் உணவகத்தின் சமையல்காரன் அடுத்த உணவகத்திற்கு சென்று சாப்பிடுவதை போன்ற செயல் இல்லையா?

ஐயய்யோ தமிழ்ப் பள்ளிக்கூடமா? அங்கே படித்தால் பிள்ளை உருப்பட்டதை போல் தான் என்பது சில பெற்றோர்களின் எண்ணம். இப்படிபட்ட எண்ணங்கள் இருக்கும்பட்சத்தில் தமிழ்ப் பள்ளி பிரச்சனைகள் அரசாங்கத்திடம் எடுபடாமல் தான் போகும். ஒருமைபாடு கொண்ட சிந்தனை இல்லாமல் ஆளாளுக்கு திட்டுதிட்டாகச் சிந்திப்பது நமது குறையே.

தற்காலத்தில் பச்சைத் தமிழர்கள் கொச்சைத் தமிழில் பேசுவதில் அலாதி பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கை போலவும், எறுமை மாட்டின் மீது மழை பெய்த கதையாக எதையும் கண்டுக் கொள்ளாமல் இருக்கும் சில தமிழ் ஊடகங்களின் செயலை தடுக்க முடியாமல் இருப்பது வேதனைக்குறியது. அதற்கு சரியான முறையில் தீர்வு காணாமல் இருப்பதும், இன்னமும் அவற்றுக்கு ஆதரவு கொடுத்து வருவது மக்களாகிய நமது தவறே.

இப்படி பல பிரச்சனைகள் நம்மில் தீர்வு காணாமல் இருக்கும் போது அரசாங்கத்தைக் குறை கூறி என்ன இருக்கிறது? 50 வருடங்களில் 1000 தமிழ்ப் பள்ளிகள் 500-ஆக மாறியுள்ளது எனின் இன்னும் 50 வருடத்தில் அதன் நிலை எப்படி இருக்கும்?

ஆரம்பக் கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சனைகளை மட்டும் சிந்திக்கும் மக்கள், உயர்நிலைக் கல்விமுறையைப் பற்றி சிந்திப்பதுண்டா? இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் ஒரு தனி பாடமாக மட்டுமே போதிக்கப்படுகிறது. மாணவர் பற்றாகுறை எனின் அதுவும் இல்லாமல் போகும் நிலை உள்ளது.

உயர்நிலைக் கல்வியெனின் மலாயா பல்கலைகழகத்தில் மட்டும் தான் தமிழ் போதிக்கப்படுகிறது. அதுவும் இளங்கலை பட்டத்திற்கு மேல் தொடர வாய்ப்பில்லை.மலாயப் பல்கலைகழகத்தில், தமிழ் மொழி கல்வி திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டு இத்தனை வருடங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்பினை கொண்டு வர முடியாமல் போகுமானால் அது யார் தவறு?

தேசிய மொழி காப்பகமாக 'டேவான் பகாசா டான் புஸ்தாகா' இருப்பது போல் சீன மொழி காப்பகமாக 'டொங்ஜோங்' கல்வி கட்டுப்பாட்டு குழு உள்ளது. கல்வியமைச்சின் முடிவுகள் இப்படிபட்ட மொழி காப்பகங்களில் சீர் தூக்கிப் பார்க்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு கொண்டுச் செல்லப்படும். மலேசிய தமிழ் கல்விக்கு அப்படி ஏதும் காப்பகம் உள்ளதா? உண்டு எனின் இன்றய நிலைக்கு இவர்களின் பங்கு என்ன?

ஆண்டுதோறும் மலேசியாவில் இருந்து நான்கு சீன விரிவுரையாளர்கள் பெய்ஜிங் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முனைவர் பட்டம் வாங்கி வரச் செய்கிறார்கள். அவர்களுக்கு மலேசிய அரசு உபகார நிதி ஒதுக்குகிறது. இதற்கு உறுதுணையாக மலேசிய சீன சங்கம் (ம.சி.சா) உதவி புரிகிறது. அது போல ஒரு தமிழராவது தமிழகம் சென்று முனைவர் பட்டம் பெற --- உதவியுள்ளதா? அப்படி இல்லை என்றால் அவர்கள் என்ன **** (வேண்டாம் விடுங்கள்).

கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போகும் கதையாக UPSR தேர்வின் போது இத்தனை தமிழ்ப் பள்ளி பிள்ளைகள் இத்தனை 'எ' என மார்தட்டி கொள்பவர்கள்
SPM தேர்வில் தமிழ் பாடம் எடுப்போரின் விழுக்காடு குறைந்து போவதை கவலைக் கொள்வதில்லை. ஏன் இந்த நிலை?

தமிழ்க் கல்வி எனும் ஒரு நிலையிலேயெ இவ்வளவு விடயங்கள் அடங்கி கிடக்கும் போது, எதையும் சிந்திக்காமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டும் சதா
'லபோ திபோ' என கத்திக் கொண்டு தமிழர்கள் பிரதிநிதி எனக் கூறும் அரசியல் கட்சிகள் நமக்கு அவசியம் தானா?

தமிழ்க் கல்வியை சுயநலத்திற்கு அரசிலாயாக்குவதை தவிர்த்து, முறையான தமிழ்க் கல்விக் குழு அமைத்து பிரச்சனைகளை சீர் தூக்கி செயல்படவில்லை என்றால் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இந்நிலை மாறாது.

தனியாக தமிழ்ப் பள்ளிகள் அவசியமில்லை, சிங்கப்பூரைப் போல தேசியப் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக மட்டும் இருந்தால் போதும் எனக் கூரும் சில இனத் துரோகிகளின் கை ஓங்குமானால் அடுத்த நூற்றாண்டில் இங்கே தமிழ்ப் பள்ளிகள் இல்லாமல் தான் போகும்.

எந்தப் பிரச்சனை வந்தாலும் துளி அளவும் முயற்சி இல்லாமல் 'எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்' என மேலே கையை உயர்த்துவது தமிழர்களின் மகா மடத்தனமான செயலாகிப் போய்விட்டது. அதைப் போலவே சமுதாய பிரச்சனையை அரசியல் கட்சி பார்த்துக் கொள்ளும் எனும் எண்ணம் பலரில் உண்டு. இதுவும் ஒரு மூட நம்பிக்கை என்பதை உணர்வார்களா?

Monday, November 24, 2008

இலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம் !

1)முதன் முதலில் எப்போது பத்திரிக்கையை(நாளிகை) படிக்க தொடங்கினீர்கள்?
சரியாக ஞாபகம் இல்லை. நாளிகை படிக்க ஆரம்பித்த காலத்தில் அதிகம் விரும்பிப் படிப்பது சினிமா பக்கம் தான். இப்போது சினிமா இதழ்களை முற்றினும் தவிர்த்துவிட்டேன். நடிகைகளின் தொடையில் ஓடுகிறது இன்றய பாத்திரிக்கை வியாபரம் என அன்மையில் ஒரு தமிழ் ஆர்வாளர் சொல்லியது இவ்வேளையில் ஞாபகம் வருகிறது. சினிமா இல்லாமல் பத்திரிக்கை இல்லை எனும் இக்கால பத்திரிக்கையாளர்கள் எண்ணத்தைச் சற்றே மாற்றிக் கொள்வது நலம்.

2)அறிமுகமான முதல் புத்தகம்?
முதல் புத்தகம் என் தந்தை, என் பிறந்த நாளுக்குப் பரிசாக கொடுத்த அணிலும் கொய்யாப் பழமும் எனும் படக்கதைப் புத்தகமாகும். அப்போது எனக்கு வயது 6 இருக்கும். பத்திரமாக வைத்திருந்தேன் ஆனால் இன்று காணவில்லை. அப்புத்தகம் தான் என்னில் கதை படிக்கும் ஆர்வத்தை முதன் முதலாக துவக்கியது எனலாம். அதன் பின் என் அக்காள் சில மலாய் சிறுவர் கதை புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். அன்று முதல் புத்தகத்தின் வாசம் ஒட்டிக் கொண்டது.

3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?
கதை படித்து மாட்டிய அனுபவம் இல்லை. கதை சொல்லத் தெரியாமல் மாட்டிய அனுபவம் உண்டு. வாரம் ஒரு கதையைப் படித்து மன்னம் செய்து பள்ளியில் ஒப்புவிக்க வேண்டும். இப்படி ஒரு ஆசிரியர் கட்டளை போட்டிருந்தார். கதைகளை விரும்பி படிக்கும் ஆர்வம் இருந்தாலும், பலரது முன்னிலையில் மனனம் செய்த கதையை மறந்து போய் உளற ஆரம்பித்துவிடுவேன். பிறகு என்ன வாத்தியாரிடம் (சுப்பையா ஐயா இல்லை) அடியை வாங்கி கொண்டு அடுத்த வாரத்திற்கு தயாராக ஆரம்பித்துவிடுவேன். (அடி வாங்கவா என கேட்கக் கூடாது).

4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?
நிச்சயமாக உண்டு. இன்று வரை நாவல்கள் படிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. எனக்கு முதன் முதலாக அறிமுகமான நாவல் கண்ணீர் சொல்லும் கதை. மலாயவில் தோட்டபுர பகுதியில் நடக்கும் விதமாய் கதைகளம் அமைக்கப்பட்டிருக்கும். ஜப்பானிய மற்றும் பிரிடிஸ்காரர்களின் ஆட்சியின் போது மக்கள் பட்ட துயரமும், தமிழினத்திற்கு உண்டான கொடுமைகளும் விவரிக்கப்பட்டிருக்கும். இந்த நாவலும் காணாமல் போய்விடட்து.

இத்தொடரை எழுத அழைத்த ஹேமாவிற்கு நன்றி.

நான் எழுத அழைக்கும் மூவர்:
1) கோவி.கண்ணன் (காலம்)
2) NATTY (எண்ணங்கள் எழுத்தானால்)
3) சத்தீஸ் குமார் (ஓலைச்சுவடி)

அகிலனின் நெஞ்சினலைகள்- நாவல்


நாம் வாசிக்கும் எல்லா புத்தகங்களும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் படிக்கும் சில நூல்கள் வெறும் சக்கையாக போவதும், எதிர்பாராமல் படிக்கும் சில நூல்கள் ஆழ்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாது.

ஏன் அப்படி? என்ற கேள்விக்கு விடை தேடினால் தரமின்மை என்போம். அதையே அகிலன் தமது முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்.

'வெள்ளைத் தாளை கறுப்பு மையால் நிரப்பி அச்சுக்குக் கொடுப்பதெல்லாம் 'நூல்' என்ற போக்கு வந்துவிட்ட காலம் இது' என தனது ஆதங்கத்தை வெளிகொணர்ந்துள்ளார்.

1943 முதல் 1945 வரை இடைப்பட்ட காலத்தில் அதாவது இந்திய தேசத்தின் விடுதலைக்கு முன் கதை ஆரம்பமாகிறது. இரண்டாம் உலகப் போரின் போது வெறி பிடித்துப் போன மனிதனின் குணத்தால் பலரும் பாதிப்படைகிறார்கள்.

பாதிப்பின் பிடியில் சிக்கியவனாக சித்தரிக்கப்படுகிறான் கதையின் நாயகன். வாசுதேவன் படிப்பை முடித்து தனது மாமாவின் சுருட்டுத் தொழிற்சாலையில் குமாஸ்தா பணியில் அமர்கிறான். மாமன் என்றாலும் பொருளாதார வேறுபாடு அவர்களிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்துகிறது.

வறுமையும் குடும்ப பாரமும் வாசுதேவனை பிழிந்தெடுக்கும் போது செல்வச் செழிப்பில் குளிர் காய்கிறார் அவனது மாமா தர்மலிங்கம். தர்மலிங்கத்தின் மகள் கனகம். கனகம் வாசுவின் மீது காதல் கொள்கிறாள். இவர்களது காதல் தர்மலிங்கத்திற்குத் தெரியவரவும் வாசுவின் வேலை பறிபோகிறது.


சில காலத்தில் வாசுதேவன் இராணுவத்தில் சேர்கிறான். அதன் பின், இந்திய விடுதலைப் போரில் இரண்டாவது போர்முனையை ஏற்படுத்திய இந்திய தேசிய ராணுவதில் பெரும் பகுதியினர் தமிழர்களே எனும் கூற்றை சற்றும் பிசகாமல் நமக்குச் சமர்ப்பித்துள்ளார்.

புஷ்பா எனும் கதாபாத்திரம் நெஞ்சை கனக்கச் செய்யும் விதமாய் அமைகிறது. ரங்கூனில் இராணுவ வீரனாக வாசு சந்திக்கும் குடும்பத்தில் ஒருத்தி தான் புஷ்பா. அதற்கு நேர் எதிராக அறுவருப்பைக் கொடுக்கும் கதாபாத்திரம் பசுபதி எனும் தர்மலிங்கத்தின் மைத்துனன்.

இக்கதையை பலரும் படித்திருக்கலாம். படிக்காதவர்களுக்கு நான் குறிப்பிடுவது சிறு அறிமுகமாக அமையட்டும். ஆதலால் கதைச் சுறுக்கத்தை எழுதுவதை தவிர்க்கிறேன். ஒவ்வொரு இடங்களிலும் கதாசிரியரின் எழுத்துக்கள் நமக்கு உணர்ச்சி பூர்வமாய் அமைவது திண்ணம்.

நீலக் கடலலையே! - உனது
நெஞ்சினலைகளடி!
என வாசுவின் காதலை தொடக்கும் பாரதியாரின் கவிதை வரிகளே நாவலின் முடிவாகவும் அமைகிறது.

நெஞ்சினலைகள் யுத்த களத்தில் பூத்த காதல் மலர்.

Friday, November 21, 2008

என்னைச் செருப்பால் அடியுங்கள்!

இதனை எண்ணும் போதெல்லாம் கொச்சை வார்த்தைகள் கொந்தளிக்கின்றன. வேதாளத்திற்கு வாக்கப்பட்டால் முருங்கை மரத்தில் ஏற வேண்டுமாம். அதனால் பொத்த வேண்டியதை பொத்திக் கொண்டு மூட வேண்டியதை மூடிக் கொண்டு இருக்க வேண்டிய நிர்பந்தம் தான் போல.

‘ஷாருக்கானுக்கு டத்தோ விருது’ இதனைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் பச்சை வார்த்தைகள் பாய்ந்து வருகின்றன. அப்படி என்றால் நான் நாட்டின் துரோகியாக இருப்பேனோ என்ற எண்ணமும் கூடவே சேர்ந்துக் கொள்கிறது.

ஒருவருக்கு வாழ்த்தும் விருதும் கொடுத்து சிறப்பிப்பது சிறந்த செயல் என்றாலும் கூட எதற்கும் ஒரு வரையறை வேண்டாமா? முதல் வகுப்பு தேறிய மாணவனுக்கு(!?) இளங்கலை பட்டம் கொடுத்தீர்கள் என்றால் அம்மாணவனின் மனநிலை எப்படி இருக்கும்? அதன் பெருமை அவனறிவானா? அதனால் அவனுக்கு என்ன பயனுண்டு?

மலேசியாவில் மலாக்கா மாநில ஆளுநரின் 70-ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி ஷாருக்கானுக்கு டத்தோ விருது வழங்கப்பட இருக்கிறது. எதனால் விருது? மலாக்காவில் திரைப்படம் தயாரித்து மலாக்கா மாநிலத்தை வெளிநாட்டினரிடையே பிரபலப்படுத்தியதற்காக இவ்விருது கொடுக்கப்பட இருக்கிறது. அதை பெற்றுகொள்ள நேரமில்லையென அந்த பிரபல நடிகர் கூறி இருப்பது அதைவிட மகிழ்ச்சியான செய்தி என்றே சொல்ல வேண்டும்.

சரி, ஒரு நடிகர் என்ற முறையில் ஷாருக்கான் செய்தது மகத்தான செயலாகவே இருக்கட்டும். அதற்காக கொடுக்கப்பட இருக்கும் விருதும் போற்ற தக்கதாகவே இருக்கட்டும். ஏனைய அரசு தரப்பினரும், அரசு சார்பற்ற தரப்பினரும் எடுத்துரைக்கும் கருத்துக்கு செவி சாய்க்காமல் இருப்பது முறையான ஒன்றா? என்ன சொல்ல கோமளித் தனமாக தான் இருக்கிறது சில வேளைகளில் சிலரது செயல்கள்.

பூப்பந்தாட்டத்தில் தமது பிள்ளைகளை சிறப்புர பயிற்சியளித்து உலகளவில் பெறுமை பெற செய்த சீடேக் சகோதரர்களின் தந்தைக்கு டத்தோ விருது கொடுக்கப்பட்டது. நாட்டுக்கு புகழ் சேர்த்த பிள்ளைகளின் தந்தைக்கு கொடுக்கப்பட்ட விருது மெத்த மகிழ்ச்சியான விடயமே. மறுப்பார் இல்லை.

அதே போல, கராத்தே தற்காப்புக் கலை பயிற்றுணர் திரு.பொன்னையா தமது பிள்ளைகளை தற்காப்பு கலையில் வலுமையாக பயிற்சி கொடுத்து, நாட்டிற்கும் வீட்டிற்கும் பெறுமை சேர்க்க செய்தார். அவரை டத்தோ பொன்னையாவாக பார்க்கும் வாய்ப்பு கிட்டுமா என்பது கேள்விக்குறி தான்.

சில வருடங்களுக்கு முன் கப்பல் கொண்டு உலகை வலம் வந்தவருக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்ட்து. 1996-ஆம் ஆண்டு இமயத்தில் மலேசிய கொடியை நாட்டிய நமது சகோதரர்கள் மகேந்திரனும் மோகன தாஸூம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

இவருக்கு விருது கொடுங்கள் இவருக்கு கொடுக்காதீர்கள் என்று சொல்ல எனக்கு ஏற்ற பட்டறிவு இல்லை. இது எனது பொறாமை பார்வையும் இல்லை. எதையும் நடு நிலை நோக்கோடுதான் கொஞ்சம் பாருங்களேன் என அன்பு வேண்டுகோள் வைக்கிறேன். இது 'தவறான கருத்து' என நினைத்தால் என்னைச் செருப்பால் அடியுங்கள்.

இறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கனவு தேவதை!!!


மண்ணும் தான் கலங்கிடுமே
மலர் பாதம் பட்டவுடன்!
மதியும் தான் மயங்கிடுமே
மங்கை முகம் பார்த்தவுடன்!

பவள இதழ் ஓரம்தனில்
பழங்கள் தான் கனிந்திடுமோ!
பாவை உனை நான் காண
பால் மனதில் பைத்தியம் தான்!

காதாடும் குழையும் தான்
கச்சிதமாய் மின்னுதடி!
காற்றினிலே தேர் கொண்டு
காதல் மனு எடுத்து வந்தேன்!

ஊற்றெடுக்கும் உள்ளம் தனில்
உணர்ச்சிகள் தான் சில நூறு!
உடலெல்லாம் முத்தமிட்டு
உறக்கம் தான் மறந்தேனோ!

இரவெல்லாம் உன் நினைவு
இன்ப நாதம் மீட்டுதடி!
இறைவனிடம் வேண்டி நின்றேன்
இறக்கை பெற்று உனைக் காண!

சிறு இடையில் சேலை கட்டி
சிரித்து வந்து நின்றாயே!
சின்னவளே சீக்கிரமாய் நானறிந்தேன்
சிந்தையிலும் சொப்பனமாய் நீதானே!

Thursday, November 20, 2008

இறைவன் ஏன் கல்லானான்?


வெள்ளை மனதை வெளியே காட்டி
உள்ளம் திறந்து உண்மையாய் வழிபடு!

என்ற நெறியை எடுத்துச் சொல்ல
எங்கள் முன்னோர் தேங்காய் உடைத்தனர்!

இறைமை பணிகள் சிறப்பாய் நடக்க
அர்ச்சனை தட்டில் தட்சணை வைத்தனர்!

உண்மைப் பசியால் வாடும் மக்கள்
உண்டி கொடுக்க உண்டியல் வைத்தனர்!

உண்மை உணரா சப்பாணித் தமிழர்
உள்ளதை மறைக்க லஞ்சம் வைத்தனர்!

மக்களின் எண்ணம் இறைவனறிந்தான்
மனதை மாற்றி கல்லாய்ப் போனான்!

கல்லாய் போன கடவுள் பெயரால்
கயவர் செய்திடும் காரியம் கொஞ்சமோ?

Monday, November 17, 2008

அறிவை அழிக்கும் தீ!!!


மதிப்பிற்குரிய
(சா)தீய அன்பனுக்கு!
சனநாயக தேசத்தில்
சாதி வெறி பிடித்து
சால்ரா அடிக்கிறயா? - இல்லை
சடமென வாழ்கிறாயா?

ரத்த வெறி பிடித்த -நீ
ரத்தக் காட்டேரியா?- இல்லை
ரணங்கள் செய்யும்
ராட்சச பிசாசா?

சாதி
உனக்கு
சோறூட்டி சீராட்டி
வளர்த்த தாயா?- இல்லை
அன்பூட்டி அறிவூட்டி
வளர்த்த தந்தையா?

சாதியனே!
துப்பாக்கியைத் தூர எறி!
கத்திக்கு காணிக்கை செலுத்து.
கதறக் கதறக்
கண்டந்துண்டமாய் வெட்டு!
சனத்தொகையை பிணத்தொகையாய் மாற்று!

சாதி வெறி பிடித்த
ஞானியே!
உனக்குத் தேவை
மனித உடலின்
இரத்தமும் சதையும் தானே?
உடனே செய்!
சாதியெனும் மாயையில்
தீய்ந்து போ!

சாதியின் வேதத்தை
உபதேசிப்பாயா எனக்கு?
என்ன?
மனிதத்தை புதைக்க வேண்டுமா?
மயானத்தை விரிவு செய்ய வேண்டுமா?
மனமென ஒன்றிருந்தால்
அதை அப்புறப்படுத்த வேண்டுமா?

(சா)தீயில் குளித்து!
(சா)தீயில் நடந்து!
(சா)தீயை உண்டு!
(சா)தீயில் வாழ வேண்டுமா?

சாதியனே!
நாளை உனக்கொரு விபத்து நடக்கும்!
உன் உடல்
இரத்தம் கேட்கும்!
தாதியிடம் கேள்
என்ன சாதி இரத்தமென!
உனதில்லையெனில்
உடனே மடிந்து போ!

காலம்
உன் பெயர் சொல்லட்டும்!
அறிவு கெட்ட தமிழனென்று.

Friday, November 14, 2008

ஏய் யெப்பா விலைய குறைங்கடா...(2)

சிங்கை பயணத்தின் பிறகு திங்களன்று வேலைக்கு கிளம்பினேன். அவசரத்தில் கிளம்பியதில் காரின் எண்ணெய் அளவை கவனிக்க மறந்தேன். பாதி வழியில் எண்ணெய் தீர்ந்துவிடும் என அறிந்து பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றேன். அது ஏப்போதும் எண்ணெய் எடுத்துக் கொள்ளும் நிலையம் அல்ல. இருந்தாலும் ஆபத்திற்கு பாவம் இல்லை என்பதால் அங்கு செல்ல வேண்டிய நிலை.

பணத்தை கட்டிவிட்டு எண்ணெய் குழாய் அருகில் சென்றதும் குழப்பம். விலை மாறுபட்டிருந்தது. ஒரு வேளை தரக்குறைவான (பொதுவாக பயன்படுத்தாத) பெட்ரோலாகஇருக்குமே என்று நினைத்தேன். கூர்ந்து கவனித்தால் சரியான எண்ணெய்யே என தெரிந்தது. சிங்கை சென்று வந்த இரண்டு நாட்களில் மீண்டும் 0.15 காசு குறைத்திருந்தார்கள். ஆனால் அது பெரிய பரபரப்பாகவோ, முக்கிய செய்தியாகவோ, மக்களுக்கு மகிழ்ச்சியளித்த விடயமாகவோ தெரியவில்லை.

காரணம் என்ன? சில மாதங்களுக்கு முன் மக்களிடைய அழுத்தமாக பேசப்பட்டு வந்த அரசியல் விவகாரங்கள் குறைந்து போய் இருக்கிறது.மாறாக பொருளாதார பிரச்சனையே இப்போது வசைபாடபட்டு வருகிறது. நகரங்களிலும், பேரங்காடிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது. பொதுவாகவே பலரிடமிருந்து நாம் கேட்கும் வார்த்தை 'எல்லாம் விலை ஏத்திட்டானுங்க' என்றே இருக்கிறது.

கடந்த சில நாட்களாக காலையில் வேலைக்கு கிளம்பும் போது "விக்கி ரொம்ப செலவு பண்ணதே" என்றே அம்மா சொல்கிறார். ஒரு மந்தகரமான பொருளாதார சூழ்நிலையில் மக்களிடம் பயம் காணப்படுவதை போல் எண்ணம் எழுகிறது. சில பல அரசியல் விவகாரங்களை மக்களிடமிருந்து கலைவதற்கு கையாளப்படும் அரசியல் சூழ்ச்சியா என்றும் புரியவில்லை.

எரிபொருள் விலை குறைப்பு வரவேற்கக் கூடிய விடயமாக இருப்பினும் அது உலகளாவிய நிலையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவே இருக்கிறது. எரிபொருள் விலை குறைந்தது சரி, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததா என காண்கையில் அங்கும் கேள்வி குறியாகவே இருக்கிறது. எரிபொருள் விலையேற்றத்தின் போது பொருட்களின் விலையும் அதிகரித்தது. அது விலை குறைந்திருக்கும் இச்சமயத்தில் பொருட்களின் விலை குறையாததன் காரணம் என்ன?

எரிபொருள் விலையேற்றம் காணும் சமயங்களில் சாப்பாட்டு பொருட்களின் விலையையும் பேசுவது வாடிக்கை. முக்கியமாக 'நாசி கண்டார்', 'ரொட்டி சானய்', 'மில்லோ ஐஸ்' விலையில் எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது என்பதையும் அலசுவர்.

இதற்கான விளக்கம் மிக எளிமையானதே. பலரும் அறிந்ததே. எரி பொருள் விலையாது பொருட்களின் தயாரிப்பு செலவையும் கூட்டிவிடுகிறது.விலை இறங்கும் சமயத்தில் ஏனைய பொருட்களின் விலையும் குறைவதே உத்தமம்.

தற்சமயம் விலை குறைப்பு ஏதும் காணாதிருப்பதும். அரசாங்கம் அதை கவனியாதிருப்பதும் எதனால்? அரசியல் பேச்சுகள் பிரச்சனையை ஏற்படுத்துவதாலும், அரசியல்வாதிகளுக்கு அது நிம்மதியின்மையைக் கொடுப்பதாலும், இப்பொழுது பொருளாதார யுக்தியா?

பொருளாதார விளையாட்டு மைதானத்தின் நடுவில் நின்று கொண்டு இரண்டு பக்கமும் அடி வாங்கும் வர்க்கமாக இருப்பது பயனீட்டாளர்களே. மேல் மட்டத்தில் இருக்கும் விலை கட்டுபாட்டாளர்கள், தயாரிப்பாளர்கள், மொத்த வியாபரிகள் என சில தரப்பினர் இதில் பாதிப்படைகிறார்களா? இப்பிரச்சனையில் இவர்களின் பாராமுகம் சரியான ஒன்றா? அல்லது விற்பனையாளர்களுக்கும் பயனீட்டாளர்களுக்குமிடையே புகைச்சலை உண்டு செய்து குளிர்காயும் போக்கா?

தயாரிப்பாளர்கள் விலை நிர்ணயத்தின் பிறகே மொத்த வியாபாரிகளும், விற்பனையாளர்களும் தங்களுடைய இலாபத்தை உறுதிபடுத்துகிறார்கள். ஆரம்ப நிலையிலேயே விலை அதிகமாக இருப்பின் இறுதி விலை எவ்வாராக அமையும்? அதை கவனியாது கடை கடையாக விலைகட்டுபாட்டாளர்கள் ஏரி இறங்குவதும், விற்பனையாளர்களை சாடுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

தயாரிப்பாளர்களின் விலை நிர்ணயிப்பு யுக்தியை இவர்கள் கவனிக்கிறார்களா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. விலை குறைப்பை முன்னிட்டு அரசாங்கம் அறிக்கை வெளியாக்கும் என மக்கள் காத்திருப்பதும் பரிதாபத்திற்குறியதாக இருக்கிறது.

ஆரம்பக் கேள்விக்கே திரும்புவோம். எரிபொருளின் விலை ஏற்றம் மட்டும் தான் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமா? பொருளாதார விதியின் படி பதில் இல்லையென்றாகிறது. ஒரு பொருளின் விலை மாறுபடுவதற்கு வேலைக் கூலி, கணிம விலை, மின்சாரம், நீர் என இன்னும் பல செலவுகளும் காரணமாகிறது.

அப்படி என்றால் எரிபொருளின் விலை குறைப்பைக் காரணம் காட்டி இதர பொருட்களின் விலையை குறைக்கச் சொல்வது முறை தானா? சரி வேறு கோணத்தில் நோக்கினால் பயனீட்டாளர்களின் தேவையும் தயாரிப்பாளர்களின் வெளியீடும் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கிறது என்கிறார்கள். அதாவது பயனீட்டாளர்களின் தேவை அதிகரிக்க பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதே விதி. தற்போதைய நிலையில் மக்களின் வாங்கும் சக்தி குறைவாக இருக்கிறது. அப்படி இருக்க ஏன் விலை அதிகரிப்பு?

தற்போதைய மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் பொருட்டு சம்பந்தபட்டவர்கள் சரியான முடிவை எடுப்பார்களா?

அக்கரையில்லா அரசாங்கம் + கேள்வி கேட்காத மக்கள் = நாடு நாசம்.


(பி.கு: நேற்றய தினம் எண்ணெய் நிலைய வேலையாள் ஒருவர் சொன்னார் மீண்டும் எண்ணெய் விலை குறையுமாம்)

Thursday, November 13, 2008

கதை மட்டும் போதுமாடா தமிழா?


பேச்சன்றி மூச்சன்றி
போகும் திசை அறிவதன்றி!

கரை சேர்ந்த பொழுதினிலே
கதறி அழும் அலைகடலே!

யார் செய்தி கொண்டு வந்தாய்?
யாண்டு மிங்கே சொல்லிடுவாய்!

அடிபட்டும் மிதிபட்டும்
ஆத்திரம் தான் அடங்காமல்!

இடிபட்டும் குடிகெட்டும்
இதய வலி ஆறாமல்!

சீர் குலைந்த தமிழினத்தின்
சீழ் கண்ணீர் சொல்லாயோ!

ஒடிபட்ட தமிழர் தன்
ஓலங்கள் ஆயிரம் தான்!

காதறுந்த கரையோரம்
கதை பேசி போவாயோ!


Tuesday, November 11, 2008

TROY கோட்டையைக் கண்டுபிடித்தவர் திருடனா?

Henrich Schleimann ஒன்பதே வயது நிரம்பிய சிறுவன். The Iliad என அச்சிடப்பட்டிருந்த அப்புத்தகத்தை மூடி வைத்தான். Homer என்ற கிரேக்க குருடன் எழுதிய அந்த புத்தகத்தை பல முறை அவன் வாசித்து விட்டான்.
Schleimann தனது நண்பர்களை காணும் போது சொல்கிறான், ஒரு நாள் நிச்சயமாக நான் Troy கோட்டையை தேடிச் செல்வேன் என்று. அவனது பேச்சு எல்லோருக்கும் நகைப்புக்குள்ளாகிறது. schleimann-னின் பெற்றோரும் அவனது எண்ணத்தை அறிகிறார்கள்.
அவனை அழைத்துச் சொல்கிறார்கள். Trojan போர் என்பது ஒரு புனைவு மட்டுமே. அதில் வரும் பல கடவுளர்களும் புரட்டு விடயமே. ஒரு ஆப்பிளுக்காகவும், பெண்ணுக்காகவும் 10 வருட போர் நடந்தது என்பது கேலிக்குறியது. கதையை கதையாக மட்டுமே பார்க்க வேண்டுமெனவும் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருக்கவும் சொல்கிறார்கள்.

Minna Meincke எனும் அவனது பெண் தோழி மட்டுமே அவன் கருத்தை செவிமடுக்கிறாள். "நாம் பெரியவர்களானதும் திருமணம் செய்து கொள்வோம். பிறகு Henning Von Holstein-னின் அரண்மனையை தோண்டுவோம், அங்கு கிடைக்கும் செல்வங்களை விற்று துர்க்கிய நாட்டிற்குச் சென்று Troy கோட்டையை தேடுவோம்" என்கிறான். Minna-வும் சம்மதம் தெரிவிக்கிறாள்.

இளைஞனான பிறகு, Schleimann வியாபரம் செய்தும் மாலுமியாக பணி புரிந்தும் பணம் தேடுகிறான். அவனது பல தேச பயணங்களின் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்கிலம், பிரெஞ்ச், மற்றும் துர்க்கிய மொழிகளை பயின்று கொள்கிறான். St.Pettersburg எனும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவணத்தில் பணி புரியும் சமயம் ரஷ்ய மொழியும் கற்றும் கொள்கிறார். வியாபாரமும் நல்ல விதமாய் அமைந்ததால் இளம் பருவத்திலேயே நன்கு பணம் ஈட்டுகிறார்.
தனது இலட்சியங்களையும் மறக்காமல் அதற்கான ஆதாரங்களையும் கேமிக்கிறார்.
அதில் ஈடுபடும் முயற்சியை பொருட்டு முதல் வேளையாக Minnaவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்.அக்கடிதம் கிடைப்பதற்கு ஒரு மாதத்திர்கு முன்னமே Minna வேறொரு ஆடவரை திருமணம் செய்து கொண்டுவிடுகிறாள். Minna-வின் நேர்மையின்மையினால் Schleimann மிகவும் வருந்துகிறார். பிறகு ஒரு ரஸ்ய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் நீடிக்காமல் விவாகரத்தில் முடிகிறது.

1863-ஆம் ஆண்டு Schleimann தனது 41வது வயது நிறைவடையும் சமயம் கோடிஸ்வரன் எனும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். சரித்திர வல்லுனர்களும் ஆய்வாளர்களும் Troy கோட்டை இல்லை என்பதையே அச்சமயம் உறுதியோடு சொன்னார்கள். அவை Scheleimann-னின் எண்ணத்தை சற்றும் சிதறடிக்கவில்லை. அதே ஆண்டு தனது கனவுகளை உறுதிபடுத்திக் கொள்ள துர்க்கி நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஒரு சிலரே Troy நகரம் இருந்திருக்கக் கூடும் என்பதை நம்பினார்கள். அது Aegean எனும் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் Bunarbashi எனும் மலையில் அமைந்திருக்கலாம் என கருத்துரைக்கிறார்கள். Schleimann, Bunarbashi மலைக்குச் செல்கிறார். அவ்விடம் Homer இலியட்டில் சொன்னதை போல் இல்லாதிருப்பதைக் கண்டு வருத்தமடைகிறார்.
Homer தனது கதையில் சொல்லிய புவியியல் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது ஆராய்ச்சியில் முற்படுகிறார். அதன் அடிப்படையில் Troy கோட்டையானது Hissarlik அருகே இருக்கும் ஒரு மலையில் இருப்பதாக அறிகிறார். அந்த மலையில் இருந்து Ida மலையைக் காண முடிந்தது. அங்கே சமமான மணல் பரப்பும், எதிரியை துரத்துவதற்கு வசதியான இடமும், கடற்கறையில் இருந்து சற்று தூரத்திலும் அமைந்திருந்தது.

அவரது முயற்சிகள் வீண் போகாமல் இருக்கும் பொருட்டு தன்னை நன்முறையில் தயார்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறார். தொல் பொருள் ஆராய்ச்சி துறையில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுகிறார்.
மீண்டும் துர்க்கிக்குச் சென்று ஆராய்ச்சியை தொடரும் முன் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார். தன் நண்பருக்கு கடிதம் எழுதி தனக்கு ஒரு இளம் மனைவியை தேடும்படியும் அவள் Homer மற்றும் Troy ஆராய்ச்சியின் மீது பற்று கொண்டிருப்பவளாகவும் இருக்க வேண்டுமெனவும் சொல்கிறார்.
Schleimann-னின் கடிதத்தை ஏற்ற அவரது நண்பன் Sophia Engastromoners எனும் 17 வயது நிறம்பிய நங்கையை அவருக்கு அறிமுகப் படுத்துகிறார். பிறகு அவர்களிருவரும் Athens-ல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

துர்க்கிய நாட்டு அரசாங்கத்தின் அனுமதியோடு Troy நகர ஆராய்ச்சி தொடங்குகிறது. Schleimann-னின் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்த சுல்த்தான் கிடைக்கும் பொருட்களில் ஒரு பங்கு துர்க்கி நாட்டு அரசாங்கத்திற்கு சேர வேண்டுமென விதியிடுகிறார்.
1871-ஆம ஆண்டு Hissarlikகில் ஆராய்ச்சி வேலைகள் தொடங்கப்படுகிறது. Schleimann-னின் பாலிய வயது கனவும் நிறைவடைகிறது. அவர் Troy கோட்டையை கண்டுபிடித்தார். அடுக்கடுக்காய் இடிந்து விழுந்தும், தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்த கோட்டையை கண்டுபிடிக்கிறார். இந்த வெற்றி அவரை உலகப் புகழ் பெற செய்தது.
Schleimann-க்கு மன நிறைவு கிடைக்கவில்லை. Priam அரசனின் ஆட்சியின் போது சொல்லப்பட்டிருப்பதை போல் அந்த கோட்டை இல்லாமல் இருந்ததுவே காரணம். இலியடில் சொல்லப்பட்டிருக்கும் Troy கோட்டையின் வடிவம் கிடைக்கும் வரை தனது ஆராய்ச்சியை மேற் கொண்டார்.
வெறித்தனமாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட Schleimann-னுக்கு பேராசையும் பற்றி கொண்டது. Hissarlik-க்கு வந்த தனது இலட்சியத்தை மறந்தார். மாறாக புதயலை தேடுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். கிரேக்க இராணுவத்திற்கு பயந்து Priam அரசன் தனது செல்வங்களை எங்கேனும் பதுக்கி வைத்திருக்க வேண்டுமென யூகித்தார். ஆராய்ச்சியின் முதல் குறியாக புதையல் பதுக்கிய இடத்தை அறிவதிலேயே இருந்தது.
160 வேலையாட்களுடன் இவ்வாராய்ச்சி தொடரப்பட்டது. 14 ஜூன் 1873-ஆம் ஆண்டு தொண்டப்பட்டிருந்த சுவற்றினூடே மினுமினுப்பு கதிர்களை கண்டார். ஒளி வந்த இடத்திர்கு அங்கே இருந்த குழியின் வழியே இறங்கிச் சென்று கண்ட போது அவ்வொளிக்கதிர் அங்கிருந்த பீப்பாயில் இருந்து வந்ததைக் காண்கிறார்.
மூடப்பட்டிருந்த பீப்பாய் லேசாக உடைந்திருந்ததினால் அதன் வழியே அதற்குள்ளிருந்த தங்கத்தைக் காண முடிந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எழுதிய புத்தகத்தில் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் Schleimann. "எனது வேலையாட்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயம், ஒரு பெரிய கத்தியின் துணை கொண்டு அந்த பீப்பாயை வெளியாக்கினேன். அது கடினமாகவும் பேராபத்து நிறைந்த வேலையாகவும் இருந்தது. எந்த நேரத்திலும் அந்த பாழடைந்த தூண்கள் என் மீது விழுந்திருக்கக் கூடும். ஆனல் பீப்பாயில் இருந்து வெளிவந்த தங்க ஒளி அந்த சமயத்தில் என்னை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டிற்று. ஆகவே அச்சமயத்தில் ஆபத்தை நான் கருதவில்லை".
Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் கிடைத்த முதல் புதையல் அது. அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திலைத்தார்கள். அந்த புதையலுள் இரண்டு கிரிடங்கள் இருக்கக் கண்டணர். அது அரசர் மற்றும் அரசியால் உபயோகப் படுத்தியதாக இருக்கக் கூடும் என நம்பினார்கள்.
மேலும் தோண்டவும் அவ்விடத்தில் இருந்து பீங்கான் தட்டுகள், பொத்தான்கள், கயிறு மற்றும் தங்கத்திலான நூல்களும் கிடைத்தது. இது பொக கை வளையல், வெள்ளிக் கின்னங்களும், வெங்கலத்திலான ஆயுதங்களென பல பொருட்களும் கிடைத்திருக்கிறது. பேராசையின் மிதப்பில் இருந்த Schleimann எல்லா பொருட்களையும் ஜெர்மனிக்கு கடத்திச் சென்றுவிடுகிறார்.
பெருந்திருடனென கூறப்படும் Schleimann
இந்த விடயமறிந்த துர்க்கிய நாட்டு அரசாங்கம் Schleimann-னுக்கு 2000 பவுண்ட்ஸ் ஸ்தெர்லிங் அபராதம் விதித்தது. Schleimann விதிக்கப்பட்ட அபராதத்தைக் காட்டினும் 5 மடங்கு அதிகமான பணத்தை துர்க்கிய நாட்டு அரசாங்கத்திற்குக் கொடுத்தார். துர்க்கிய அரசாங்கம் அவருக்கு மீண்டும் ஆராய்ச்சியை தொடர வாய்ப்பளித்தது. அவரது நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ளும் நிபந்தனையோடு.
ஆனால் Schleimann அதில் ஆர்வம் கொள்ளாமல் இம்முறை தமது ஆராய்ச்சியை கிரேக்க நாட்டில் இருக்கும் Mycenaeகின் மீது செலுத்தினார். Troy மீது படையெடுத்த Agamennon அரசனின் கோட்டையை தேடினார். அவரது அயராத முயற்சியின் பேரில் அந்தக் கோட்டையில் இருந்த புதயலைக் கண்டு பிடிக்கிறார். அவை Troy கோட்டையில் கிடைத்த புதயலை விட அதிக மதிப்பு கொண்டவையாக இருந்தது.

1878-ஆம் ஆண்டு Schleimann மீண்டும் Troy-க்கு வருகிறார். ஆரம்பத்தில் தேடிய அதே இடத்தில் மேலும் சில புதயல்கலைக் கண்டெடுக்கிறார். இடிந்து போன பல அடுக்குகளை அக்கோட்டையில் காண்கிறார். அவற்றில் ஒன்று Priam அரசனின் ஆட்சியின் போது உள்ள கோட்டையென சொல்லப்படுகிறது. Schleimann-னின் தேடலும் ஒரு நிறைவிற்கு வருகிறது.

Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த செல்வங்களையும் பொருட்களையும் நன்கு புணர்ந்த Schleimann 1880-ஆம் ஆண்டு தனது 58வது வயதின் போது அவற்றை ஜெர்மனில் இருக்கும் பெர்லின் பொருட்காட்சி சாலைக்கு கொடுக்கிறார். அதன் பின் 26.12.1890-இல் மரணமடைகிறார்.
இரண்டாம் உலகப் போரின் போது அவை இரஸ்ய இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகிறது. தற்சமயம் Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த பொருட்கள் யாவும் ரஸ்யாவின், Pushkin அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
Sophia- இவர் அணிந்திருக்கும் நகைகள் TROY கோட்டையின் கண்டெடுக்கப்பட்டது
Troy ஒரு கற்பனையல்ல என்பதை நிருபித்த Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் உலகமே நன்றி கூறியது. ஒரு சில தரப்பினர் Schleimann-னை தொள் பொருள் ஆய்வாளர் என ஏற்க மறுத்தனர். மாறாக அவரை உலகளாவிய பெருந் திருடன் எனவும் பட்டம் சூட்டினர்.
Schleimann-னின் பேராசை போக்கினால் இன்றளவும் துர்க்கி, ஜெர்மன், ரஸ்யா, மற்றும் கிரேக்க நாட்டினருக்கிடையே ஓர் உள் புகைச்சல் இருந்த வண்ணமே இருக்கிறது. தற்சமயம் இருக்கும் சொத்துக்கள் யாவும் தன்னுடையது எனும் எண்ணம் இந்நாடுகளிடையே இருந்து வருகிறது.
Frank Calvert எனும் பிரிட்டானிய ஆராய்ச்சியாளரின் வாரிசுகள், Schleimann கண்டுபிடித்த அப்புதையளின் ஒரு பகுதி தங்களுக்குறியது எனவும் அவை அவர்களது தாத்தாவின் நில பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறதெனவும் சாடியுள்ளார்கள்.
மேலும் தொடரப்பட்ட ஆராய்ச்சியில் Troy கோட்டை குறைந்தபட்சம் ஒன்பது அளவுகளை கொண்டிருக்க வேண்டுமென கூறுகிறார்கள். ஆரம்ப நிலையானது கி.மு 3000 ஆண்டும் இறுதி நிலையானது கி.மு 350 முதல் 400 ஆண்டிற்குட்பட்டதாக இருக்க வேண்டுமென குறிப்பிடுகிறார்கள். Trojan போர் கி.மு 1194 முதல் கி.மு 1184 வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.
Schleimann தான் கண்டுபிடித்த பொருட்கள் Agamemmon மற்றும் Priam அரசருடையது என தபது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அந்தத் தகவல் தவறானது என பின்னாளைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
Mycenace கோட்டையில் Schleimannனுக்கு கிடைத்த புதையலானது Agamemmon ஆட்சி காலத்திற்கு 200 வருடம் முற்பட்டது எனவும். Troy நகரில் கண்டெடுக்கப்பட்ட புதையல் Trojan போருக்கு 1000 வருடங்கள் முந்தயது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
(பி.கு:நேற்றய பதிவுக்கும் இக்கட்டுரைக்கும் தொடர்பு உண்டு: பெண் ஆசையால் அழிந்த அரசாங்கம்!! )

Monday, November 10, 2008

பெண் ஆசையால் அழிந்த அரசாங்கம்!!

கண்களில் நீர் பெருக, Priam அரசனும் அவனது துணைவியான Hecuba அரசியும் அவர்களுக்கு பிறந்த குழந்தையை Ida மலையில் விட்டுச் செல்கிறார்கள். ஏன் அப்படி செய்தார்கள்? அதற்கான பதில் ஜோதிடனின் கணிப்பு. அவர்களுக்கு பிறந்த அக்குழந்தை அரண்மனையில் இருக்கும் பட்சத்தில் Troy அரசாங்கத்திற்கு பெறும் பாதிப்பு உண்டாகும் என ஜோதிடன் கூறுகிறான்.

ஒரு இடையனின் அரவணைப்பில் Paris எனப் பெயரிடப்பட்டு அக்குழந்தை வளர்கிறது. காலம் கழிகிறது. அவனும் வீரனாய் வளர்கிறான்.

ரோமானிய புகைக்கதைகளில் காணும் ஒரு தேவதையின் பெயர் Eris. ஒரு சமயம் அவளுக்கு கடுங்கோபம் உண்டாகிறது. கோபத்தின் காரணம் என்ன? Thetis எனப்படும் கடல் தேவதை தனது திருமணத்திற்கு Eris தேவதையை அழைக்காமல் போகிறாள். இதனால் அவள் சினம் கொள்கிறாள்.Thetis எனும் அக்கடல் தேவதையை கேவலப்படுத்தவும், திருமணத்தை நிலைகுழையச் செய்யும் பொருட்டும் Eris திருமண நிகழ்வின் போது கலகம் உண்டாக்கத் திட்டமிடுகிறாள். திருமண நிகழ்வின் போது ஒரு ஆப்பிளைத் தூக்கி எறிகிறாள். தேவதைகளுள் சிறந்த தேவதைக்கே அந்த ஆப்பிள் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி.

ஆதலால் அந்த ஆப்பிள் யாரைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் திருமண நிகழ்வின் போது பெருங் குழப்பம் ஏற்படுகிறது. பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு அந்த ஆப்பிளுக்கு தகுதியானவர்கள் என மூன்று தேவதைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் முறையே Athena, Aphrodite மற்றும் Hera எனப்படும் தேவதைகள்.

Zeus கடவுளரின் ஆலோசனைபடி Paris எனும் அவ்விளைஞன் சிறந்த தேவதையை தேர்ந்தெடுக்கப் பொறுப்பாகிறான். அம்மூன்று தேவதைகளும் Paris தன்னை சிறந்தவனாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் நோக்கில் ஆளுக்கு ஒரு வரம் அவனுக்கு கொடுக்கிறார்கள்.

Athena அவன் கலந்துக் கொள்ளும் எல்லா போர்களிலும் வெற்றி பெற வரம் கொடுப்பதாக சொல்கிறாள். Hera பல இடங்களை அவன் ஆட்சி செய்ய வரம் கொடுப்பதகச் சொல்கிறாள். Aphrodite உலகில் மிகச் சிறந்த அழகியை அவனுக்கு கொடுப்பதாகச் சொல்கிறாள். Aphrodite-ன் வரத்தை ஏற்கும் Paris அவளையே சிறந்த தேவதையென அறிவிக்கிறான்.

யார் அந்த உலகின் மிகச் சிறந்த அழகி? துரதிஷ்டவசமாக (போகூழ்) அவள் கிரேக்க நாட்டின் Sparta நகர அரசனின் மனைவியான Helen என அறியப்படுகிறது. சில பல சதிவேளைகளால் Helen வெற்றிகரமாக Troy நகருக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள்.

இதன் வினையாக Troy-க்கும் Spartaவில் இருக்கும் Achaea இனத்துக்குமிடையிலான Trojan போர் உண்டாகிறது. சுமார் 10 வருட காலத்தை விழுங்கிய இப்போரில் கிரேக்கர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளவும் போர் நிறுத்தம் காண்கிறது. Troy நகரிலிருந்து கிளம்பும் முன் கிரேக்கர்கள் கடற்கரையோரமாக பூதகரமான மரக் குதிரை ஒன்றை விட்டுச் செல்கிறார்கள்.

வெற்றி வாகைச் சூடியதாக எண்ணம் கொண்டு Priam அரசனும் அவனது இராணுவமும் அன்றய தினம் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். அந்த இரவு யாரும் அறியா வண்ணம் கிரேக்கர்கள் மீண்டும் கடற்கரைக்கு வருகிறார்கள். மேலும் மரக் குதிரையில் மறைந்திருக்கும் வீரர்களும் வெளியேறி Troy அரசை எதிர்க்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் Troy அரசு அழிந்து போகிறது.

இலியட் எனப்படும் இக்கதை Homer எனும் ஒரு கிரேக்க குருடனால் எழுதப்பட்டது. இலியட் உலகப் புகழ் வாய்ந்த புத்தகம் என்பதை நமது பள்ளிக் காலங்களில் படித்திருப்போம்.

இலியட் புனைக் கதை மட்டும் தானா?

Saturday, November 08, 2008

பாசமும் பற்றி மற!!!


கண்ணீர் விட்டது போதும்
தேசம் நீரில் மிதப்பதை பாரும்
வெண்ணிற மலர்கள் தேடும்
பாசம் தேனினும் உயர்வது கேளும்

தாயிடம் பெற்ற பாலினில் பாசம்
தந்தை தந்திட்ட அறிவினில் பாசம்
சேயாய் உன்னை அனைத்து
செர்க்கம் புவியினில் தந்தது பாசம்

அண்ணன் தம்பியாய் வாழ்வில்
அழியா நட்பைக் கொண்டே
பண்பாய் பாரினில் வளர
பழியா உணர்வும் பாசம்

புதியதோர் உலகம் செய்ய
பாயும் நதியாய் நேசம் பிறக்க
புவி மாந்தர்க்கு வேண்டும் பாசம்
தேயும் நிலவாய் பண்பிருப்பின் நாசம்.

Friday, November 07, 2008

மரியாதை தெரியாத பசங்க...

விரும்பியோ விரும்பாமலோ சமுதாயம் என்பது மனிதனின் வாழ்வியல் அங்கமாகிவிட்டது. சமுதாயம் என்பது யாது? எனும் கேள்வியெழும் போது அது நாம் எனவும் நம்மை சார்ந்தது என்றேதான் பதிலாகிறது. ஒரு விடயத்தை பேசும் உரிமை பெறும் போது, நான் இந்த சமூகத்தின் அங்கம் ஆதலால் எனக்கு சமூகத்தைப் பேசவும் கேட்கவும் உரிமையுண்டு என்கிறோம்.

சமுதாய இணக்கத்தில் நம் அங்கமென்றாகும் போது பல விதிகளுக்கும் உட்படுகிறோம். அதை மனித நாகரீக வளர்ச்சியின் வித்துக்கள் என்கிறோம். மனித சமூகத்தில் முக்கியமாய் அமைவது நன்னெறி பண்புகள். பண் பட்டதால் பண்பு அல்லது பண்பாடு என்கிறோம்.

எதிலும் முதல் தாக்கம் என்பது மிக முக்கியமானது என அறிகிறோம். முதல் தாக்கமே நமது அடுத்த செயல்பாடுகளுக்கு அடிப்படையாய் விளங்குகிறது. சக மனிதர்களோடு பழகுகையில் அல்லது முக்கிய நபர்களின் மனதில் இடம் பிடிக்கவும் நம் மீது நன்மதிப்பும் நற்பெயரும் பெறவும் முதல் தாக்கத்தை வழியுறுத்திக் கூறப்படுகிறது. அது 'எதிக்ஸ்' எனும் பெயரில் பல நிறுவனங்களிலும் மேற்படிப்பகங்களிலும் கற்பிக்கப்படுகிறது. பொதுவாக ஐந்து வகைகளை நாம் அன்றாட வழக்கில் காண்கிறோம்.

அழைத்தல்

ஒருவரை சந்திக்கும் போது முறையாக அழைக்கப்படுவது மிக முக்கியம். இது அழைப்பவரின் முதிர்ச்சியையும் மன உறுதியையும் குறிப்பதாகச் சொல்வார்கள். தகுந்த வார்த்தை பிரயோகம் இங்கே வழியுறுத்தப்படுகிறது. அது போக அழைக்கப்படுபவரின் கண்களை பார்த்துப் பேசுவதும் முக்கியம். ஒருவரை பெயரிட்டு அழைப்பதைவிட 'ஐயா' 'அண்ணா' போன்ற சொற்களே நயமாக இருக்கும்.

கை குலுக்குதல்

கை குலுக்கும் முறையிலும் ஒருவரின் மன உறுதி வெளிபடும் என்பார்கள். தொட்டும் தொடாமலும் அல்லாமல் அதிக இறுக்கமாகவும் இல்லாமல் கை குலுக்குதல் நலம். கை குலுக்கல் ஒருவரை நம்மோடு நெருங்கச் செய்தலுக்கு அவசியமானது எனப்படுகிறது.


தயவு செய்து மற்றும் நன்றி

இன்று நன்றி சொல்வது வழக்குடைந்து வரும் விடயம் என்பதை யாரும் மறக்க இயலாது. இதன் காரணம் ஒரு செயல் அவரின் கடமை என நினைக்கத் தோன்றுவதே. உதாரணத்திற்கு உணவகத்தில் நமக்கு உணவு பரிமாறுபவருக்கு நம்மில் எத்தனை பேர் நன்றியுரைக்கிறோம். மாறாக தாமதமானால் கோபம் மட்டுமே கொள்கிறோம். ஒருவரை பணிக்கும் போது அதிகாரம் செலுத்துவதை விட தயவு செய்து எனவும் தயவு எனும் பணிவுக் கொண்டும் சொல்லப்படும் போது நமது பேச்சின் இறுக்கம் தளர்வடையும்.

மன்னிப்பு

மன்னிப்பு தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை என சினிமா வசனங்களை எளிமையாக பேசிவிடலாம். மன்னிக்க மனம் வேண்டும் என்பார்கள். தவறை உணர்ந்தவரே மன்னிப்பும் கோருவார். மனிதனாக பிறந்தவர் தவறு செய்யாமல் இருப்பவரும் அல்லர் அப்படி தவறு செய்தவர்கள் அனைவரும் திருந்தாமல் போனவர்களும் அல்லர். அடுத்தவரை பாதிக்கும் அல்லது கவனச் சிதறலுக்கு வழி வகுக்கும் சிறு நிகழ்வாகினும் மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை.


குறுக்கிடுதல்

ஒருவரின் காரியத்தில் குறுக்கிடுவது அவர்களின் கவனத்தையே அல்லது செயல் திறனையோ பதிப்படையச் செய்யும்.

இப்படியாக முக்கிய ஐந்து விடயங்களை நமது நடைமுறையில் காண்கிறோம்.

Thursday, November 06, 2008

மோகத்தில் மிதப்போம் வா!


ஆண்:
இருள் பொங்கும் வேளைதனில்
முகம் காட்டும் வெண்ணிலவே
விளையாடவா! இன்ப சுகம் காணவா!

பெண்:
தோள்வலி கொண்ட தூயவனே!
பூஞ்சிரிப்பு பூத்தவனே!
முத்தப்போர் செய்யவா!
என்னைத்தோள் சேரவா!

ஆண்:
இடைகாணாப் பெண்ணகே!
இசைபாடும் குரலமுதே!
உன் இதழ் சுவை காணவா!
உயிர்வரை சுகம் தேடவா!

பெண்:
ரசமான சொல்பாடி
ரகலைகள் செய்தவனே
உன் மடி சாய்கிறேன்
என் உடை போக்கிடு!

ஆண்:
நிலவில்லா வேளைதனில்
உறவாட வந்தவளே
உயிர் தோய்கிறேன்
சொர்கம் உனில் காண்கிறேன்!

பெண்:
எனை ஆள வந்த இந்திரனே
மாயலோக சுந்திரனே
என்னைக் கடைந்தாடிடு
உயிர் பிளந்தோடிடு!

ஆண்:
ஆசை கொண்ட பெண் மயிலே -குயில்
ஓசை கொண்ட பெண்ணழகே
மோகம் காண்கிறேன்!
என் தாகம் தீர்க்கிறேன்!

பெண்:
என்னை பந்தாடி வீழ்ந்தவனே!
உனை கட்டியாழ்கிறேன்!
உன் முதுகை தொட்டுப் பார்க்கிறேன்!
வேல்பட்டு வீழ்ந்தாயோ
உடல் பிளந்து போனாயோ என
தேய்த்து காண்கிறேன்!

Tuesday, November 04, 2008

சிங்கையில் சில நிமிடங்கள்!! (2)

செந்தோசா செல்லும் வழியில் தேன் கூட்டைத் தலையில் கொண்ட மனிதனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நின்று கொண்டிருந்த என்னை படம் எடுப்பது போல் 'விக்கி விளகு' என சொல்லி அந்த தேன் கூட்டை அம்மனிதனுக்குத் தெரியாமல் தன் புகைப்படக் கருவிக்குள் கொண்டு வந்து சாதனை செய்தார் கோவியார். அசாத்தியமும் அதிசயமும் மிக்க அப்புகைபடத்தைக் காண திரு கோவியாரை அனுகவும்.

சந்திப்பு இடைத்திற்குப் போய் கொண்டிருந்த வழியில் திரு.பாரி அரசு ஜோதியில் கலந்துக் கொண்டார். அவர் தம் நண்பருடன் வந்திருந்தார். முகத்தில் கல்யாணக் க(வ)லையோடு. திருமணப் பந்தல் காணவிருக்கும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல விளையும் இவ்வேளையில் தூய தமிழில் அச்சிடப்பட்டிருந்த அவரது திருமண அழைப்பிதழ் முயற்சி மதிக்க தக்கது. பத்திரிக்கைக் கொடுக்கப்பட்டது பதிவர் சந்திப்பில் என்பதால் மீண்டும் விடுபட்ட இடத்திற்கு திரும்புவோம்.

அவரும் ஜோதியில் இணைந்த பிறகு சந்திப்பு இடத்திற்கு நடையைக் கட்டினோம். போகும் வழியில் கண்ணுக்கினிய காட்சிகள். இயற்கை காட்சிகளைச் சொன்னேன். நண்பர் கிஷோர் சொன்னதை வைத்து தப்பாக எடைபோட வேண்டாம். இவ்வியற்கைக் காட்சியை காண இரு கண்கள் போதவில்லை. என்னை அழைத்து வந்ததிற்கும் பதிவர் சந்திப்பை அங்கு ஏற்பாடு செய்ததிற்கும் நன்றி. கடல் சூழ்ந்த அழகிய இடம் அது. வாய்ப்புக் கிடைப்பின் மீண்டும் அங்கே செல்ல விரும்புகிறேன். சந்திப்பு இடைத்தை அடைந்த போது துக்ளக் பதிவர் மகேஷ், நானும் பதிவிடுகிறேன் பதிவர் கிஷோர், என இன்னும் சிலர் வந்தடைந்தனர்.

குளிர்பானங்களின் திறப்பு விழாவோடு பதிவர் சந்திப்பு ஆரம்பமானது. அதற்கு முன் நான் கொண்டு வந்திருந்த சில நினைவு பரிசுகளை அன்பளித்தேன். பின் மீண்டும் குளிர்பான திருவிழா ஆரம்பமானது. சற்று நேரத்தில் ஜோசப் அண்ணன் குளிர் பானங்களை விரைவாக குடித்து முடிக்கச் சொன்னார். அப்படி இல்லாதாவர்கள் முதலில் அவற்றை ஓரமாய் வைக்கச் சொன்னார். கவனச் சிதறலுக்கு இடம் கோடாமல் இருக்கும் பொருட்டு அப்படி சொன்னதாக அறிகிறேன். குளிர்பானம் குடிப்பதில் மட்டும் கவனம் சொன்றுவிடாமல் இருக்க ஜோசப் அண்ணன் செய்த சேவை அளப்பறியது.

அவ்வேளையில் திண்டுக்கல் சர்தார், சிங்கை நாதன் என இன்னும் சிலர் வந்தடைந்தனர். கோவியார் இடைவிடாமல் தனது புகைப்பட கருவிக்கும் வேலைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது காலணி அவரை கவிழ்க நினைத்தை முயற்சிகளை முறியடித்து புகைபடங்களை சுட்டுத் தள்ளினார். கோவி அண்ணா, உங்கள் புகைபடக் கருவிக்கும் காலணிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது அடுத்த முறை சரி செய்யவும்.

பிறகு மீண்டும் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, இனிப்பு பலகாரம் என பதிவர் சந்திப்பு தொடர்ந்தது. நானும் மிச்சம் இருந்த எனது சிறு நினைவு பரிசுகளைக் கொடுத்து முடித்தேன். வந்திருந்தவர்கள் 21 பேர், நான் கொண்டு வந்த பரிசுகள் 16 மட்டுமே. நான் கொடுக்கத் தவறியவர்கள் மன்னிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

துக்ளக் மகேஷ் பரிசல்காரனின் அறிமுகத்திற்கு பின் தான் எழுத வந்ததையும், வலையுலக அனுபவங்களையும் கூறினார். அதன் பின் பதிவர் கிஷோர் பேசினார். பிறகு நான் என்னால் முடிந்த வரை உளறினேன்.

சர்தார் ஐயாவின் பேச்சு நினைவில் என்றும் நீங்காதது. மிகவும் ஆழமான, அழுத்தமான எல்லோருக்கும் தகவல் மிக்க பேச்சு. இதைத் தொடுத்து கோவியார் எழுதியுள்ளார். அவர் உரையின் முடிவில் பதிவர்களின் கருத்தையும் கேட்டு வியப்பில் ஆழ்த்தினார். அவர் இன்னும் சில காலம் சிங்கையில் இருக்க வேண்டும் எனவும், அனுராதா அம்மாவின் பதிவையும், அதை தொடுத்து அவர் திரட்டிய தகவல்களையும் புத்தகம் வடித்தாரானால் மிகச் சிறப்பாகவும் பலருக்கு பயனுள்ளதாகவும் அமையும் என தாழ்மையோடு கூற விளைகிறேன்.

அதன் பின் தன் பெயர் கூற விரும்பாத, பதிவர்களுக்கு மட்டும் தன் பெயர் சொல்லிய சாம்பார் மாஃப்பியா பேசினார். இவர் மூத்த பதிவர். தமிழுக்கு தொண்டு செய்த தன் குடும்ப பின்னனியும் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்பைப் பற்றியும் சொன்னார். தற்சமயம் ஆங்கிலத்தில் எழுதிவரும் அவர் தமிழிலும் எழுத வேண்டும் என்பது என் அவா.

பதிவு வாசகர் மீனாட்ச்சி சுந்தரம் தன்னை பற்றியும், தமிழகத்தில் அவரது அரசியல் அனுபவத்தைப் பற்றியும் பகிர்ந்துக் கொண்டார். தற்சமயம் சிங்கையில் படித்து வரும் அவர் அடுத்த வருடம் ஆரம்பத்தில் பதிவு எழுத ஆரம்பிக்கப் போவதாகக் கூறினார். நேரம் காலம் பார்த்து ஆரம்பிக்கிறார் என தவறாக என்ன வேண்டாம். அப்போது தான் தொழில் பயிற்சிக்குப் போகிராறாம். அப்போதிருந்து ஆரம்பித்தால் தான் சரி வரும் எனச் சொன்னார். பலரை சந்தித்ததில் மகிழ்ச்சிக் கொண்டதாகக் கூறினார்.

நண்பர் கிஷார் மற்றும் மகேஷ் ஆகியோர் சொல்லிய, பதிவிடத்தில் விவாதித்த, சில பல விடயங்கள் போக அந்தி சாய்ந்த இரவை வரவேற்று பதிவர் சந்திப்பு இனிதாய் முடிந்தது. சந்திப்பு முடிவதற்கு முன் ராம் சம்பவ இடத்தை வந்தடைந்தார்.

அதன் பின் அகரம் அமுதா வந்தார். ஆம் சொல்ல மறந்தேன். அகரம் அமுதா தாமதமாக சந்திப்புக்கு வர காரணம் அறிய நாம் மீண்டும் மதிய உணவு ஊட்கொண்ட இடத்திற்கு போக வேண்டும்.

மதிய உணவின் போது என் எதிரில் வந்து அமர்ந்தார் அமுதா. அவ்வினிமையான மனிதரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சிக் கொண்டேன். உணவு வேளை முடிந்ததும் தன் ஆசிரியரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போக இருப்பதாகவும் விழா முடிந்து வாய்ப்பு இருப்பின் சந்திப்பில் கலந்துக் கொள்வதாகவும் கூறினார். அதே போல விழா முடிந்ததும் சந்திப்பு இடத்தை வந்தைடந்தார்.

சந்திப்பு முடிந்ததும் எல்லோருமாக கிளம்பினோம். இடையே சிலர் அவரவர் இல்லம் திரும்ப பிறிந்துப் போனார்கள். இரவாகிவிட்டதால், இராத்திரி உணவுக்காக ஒரு உணவகத்தை வந்தடைந்தோம். சில பதிவர்கள் இல்லாமல் போக மீண்டும் 'மினி' சந்திப்பு தொடந்தது. எல்லோரும் விரதத்தில் இருந்ததால் சைவம் மட்டுமே சாப்பிட்டார்கள் என்பதைக் குறிப்பிட விளைகிறேன்.

பாரி அரசு சமூகம் சார்ந்த பல விடயங்களை பிய்த்து மேய்ந்துக் கொண்டிருந்தார். மீண்டும் அகரம் அமுதாவோடு பேசும் வாய்பைப் பெற்றேன். ஆழ்ந்த வாசிப்பனுபவம் கொண்ட அவர் பலவற்றை சுவைபட கூறினார். சமீப காலமாக தேக்க நிலைக் கொண்டிருக்கும் அவர் பதிவுகள் மீண்டும் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் டொன் லீயின் வேண்டுகோளுக்கினங்க சந்திப்பு இடத்தில் விடுபட்டு போன அரசியல் விவகாரங்கள் இரவு வேளை சாப்பாட்டு மேசையில் தொடர்ந்தது. சில பல கருத்து பரிமாற்றங்களுக்குப் பிறகு எல்லோரும் கலைய ஆரம்பித்தார்கள். நானும் அன்புடன் கைகுழுக்கி விடைபெற்றுக் கொண்டேன்.

சிங்கையில் இருந்த மூன்று நாட்களும் மிக இனிமையாகவே போனது. இதற்கு வழி வகுத்த அனைத்து நல்ளுள்ளங்களுக்கும் நன்றிகள் பல பல. முக்கியமாக எனக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த விஜய் ஆனந்த், ஜோசப் அண்ணன் மற்றும் கோவி அண்ணனுக்கு அன்பு கலந்த நன்றிகளை மீண்டும் கூற விளைக்கிறேன்.

மூன்றாம் நாள் விஜய் ஆனந்த் அவர்களின் தயவால் இனிமையாய் கழிந்தது. கோவி அண்ணனின் உயபத்தில் சட்டையும், விஜய் ஆனந்த் அவர்களின் தயவில் காற்சட்டையும் பரிசாகப் பெற்றேன். இது போக கேவியார் ஒரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தார். மீண்டும் அடுத்த சந்திப்பிற்காக மனம் ஏங்குகிறேன். அதற்கான காலமும் நேரமும் வாய்க்கும் என எதிர்ப் பார்க்கிறேன்.

என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துர்கா அவர்களுக்கு நன்றி. நான் சந்திக்க நினைத்த பதிவர்களுள் ஒருவர் நிஜமா நல்லவன். முதல் நாளே அரை விசாரித்தேன். ஆனால் அவருடைய தொடர்பு எண் யாரிடமும் இல்லாது போகவே அவரை காணவும் பேசவும் முடியாமல் போனது. அன்பு நண்பர் ஜெகதீசனும் தமிழகம் திரும்பிவிட்டதால் சந்திக்க முடியாமல் போனது. இனிய நினைவுகளுடன் திங்கள் காலை 4 மணிக்கு ஈப்போ வந்தடைந்தேன்.

சந்திப்பு இனிதே நடந்தேற உதவிய அனைவருக்கும் நன்றிகளையும், பெயர் குறிப்பிடாமலும் விடுபட்டும் போனவரிடையே மன்னிப்பும் கோறுகிறேன்.

முற்றும்.

பி.கு: செந்தோசாவில் சந்திப்பு முடிந்ததும் ஜோசப் அண்ணன் ராஜ பார்வை கமல் வேடத்தில் இருந்தார். அந்தக் குடையும், கண்ணாடியும் காணாமல் போனதாக புகார் கிடைத்துள்ளது வேறு விடயம்.

ராஜ பார்வை படத்தில் அந்தி மழை பொழிகிறது ஏனும் பாடலில் இந்திரன் தோட்டத்து முந்திரியே எனும் அழகான வரி ஒன்று உண்டு. இந்திரனை போல இந்திரன் தோட்டத்து முந்திரிக்கும் காமம் அதிகமா எனும் ஒரு அருமையான ஆராய்ச்சி பதிவை இங்கே சுட்டி படிக்கவும்.

சிங்கையில் சில நிமிடங்கள்!! (1)

சிங்கையில் கால் வைத்த போது சரியாக மாலை மணி 6.30. எனது கைபேசிகள் இரண்டிலும் மின்சக்தி காலியாய் போயிருந்தது. முதல் நாள் வேலை முடிந்து தாமதமாக வந்ததினால் கைபேசிகளை 'சார்ஜ்' செய்யவில்லை என நான் சொன்னால் அது பொய்யென கண்டுபிடிக்க சிலர் உள்ளனர். அதனால் உண்மையும் பேசும் நிர்பந்தத்தில் ஆளாக்கப்படுகிறேன். கைபேசிகள் 'சார்ஜ்' செய்யாப்படாமல் போனதற்கு காரணம் எனது சோம்பேறித்தனம் தான்.

இது போக இணையத்தில் நீண்ட நேரம் இருந்த என்னை "அவனை போய் தூங்கச் சொல் நாளை பேருந்தை விட்டுவிட போகிறான்" என ஜோசப் அண்ணனிடம் தூது அனுப்பிய கோவியார் என் கையடக்கப்பேசியை 'சார்ஜில்' போட சொல்லாததை இவ்வேளையில் கடுமையாக சாடுகிறேன். சரி கதையின் பக்கம் வேறு பாதையில் பயணிக்காமல் இருக்க நாம் ஆரம்ப நிலைக்குச் செல்வோம்.

நல்ல வேளையாக நமது பின்னூட்டப் புயலின் கைபேசி எண்ணை ஒரு சிறு புத்தகத்தில் குறித்து வைத்திருந்தேன். தக்க சமயத்தில் உதவியாய் அது அமைந்தது. பேருந்து ஓட்டுனரிடம் என்னை 'பீச் ரோட்டில்' இறக்கிவிடச் சொன்னேன். அவரும் செய்தார். கைபேசியில் மின்சக்தி இல்லாதது போக அப்படி இருந்திருந்தாலும் வேலை செய்யாமல் தான் போயிருக்கும். காரணம் மலேசிய கைபேசி இணைப்பு அங்கு இல்லாமல் இருந்தது. பொது தொலைபேசியை நாடினேன்.

இளைய தளபதி (பட்டம் கொடுத்தது ஜோசப் பால்ராஜ்) விஜய் ஆனந்திடம் தொலைபேசிவிட்டு காத்திருந்தேன். அவர் தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் சற்று நேரத்தில் வந்துவிடுவதாகவும் கூறினார். அவர் வரும் வரையில் அந்த முதிய தம்பதியினரோடு பேசிக் கொண்டிருந்தேன். யார் அந்த முதிய தம்பதிகள் என தெரிந்துக் கொள்ள நான் தொலைபேசியை நாடி சென்ற இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும்.

நான் பொது தொலைபேசியின் அருகில் சென்ற போது முதிய தம்பதியர் இருவர் என்னைப் போலவே சிறு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்தனர். அவர்களது மகன் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் மகனுக்கு அழைத்து கொடுக்குமாரும் கேட்டனர். அதன் பிறகு விஜய் ஆனந்த் வரும் வரையில் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் மலேசியர்கள். அவர்களுடைய மகன் மட்டும் சிங்கையில் நிரந்தரமாக குடியிருந்துவிட்டதால் இவர்களும் அடிக்கடி இங்கு வந்து போவதாக சொன்னார்கள்.

வலை வீசி தேடி கொண்டு சற்று நேரத்தில் விஜய் ஆனந்த் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தடைந்தார். வியர்த்து விறுவிறுத்து போய்யிருந்தார் பாவம். நான் அதிக நேரம் காத்திருக்கக் கூடும் என விரைந்து வந்ததாக அறிகிறேன்.
பிறகு சாப்பிட போகலாம் என்றார். ஆனாலும் விதி விளையாடியது. சுற்றிலும் தாய்லாந்து மக்களின் கடைகள். வாடையே சரிவரவில்லை என்றதும் குளிர்பானங்களை வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்து பருகிவிட்டு வாடகை காரை பிடித்து ஜோசப் அண்ணன் வீட்டுக்கு விரைந்தோம்.

ஜோசப் அண்ணன் இன்முகத்தோடு எங்களிருவரையும் வரவேற்றார். அவர் இல்லத்தில் வசிக்கும் பன்னீர் எனும் நண்பரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். பயண விசாரிப்புகள் இணையம் என சற்று நேரம் போன பிறகு சாப்பிட போனோம். அதற்கு முன் நான் காலையில் நேரம் வகுத்துச் சென்ற இரு பதிவுகளும் வராதிருப்பதை அறிந்து பதிவேற்றம் செய்ய எண்ணினேன். எனது மடி கணினியை எடுத்த போது. "என்னப்பா இது 'லாப்டாப்'னு சொல்லி கால்குலேட்டர் வச்சி தட்டிக்கிட்டு இருக்கனு ஜோசப் அண்ணன் மொக்கை போட்டார்.

சற்று நேரத்தில் கோவி அண்ணன் அந்தக் குடியிருப்புக்கு வந்தடைந்தார். வேலை முடிந்து நேராக அங்கு வந்திருப்பதை அறிந்தேன். என்னை அணைத்து இன்முகத்தோடு வரவேற்றார். மிக மகிழ்ந்தேன். இரவு சாப்பாடு முடிந்ததும் அடுத்து வரும் பத்திகளை தடை செய்தபடியால் இங்கு குறிப்பிடமுடியாமல் போகிறது. இரவு ராம் எனும் நண்பர் வந்தார். எல்லோரிடமும் இனிமையாக பேசினார்.

மறு நாள் பதிவர் சந்திப்புக்கு திட்டங்கள் சில முடிவெடுத்த பிறகு தூங்கச் சென்றோம். ராம் மற்றும் விஜய் ஆனந்த் விடை பெற்று அவர்கள் இல்லம் திரும்பினர்.

அதிகாலையில் நல்ல மழை பெய்தது. பொழுது விடிந்தது அறியாமல் நல்ல தூக்கம் போட்டேன். ஜோசப் அண்ணன் எழுப்பிவிட்டு சென்றார். குளித்துவிட்டு கிளம்பிய போது சரியாக மணி மதியம் 1.20 ஆகியிருந்தது. வயிற்றுக்கு ஆகாரம் போட நேராகா தமிழர் உணவகத்தை நாடினோம். அங்கு சென்றடைந்த சற்று நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

பதிவர் சந்திப்புக்குச் செல்லும் முன் உணவகத்திலேயே ஒரு மினி சந்திப்பு உருவாகிவிட்டதை அறிந்தேன். இது எனது முதல் பதிவர் சந்திப்பு என்பதால் பல பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் பெறும் மகிழ்சியடைந்தேன். சற்று நேரத்தில் கிரி, ஜோதிபாரதி மற்றும் அகரம் அமுதா போன்ற பதிவர்கள் வந்தடைந்தனர். அளவளாவிக் கொண்டே மதிய உணவும் சிறப்பாக முடிந்தது.

பதிவர்களுக்கு பாதை காட்டுவதிலும் தொலைபேசி அழைப்புகளுக்கும் விஜய் ஆனந்த் சிரத்தைக் கொண்டு பதில் சொல்லி வந்தார். ஜோசப் அண்ணனும் அதில் பங்கு கொண்டார்.

எனது பதிவின் வழி சமீபத்தில் அறிமுகமானவர் தம்பி மீனாட்சி சுந்தரம். நான் சிங்கை வருவதை அறிவித்திருந்தேன். அவரும் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறினார். சிங்கைக்குச் சென்றவுடன் அவருக்கு அறிவித்தேன். மீனாட்சி தம்பி ஏற்கனவே ஜோசப் அண்ணனுக்கும் அறிமுகமாகி இருந்தார்.

பதிவர் சந்திப்புக்கு புது மாப்பிள்ளை போல் சட்டை கசங்காமல் வந்து சேர்ந்தார். அனைவரிடமும் சகஜமாக பழகி நன்மதிப்பைப் பெற்றார். மீனாட்சி தம்பியை பதிவர் சந்திப்பு இடத்தில் தான் சந்தித்தேன். அவரின் அவ்வப்போதைய அழைப்புகளுக்காக இவ்விடத்தில் அறிமுகம் செய்து மீண்டும் மதிய உணவை சாப்பிட்டு முடித்த இடத்தில் இருந்து எழுத ஆரம்பிக்கிறேன்.

உணவை முடித்துக் கொண்டு எம்.ஆர்.டி தொடர் வண்டி (உபயம் பாரி.அரசு) நிலையத்தை நோக்கி புரப்பட்டோம். நடை கலைப்பு தெரியாமல் இருக்கும் பொருட்டு போகும் வழியினில் சிலர் புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றிக் கொண்டனர்.

இவ்வேளையில் திரு.ஜோதிபாரதியோடு பேசும் வாய்ப்பு எனக்கு கிடத்தது. சிங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பேசியதில் ஆரம்பித்து பதிவுகள், தொழில், வாழ்க்கை என பல விடயங்களை விவாதித்துக் கொண்டு சொன்றோம்.

தொடர் வண்டியில் என்னையும் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரையும் வெண்பா விரும்பி முகவை ராம் மொக்கை போட்டுக் கொண்டிருந்தார். அது என்ன என்பதை நான் கூற முடியாத பட்சத்தில் இதை அவரிடம் கேட்டுக் கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

முகவை ராம் நல்ல நகைச்சுவை உணர்வு நிறைந்த மனிதர். இலக்கிய விடயங்களையும் நகைச்சுவை உணர்வோடு பேசி அதை நினைவில் கொள்ளச் செய்தார். என்ன விடயம் என்பதையும் அவரிடம் கேட்டுக் கொள்ளும்படி வேண்டுகிறேன். இருந்தாலும் அந்த கம்பனின் சந்தேகத்துக்குறிய இலக்கிய விடயத்துக்கு அழகான விளக்கத்தை அகரம் அமுதா சொன்னார். இது நடாந்தது பதிவர் சந்திப்பு முடிந்த பிறகு என்பதால் மீண்டும் தொடர் வண்டி ஏறிய இடத்திற்கு வருவோம்.

எம்.ஆர்.டி பயணம் முடிந்து செந்தோசா (பதிவர் சந்திப்பு இடம்) சொல்லும் முன் அங்காடியில் சில குளீர்ர்ர்ர்ர் பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் வாங்கிக் கொண்டோம். சொந்தோசா செல்லும் தொடர் வண்டி ஏறும் முன் வலைபதிவர் திரு.ஜோ அவர்களை சந்தித்தோம். அவரும் ஜோதியில் இணைந்தார்.

செந்தோசா செல்லும் தொடர் வண்டியில் ஒரு விசித்திர மனிதனைக் கண்டோம். இறுதிப் பகுதி இன்று மாலைக்குள் பதிவேற்றப்படும்...