Wednesday, February 20, 2019

I AM SUN MU - ஒரு வட கொரிய அகதியின் ஓவியக் கலை


உலகின் தனிமைப் படுத்தப்பட்ட நாடாக அறியப்படுவது வட கொரியா ஆகும். அந்த நாட்டை வட கொரியா என அடையாளப் படுத்துவதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (Democratic Peoples Republic of Korea) எனக் குறிப்பிடும்படியே கேட்டுக் கொள்கிறார்கள். இந்த சொல் பிரயோகம் குறிந்து தென் கொரிய மக்களுக்கு மிகுந்த கருத்து முரண்பாடு உண்டு. தீவிர கம்யூனிசத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் நாடு எதற்காக இப்படி ஒரு பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக கேள்வியை முன் வைக்கிறார்கள்.

நான் சுன் மூ (I AM SUN MU) எனும் ஆவணப் படம் வட கொரிய அகதி ஒருவரின் கலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் சுன் மூ யார் என்பதை நாம் கடைசி வரை அடையாளம் காண முடியவில்லை. தனது அடையாளத்தை வெளிக்காட்டும் பட்சத்தில் இன்னமும் வட கொரியாவில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்தாக கூடும் என குறிப்பிடுகிறார். அதனால் படம் முழுக்க அவரின் முகம் காட்டப்படவில்லை. இந்த டாக்குமெண்டரி மொத்தமும் சுன் மூவின் கலை படைப்பை பற்றி பேசுகிறது. அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஓவியத்தின் ஊடாக பல கதைகளை நமக்குச் சொல்கின்றன. 

இந்த டாக்குமெண்டரி தென் கொரியாவில் தொடங்குகிறது. வட கொரியாவில் வசிக்கும் பாட்டி ஏன் தன்னை வந்து பார்ப்பதில்லை என சுன் மூவின் குழந்தைகள் கேட்கிறார்கள். பாட்டிக்கு கடிதங்களை எழுதுகிறார்கள் அந்த குழந்தைகள். அது நிச்சயமாக சென்றடையாத கடிதங்கள் எனினும் குழந்தகள் கடிதம் எழுதுவதை சுன் மூ தடுக்கவில்லை. இரு குழந்தகளுக்கு முன் இருக்கும் முள் வேளியாக அச்சம்பவம் ஓவியமாகிறது. வட - தென் கொரியாவின் பிரிந்த குடும்பங்களை பற்றியும் அது பேசுகிறது. கையில் சென்றடையாத கடிதத்தோடு இருக்கும் ஓவியம் இரு நாடுகளுக்கிடையே இருக்கும் பேசிக் கொள்ள முடியாத குடும்ப உறவின் வலிகளை நமக்குச் சொல்கிறது.

வட கொரியாவின் அண்ணன் தேசமாக இருப்பது சீனா. அப்படி இருக்க பெய்ஜிங்கை தனது ஓவிய கண்காட்சிக்கு தேர்ந்தெடுத்தது ஏன் என்பது கேள்விக்குறியாகிறது. ஓவிய கண்காட்சியை ஒருங்கிணைக்கும் சுன் மூவின் சீன நண்பர் அதில் இருக்கும் ஆபத்துகளை உணர்ந்தே கையில் எடுத்திருக்கிறார்.

“சீனாவில் ஏராளமான வட கொரிய ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வட கொரியாவின் அரசியல் பிரச்சார ஓவியங்களை மட்டுமே வரைகிறார்கள். அது 1970-களின் சீனாவின் கலாச்சார புரட்சியின் போது வரையபட்ட ஓவியங்களை போலவே உள்ளன. சுன் மூவின் ஓவியங்கள் வேறு ஒரு தளத்தை பேசுகின்றன. அது சீனாவின் பரவலாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன்.” எனக் கூறுகிறார். 1989-ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கத்தின் முன் நடந்த மாணவர் போராட்ட மரணங்களை நினைவு கூர்ந்து உணர்ச்சிவச படுகிறார்.

கவன ஈர்ப்புக்காகவும் இதைச் செய்திருக்கக் கூடும். இன்றய நிலையில் சுன் மூ ஓவியங்களின் விலை 20 ஆயிரம் டாலர் வரையினும் எட்டி உள்ளன. டைம்ஸ் இதழில் சுன் மூவின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. சிட்னி, அம்ஸ்தெர்டம், நியூ யார்க், பெர்லின் என பல இடங்களின் இவரின் ஓவியக் கண்காட்சி இடம் பெற்றுள்ளன. 

கண்காட்சியின் சில வாரங்களுக்கு முன் பெய்ஜிங்கின் புறநகர் பகுதியில் தமது ஓவிய வேலையில் ஈடுபடுகிறார் சுன் மூ. அவருக்கு தெரிந்த வட கொரிய அகதிகள் சுன் மூவை தொடர்பு கொண்டு அவரின் ஆபத்தான வேலையை கேள்வி கேட்கிறார்கள். சுன் மூ தன்னை நேரடியாக அடையாளப்படுத்திக் கொள்ள போவதில்லை எனக் கூறுகிறார். இருந்தும் பெய்ஜிங்கில் அவர் பிடிபடுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருந்தன.

நீங்கள் வரைவது சமகால அரசியலை பேசும் ஓவியங்களா எனும் கேள்வியை கேட்கிறார்கள். நீங்கள் கூறும் பதத்தின் தெளிவு எனக்கில்லை. எனது நினைவில் இருக்கும் சம்பங்களின் கோர்வைகளாக இந்த ஓவியங்கள் வெளிபடுகின்றன என விளக்குகிறார். இந்த ஓவிய வேலைபாடுகளின் பேதே பல சம்பங்களை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் சுன் மூ.

”நீங்கள் வட கொரியாவில் இருக்கும் போது உங்கள் கற்பனை வளத்தைக் கட்டிப் போட்ட தடைகள் இருந்துள்ளனவா?”

”ஓவியங்களுக்கான தடைகள் இருந்துள்ளன. பெண்களை உடையின்றி வரைய கூடாது. அது போக எமது அரசியல் தலைவர்களை வரைய கூடாது. அது அவமாரியாதையான செயல். ஒரு முறை கிம் தலைவரின் ஓவியத்தை வரைந்துப் பார்தேன். அரசு ஓவியர்களை விட மிகச் சிறப்பாக வரைந்திருந்தேன். யார் கண்ணிலும் படாமல் அதன் ஈரம் காய்வதற்குள் எரிந்துவிட்டேன்.”

வட கொரிய மக்கள் அனைவருமே கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட வேண்டும். சுன் மூ இராணுவ சேவைக்குச் செல்லும் போது, “உனக்கு எழுத அல்லது ஓவியம் தீட்டும் திறமை உள்ளதா?” எனக் கேட்கிறார்கள். தன்னால் சிறப்பாக ஓவியம் தீட்ட முடியும் எனக் கூறுகிறார் சுன் மூ. அவரை பரிசோதித்து திருப்தியானவுடன் வட கொரிய அரசியல் பிரச்சார ஓவியங்களை தீட்டும் பணிக்கு நியமித்தார்கள். வட கொரிய இராணுவம் நன்றாக எழுதுவோரையும் ஓவியம் தீட்டுவோரையும் அரைவணைத்துக் கொள்வதாக கூறுகிறார் சுன் மூ.

மூன்று நாடுகளைக் கடந்து ஓடுகிறது டூமன் ஆறு (Duman River). இதுவே வட கொரியா, சீனா மற்றும் ரஷ்யா என மூன்று நாடுகளின் எல்லையை பிரித்துக் காட்டுகிறது. ஒரு மலை முகட்டில் ஏறி இந்த ஆற்றைப் பார்க்கிறார் சுன் மூ. மனதில் ஓர் உந்துதல். ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து கடந்து சீனவிற்குள் நுழைந்துவிடுகிறார். இதைக் கூறும் போது ஓவியங்கள் வழியே பேசுகிறார். அந்த ஓவியத்தில் சாங் பாய் (Chang Bai) எனும் இடமும் வேறு சில சீன மாநிலங்களும் பிற நாடுகளும் தீட்டப்பட்டுள்ள. சாங் பாய் மிக இரம்யமான மலை. அங்கே இருக்கும் ஆற்றை நிச்சயமாக குளிர் காலத்தில் கடந்து இருக்க முடியாது. அவர் தப்பி ஓடி இருப்பது நிச்சயமாக ஒரு திட்டமிட்ட செயல் தான்.

சீனாவிற்குள் நுழைந்த பின் தென் கொரியா போக நினைக்கிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிக தூரம். Kunming வழியாக லாவோஸ் போகிறார், அங்கிருந்து மியன்மார் சென்று தாய்லாந்தில் நுழைந்து பேங்காக்கில் சேர்கிறார். பேங்காக்கில் இருந்து தென் கொரியா சென்றடைந்த மாயத்தை நமக்கு விளக்கவில்லை. அது அரசியல் தஞ்சமடையும் வழியாகவோ அல்லது போலி கடப்பிதழ் வழியாகவோ கூட இருக்கலாம். 

சுன் மூவின் ஓவியங்கள் வரைந்து முடிந்த பின் நாளிதழில் செய்தி கொடுக்கிறார்கள். கண்காட்சிக்கு பலரும் வர வேண்டும் என்பதற்காகவே அதை விளம்பரம் செய்கிறார்கள். சுன் மூ ஒரு மாபெரும் கால் துடைப்பானை ஓவியமாக தீட்டுகிறார். அதில் கிம் தலைவர்களின் பெயர்கள் உள்ளன. “இங்கே ஏகபட்ட வட கொரிய அரசியலை பிரச்சங்கம் செய்வோரும், தூதரக அதிகாரிகளும் வசிக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக தங்கள் கால்களை சுத்தம் செய்து கொண்ட பின் தான் இந்த ஓவியக் கண்காட்சிக்குள் நுழைய வேண்டும்” என நையாண்டி செய்கிறார்.

இறுதியாக என்ன ஆனது? சுன் மூவின் ஓவியக் கண்காட்சி நடைபெறவில்லை. வட கொரிய தேச பக்தர்கள் காட்சி கூடத்தின் முன் கூடிவிடுகிறார்கள். போலிஸ் அனைத்து ஓவியங்களையும் அபகரித்துவிடுகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை விசாரனை செய்கிறார்கள். சுன் மூ தான் கூறியது போலவே நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. தன்னை யார் முன்னிலையிலும் அடையாளப்படுதிக் கொள்ளவிலை. அவர் மீண்டும் தென் கொரியா திரும்பும் போது இமிகிரேஷனில் பிரச்சனை ஏற்படுமோ என பயப்படுகிறார். அப்படி ஏதும் ஆகாமல் நல்லபடியாக சியோல் வந்தடைகிறார். 

சிந்தனையாளர்கள் ஓர் அரசாட்சியின் பரிபாலனத்துக்கு இனங்கி இருக்கும் பட்சத்தில் அல்லது அதன் சித்தாந்தங்களை கேள்வி கேட்காத வரையில் அவர்களுக்கு கேடு விளைவதில்லை. அதுவே ஒரு படைப்பாளியின் சித்தனை அரசாட்சியை கேள்விக்கு உட்படுத்தும் போது அரசு இயந்திரம் நிச்சயமாக அதனை பொருத்துக் கொள்வதில்லை. அது எவ்வளவு சுதந்திரம் மிகுந்த மக்களாட்சி நாடாக இருந்தாலும் சரி அந்த படைப்பாளியை ஒரு குற்றவாளியென்றே சாடும். சிந்தனையின் வெளிபாடுகளுக்கு தடை விதிக்க முடியும். சிந்திப்பதை அல்ல.

சுன் மூவின் ஓவியங்களை http://sunmuart.com/artworks/ தளத்தில் காண முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்:

No comments: