Thursday, March 05, 2009

மறக்க முடியாத சயாம் நிகழ்வு!


(சப்பானியர்கள் மிதிவண்டியை அதிகம் பயன்படுத்தினார்கள். காடுகளையும், மலைகளையும், ஆறுகளையும் எளிதில் கடக்க உதவும் வாகனமாகக் கருதினர்)

8-ஆம் திகதி டிசம்பர் மாதம் 1941-ஆம் ஆண்டு. மலாயாவின் கிழக்குக் கரை மாநிலமான கிளந்தானில் சப்பானியர்கள் கால் பதித்தார்கள்.(ஆரம்ப காலத்தில் மலேசியா மலாயா என அறியப்பட்டது). அது தான் இரண்டாம் உலக யுத்தம் மலாயா மண்ணில் ஆரம்பித்ததற்கான அறிகுறியாகும். கிளந்தான் மாநிலத்துக்கு அடுத்தபடியாக இருக்கும் கெடா(கடாரம் என அறியப்படுவது) மாநிலத்தில் அடுத்த சில தினங்களில் தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். சில நாட்களில் கெடா சப்பானியர்களின் கைவசம் வந்தது.

அதன் பிறகு தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலமாக அவர்கள் பிடியில் சிக்கியது. இறுதியாக பிரிட்டிசார் தன் கைவசம் வைத்திருந்த சிங்கையையும் பிடிங்கிக் கொண்டு விரட்டியடித்தார்கள். 150000 படை வீரர்கள். 300 வானூர்திகள், 300 இராணுவ வாகனங்கள். இதுதான் சப்பானியர்களின் மொத்த படை பலமே. 70 நாட்களில் ஒட்டு மொத்த மலாயாவை தன் பிடிக்கு கொண்டு வந்தார்கள். அவர்கள் உண்மையில் அவகாசம் எடுத்துக் கொள்ள நினைத்தது 100 நாட்கள். 30 நாட்களுக்கு முன்பதாகவே காரியத்தை முடித்துவிட்டார்கள்.

மலாயாவில் சப்பானியர்களின் ஆட்சி காலம் 3 வருடம் 8 மாதங்கள் நீடித்தது. அவர்களின் தாக்கம் இன்னமும் ஆறாத வடுவாக மக்களின் நெஞ்சில் புதைந்து கிடக்கிறது என்றே சொல்ல வேண்டும். வெள்ளையனிடம் இருந்து ஆசியாவை விடுவிப்பதே சப்பானியர்களின் நோக்கம் எனும் அவர்களின் பொய் வாக்கை பின் நாளில் மக்கள் உணர்ந்தார்கள். மலாயா மக்களிடையே அவர்கள் செய்த கொடுமையின் காரணமாக நாளடைவில் மக்கள் சப்பானியர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

காலத்தால் அழிக்க முடியாத கரையாக மக்களின் மனதில் இன்னமும் படிந்திருக்கும் சம்பவம் தான் சயாம் மரண தொடர் வண்டிச் சாலை நிர்மாணீப்புப் பணி. அக்காலகட்டத்தில் சப்பானியர்கள் சயாம் - பர்மா தொடர் வண்டிச் சாலையை நிர்மாணிக்கத் திட்டமிட்டார்கள். அதற்காக மலாயாவில் இருக்கும் பலரும் கூட்டம் கூட்டமாக சயாமிற்கு அனுப்பப் பட்டார்கள்.

வேலையாட்கள் தாய்லாந்து நாட்டின் பாப்போங் எனும் பகுதி வரை தொடர் வண்டியின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். தண்டவாள நிர்மாணிப்பு இடமானது அதன் அருகில் இருந்துவிடவில்லை. அங்கு செல்வதற்கென பல நாட்கள் காடுகளையும் மலைகளையும் கடந்து செல்ல வேண்டும். சரியாக சொல்லப் போனால் இழுத்துச் செல்லப்படுவார்கள் என்பதே உண்மை.

நிர்மாணிக்கப் போகும் தண்டவாளத்தின் நீளம் 415 கிலோ மீட்டர். சப்பானியர்களின் அவகாச காலம் 16 மாதங்கள். ஒரு மாதத்திற்கு 25.9 கிலோ மீட்டர் எனும் விகிதத்தில் தண்டவாள பணிகளை செய்து முடித்தாக வேண்டும். இத்தண்டவாளம் தாய்லாந்தின் பாம்போங் எனும் பகுதியில் இருந்து பர்மாவின் தம்புசாய்ட் எனும் பகுதி வரை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டது.

ஏன் இந்த தண்டவாள பணிகள்? சப்பான் தனது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தது. 1942-ஆம் ஆண்டு தண்டவாள பணிகள் தொடங்கியது. இந்தியா மற்றும் பர்மாவை கைப்பற்றும் பொறுட்டு சப்பானிய இராணுவம் இவ்வேலைகளுக்கு காய் நகர்த்தியது. தண்டவாளத்தின் துரித வேலைகளுக்காக மலாயாவில் பொறுத்தப்பட்டிருந்த சில தண்டவாளங்களை பிறித்து கொண்டுச் சென்றார்கள்.

ஆயிரக் கணக்கான ஆட்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் மலாயா, சிங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும், மேலும் இந்தியா, பிரிடிஸ், மற்றும் துர்க்கிய இராணுவத்தினரும் அடங்குவர்.


சப்பானியர்களால் போரில் கைது செய்யப்பட்ட 60,000 ஆட்களில் 18,000 பேர் தண்டவாள நிர்மாணிப்பின் சமயம் உயிர் துறந்திருக்கிறார்கள். வலுக்கட்டாயமாக அல்லது அடிமைப் படுத்தி இழுத்துச் செல்லப்பட்டவர்களில் 100,000க்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள்.

சயாம் மரண தண்டவாள வேலைகளின் போது அதிகம் பாதிகப்பட்டோரில் சஞ்சிக் கூலிகளாக மலாய அழைத்துவரப்பட்ட இந்தியர்களும் அடங்குவர். மலாயாவில் இருந்து மட்டும் 73 500 கூலியாட்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் நிர்மாணிப்பு வேலையில் உயிர் துறந்தவர்களின் எண்ணிக்கை 24490 ஆகும்.

சப்பானிய நிர்வாகம் அவர்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. சட்டென வேலைகளை முடிக்கும் எண்ணத்தில் மக்களை வாட்டி வதைக்கச் செய்தார்கள். உணவு, உடை, மருத்துவம் என எவ்வித வசதியும் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டார்கள்.

நேரக் கணக்குகள் ஏதும் இல்லை. வேண்டிய மட்டும் வேலை வாங்கப்படுவார்கள். 14 முதல் 18 மணி நேரம் வேலை செய்தாக வேண்டும். காலையில் 5 மணிக்கு வேலை ஆரம்பித்தால் இரவு 9 மணி வரை ஓய்வில்லாமல் உழைத்தாக வேண்டும். மறுத்தால் அடியும் உதையும் தான் மிஞ்சும்.

வேலையாட்கள் சிறு சிறு குழுக்கலாக பிறித்துவிடப்படுவார்கள். ஒரு குழுவுக்கு 25 பேர் விகிதம் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு தலைவன் கங்காணி எனும் பெயரில் நியமிக்கப்படுவான். கங்காணி கடுமையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பது சப்பானியர்களின் விதியாகும்.

முறையற்ற உணவு, கிருமிகளின் தாக்கம், வயிற்று போக்கு, மலாரியா, என பல பிரச்சனைகள் அங்குள்ளவர்களின் சாவுக்குக் காரணமானது. சொறி சிரங்கு ஏற்பட்டால் அவர்கள் மீது சுடு நீர் ஊற்றப்படுமாம். அது தான் சப்பானியர்கள் அந்நோய்க்கு கொடுக்கும் மருந்தாகும்.

சப்பானியர்களின் இவ்வேலைகளை தடுப்பதற்காக எதிரி படைகளின் தாக்குதல் அடிக்கடி நடந்தேறும். அச்சமயம் எறியப்படும் வெடிகுண்டு தாக்குதல்களாலும் பலர் இறந்து போனார்கள்.

ஹிரோசிமா மற்றும் நாகாசாக்கியின் தாக்குதலுக்கு பிறகு சப்பான் பின்வாங்கிற்று. தண்டவாள வேலைகளும் நிறுத்தம் கண்டது. எஞ்சிய சிறு பகுதியினர் மட்டும் வீடு திரும்பினார்கள். மற்றவர்கள் சயாம் மரண தொடர் வண்டிச் சாலையில் இன்னமும் உறங்கிக் கொண்டிருகிறார்கள்.

(பி.கு: திரு சி.அருண் எழுதிய சயாம்- பர்மா இரயில் பாதை எனும் நூல் எதிர்வரும் 15.03.2009 தலைநகரில் வெளியீடு காணவிருக்கிறது. விலை RM20.00. இடம்: கிள்ளான் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் மண்டபம். இப்புத்தகம் ஈப்போவில் கிடைப்பதற்கான வழிகள் ஏதும் இருந்தால் சொல்லவும். படிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்)


பிற்சேர்க்கை:
சி.அருண் அவர்களின் பின்னூட்டம்:

வணக்கம். 'சயாம்-பர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூல் வெளியீடு பற்றிய செய்தியை வெளியிட்டமைக்கு நன்றி. இந்நூல் வரலாற்று நூல். இந்நிகழ்வினைப்பற்றி தமிழில் வெளிவரும் முதல் வரலாற்று நூல். இதற்கு முன்பு இதனைப்பற்றி நாவல் வெளிவந்துள்ளது. திரு.சண்முகம் அவர்கள் எழுதிய நாவல் சென்ற ஆண்டு தமிழகத்தில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு நான் அணிந்துரை எழுதியுள்ளேன்.

'சயாம்-பர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூலினைப் பெற்றிட கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம்.

நூலின் விலை = ரி.ம.20.00
தபால் செலவு = ரி.ம. 2.00
ஆக மொத்தம் ரி.ம.22.00.

பணத்தை வங்கி கணக்கில் போட்டுவிட்டு என்னுடன் தொடர்பு கொள்க. S.ARUNASALAM, NO.6, JALAN BATU NILAM 9, 41200 BANDAR BUKIT TINGGI, KLANG, SELANGOR.

MAYBANK : 105037363735
Tel: 012 300 2911

கலோலையும் அனுப்பலாம். நன்றி.

29 comments:

நட்புடன் ஜமால் said...

இதுவரை நான் அறியாத பல விடயங்களை இங்கு அறிந்து கொண்டேன்

தகவல் அழகாக தொகுத்து உள்ளீர்கள்

பகிர்தலுக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

அதற்கான படங்களும் அருமை.

Sanjai Gandhi said...

அற்புதமான கட்டுரை விக்கி.. பாராட்டுக்கள்..

மு.வேலன் said...

இந்த சரித்திர நிகழ்வை மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. வாழ்த்துக்கள்!

goma said...

விக்னேஷ்
ஆழமான ஆய்வு அருமையான தொகுப்பு ஒவ்வொரு பதிவிலும் வாசிப்போரை மாணவ மணிகளாக்கி விடுகிறது உங்கள் விளக்கம்,

வால்பையன் said...

சப்பானி என்ற வார்த்தைக்கு தமிழில் வர்த்தம் வேறு,
எதோ அப்போ இருந்தா ஜப்பான்காரன் கொடுமை படுத்தினான் என்பதற்காக இப்போ இருக்குற ஜப்பானியர்களையும்
சப்பானி ஆக்குவது தவறு
ஜ என்ற வார்த்தை தமிழில் இல்லை அதனால் நான் ஜப்பானியர்களை தமிழ் படுத்தினேன் என்று பெயற்சொல்லை படுத்தாதீர்கள்.
இப்படியே தமிழ் படுத்தினால் நிறைய கெட்ட வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாகி விடும்.

Anonymous said...

மலேசிய சரித்திரத்தில் ஜப்பானியர்களின் ”அக்காலத்து வரவு” பயங்கரமான மட்டும் மறக்க முடியாத ஒன்று என்றே சொல்ல வேண்டும்.
அச்சமயத்தில் பல துன்பங்களை நம் தாத்தா பாட்டியினர் அனுபவித்தது மறுக்க முடியாத மற்றும் எழுதப்பட்ட ஒரு சரித்திரம்.

RAHAWAJ said...

நல்ல பதிவு, ஆனால் சயாம் மரண ரயில் என்ற தலைப்பில் 15 வருடத்திற்கு முன் சிறுகதை எழுத்தாளர் திரு சண்முகம் என்பவர் மிகவும் அருமயாக எழுதியிருந்தார் அந்த புத்தகம் கிடைத்தால் படித்துப்பார்க்கனும்

குமரன் மாரிமுத்து said...

பார்த்தேன்; படித்தேன்; முடித்தேன்; குதித்தேன்......

நன்று. உங்களுக்கு 'புதைகுழி தேடல் மன்னன்' என்று பட்டம் கொடுக்க வழிமொழிகிறேன். புதையுண்ட செய்திகளை சிறப்பாகவே அலசுகிறீர்கள்.

வாழ்த்துகள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு தம்பி விக்கி!

Anonymous said...

விக்கி..வழமை போல் அருமை :)

Anonymous said...

ஏற்கனவே ஒரு புத்தகம் வெளி வந்திருக்கிறதே?

கார்க்கிபவா said...

யப்பா... எழுதிட்டிங்களா?

ஜோ/Joe said...

//சப்பானி என்ற வார்த்தைக்கு தமிழில் வர்த்தம் வேறு//

என்ன சார் அந்த வர்த்தம் ?மத்தவங்களுக்கு அறிவுரை சொல்லுறதுக்கு முன்னர் நீங்க முதல்ல சப்பாணி-க்கும் சப்பானி-க்கும் வேறுபாடு தெரிஞ்சுக்குங்க.

VG said...

kejap ckp taknak tulis blog lagi.. kejap ckp next post tengah bersiap.. apa ceritanya??


ok, pasal post now,

school kaalatileye padica matter.
athele mukiyamana vishyam enna na, appovum seri, ippavum sari, enaku pudikatha subject eh HISTORY thaan. he he he.. :D


anyway, marantha history ei nyabaga padutiyatarku nandringooo !!!!

Anonymous said...

வணக்கம். 'சயாம்-பர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூல் வெளியீடு பற்றிய செய்தியை வெளியிட்டமைக்கு நன்றி. இந்நூல் வரலாற்று நூல். இந்நிகழ்வினைப்பற்றி தமிழில் வெளிவரும் முதல் வரலாற்று நூல். இதற்கு முன்பு இதனைப்பற்றி நாவல் வெளிவந்துள்ளது. திரு.சண்முகம் அவர்கள் எழுதிய நாவல் சென்ற ஆண்டு தமிழகத்தில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு நான் அணிந்துரை எழுதியுள்ளேன்.

'சயாம்-பர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூலினைப் பெற்றிட கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம்.

நூலின் விலை = ரி.ம.20.00
தபால் செலவு = ரி.ம. 2.00
ஆக மொத்தம் ரி.ம.22.00.

பணத்தை வங்கி கணக்கில் போட்டுவிட்டு என்னுடன் தொடர்பு கொள்க. S.ARUNASALAM, NO.6, JALAN BATU NILAM 9, 41200 BANDAR BUKIT TINGGI, KLANG, SELANGOR.

MAYBANK : 105037363735
Tel: 012 300 2911

கலோலையும் அனுப்பலாம். நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ நட்புடன் ஜமால்

வருகைக்கு நன்றி ஜமால்

@ சஞ்ஜை காந்தி

மிக்க நன்றி...

@ மூ.வேலன்

நன்றி வேலன்

@ கோமா

ஆஹா... நிஜமா... ஐஸ் வேண்டாம்... சலி பிடித்திருக்கிறது...

@வால்பையன்

:)).. கெட்ட வார்த்தைகள் நல்ல வார்த்தைகளானால் நல்லது தானே??

VIKNESHWARAN ADAKKALAM said...

@ உஷா

சயாம் மரண தண்டவாளம் பற்றிய முழுமையான வரலாற்று தொகுப்புகள் உள்ளனவா என்பது சந்தேகத்துக்குறியது. அப்பணியினை முமையடையச் செய்திருக்கிறார் சி. அருண் என நம்புவோம்... ஊஷா உங்களுக்கான புத்தகத்தையும் ஆர்டர் கொடுத்திடுறேன்..

@ ஜவஹர்

வருகைக்கு நன்றி... திரு.சி.சண்முகம் அவர்கள் எழுதிய நூல் தற்சமயம் இங்கு கிடைக்க வைப்பிருக்கிறதா? மறுபதிப்பு தமிழகத்தில் நடந்தேறியதாக அருண் சொல்லி இருக்கிறார்.

@ குமரன்

அண்ணா... எதுக்குங்கண்ணா இந்த பட்டம் சட்டம்லாம்... ஏதோ நான் பாட்டுக்கு சிவனேனு கிறுக்கிகிட்டு இருக்கேன்... ஆமா எங்க குதிச்சிங்க? கம்பியூட்டர் மேலயா? :)))

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா

@ தூயா

நன்றி தங்கையே... மீண்டும் வருக...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ புகழினி

இப்படி மொட்டையா சொன்னா எப்படிங்க... கொஞ்சம் டிடெயில் கொடுக்க வேண்டாமா? வருகைக்கு நன்றி...

@ கார்க்கி

:)) அட மாட்டேனு சொல்லிட்டு எழுதுறானேனு சொல்ற மாதிரி இருக்குங்க...

@ ஜோ

அண்ணா ஏன் இந்த கோபக் கனல் தகிக்கிறது... :))

@ விஜி

:))

@ சி.அருண்

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ஐயா... மீண்டும் வருக...

சி தயாளன் said...

விக்கி..இது பற்றி நேதாஜி பற்றி மலேசிய தமிழரால் எழுதப்பட்ட புத்தகத்திலும் சில தகவல்கள் உண்டு...புத்தகம் பெயர் மறந்து விட்டது..கிடைத்தால் அறியத்தருகிறேன் :-)

Anonymous said...

வணக்கம். கட்டுரையைப் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. ஆனால், எனக்கு இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது சில கேள்விகள் மனதில் எழுந்தது. சயாமிய மரண பாதை பற்றிய ஆவணங்களை நிறைய படித்திருக்கின்றேன். எழுத்தாளர்கள் எல்லாம் சயாமிய மரண இரயில் பாதையை வரலாற்று பதிவாக பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றியே சிந்திருக்கிறார்கள். முதலில் தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு இரயில் பாதை அமைக்க வேண்டிய அவசியம் ஜப்பானியர்களுக்கு ஏன் வந்தது? நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜப்பானியர்கள் இந்தியாவைத் தாண்டி ஆப்கானிஸ்தான் வரை ஏன் இரயில் பாதையை எழுப்பவில்லை?
நம் நாட்டில் மலாய்காரர்கள்,சீனர்கள் தென்னிந்தியர்கள்,சிங்களவர்கள் மற்றும் வட இந்தியர்கள் எனப் பலரும் இருந்த பொழுதும் தமிழர்களை மட்டும் அவர்கள் சயாமிய மரய இரயில் பாதைக்கு கொண்டு செல்ல காரணம் என்ன? தமிழர்கள் சிறந்த உழைப்பாளிகள் என ஜப்பானியர்கள் கருதி இருந்தால், அவர்களுக்குத் தமிழர்களின் உடல் உழைப்பைப் பற்றி எடுத்துரைத்தது யார்? கூலிக்கு வேலை என்ற அடிப்படையில் தமிழர்களை சயாமிற்கு அழைத்து செல்ல உதவியது யார்? இப்படியாகப் பல கேள்விகளுக்கு விடை தெரியாமால் இருக்கின்றது. இவை அனைத்திருக்கும் விடை ஒருவர்தான். அவர்தான் இந்தியாவின் சுதந்திர வீரராகப் போற்றப்படும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். நேதாஜி மேல் இருக்கும் அளவிற்கு அதிகமான மரியாதையால் அவரைப் பற்றிய உண்மையான சுயசரிதையை எழுத அனைவரும் தயக்கம் காட்டி வருகிறார்கள். மலாயாவில்,இந்தியா இராணுவத்திற்கு ஆட்களைத் திரட்டிய நேதாஜி தமிழர்களைப் பெருமளவில் தவிர்திருக்கிறார். அந்தக் காலத்தில் இராணுவத்தில் சேருவதற்கு அச்சிடப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் இந்தி மற்றும் பஞ்சாப் மொழிகளில்தான் அச்சிடப்பட்டுள்ளது.
தமிழர்களில் உடல் உழைப்பைப் பற்றி நன்கு அறிந்திருந்த நேதாஜி, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தமிழர்களைச் சயாமிய மரண இரயில் பாதையில் காணிக்கையாக்கி இருக்கின்றார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் தோற்றால் இந்தியாவை நேதாஜிக்கு வழங்குவது என்பது ஜப்பானுக்கும் நேதாஜிக்கும் இடையிலான ஒப்பந்தம். பொதுவாக நேதாஜியைப் பற்றி நிறைய விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றது. இறக்கும் முன் அவர் மேற்கொண்ட தாய்வான் பயணத்தில் அவர் கொண்டு சென்ற கோடிக்கணக்கான தங்க நகைகள் குறிப்பு இதுவரை சரியாக வெளியிடப்படவில்லை. அதேபோல் சுதந்திரப் போராட்டத்தில் தனது பெயருக்கு களங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் செய்த திருமணத்தைக் கடைசி வரை மறைத்து வைத்தது எனக் குறிப்பிட்டு சில விசயங்களைச் சொல்லலாம். அடுத்தது, சயாமிய மரணப் பாதையில் இறந்தவர்களை இரண்டாவது உலகப் போரில் இறந்தப் போன கோடிக்கணக்கான போர்வீரர்கள் வரிசையில்தான் சேர்க்க வேண்டும். ஜப்பானியர்கள் தமிழர்களுக்கு விளைத்த தனிப்பட்ட விரோதம் போல் அவைச் சுட்டிக்காட்ட படுவது ஏன் என்று புரியவில்லை. சயாமிய மரண இரயில் பாதையில் இறந்தப்போனக் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக 25 கோடி வெள்ளியை ஜப்பானிய அரசாங்கம் மலேசியாவிடம் வழங்கியது. ஆனால், நமது அரசாங்கம் ஆயுதங்கள் வாங்குவதற்கு அந்தப் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டார்கள்.இனிவரும் காலங்களில் சயாமிய இரயில் பாதை ஆவணங்கள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டொன் லீ

கண்டிப்பாக சொல்லுங்கள் நன்றி...

@ குமார்

வருகைக்கு நன்றி... இந்தா ஆனால் சொல்லும் பழக்கத்தைப் பற்றி விவேகனந்தர் எனது பயணம் எனும் நூலில் எழுதி இருக்கிறார் படித்திருக்கிங்களா? :))

சயாம் மரண இரயில் பாதைப் பற்றிய விடயங்களை அதிகமாக அறிந்து வைத்திருக்கும் நீங்கள் ஏன் அதைப் பற்றி எழுதக் கூடாது. நீங்கள் நேதாஜியை பற்றி சொல்லும் செய்தி எல்லாம் எனக்கு புதிதானவையே. அப்படி என்றால் தெரிந்துக் கொண்டே தெரியாத மாதிரி கேட்கிறீர்கள். அதாவது கூர் பார்க்கிறீர்கள் தானே. ஏன் உங்களுக்கு சிரமம். எனக்கு தெரியாது தான். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னீர்கள் என்றால் எல்லோரும் அறிந்துக் கொள்ள வசதிபடுமல்லவா? இதுவும் எனது வேண்டுகோள் தான் :)

Anonymous said...

வணக்கம் தோழாரே, உங்களுடைய வேண்டுகோளுக்கு நன்றி. உண்மையில் நான் அதிகம் விரும்பி படிக்கும் வலைபதிவுகளில் உங்களுக்குதான் முதலிடம். என்னுடைய வேண்டுகோள் எல்லாம் வரலாற்றை பதிவு செய்பவர்கள், எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலையில் எழுத வேண்டும் என்பதுதான்.மற்றப்படி உங்களைக் கூர் பார்க்க அல்ல. கருத்து பரிமாற்றத்துக்கு வாழ்க்கைப் பயணம் வலைப்பதிவு சிறந்த தளமாக இருபப்பதால்தான் இங்கு என் எண்ணங்களைப் பதிவு செய்தேன். தொடர்ந்து நிறைய விசயங்களை எழுதுங்கள். நன்றி.

Anonymous said...

மறுபடி படிக்க வந்தேன்..

VIKNESHWARAN ADAKKALAM said...

@ குமார்

நேதாஜி தொடர்பான விசயங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்களாம் நீங்கள். வருகைக்கு நன்றி...

@ தூயா

அது சரி...

பரிசல்காரன் said...

வெறும் பதிவாயில்லாமல் வரலாற்று நிகழ்வை இப்படி விவரிப்பாய் எழுதிய உங்களுக்குப் பாராட்டுகள்! நல்லா இருக்கு விக்கி!!

goma said...

விக்கி விகடனில் பார்த்து விட்டு பாராட்ட வந்தேன் ...வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்

goma said...

விக்கி விகடனில் பார்த்து விட்டு பாராட்ட வந்தேன் ...வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ பரிசல்காரன்

நன்றி...

@ கோமா

நன்றி...