Saturday, March 14, 2009

பிள்ளைக்கறி - சிறுகதை

இன்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிடுவதாக அம்மாவிடம் சொல்லி இருந்தேன். ஆட்டம் போட்டதில் மறந்தே போனது. பந்து விளையாட திடலில் இறங்கிவிட்டால் போதும், நேரம் போவதே தெரிவதில்லை.

ஒன்றும் இல்லாத பந்து. கண்ணுக்கு தெரியாத காற்றடைத்த பந்து. போயும் போயும் அதையா இப்படி விரட்டி விரட்டி உதைக்கின்றோம். ஒரு ‘கோல்’ போட்டுவிட்டால் போதுமா? மீண்டும் மீண்டும் நாமே வெல்ல வேண்டும் எனும் எண்ணம். வாழ்க்கையும் இப்படி தான் போல. எதையோ விரட்டிக் கொண்டிருக்கிறது.

மணி 8.20 ஆச்சு. வானத்தில் நட்சத்திரங்களே இல்லை. அமாவாசை தினம் போல. காலம் ஏன் பின்னோக்கி நகர மாட்டேன் என்கிறது. நகர்ந்தால், வேண்டிய நேரத்தை திருப்பிக் கொள்ளலாம். வாழ்க்கையில் பிரச்சனையும் இருக்காது இல்லையா.

வீடு நெறுங்கிவிட்டது. மோட்டார் சைக்கிளை அமைதியாக ஓட்டி வந்தேன். உயர்ரக படகு கார் ஒன்று வீட்டின் முன் நின்றிருந்தது. வாசலில் இருந்த காலணிகளை கவனித்தேன். நான் அறிந்திராதவர்கள் தாம் யாரோ வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்பதை அது உறுதிபடுத்தியது. காரின் நம்பரை கவனித்தேன். வெளியூர் வண்டி. ஜோகூர் பிலேட். அப்பாவைக் காண வந்திருப்பார்கள் போல.

திடலில் விழுந்து வாரியதில் உடலெங்கும் சேறு படிந்திருந்தது. கூடவே வியர்வை நாற்றமும் இருந்தது. பின் வாசல் வழியாக வீட்டில் நுழைந்தேன். குளித்துவிட்டு உடுத்திக் கொண்டு வந்தேன்.

அம்மா எதிர்ப்பட்டாள். முகம் வெளிறியிருந்தது. கண்கள் லேசான சிகப்பேறி இருந்தது. அழுதிருப்பாள் போல. அப்பா கூப்பிடுறாரு போய் பாரு என்றாள். நான் முன்னறைக்குச் சென்றேன். ஏதோ பிரச்சனையோ என்று நினைத்தேன்.

முன் அறையில் மூன்று புதிய முகங்களைக் கண்டேன். “வாங்க” என புன்னகைத்தேன். அவர்களும் சிரித்தார்கள். சிரிப்பில் பணக்கார மிடுக்கு கொப்பளித்தது. அப்பாவும் சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பில் உயிர் இல்லை. அது கட்டாயப் படுத்திக் கொண்டு சிரிக்கும் சிரிப்பு.

அப்பாவின் அருகில் அமர்ந்தேன். மெதுவாக தான் கேட்டேன்.

“அப்பா யார் இவுங்க?”

“உன்ன பெத்தவங்கப்பா... உன்னை அழைச்சிட்டு போக வந்திருக்காங்க..” வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் அடைத்துக் கொண்டதைப் போல் தட்டு தடுமாறி பேசினார். பேசுவதறியாமல் அமைதியாக இருந்தேன்.

அப்பா மேலும் தொடர்ந்தார்.

“உங்கப்பாவும் நானும் ஒன்னாதான் வேலை பார்த்தோம். நீ பிறந்த போது உங்க அம்மா இறந்துட்டாங்க. அந்த சமயம் உங்க அப்பாவ அரசாங்கத்துல இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிச்சி வச்சாங்க. அப்ப எனக்கு ஆம்பளை புள்ள இல்லை. நான் கேட்ட போது என்கிட்ட கொடுத்துட்டாங்க”.

“சரி... இப்ப எதுக்கு என்ன கூப்பிடனும்?”

வெளிநாட்டில் இருந்து வந்ததும் என்னைத் தேடியதாகவும், அப்பா வீடு மாறிவிட்டதால் கண்டுபிடிக்க முடியாமல் போனதாகவும் சொன்னார். உடன் வந்திருப்பவர்கள் சித்தியும், தங்கையும் என்பதை அறிந்துக் கொண்டேன்.

வரும் ஞாயிற்றுக் கிழமை என்னை வந்து அழைத்துக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. இன்று புதன். இன்னும் நான்கு நாள் மட்டும் தான் இந்த தோட்டத்தில் இருக்க போறேன். மனசுக்கு வேதனையாக தான் இருந்தது.

போக வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆனால் படிக்கிற பய நீ என்ன முடிவு பண்றது நான் சொல்வதைக் கேள் என்றே பேச்சுகள் வரும். அப்பாவுக்கும் என்னை அனுப்புவதில் இஷ்டம் இல்லை தான். ஆனால் இதுவோ நிர்பந்த சூழல் ஏற்பட நிலையானதால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை.

பள்ளிக்கூடத்தில் நான் சுமாராக தான் படிப்பேன். நான் வேறு இடம் மாற்றலாகி செல்வது யாரையும் அவ்வளவா பாதிக்கலைனு தான் சொல்லனும். கோபால் மட்டும் கொஞ்சம் சோகமா இருந்தான். ஆமாம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் குச்சி ஐஸ் வாங்கி கொடுக்கவும், பாடம் செய்யாமல் வாத்தியிடம் அடி வாங்கவும் அவனுக்கு இனி துணை இருக்காது இல்லையா.

அந்த நாசமாய் போன ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. வீட்டில் எல்லோருடைய முகமும் வாடி போய்விட்டது. அம்மா நேரிடையாகவே அழுதுவிட்டாள். ஆனால் அப்பாவால் அப்படி முடியவில்லை. நான் கிளம்பும் போது அவர் தன் அறைகுச் சென்றுவிட்டார்.

சில மணி நேர பயணங்களில் நான் ஜோகூரில் இருந்தேன். மாறுபாடான வாழ்க்கை. சாப்பாட்டு மேசையில் இருக்கும் கரண்டியில் கூட செல்வச் செருக்கும் ஆங்கிலமும் படிந்திருந்தது. குடும்பத்தோடு என்னால் எளிதாகவும் ஒட்டி வாழ முடியவில்லை.

சில வேளைகளில் நான் பட படவென பேசுவது சித்திக்கும் தங்கைக்கும் பிடிக்காது. அது மரியாதை இல்லை இப்படி பேச வேண்டும் என சொல்வார்கள்.
நாகரீக வளர்ச்சி எனும் பெயரில் இப்போதெல்லாம் பேச்சில் கூட அளவு காண ஆரம்பித்துவிட்டார்கள். என்ன செய்வது மாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது.

அன்று காலையில் எழுந்த போது அப்பா கேட்டார்.

“ஹவ் ஆர் யூ டுடே?”

“ஃபைன்” சுருக்கமாக சொன்னேன். பதிலுக்கு கேள்வியும் கேட்கவில்லை. அங்கிருந்த உறவுகளில் மரியாதை மட்டுமே இருந்தது. மருந்துக்கும் பாசத்தைக் காண முடியவில்லை. அடிக்கடி கிராமத்தில் அப்பாவுக்கு போன் செய்து பேசுவேன்.

நெடு நாட்களாக சித்தி இதைக் கவனித்து வந்தாள். ஒரு நாள் அப்படித்தான். போன் பேசி முடித்ததும் சொன்னாள் “உன்ன பாத்துக்க சொல்லி தான் உங்க அப்பா அங்க விட்டு வந்தாரு. இந்த மாதிரி நீ பண்றது யாருக்கும் பிடிக்கல. என்ன இருந்தாலும் நாங்க தான் உன்னோட நிஜமான உறவு. அவுங்க ஆயாவா தான் இருந்தாங்க. மறுபடியும் மறுபடியும் போய் குப்பைல விழாதே. உங்கப்பாவுக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாரு. இனிமேல போன் பண்ற வேலைலாம் வச்சிக்காத”. என புராணம் பாடி முடித்தாள்.

“ஏன் இப்படி பேசுறிங்க. அவுங்க இல்லாம நான் எப்படி வளர்ந்திருக்க முடியும்?”

சித்தி அதைக் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. எப்போதும் போல வாழ்க்கை நகர்ந்தது. ஒரு நாள் வீட்டு வேலைக்கார தாத்தா மீன் தொட்டியைக் கழுவிக் கொண்டிருந்தார்.

அந்தத் தொட்டியில் ஒரே ஒரு மீன் மட்டும் தான் இருக்கும். அதை அதிஷ்ட மீன் என்பார்கள். விலை ஆயிரக் கணக்கில் தேறும். பொன் வண்ணத்தில் மினுக்கும். அதன் உடல் மினுமினுப்புக்காகவே சின்ன சின்ன இறால்களை உணவாக போடுவார்கள்.

”ஏன் இந்த மீன தனியா வளர்க்குறாங்க. நாலு அஞ்சி மீனுகள ஒன்னா விடக்கூடாதா” என்றேன்.

”இல்லை தம்பி. அப்படி விட்டா சண்டை போட்டு செத்து போய்டும். ஆனா இதுக்குனு தனியா ஜோடி எங்கோ இருக்கும். அது செத்துப் போனா இதுவும் செத்துடும்னு சொல்வாங்க. ரெண்டு நாள்ல வீட்ல விருந்து இருக்காம். அப்பா தொட்டிய சுத்தம் பண்ண சொல்லிட்டு போயிருக்காரு. வரதுக்குள்ள கழுவி எடுக்கனும்” என்றார்.

அந்த மீன் அப்படி தான் இறந்து போகுமா என அவரால் நிச்சயிக்க முடியவில்லை. பிரிவுகளின் வேதனை கொடுமையானது என்பது மட்டும் புரிந்தது. அதை ஏற்கும் பக்குவம் எல்லோருக்கும் இருப்பதில்லை.

விருந்து நாளும் வந்தது. சித்தியின் திருமண நாள் அது. சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு கிளம்பிவிட முடிவு செய்தேன். வேண்டிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். எல்லோரும் விருந்தின் களிப்பில் மிதந்துக் கொண்டிருக்கும் தக்க தருணத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

நல்ல வேளையாக ஈப்போவுக்கு டிக்கட் இருந்தது. கண் மையை கரைத்து வண்ணம் பூசியதை போல் கும்மிருட்டு சூழலை அப்பிக் கொண்டிருந்தது. எனது சிந்தனைகள் பறந்து வட்டமிட்டு திரிந்தது. உடல் அமைதி கொண்டு அதை கவனித்து வந்தது.

இந்நேரம் நான் வீட்டில் இல்லாததை அறிந்திருப்பார்களா? இல்லை விருந்தின் உச்சத்தில் களிப்புற்றிருப்பார்களா? ஒரு வேளை அப்பாவுக்கு போன் போட்டு பிரச்சனைகள் கொந்தளித்துக் கொண்டிருக்குமோ? எதுவானால் என்ன வந்தது வந்தாகிவிட்டது. நடப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றது மனம்.

ஈப்போவுக்கு சேர்ந்த போது விடியல் காலை நேரம். இப்போது வீட்டுக்கு பஸ் இருக்காது. டாக்சிக்கு பவுன் விலை சொல்லி கழுத்தறுப்பார்கள். இன்னும் ஒரு மணி நேரம் காத்திருந்தால் முதல் பஸ் வந்திடும். அதில் பயணம் செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ஒரு ஓரமாய் அமர்ந்தேன்.

படிப்பதற்கு கையில் புத்தகம் கூட இல்லை. பேனாவும் சின்ன குறிப்பு புத்தகமும் பாக்கெட்டில் இருந்தது. ஏதோ எழுத தொடங்கினேன்.

அப்பா,

நம் குடும்பத்தோடு நான் இருந்த தருணங்கள் இனிமையானவை. வாழ்க்கை விடுகதையாகவே இருக்கிறது. எல்லாமும் நம் விரும்பியது போல் அமைந்துவிடுவதில்லை. சமூகத்தை சார்ந்த இந்த வாழ்வில் முடிவுகள் நாம் விருப்பத்தின் பேரில் அமைவதில்லை. வாழ்க்கையில் முடிவினை அறிந்தவர்கள் உலகத்தில் இருக்கவே முடியாது போலும்...

மேலும் எழுத தோன்றவில்லை. பேனாவை சுழற்றியபடியே நேரத்தை ஓடவிட்டேன். பஸ் வந்ததும் காகிதத்தை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.

பஸ்ஸில் நான் மட்டும் தான் பயணியாக இருந்தேன். இன்னும் சில நிமிடங்களில் வீட்டை அடைந்துவிடுவேன். சாலையில் அதிகமான வாகனங்கள் இல்லை. பளிங்குக் கல்லில் விட்டெரிந்த சவர்காரத்தைப் போல் சாலையில் வழுக்கிக் கொண்டு ஓடியது பேருந்து. எதிரே சின்ன வளைவு. முன் சென்ற ஜீப்பை முந்திக் கொள்ள நினைத்தான் டிரைவர். எதிரே ஒரு நீண்ட கண்டெய்னரை பார்த்தேன். சட்டென வைத்த பிரேக்கின் வேகத்தில் முன் புறமாகத் தூக்கி எறியப்பட்டேன்.
**********

”செத்தது உங்களுக்கு என்ன உறவுங்க?” போலிஸ்காரர் கேட்கிறார்.

“அது என் மகன் தான். வளர்த்த புள்ள”

“இது அவர் வைச்சிருந்த பொருளுங்க சரியா இருக்கானு பார்த்துக்குங்க”.

அதில் அவன் எழுதிய கடிதமும் இருந்தது. இரண்டு மடிப்பாக மடிக்கப்பட்டிருந்தது. காலம் பல கடந்துவிட்டது. இன்னமும் புதிய தாபாலில் வந்த கடிதமாகவே அதை தினமும் படித்து வருகிறார் அவன் அப்பா. அவரை வளர்ப்பு தந்தை என்று தான் குறிப்பிட்டாக வேண்டுமா...

--முற்றும்--

30 comments:

Anonymous said...

//வானத்தில் நட்சத்திரங்களே இல்லை. அமாவாசை தினம் போல//

அமாவாசையன்று நட்சத்திரம் தெரியாதா?

இக்கதையில் வரும் ‘நான்’ கதாபாத்திரம் வயதிற்கு மீறி சற்று மிகுதியாகவே தத்துவங்களை கக்குகிறது. சற்று இயல்பாக இருந்தால் நலம்.

மற்றபடி கதை நன்றாக இருக்கிறது.

மாதவன்
(செங்காட்டங்குடி)

நிஜமா நல்லவன் said...

பிள்ளைக்கறி என்றதும் சிறு தொண்டராகிய பரஞ்சோதி சிவபெருமானுக்காக சமைத்த பெரியபுராண கதையோ என்று நினைத்து வந்தேன்...:)

நட்புடன் ஜமால் said...

மிக அழகான எழுத்தோட்டம்

தலைப்பு - ம்ம்ம் அருமை.

வியா (Viyaa) said...

கதையின் தலைப்பு அருமை..
கதையும் சூப்பெர்...
வாழ்த்துக்கள்..ஆனால் பாவம் அந்த சிறுவனின் வாழ்க்கை...

Kalaiyarasan said...

ஒரு கட்டுரை ஆசியராக தெரிந்த விக்னேஷ் தற்போது சிறந்த கதாசிரியராக எனனக்கு அறிமுகமாகிறார். மலேசிய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தமிழில் சிறப்பான ஆக்கங்களை படைப்பது வியப்பை அளிக்கிறது. மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

கதை சூப்பர், கருணை இல்லாம சிறுவனை கொன்னுடிங்களே!!!!

சி தயாளன் said...

வாழ்த்துகள் விக்கி...:-)

உங்கள் கதைகள் தொடரட்டும்..:-))

// நிஜமா நல்லவன் said...
பிள்ளைக்கறி என்றதும் சிறு தொண்டராகிய பரஞ்சோதி சிவபெருமானுக்காக சமைத்த பெரியபுராண கதையோ என்று நினைத்து வந்தேன்...:)
//

ம்..தலைப்பு பொருத்தமாகத் தான் இருக்கு...

அப்பாவி முரு said...

நண்பா விக்கி,

கதையோட்டம் மிக அருமை, ஆனால் வேறு நல்ல முடிவை கொடுத்திருக்கலாம், உங்களின் கற்பனை தானே, இன்னும் சிறப்பாக ஓடவிட்டிருக்கலாம். உங்களுக்கு அந்த திறனிருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் விக்கி,
தொடர்ந்து எழுதுங்கள்!
சிறுகதை நன்று!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

ஹேமா said...

விக்கி சிறுகதை இயல்பாய் இருந்தது.சிந்திக்கவும் வைத்தது.இன்னும் எழுதுங்கள்.

Prabhu said...

செம ஃப்ளோ கதையில!

Thamiz Priyan said...

வாழ்த்துகள் விக்கி,
தொடர்ந்து எழுதுங்கள்!
சிறுகதை நன்று!!

கோவி.கண்ணன் said...

முதல் பின்னூட்டத்துடன் ஒத்துப் போகிறேன்

வால்பையன் said...

செண்டிமெண்டல் குவியல்!

அரட்டை அகிலன் said...

சிறுகதை அருமை ... ஒரு முறைக்கு இருமுறை படிக்க தோன்றியது ....
வாழ்த்துக்கள் .....( ஏன்னா கதை சரியா புரியல .. அதான் )

அரட்டை அகிலன்

குமரன் மாரிமுத்து said...

விக்கி வாழ்க...

காதலின் விளிம்பிலும் புதைகுழி தோண்டி புதைந்துபோன விடயங்களை வெளிச்சம் போட்டு காட்டிய விக்கியின் மற்றுமொரு பரிமானம்.. நன்று...

சிறு வேண்டுகோள்... கோலிவுட் & பாலிவுட் படங்களின் தாக்கம் அதிகம் தெரிகிறது. இயல்பான பாத்திரப் படைப்புகளும் சம்பவங்களும் சிறுகதைக்கு மேலும் வலு சேர்க்கும்.

இது ஒரு வாசகனின் விண்ணப்பம்....

VG said...

wishing u many more happy returns of the day

VG said...

குமரன் மாரிமுத்து said...
விக்கி வாழ்க...

--> evalo kodutaaru kosham pode??

cheena (சீனா) said...

கதை அருமையாக இயல்பாகச் செல்கிறது. மீன் இறக்கும் என்பது கதை நாயகன் இறக்கப் போகிறான் என்பதனைக் கூறாமல் கூறி விடுகிறது. நல்ல கதை

நல்வாழ்த்துகள் விக்கி

Anonymous said...

நல்லக் கற்பனை. அதிலும், அழகான உயிரோட்டம். கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும்,அந்தத் தோட்டத்து சராசரி வாழ்க்கை அரிய பொக்கிஷம். தொடர்ந்து எழுதுங்கள் தோழாரே! ஒரு சிறிய வேண்டுகோள். தயவு செய்து மலேசிய எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்து விடாதீர்கள். உங்களைப் போன்ற திறமைசாலிகளை அவர்கள் காணமல் போக செய்து விடுவார்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மாதவன்

கருத்துக்கு நன்றி...

@ நிஜமா நல்லவன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே...

@ ஜமால்

கருத்துக்கு நன்றி... தலைப்பை தேர்வு செய்து கொடுத்தவர் நண்பர் அதிஷா...

@ வியா

நன்றி...

@ கலையரசன்

வாழ்த்துக்கு நன்றி... :))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆ.ஞானசேகரன்

நன்றி ஐயா...

@ டொன் லீ

நன்றி...

@ முரு

மிக்க நன்றி நண்பா... அடுத்த முறை நல்லவிதமாக கொடுக்க முயற்சிக்கிறேன்...

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா

@ ஹேமா

நன்றி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ பப்பு

நன்றி

@ தமிழ் பிரியன்

நன்றி...

@ கோவி கண்ணன்

அப்படினா ஏன் ரிப்பீட்டு போடலை :))

@ வால்பையன்

அப்படியா.... :)

@ அகிலன்

நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ குமரன்

நன்றி...

@ விஜி

வாழ்த்துக்கு நன்றி...

@ சீனா

நன்றி ஐயா

@ குமார்

உங்கள் கருத்துக்கு நன்றி குமார்... உங்கள் மின்மடல் முகவரி கிடைக்குமா... ஏன் வலைத்தளங்கள் ஏதும் ஆரம்பிக்கவில்லை?

Anonymous said...

HI KATHAI NALLA IRUKU. KATHAI NERAIYA SAMBAVANGGALAI EDUTHU VANTHAL ENNUM PADHIKA AARVATTHAI ELUPUM!
NANDRI. MAENMAI THODARAVUM.

Anonymous said...

நன்று ! மன்னிக்கவும், அடிக்கடி வர முடியறதில்லை :)

ஆளவந்தான் said...

சமீபத்தில் நான் படித்த கதைகள அனைத்துமே இப்ப்டி சோகமாவே முடியுதே ஏன்?

ம்ம்.. .அது தான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துது .

Anonymous said...

விகடன் பக்கத்தில் வந்திருந்தது கதை ! வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

அருமை,,வாழ்த்துக்கள்..

அன்புடன்
~டீபா~

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனானி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

@ சேவியர்

நன்றி சேவியர் அண்ணா. நீங்கள் சொன்ன பிறகு தான் விகடனில் வெளியாகி இருப்பதைக் கவனித்தேன். மீண்டும் நன்றி...

@ டீபா

அட என் பதிவுலாம் வந்து படிக்கிறிங்களா டீபா... ரொம்ப நன்றி... மீண்டும் வாங்க.