Wednesday, July 30, 2008

கன்னித் தமிழின் கண்ணீர்- பா.விஜய்

கவிஞர் பா.விஜய் அவர்களின் அடுத்த அக்னிப்பிரவேசம் படித்திருக்கிறீர்களா? எனக்குப் பிடித்த கவிதை தொகுப்பு நூல்களில் இதுவும் அடங்கும். நீண்ட கவிதைகளைக் கொண்ட குறுந் தொகுப்பு நூல்.

அணைத்தும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய சீர்திருத்த கவிதைகளாக இருக்கும். சில இடங்களில் தமிழக அரசியலையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இந்நூலில் எனக்கு பிடித்த ஒரு கவிதையினை இங்குச் சமர்ப்பிக்கிறேன்.

இந்த சமூகம் இருக்கிறதே

சமூகம்

இது

கரும்புக்குக் காத்திருந்தவனுக்கு

சக்கை தரும் சமூகம்


அவன் வீட்டு

அடுப்புக்கு நெருப்பு வைப்பதாய்

இறுதியில்

அவனுக்கே நெருப்பு வைக்கும்


இது

தமிழுக்கு மட்டுமென்ன

தங்க மகுடமா சூட்டும்?


கடையேழு வள்ளல் மட்டும்

கவனிக்காது இருந்திருந்தால்

நமது கவிராஜர்கள்

இலக்கியம் பேசியதாலேயே

இளைத்துப் போய் இருப்பார்கள்.


இவர்கள்

தினசரி இங்கே

திருவோடுகள் ஏந்தினால் தான்

மாதம் ஒருமுறை

கஜானா

கண் திறக்கும்


இப்போதோ

நமது தமிழ் மயில்

உள்ள போகன்கள் எல்லாம்

உலோபிகளாகிவிட்ட காரணத்தால்

விரைவிலேயே

விறைத்துப் போகவிருக்கிறார்கள்.


தமிழிலுள்ள எழுத்தையெல்லாம்

தங்கத்தில் பொறித்தல் வேண்டுமாம்

கேட்டுப் பாருங்கள்

அவன் தங்கத்தை

எழுத்து வடிவத்தில்

பார்த்தவனாக இருப்பான்.


சமுத்திரமாய் இருந்த

சங்கத்தமிழ் முதல்

இப்போதைய

இலக்கியம் வரைக்கும்

இடுப்பில் ஈரத்துணியோடு

இருந்த்வர்கள் எத்தனைப் பேர்?


ஒவ்வொரு கவிஞனின்

இரும்புப் பெட்டியிலும்

இருப்பதெல்லாம் என்ன?

கறையான்களிடம் காப்பாற்றப்பட்ட

ஒரு சில

ஓலைச்சுவடிகளைத் தவிர!


தமிழ்

தனக்கும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.


தமிழனின் கண்களில்

விழுந்த தூசை

துடைப்பதற்கு வந்தவன் கையில்

ஆயுதம்

நமக்கோ கைகளில்லை.


அதனால் தான்

சரித்திரம் என்கிற நதி

ஒரு கரையில் சோலையிலும்

ஒரு கரையில் பாலையிலும்

ஓடிக் கொண்டிருக்கிறது.


நமது அறிஞர்களோ

நல்லதொரு சமுத்திரத்தில்

அலைகளைப் பிடிக்க

வலைகளை வீசுகிறார்கள்.


தமிழுக்காக வாழ்ந்து

தமிழுக்காக இறந்தவன் ஒருவன்

இப்படி எழுதினான்.


தமிழில்

எவ்வளவுக்கு எவ்வளவு

இளமை இருக்கிறதோ

அவ்வளவுக்கு அவ்வளவு

வறுமையும் இருக்கிறது.


ஒன்று மட்டும் உறுதி

தமிழைக் காப்பாற்றுங்கள் என

தானாக சென்று எவனையும்

அழைக்கவும் முடியாது.

அப்படிக் காப்பாற்ற வந்தவன்

பிழைக்கவும் முடியாது.


காரணம் தமிழில்

கல்வெட்டுகள் இருக்கிறதே தவிர

பொன்வெட்டுகள் இல்லை.


தமிழ்ச்சாதி

சிந்தை பொங்கி

சித்ததானம் செய்யலாம்.

ஆயின்

அதற்கு இன்னமும்

ரத்ததானம் செய்தல்

அவசியமாக இருக்கிறது.


போகிற போக்கைப் பார்த்தால்

தமிழ்க் கருவூலமே என்று

வருத்தம் உண்டாகிறது.


தோனியைப் போலல்லாமல்

ஆணியடித்ததைப் போல்

அமர்ந்தே கிடந்தாலும்

அரசாங்க உத்தியோகம் தேவலை.


ஆம்

மாதம் ஒருமாரியாவது

அரசாங்க மேகம்

அபிஷேகம் செய்கிறது.


நமது தமிழ்

தானும் சேர்க்கவில்லை

தன்னை அண்டியவனை

சேர்க்கவும் விடவில்லை.

4 comments:

கிரி said...

கவிதைக்கும் எனக்கும் வெகு தூரம் :-(

VIKNESHWARAN ADAKKALAM said...

//கிரி said...

கவிதைக்கும் எனக்கும் வெகு தூரம் :-(//

ஏன் தூரம்... பக்கத்தில் வாரலாமே?

MyFriend said...

ம்ம்.. இந்த தொகுப்பு நல்லா இருக்கும் போலிருக்கே. :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

///:: மை ஃபிரண்ட் ::. said...

ம்ம்.. இந்த தொகுப்பு நல்லா இருக்கும் போலிருக்கே. :-)//

சிறப்பாக இருக்கு படித்துப் பாருங்கள்...