Sunday, July 13, 2008

திருடியது யார் - சிறுகதை

('திருடியது யார்' சிறுகதையை கடந்த வருடம் வலைப்பதில் பிரவேசிப்பதற்கு முன் எழுதினேன். ஏதோ ஒரு தைரியத்தில் மலேசிய நண்பன் நாளிதழுக்கும் அனுப்பி வைத்தேன். 09.09.2007 ஞாயிறு நண்பனில் இக்கதை வெளிவந்தது. இப்பொழுது இக்கதையை படிக்கும் போது எப்பேர்பட்ட கொலை வெறி கதையை எழுதியிருக்கின்றோம் என்ற வருத்தமும் ஏற்படுகிறது. அந்தக் கொலை வெறி கதையை நீங்களும் அனுபவித்துப் பாருங்கள்.)
“என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார்.

குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரு தனியார் நிறுவணத்தில் பணி புறிந்து வருகிறான். மகேனின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த அதே கவலை,

“ என்னடா கப்பல் கவுந்த மாதிரி இனமும் சோகமா இருக்க, அதன் எல்லாம் சரியாயிடுச்சே, பின்ன என்ன கவலை”, என்று மகேனை பார்த்தான் குமார்.

“இல்லடா குமார் நீ கொடுத்த கார்டுல பணம் எடுக்க முடியலடா, பாக்கி பணம் ரொம்ப குறைவா இருக்கு”, என்றான் மகேன். தன் நண்பனின் பதில் குமாரின் காதுகளில் இடி போல் விழுந்தது.

சமீபத்தில் மகேனுக்கு சிறு பண பிரச்சனை எற்பட்டது. கடந்த வருடம் தான் சேமித்து வைத்திருந்த தொகையை முன் பணமாக செலுத்தி அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டை வாங்கி சந்தோஷமாக தன் குடும்பத்தாருடன் குடி புகுந்தான். வாடகை வீட்டுக்கு பணத்தைக் கொடுப்பதை விட, வங்கியில் சொந்த வீட்டுக்கு மாதத் தவனைச் செலுத்துவது அவனுக்கு ஒரு வித திருப்தியே அளித்தது.

சிறு பிராயத்தில் தந்தையை இழந்த மகேனுக்கு இடைநிலை கல்வியை தொடரும் தம்பியும், மூட்டு வலியால் பாதிக்க பட்ட தாயாரும் உள்ளனர். இரு மாதங்களுக்கு முன்பு தனதுத் தாயாரின் உடல் நிலை பாதிக்க படவே, அவனுக்கு அதிகமான மருத்துவ செலவுகள் எற்பட்டது மட்டுமல்லாமல் வீட்டுத் தவனையும் சரிவர செலுத்த முடியாமல் கால தாமதம் ஆனது. வங்கியிலிருந்து மூன்றாம் நினைவுருத்தல் கடிதம் வந்ததும் தன் நண்பன் குமாரின் உதவியை நாடினான் மகேன்.

குழப்பத்தில் இருந்த தன் நண்பனின் தோளில் கையை வைத்தான் மகேன், “டேய் என்னடா, என் மேல சந்தேகப்படுரியா? நான் பொய் சொல்லல, நிஜமா நான் பார்க்கும் போது பணமே இல்லைடா”, என சங்கடமாகக் கூறினான் மகேன்.

“சேய்! என்னடா இப்படி பேசற, உன் குணம் எனக்கு தெரியாதா, நான் அந்த பணத்தை எந்த காரியத்துக்கும் பயன்படுத்தல. அதான் ரொம்ப குழப்பமா இருக்கு, வா என்ன செய்யலாம்னு யோசிப்போம்”, என தன் வேலைகளை நிறுத்திவிட்டு வந்தான் குமார். தன் மடிக் கனிணியை திறந்து அவன் செய்த வரவு செலவுகளை சரி பார்த்தான், தான் அந்த வங்கியின் பணத்தை உபயோகிக்கவில்லையென தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

இரு நண்பர்களும் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்த உணவகத்தில், இனம் புரியாத அழுத்தத்துடனும் குழப்பத்துடனும் அமர்ந்திருந்தார்கள். குமார் தனது ஊழியர்களை தொடர்பு கொண்டு, வியாபார வரவு செலவுகளை குறித்து வைத்து அந்த வங்கி கணக்குடன் ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தான். அவன் செலவு செய்யவில்லை என்பதையே ஊழியர்களும் குறிப்பிட்டார்கள். பலமுறை யோசித்து, மேழும் குழப்பம் அடைந்த அவன் தனது சட்டைப் பையில் இருந்த வெண்சுருட்டை பற்ற வைத்தான்.

“சரி இன்னும் ஒரு வழிதான் இருக்கு, வா ‘பேங்’ போய் என்ன பிரச்சனைனு கேட்டு தெரிஞ்சிக்கலாம்”, என்று தன் நண்பனை அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்றான் குமார்.

வங்கிகளில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகள் உடனுக்குடன் கனிணி செயல்பாட்டால் பதிவு செய்யப் பட்டிருக்கும். கடந்த நாட்களில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகளை வேண்டிய சமயத்தில் பதிவு எடுத்து வைத்துக் கொள்ள வசதிகள் செய்துத் தரப் பட்டுள்ளன.

“போன வாரம்தான் சார் எல்லா பணத்தையும் வெளியாக்கிருக்கிங்க” என கூறி பற்றுவரவு கணக்கு வழக்குகளை குமாரின் முன் வைத்தார் வங்கியின் குமாஸ்தா. தனது சேமிப்புப் பணம் அனைத்துமே தொடர்ந்து ஆயிரம் ஆயிரம் ரிங்கிட்டாக வெளியாக்கி முடிக்கப் பட்டிருந்ததை பார்த்த குமார் மேழும் பேரதிர்ச்சியடைந்தான்.

வங்கி மேலதிகாரியிடம் நடந்தவற்றை விளக்கிக் கூறினான், தன் பணம் மீண்டும் கிடைக்காது என்ற பட்சத்தில், வங்கியின் நிர்வாகம் சரியில்லாததால்தான் தான் பணத்தை இழக்க நேர்ந்தது என கோபத்தில் தகராறு செய்தான். வங்கி நிர்வாகத்தினர் பணம் காணமற் போனதற்கும் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதில் விடாப் பிடியாக இருந்தார்கள்.

கஷ்டப் பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதில் மனம்முடைந்தவன் தன் வங்கி கணக்கு வழக்குகளை ரத்து செய்து விட்டு கிளம்பினான். மகேனுக்கோ தன்னால்தான் தன் நண்பனுக்கு இவ்வளவு சிரமம் எற்பட்டது என் நினைத்து மன வருத்தம் ஏற்பட்டது.

காவல் நிலையத்தில் முழு விவரமும் புகார் செய்யப் பட்டு இருவரும் வீடு திரும்பும் வழியில் பல சிந்தனைகள் குமாரின் மனத் திரையில் சிறகடித்தன. பாதுகாப்பாக வங்கியில் வைத்த பணம் எப்படி காணமற் போக முடியும். இந்த ஒரு கேள்விக்கே அவன் மனம் பதிலைத் தேடி அலைந்து திரிந்தது. வேறு என்னதான் செய்ய முடியும், பாடு பட்ட பலன்கள் யாவும் பஞ்சாய் பறந்து போனால் யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும். வங்கி ஊழியர்கள் யாராகினும் பணத்தை எடுத்து விட்டிருப்பார்களா? இப்படியாக மனம் எதையெதையோ எண்ணியது.

“சாரிடா மகேன், என் பிரச்சனையில உன்ன மறந்துட்டேன், இந்த ‘செக்க’ வச்சி உன் கடனை அடைச்சிடு, பயபடாத இது வேர பேங்க் அக்காவுண்ட், கண்டிப்பா பிரச்சனை இருக்காது”, என்று சட்டைப் பையில் இருந்த காசோலையை நீட்டினான் குமார்.

“என்னடா நீ! நீயே கஷ்டத்துல, இருக்க எனக்கு வெற தண்ட செலவு தேவயா? பரவாலடா, நான் வேறு இடத்துல பணத்தை புரட்டிக்கிறேன்”, என்று நண்பனின் காசோலையை வாங்க மறுத்தான் மகேன். அவனை சமதான படுத்தி காசோலையை கொடுத்து விட்டு விடைபெற்று வீடு திரும்பினான் குமார்.

புதிய நாள் கண்திறந்து பத்து நாழிகை கழிந்திருந்தது, ஈப்போ நகரம் வேலைப் பளுவால் கனத்து காணப்பட்டது. இவையனைத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தது ஒரு உருவம். நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டிருந்த கையடக்கத் தொலைபேசி உறங்கி கொண்டிருந்தவரின் உறக்கத்தை சற்றும் கலைக்கவில்லை.
ஏழாவது முறையாக ஒலியெழும்பிய போது அவரது கைகள் போர்வையிலிருந்து எட்டிப் பார்த்து ஓசை எழுப்பிய கருவியை அலசியது. தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து முடித்தவர் சட்டென கிளம்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் தனது காரில் காற்றோடு காற்றாக மறைந்தார்.

“வாங்க மிஸ்டர் மாதவன், உங்க விடுமுறை முடியறதுக்கு முன்னதாவே உங்கள வேலைக்கு வர சொன்னதற்கு மன்னிக்கனும், முக்கியமான கேஸ் ஒன்ன சீக்கரமா முடிக்க உத்தரவு போட்டுடாங்க, அதான் உங்கள அழைக்க வேண்டியதா போச்சி”, என்றார் காவல் அதிகாரியான அமீர்.

“பரவாயில்லை சார் நீண்ட நாள் விடுமுறை எனக்கும் போரடிச்சி போச்சி, நேத்து ‘நைட்டுதான்’ ஊர்லெருந்து வந்தேன், தூங்க ‘லேட்டாச்சி’ அதான் நீங்க போன் பண்ணுனது தெரியாம அசந்து தூங்கிட்டேன், நீங்கதான் என்ன மன்னிக்கனும்”, என்றார் மாதவன்.

மாதவன் சிறப்புப் போலிஸ் பிரிவினில் பணிபுரியும், திறமையும், தைரியமும் மிக்க காவல் அதிகாரி. பல சிக்கலான புகார்களை நூதனமான யுக்திகளை கையாண்டு கண்டுபிடித்தவர். இதனால் காவல் இலாக்காவினரிடம் அவருக்கெனெ தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது.

“சரி மாதவன், இந்த ‘பைல்ஸ்’ எல்லாம் கடந்த மூனு மாதமா இந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு வந்த ‘கேஸஸ்’,” என்று மாதவன் முன் சில புகார் பதிவுகளை எடுத்து வைத்தார் அமீர்.

“இங்க இருக்கறது எல்லாமே இந்த ஈப்போ நகரத்த சுற்றியுள்ள ‘பேங்’ சம்மந்தப் பட்ட புகார்கள். ‘பேங்’ல உள்ளவங்களுக்கோ, ‘டேப்பாசிட்டர்கோ’ இந்த பணம் எப்படி காணமல் போனதுனு தெரியல. சிக்கலான கேஸ்ஸாக இருக்கறதால தடயங்கள் கிடைக்கவும் சிரமமா இருக்கு. என் சந்தேகமெல்லாம் இது பலரால் செய்யப் பட்டிருக்கலாம் என்பதுதான். கூடிய சீக்கரத்தில் இதை நாம் கண்டிபிடிச்சி தடுக்கனும், இதனால் பலர் பாதிக்க பட்டிருக்காங்க” என சினிமாவில் வரும் போலிஸ் அதிகாரி போல எடுத்துரைத்தார் அமீர்.

“சரி சார் இந்த ‘கேஸ’ நான் எடுத்துக்கிறேன்”, என்று கர்வமற்ற தன்னம்பிக்கையுடன் கூறினார் மாதவன். “ஓகே மாதவன் இந்த ‘கேஸ்’ சம்மந்தமா எந்த உதவியா இருந்தாலும் என்னை நாடலாம்”, என்று மேழும் ஊக்கம் கொடுத்து அனுப்பினார் அமீர்.

தலைமை காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டவர் அருகிலிருந்த உணவகத்தில் தனது மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். சுமாராக ஐந்து மணிவாக்கில், ஒரு நிறைவான தூக்கத்தை முடித்துவிட்டேன் என்பதற்கடையாளமாக நெட்டி முறித்து எழுந்த மாதவன், தன் எதிர் மேஜைமீதிருந்த புகார்களை பார்த்தார்.

அழுது முடித்திருந்த அந்திமழையின் சாரல் காற்று, தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்த மாதவனின் முகத்தை இதமாக வருடிச் சென்றதும் தனக்குள் ஒரு புத்துணர்வு எற்படுவதை உணர்ந்தார். அவரது சிந்தனைகள் தனக்கு கொடுக்கப் பட்டிருந்த பொறுப்பை நோக்கி ஓடியது. அனைத்து புகார்களும் ஒரே மாதிரியாகவும், அருகருகே உள்ள ஊர்களில் நடந்திருந்தாலும் அனைத்தும் சம்மந்த பட்ட ஒரே நபராலோ அல்லது நபர்களாலோ மட்டுமே செய்திருக்கக் கூடும் என முடிவெடுப்பது தவறு. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதையாகி விடுமோ என அஞ்சினார். அவை வெவ்வேரு ஆட்களாலும் செய்யப்பட்டிருக்கலாம் அல்லவா!

சில விஷயங்கள் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனியென மாதவனுக்கு புலப்பட்டது. சம்பவங்கள் பாதிக்கப் பட்ட நபர்களை அறியாமலே நடந்திருக்கிறது. வங்கியின் சேமிப்புப் பணம் பறிபோயிருக்கிறது என்றால் முக்கிய தகவல்களான உறுப்பினர் எண் மற்றும் ரகசிய ‘பின் கோர்டுகள்’, ஆகியன அடுத்தவருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த ரகசியங்கள் தொலைவது எவ்வகையில் சாத்தியமாகும். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். மேலும் தெளிவான தடயங்களை புரட்ட பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து விசாரிக்க முடிவு செய்தார்.

இறுதி நபராக குமார் விசாரணைக்கு அழைக்கப் பட்டான். “கடைசியாக இந்த ‘பேங்’ சம்மந்தப் பட்ட விபரங்களை என்ன விஷயமா பயன்படுத்துனீங்க சொல்ல முடியுமா?” என்றார் மாதவன்.

“கண்டிப்பா ஞாபகம் இருக்கு ‘சார்’, வியாபாரத்துக்காக ‘இன்டர்நெட்’ வழியா பொருட்கள் வாங்க பார்த்தேன், சரியான தகவல்களை கொடுத்தும் வாங்குவதற்கு பிரச்சனையா இருந்ததால ரத்து செஞ்சிட்டேன்” என ரத்தின சுருக்கமாக தன் பதிலைக் கூறி விடைப் பெற்று சென்றான் குமார்.

“விசாரனையில் சில முக்கிய தடயங்கள் நமக்கு கிடைச்சிருக்கு, பாதிக்க பட்ட எல்லோரும் தன் பணம் காணமற் போனதை உணர்வதற்கு முன்பு, பணம் கட்டவோ, அல்லது பொருள் வாங்கவோ, இணையம் வழி வங்கிச் சேவையை பயன்படுத்திருக்காங்க. இதனால அசம்பாவிதம் நடந்திருக்கும் என நான் நினைக்கிறேன். கணினி தொழில் நுட்ப நிபுணர்களின் உதவி இருந்தால் என் வேலையை தொடர சுலபமாக இருக்கும்” என்று அமீரிடம் விசாரனனயின் ஆய்வை கூறினார் மாதவன்.

“ ‘ஓகே’ மாதவன் நாளைக்கே எற்பாடு பண்ணிடலாம்”, என்றார் அமீர். பத்திரிக்கைக்கு இந்த விசாரனை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டாமெனவும், இதனால் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் சிரமங்கள் எற்படலாமெனவும் கூறினார் மாதவன்.

“இணையத்தின் வழி இப்படிபட்ட பிரச்சனைகள் நடக்க வாய்ப்புகள் இருக்கு ‘சார்’ , ஆனால் வங்கியின் இணைய சேவையும் பலத்த பாதுகாப்புடன்தான் செயல்படுத்தப் படுகிறது, இப்போதய நிலைமைக்கு நாம் யாரையும் சந்தேகிக்க முடியாது, பாதிக்கப்பட்டவர்கள் இறுதியாக எப்பொழுது வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி இருக்காங்கனு சற்று ஆராய்ந்தால் முக்கிய தகவல்களை திரட்ட வசதியாக இருக்கும்”, என்று மாதவனிடம் விளக்கிக் கூறினார் கணினி நிபுணர் அர்ஜூன்.

அடுத்த அரைமணி நேரத்தில் பாதிக்கப் பட்ட நபர்கள் இறுதியாக இணையத்தின் வழி வங்கியுடன் தெடர்புக் கொண்டதை ஆராய்ந்து பார்த்தார் அர்ஜுன். பாதிக்கப் பட்டவர்கள் வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி முடித்த பின்பு அவர்களது பெயர் மற்றும் ரகசியப் பின் கோடுகளைப் பயன்படுத்தி வேறொரு கணினியின் மூலம் அவர்களது வங்கி கணக்கு வழக்குகள் மறுபடியும் திறக்கப் பட்டிருந்தது. பாதிக்கப் பட்டவர்கள் கூறிய திகதி மற்றும் நேரத்திற்கு பிறகும் இணையம் வழி வங்கியின் கணக்கு வழக்குகள் பார்வையிட பட்டிருந்தது. இதை விட சுவாரசியமாக புகார் கொடுத்தவர்கள் அனைவரது கணக்கு வழக்குகளும் ஒரே இணைய சேவையின் மூலம் திறந்து பார்வையிடப் பட்டிருந்ததே.

“இந்த ‘IP Address’ எந்தத் தொலைபேசி தொடர்பின் வழி இணையத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது என்பதை வைத்து நாம் அவர்களின் முகவரியை அறிந்து கொள்ள முடியும்”, என்ற திருப்தியான பதிலை மாதவனிடம் கூறினார் அர்ஜுன்.

முகவரியை அறிந்து கொண்ட மாதவன் மேலும் சில காவல் அதிகாரிகளுடன் புறப்பட்டார். ஒரு அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதியில் தன் வாகனத்தை நிறுத்தி வைத்தவர், தன் சக நண்பர்களுடன் தேடி வந்த வீட்டை நோக்கிச் சென்றார். கதவைத் தட்டியவுடன், இருபது வயது மதிக்கதக்க இளைஞன் வெளியே எட்டிப் பார்த்தான். மாதவன் தான் விசாரனைக்கு வந்துள்ளதாக சொல்வதற்கு முன்பே, தன் நண்பர்களிடம் ‘போலீஸ்’ என கூச்சலிட்டு தன்னுடன் இருந்த இரு நண்பர்களுடன் தப்பிக்க முயன்றான். போலிசாரின் தர்ம அடிகளுடன் மூவரும் கைது செய்யப் பட்டார்கள். அவர்களது குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப் பட்ட பொருட்கள் அனைத்தும் கைபற்றப் பட்டன.

விசாரணையின் போது தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்ட அந்த மூவரும் படித்து முடித்த பின்பு வேலையில்லாததால் இந்த குற்றத்தை புரிய தூண்டுதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வங்கியின் இணைய அகப்பக்கத்தை போன்ற போலி அகபக்கத்தை உறுவாக்கி, தவறுதலாக அதில் நுழையும் பயனீட்டாளர்களின் முக்கிய தகவல்களை திரட்டியுள்ளார்கள். அந்த தகவல்களின் அடிப்படையில், இணையம் வழி கணக்கு வழக்குகளை ஆராய்ந்து, சட்டவிரோத முறையில் போலி வங்கி அட்டைகளை செய்து பணத்தைத் திருடியிருக்கிறார்கள், என திரு.அமீரிடம் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு சமர்பித்தார் மாதவன்.
தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, குற்ற செயல்களையும் அதிகரிக்கவே செய்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் குற்றச் செயல்களை தடுக்க முடியும், என பொறிக்கப் பட்டிருந்த பத்திரிக்கை செய்தியை படித்த மாதவன், பச்சை விளக்கு விழுந்தவுடன் பத்திரிக்கையை பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு தன் காரை செலுத்தினார். நிறைவாக வேலையை முடித்தத் திருப்தியுடன் ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறார் மாதவன்.

12 comments:

Athisha said...

கதை நல்லாருக்குங்க
என்ன கொஞ்சம் பழைய மாடல் ல இருக்கு

;-))

பரிசல்காரன் said...

//இப்பொழுது இக்கதையை படிக்கும் போது எப்பேர்பட்ட கொலை வெறி கதையை எழுதியிருக்கின்றோம் என்ற வருத்தமும் ஏற்படுகிறது. //

முதலில் புரியவில்லை. படித்துமுடித்ததும், உங்கள் ஆதங்கத்துக்கு காரணம் புரிகிறது!!

கவலைப் படாதீங்க.. போகப் போக எல்லாம் சரியாய்டும்!

அகரம் அமுதா said...

தக்காலத்திற்கு எற்புடைய கதை. அருமை. சில நாட்களுக்கு முன் சிங்கைத் தொலைக்காட்சியில் இதுபோன்ற உண்மை நிகழ்வைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள். இதை ஓராண்டிற்கு முன்பே தாங்கள் சிறப்பாகச் சிந்தித்துக் கதையாக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

வெண்பூ said...

//இக்கதையை படிக்கும் போது எப்பேர்பட்ட கொலை வெறி கதையை எழுதியிருக்கின்றோம் என்ற வருத்தமும் ஏற்படுகிறது//

படிச்சி முடிச்சப்புறம் எனக்கும்தான்

VIKNESHWARAN ADAKKALAM said...

//அதிஷா said...
கதை நல்லாருக்குங்க
என்ன கொஞ்சம் பழைய மாடல் ல இருக்கு
;-))//

பழைய கதைதாங்க... எழுதி ஒரு வருஷம் ஆக போகுதில்லையா... என் மன ஆறுதலுக்காக கதை நல்லா இருக்குனு சொன்றிங்க பாருங்க... நீங்க ரொம்ப நல்லவருங்க....

VIKNESHWARAN ADAKKALAM said...

//முதலில் புரியவில்லை. படித்துமுடித்ததும், உங்கள் ஆதங்கத்துக்கு காரணம் புரிகிறது!!
கவலைப் படாதீங்க.. போகப் போக எல்லாம் சரியாய்டும்!//

ரொம்ப நன்றி... இந்த பதிவிற்கு மட்டும் பின்னூட்டம் இல்லையென்றால் நான் எழுதுவதை நிறுத்திவிடலாம் என நினைத்தேன் (நீங்க போடாட்டியும் நானே அனானியாக போட்டிருப்பேனே) உங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது...

VIKNESHWARAN ADAKKALAM said...

//அகரம்.அமுதா said...
தக்காலத்திற்கு எற்புடைய கதை. அருமை. சில நாட்களுக்கு முன் சிங்கைத் தொலைக்காட்சியில் இதுபோன்ற உண்மை நிகழ்வைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள். இதை ஓராண்டிற்கு முன்பே தாங்கள் சிறப்பாகச் சிந்தித்துக் கதையாக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.//

எனக்காக நேரம் ஒதுக்கி கதையை படித்த அமுதா வாத்தியாருக்கு நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

//படிச்சி முடிச்சப்புறம் எனக்கும்தான்//

என் துக்கத்தை பகிர்ந்துக் கொண்டதிற்கு நன்றி...

சின்னப் பையன் said...

////இக்கதையை படிக்கும் போது எப்பேர்பட்ட கொலை வெறி கதையை எழுதியிருக்கின்றோம் என்ற வருத்தமும் ஏற்படுகிறது//

படிச்சி முடிச்சப்புறம் எனக்கும்தான்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

anujanya said...

விக்கி,

கதை நல்லா இருக்கு. கொஞ்சம் நடை வேகமாக்கினால், விறுவிறுப்பு கூடும். குற்றக் கதைகளில் அது மிக அவசியமல்லவா. இன்னும் நிறைய எழுதுங்கள்.

அனுஜன்யா

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு.

Anonymous said...

////இக்கதையை படிக்கும் போது எப்பேர்பட்ட கொலை வெறி கதையை எழுதியிருக்கின்றோம் என்ற வருத்தமும் ஏற்படுகிறது//

படிச்சி முடிச்சப்புறம் எனக்கும்தான்//

//ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்//


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

but good try...