Monday, May 04, 2009

சயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்

தலைப்பு: சயாம் - பர்மா மரண இரயில் பாதை
ஆசிரியர்: சீ.அருண்
நயம்: வரலாற்று நூல்
பதிப்பகம்: செம்பருத்தி பப்ளிகேசன். கோலாலம்பூர்.
சயாம் மரண இரயில் பாதை தொடர்பான கட்டுரை ஒன்று தமிழ் ஓசை பத்திரிக்கையில் முன்பு எழுதி இருந்தேன். அதை வலைப்பதிவிலும் பதிப்பித்தேன். அச்சமயம் எழுத்தாளர் சீ.அருண் எழுதிய புத்தகம் ஒன்று வெளியீடு கண்டிருந்தது. சயாம் - பர்மா இரயில் பாதை மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு எனும் அப்புத்தகத்தை தலைநகர் சென்றிருந்த போது வாங்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இப்புத்தகத்தின் தலைப்பு என்னை இன்னமும் சிந்திக்க வைக்கிறது. அவ்வளவு சுலபத்தில் மறக்கக் கூடிய ஆட்களா நம்மவர்கள். மறக்கப்பட்ட வரலாறு என்பதை ஆசிரியர் எதனை முன்னிட்டு சொல்கிறார் என்பது புரியவில்லை. அடிப்படையில் இது மறைக்கப்பட்டு வரும் வரலாறு எனக் கூறுவது தகும் என்பது என் கருத்தாகும். இதற்கு காரணம் உண்டு. முன்பு படித்த ஒரு மலாய் புத்தகத்தில் அதிகம் இறந்தவர்கள் மலாய்காரர்கள் தாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. நல்ல வேளை எனக்கு சீனம் படிக்க தெரியாது. அதில் உள்ள கூத்து எப்படியோ?

சிறிய வரலாற்று புத்தகம். மிகுதியான தகவல்கள். ஒவ்வொரு வரியிலும் காயங்கள் ஆறாமல் இரணமாக்கிக் கொண்டிருக்கின்றன. மன வலியோடுதான் படிக்க முடிகிறது. இறந்தவர்கள் எண்ணிக்கையானது ஒவ்வொரு தண்டவாள கட்டைகளுக்கடியிலும் ஒரு பிணம் எனும் கணக்காகிறது என சொல்லப்படுவது கொடுமையினும் கொடுமை.மலாயாவில் தோட்டங்களில் வேலை செய்வோரை ஏமாற்றி இட்டுச் செல்கிறார்கள். சயாம் சென்றால் நன்கு சம்பாதிக்கலாம். வேலை முடிந்ததும் தாயகம் திரும்பிவிடலாம் என ஆசை மொழி கூறி தலைக்கு ஒரு டாலருக்கு ஒவ்வொரு தமிழனும் விற்கப்படுகிறான். இதில் வருத்தம் என்னவென்றால் அவ்வாறு ஆள் சேர்ப்போரும் தமிழரே. அக்காலத்தில் மெத்த படித்த யாழ் தமிழர்களே மலாயாவின் மேல்மட்ட தொழில்களில் இருந்தார்கள்.

பிரிட்டிஷ் காலத்திலும் சரி ஜப்பானியர் காலத்திலும் சரி அரசு நிர்வாகங்களில் இவர்களே அதிகம் இருந்துள்ளார்கள். மெத்த படித்த தமிழன், தோட்டத்தில் படிக்காமல் கடைநிலை தொழிலாளர்களின் அறியாமையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டர் என்றே சொல்ல வேண்டும்.

புத்தகத்தின் சில இடங்களில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கருத்து மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று இடங்களில் வந்துள்ளதை தவிர்த்திருக்கலாம். ஜப்பானியர் கொடுமைகள் சொல்லி மாளாது. பிற்பகுதியில் ஜப்பானியர் ஆட்சி முடிவுற்று சயாமில் இருந்து திரும்பியவர்களின் பேட்டிகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது.

இந்தியாவில் பிரிட்டிஸின் ஆட்சியை ஒடுக்க இப்பாலம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஜப்பானியர்கள் நேதாஜியை பயன்படுத்திக் கொண்டார்களா இல்லை நேதாஜி ஜப்பானியர்களை பயன்படுத்திக் கொண்டாரா என்பது புரியாத புதிரே. அழிவு என்னமோ செத்து மடிந்த தமிழினத்துக்கு தான். நேதாஜிக்கு இக்கொடுமைகள் தெரியாமல் இருந்திருக்குமா என்ன? சிந்திக்க வேண்டிய ஒன்று.

வார் கிரைம் எனப்படும் போர் கால கொடுமைகளுக்கு ஜப்பானி அரசினால் நட்ட ஈடு கொடுக்கப்பட்டதா? அதன் பேச்சு வார்த்தைகள் என்ன ஆனது என்பதற்கான விவரங்களையும் நாவலில் சொல்லி இருக்கிறார். அப்பகுதியை படிக்கும் போது மனதில் உதித்தது இது தான்: கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்கு ஆடுச்சாம்.

பி.கு: 'சயாம்-பர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூலினைப் பெற்றிட கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்க.
நூலின் விலை = RM20.00
பணத்தை வங்கி கணக்கில் போட்டுவிட்டு தொடர்பு கொள்க.
S.ARUNASALAM,

MAYBANK : 105037363735
Tel: +6012 300 2911
கலோலையும் அனுப்பலாம். நன்றி.

புத்தகம் வாங்க நினைக்கும் வெளிநாட்டு அன்பர்கள் என் மின்மடலில் தெரிவிக்கலாம். உங்கள் விண்ணப்பம் ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப்படும். viknesh2cool@gmail.com

==================================================
தலைப்பு: சயாம் மரண இரயில் - சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர்.
ஆசிரியர்: ஆர்.சண்முகம்
நயம்: வரலாற்று நாவல்
பக்கம்: 436
பதிப்பகம்: தமிழோசை பதிப்பகம், கோவை 641 012, தமிழ்நாடு.
அருண் அவர்களின் புத்தகத்தை படித்துவிட்டு செய்த சில தேடல்களின் வழி சயாம் மரண இரயில் சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர் எனும் நாவல் கிட்டியது. சுமார் 15 வருடங்களுக்கு முன் எழுத்தப்பட்ட அற்புதமான நாவல். மிக இரசித்துப் படித்தேன். நாவல் ஆசிரியர் சிறுகதைச் செல்வர் திரு.சண்முகம் அவர்கள்.

வரலாற்றில் சொல்லப்பட்ட விடயங்கள் அணைத்தும் நாவலில் சுவை குன்றாமல் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலும் விறுவிறுப்பிற்கு குறைவே இல்லாமல் நகர்கிறது.

இப்புத்தகத்தை பற்றி நண்பர் ஜவஹர் முன்னமே கூறி இருக்கிறார். நாவலாசிரியரோடு திரு.ஜவஹர் அவர்களுக்கு நல்ல நட்பு. புத்தகத்தின் முன்னுரையில் இந்நூல் உருவாக மூல காரணம் ஜவஹர் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானியர் காலத்தில் சாப்பாட்டுக்கும் துணிக்கும் பஞ்சப்பட்டு மரவல்லி கிழங்கை உணவாகவும் கோணி பையை உடையாகவும் தரித்து அலைந்தோர் பலர். உடுத்த உடையின்றி வீட்டில் முடங்கி கிடந்த பெண்களின் நிலை சொல்லப்படாத கருப்புச் சரித்திரம் எனக் கூறல் தகும்.

ஒரு இளைஞன் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு இருட்டில் நடக்கிறான். எங்கு செல்கிறான்? சயாமிற்கு. ஆம், இப்படி தாமாகவே முன் வந்து சயாமிற்கு சென்றவர்களும் இருக்கவேச் செய்கிறார்கள். காரணம் வறுமை.

மாயா கதையின் நாயகன். தந்தையை ஜப்பானியன் சயாமுக்கு பிடித்துக் கொண்டு போய்விடுகிறான். தாய் மிகச்சிரமப்படுகிறாள். வேறொரு ஆணை இணைத்துக் கொள்ள மாயாவிடம் அனுமதி கேட்கிறாள். அவனால் பதில் பேச முடியவில்லை. தன் தந்தையைத் தேடி சயாமிற்கு பேகிறான்.
இது முதல் அத்தியாய செய்தி. அதன் பின் சயாம் பயணத்திலும், இரயில் பாதை கட்டுமான இடத்திலுமே முழுக்க முழுக்க கதை நகர்த்தப்படுகிறது. காட்சி விஸ்தரிப்புகளை கதைப் போக்கில் மிக இலகுவாக மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர்.

அடுத்து என்ன நடந்துவிடுமோ எனும் அச்சம் நம் மனதில் ஊன்றிப் போகிறது. சுருங்கச் சென்னால் நாமும் இந்நாவலோடு வாழ்ந்துவிடுகிறோம். மாயா, அங்சானா, வேலு போன்ற காதாபாத்திரங்கள் நம்மை சுற்றி வாழ்வதாகவே உணர முடியும். சயாம் மரண இரயில் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் எனும் நாவல் நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டிய பட்டியலில் சேர்க்க வேண்டிய ஒன்று.

மலேசியாவில் இந்நாவல் கிடைக்க சற்றே சிரமம் இருப்பதை உணர்கிறேன். கோலாலம்பூரில் சுலபமாக கிடைக்கிறதா என தெரியவில்லை. இதன் இரண்டாம் பதிப்பு தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அன்பர்கள் சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும் என கருதுகிறேன்.

26 comments:

சுபாஷினி said...

மிகவும் அருமையான பதிவு :)

moorthy said...

very intresting

Krishna Prabhu said...

நல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி விக்னேஷ்வரன்.உங்களின் முந்தைய பதிவினைப் பார்த்து மலாயாவில் உள்ள என்னுடைய தம்பியின் குடும்பத்தினரிடம் சொல்லி புத்தகத்தை வாங்கிவிட்டேன். அவர்கள் மே மாத இறுதியில் இந்தியா வரும் போது தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் "சயாம் மரண இரயில் - சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர்" இந்த நாவல் சந்தையில் கிடைக்கிறதா என்ன? தமிழோசையின் தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன். நன்றி.

"அகநாழிகை" said...

விக்னேஷ்,
நல்லதொரு அறிமுகப்பதிவு. வரலாறு என்றாலே மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நிகழ்வுகள் இருப்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் புத்தக விலையையும், பதிப்பாளர் தொலைபேசி எண்ணும் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அருமையான.. ஆர்வத்தை தூண்டும் பதிவு. நன்றி,

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

RAHAWAJ said...

நன்றாக விமர்சித்துள்ளீர் விக்னேஷ்,மலேசியாவில் கிடைக்க சிரமம் என்றால் கோலாலம்பூரில் கிடைக்குமா என்ன?

Anonymous said...

இன்னுமொரு புத்தகமும் இதைப் பற்றி உலாவுகின்றது. நூலகத்தில் பார்த்த ஞாபகம்.ரங்கசாமி எழுதியிருக்கலாம்.

VIKNESHWARAN said...

@ சுபாஷினி

வருகைக்கு நன்றி...

@ மூர்த்தி

நன்றி...

@ கிருஷ்ண பிரபு

நிச்சயம் படித்துப் பார்த்து உங்களின் புத்தகம் பற்றிய பதிவில் குறிப்பிடுங்கள்.

சயாம் மரண இரயில் - சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர், இதன் முதல் பதிப்பு மலேசியாவில் நடந்தது. தற்சமயம் இப்புத்தகம் இங்கு கிடைக்கச் சற்றே சிரமமாக தெரிகிறது.

இரண்டாம் பதிப்பு தமிழ் நாட்டில் சமீபத்தில் வெளியீடு கண்டுள்ளது. நீங்கள் பெற்றுக் கொள்ள சிரமம் இருக்காது என்றே கருதுகிறேன். தமிழோசையின் தொலைபேசி எண் குறிப்பிடப்படவில்லை. உங்களுக்கு கிடைத்தால் தெரிவிக்கவும். பதிவில் குறிப்பிடலாம். வருகைக்கு நன்றி.

VIKNESHWARAN said...

@ அகநாழிகை

இந்திய விலை குறிப்பிடப்படவில்லை அன்பரே. தமிழ் ஓசையின் தொலைப்பேசி எண்ணும் இல்லை. மலேசியாவில் இவ்விரு புத்தகங்களும் 20 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நிச்சயம் படித்துப் பாருங்கள். நீங்கள் விரும்பக் கூடும். வருகைக்கு நன்றி.

@ ஜவஹர்

நான் சொல்ல வந்தது மற்ற இடங்களைக் காட்டினும் அங்கு சுலபமாகக் கிடைக்கக் கூடுமோ என்று தான். :) வருகைக்கு நன்றி.

@ புகழினி

ஆம், அ.ரெங்கசாமி எழுதிய நாவல். சினைவுச்சின்னம் எனும் தலைப்பில் வெளியீடு கண்டுள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. கிடைத்ததும் படித்துவிட்டு தெரிவிக்கிறேன். பகிர்புக்கு நன்றி நண்பரே.

’டொன்’ லீ said...

நன்றி ..இஞ்சால நூலகப் பக்கம் வந்தா எடுத்து படிக்கிறேன் :-)

வியா (Viyaa) said...

arumaiyana pativu viki..
antha puttakam enggu kidaikum?

VIKNESHWARAN said...

@ டொன் லீ

நிச்சயம் படிங்க... நல்ல அனுபவமாக அமையும்...

@ வியா

வருகைக்கு நன்றி. சரித்திர நூல் நீங்க வாங்க வேண்டிய முகவரி கொடுத்திருக்கேன்.

திரு.சண்முகம் எழுதிய நாவல் கோலாலம்பூரில் காசி மற்றும் மணோண்மணியம் போன்ற கடைகளில் தேடிப் பார்க்கலாம்.

thevanmayam said...

மலாயாவில் தோட்டங்களில் வேலை செய்வோரை ஏமாற்றி இட்டுச் செல்கிறார்கள். சயாம் சென்றால் நன்கு சம்பாதிக்கலாம். வேலை முடிந்ததும் தாயகம் திரும்பிவிடலாம் என ஆசை மொழி கூறி தலைக்கு ஒரு டாலருக்கு ஒவ்வொரு தமிழனும் விற்கப்படுகிறான். இதில் வருத்தம் என்னவென்றால் அவ்வாறு ஆள் சேர்ப்போரும் தமிழரே. அக்காலத்தில் மெத்த படித்த யாழ் தமிழர்களே மலாயாவின் மேல்மட்ட தொழில்களில் இருந்தார்கள்.
///

நல்ல புத்தகம் !!! ஒரு தமிழனின் விலை ஒரு டாலர் என்பதைப் படிக்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது!!

thevanmayam said...

ஓட்டும் போட்டுவிட்டேன்!! 100 பின்பற்றுவோரைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

வால்பையன் said...

வரலாற்றை திரும்பி பார்த்தால் ரத்தம் தோய்ந்த பாதை தான் கண்ணுக்கு தெரிகிறது!

VIKNESHWARAN said...

@ தேவன்மயம்

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

@ வால்பையன்

நிஜம்தான்.... வருகைக்கு நன்றி...

Anonymous said...

see this also
http://chozanaadan.blogspot.com/2006/07/15.html

VIKNESHWARAN said...

@ அனானி

படித்தேன், இரசித்தேன்.... நன்றி...

Anonymous said...

hi anna! nalla oru visaiyathai soli irukingga.Intha virivu buttakatthai padika toondogirathu! thodaravum!.Viknes(B.COM)

manokarhan said...

நல்ல விமர்ச்னம் தமிழனின் கன்ணிர் கதைக்கள் அதிகம்.கூலிக்கு மாரடித்து ஏமாந்த கூட்டம்மையா நம் தமிழார் கூட்டம்.மற்றவர்கள் நம்மை வாட்டி வதைத்ததை விட தமிழ் இன துரோகியினால் அல்லல் பட்டதுதான் அதிகம்.நன்றி விக்னேஷ்வரன்

VIKNESHWARAN said...

@ விக்னேஸ்வரி

வருகைக்கு நன்றி சகோதரி... நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம். படித்துப் பார்த்து சொல்லுங்க. வருகைக்கு நன்றி...

@ மனோகரன்

உங்கள் கருத்துக்கு நன்றி. ஒருவரின் அறியாமையை மற்றொருவர் தமக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வதை விட மோசமான செயல் வேறில்லை. இன்று மெத்த படித்துவிட்டும் சிலர் அறியாமையில் தான் கிடக்கிறார்கள்.

ஆய்தன் said...

மலேசியத்தில் வந்திருக்கும் அரியதொரு நூலுக்கு அருமையானதொரு அறிமுகத்தை எழுதியிருக்கிறீர்கள். மிக நன்று.

மறைக்கப்பட்ட மலேசியத் தமிழரின் வரலாற்றைத் தோண்டியெடுத்து ஆவணப்படுத்தியிருக்கும் அருமை நண்பர் கிள்ளான் அருண் ஐயா அவர்களின் இந்த அரும்பணி தமிழ் இனத்திற்குச் செய்யப்பட்டுள்ள பெரும்பணி..!!

Mark K Maity said...

I feel shame for the tamils becaue i am also from the same place. ippadithan eelathil malayaga tamillaruku nadantha anithiyilum sambanthapattullanar. really sorry

VIKNESHWARAN said...

@ ஆய்தன்

ஆய்தன் ஐயா வருகைக்கு நன்றி... சி.அருண் அவர்களின் முயற்சி பாராட்ட தக்கது... காலத்தால் அழியாத புத்தகமாய் திகழ்திடும் என்பதை நம்புவோம்...

@ மார்க்

உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி... ஈழத்தில் மலையக தமிழர்கள் பற்றிய செய்திகளை தொடர்பான சுட்டிகள் உண்டா?

கலையரசன் said...

சயாம் என்பது தாய்லாந்தின் பழைய பெயர். இதனை பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கலாம். மலேசிய தமிழரின் கடந்த கால அவலத்தை கண்ணீருடன் பதிவு செய்து வைத்திருக்கும் புத்தகம். பிரிட்டிஷ் காலத்தில் தமிழக தோட்டத் தொழிலாளரை மேற்பார்வை செய்ய கூட்டி வரப்பட்ட யாழ் தமிழர்கள், ஜப்பானியர்களுடனும் சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர் என்பது இந்த நூலில் இருந்து அறிய முடிகிறது. அப்படியானால் எஜமான் பிரிட்டிஷ் என்றாலும், ஜப்பானியர் என்றாலும் அவர்களுக்கு ஒன்று தான். பிரிட்டிஷ் காலத்தில், முழு இலங்கையிலும் யாழ்ப்பாண தமிழருக்கு, (அதிலும் உயர்சாதி வெள்ளாளர்கள்) மட்டும் ஆங்கிலேய உயர் கல்வி வாய்ப்பு வழங்கினார்கள். அப்படித்தான் ஒரு மத்தியதர வர்க்கம் உருவானது. பிரிட்டிஷார் அவர்களை அரச நிர்வாகத்தில் ஈடுபடுத்தினார்கள். சிங்கள பகுதிகளிலும், மலையகத்திலும் இவர்கள் தான் பிரிட்டிஷ் காலனிய அரசின் பணியாளர்களாக இருந்தனர். இப்போது இந்த வரலாறு தமிழ் தேசிய அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

VIKNESHWARAN said...

@ கலையரசன்

நீங்கள் சொல்வது வருத்தமான உண்மை. எதிர்காலத்தில் இந்நிலை மீண்டும் வராமலிருந்தால் நலம். அங்கிகாரம் கிடைக்கும் பட்சத்தில் மனிதனின் நிலைபாடும் மாறிவிடுகிறது.

ஜோசப் பால்ராஜ் said...

தம்பி, இந்த சயாம் மரண இரயில் புத்தகத்த பத்தி நான் சொன்னேனே மறந்துட்டீங்களா?
ஒரு வராலாற்றை ஒட்டிய நாவல் என்பதாலும், அதன் சுவாரசியத்தால் கவரப்பட்டதாலும் இருமுறை அந்த நூலை படித்தேன். அதிலும் வேலு என்னும் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மாயாமீது அவர் காட்டும் அன்பு, மாயாவை எந்தவிதமான துன்பங்களும் அணுகாமல் பார்த்துக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவை. வேலுவின் மரணம் கதை என்ற போதும் ஆழமான மனவருத்தத்தை ஏற்படுத்திய ஒன்று.

மிகச் சிறந்த நூல் அது.