அரசு வரையறை செய்த ஊதியம் என்பதை நாம் விவரித்து பேசினால் அது சற்று சர்ச்சைக்குறிய செய்தியாகவும் அமைந்துவிடுகிறது. சில காலத்திற்கு முன் நாளிதழ்களில் ‘வரையறை ஊதியம்’ பற்றிய செய்திகளை நாம் கண்டிருக்கக் கூடும். கொளுத்திய மத்தாப்பை சட்டென நீரில் விட்டெறிந்தக் கதையாக ‘புஸ்’ ஆகி அமிழ்ந்து போய்விட்டது அச்செய்தி.
’வரையறை ஊதியம்’ என்பதை நாம் முன்னிறுத்தி விவாதிக்கையில் பொருளாதாரம், அரசியல், சமூகம் என நாட்டின் முக்கிய கூறுகளை அலசி ஆராய்ந்து இடித்துரைப்பது அவசியமாகிறது. சரி இரண்டு பத்திகளைக் கடந்தும் வரையறை ஊதியம் எனும் வஸ்துவைப் பற்றி நான் விளக்கவில்லையே. அது சலிப்புதட்டிவிடாதா?
1970-ஆம் ஆண்டு நடந்த அனைத்துலக ஊழியர்கள் சங்க(ILO) மாநாட்டில் வரையறை ஊதியம் தொடர்பான பேச்சுகள் எழும்பின. அதன் தீர்வாக வேலை செய்யும் ஊழியனின் வாழ்வியல் மற்றும் குடும்பம் தொடர்பான அடிப்படைச் செலவுகளைக் காட்டினும் அவன் ஊதியம் குறைவாக இருக்கக் கூடாது எனும் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். தனது அடிப்படைச் செலவுகளைக் காட்டினும் குறைவான ஊழியம் பெறுபவன் ஏழை ஊழியன் என வரையறுக்கப்பட்டது.
2000த்தாம் ஆண்டின் கணக்காய்வின்படி உலகம் முழுக்க சுமார் 50 கோடி மக்கள் ஏழைத் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பொரும்பாலானோர் இளைஞர்களும், பெண் தொழிலாளர்களும் ஆவர். இவர்களின் வேலை நாள் மற்றும் நேரம் யாவும் நிரந்தரமற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதிகமான ஏழைத் தொழிலாளர்கள் வேளாண்மை மற்றும் விற்பனைத் துறையைச் சார்ந்தவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாளி வர்க்கத்தினருக்கு இந்த சட்ட திட்ட முறைகள் வேம்பாகவே அமைந்தது. இதன் பயன்பாட்டை கவனிக்கும் முன்னதாக. முதலாளி வர்க்கத்தினரின் புலம்பல்களையும் நாம் சற்றே கவனிப்போம். வரையறுக்கப்பட்ட ஊதியம் அமல் செய்வதனால் பொருள் வெளியீட்டுச் செலவு அதிகரிக்கும்.
இதனால் முதலீட்டாளர் நட்டத்தைச் சந்திக்க நேரிடும். தொடர்ந்து வியாபாரம் பாதிப்படைந்து கடையைச் மூட நேரிடும். இது சமுதாயத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெருஞ்சேதத்தை விளைவிக்கக் கூடியது. இக்கூற்று குறுந்தொழில் மற்றும் நடுத்தர முதலாளிகளின் பெயரில் ஏற்புடையதாக அமையும். பெருந்தொழில் கலாநிதிகளுக்கு இது பெரும்பாதிப்பை உண்டுச் செய்யாது என்பதே உண்மை.
எது எப்படியாகினும் உலக நாடுகளில் பல, நாட்டு மக்களின் நலம் கருதி அரசினால் வரையரறுக்கப்பட்ட ஊதியத்தை அமல்படுத்தி வருகிறார்கள். அந்நாடுகளில் இது எப்படி சாத்தியமாயிற்று?
நியூசிலாந்தில் 1896-ஆம் ஆண்டும், ஆஸ்திரேலியாவில் 1899-ஆம் ஆண்டும் அரசினால் வரையறை செய்யப்பட்ட ஊதியம் அமல்படுத்தப்பட்டது. இதுகாறும் பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து அதன் பயன்பாட்டை நாட்டின் முன்னேற்றத்திற்கு சொல்லி வருக்கிறார்கள்.
வரையறை செய்யப்பட்ட ஊதியம் எவ்வகையில் நன்மையாக அமையும்? ஊழியர்கள் தங்கள் உழைப்புக்கு தகுந்த குறைந்தபட்ச வருமானத்தை பெற முடியும். வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய உதவும். இதனால் வறுமையின் பிடியில் இருந்து ஏழைத் தொழிலாளர்கள் விடுபட முடியும்.
வரையறை ஊதியம் வேலை செய்யும் தனி நபருக்கு மட்டும் தான் நன்மையாக அமைகிறதா? நிச்சயமாக இல்லை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது வகை செய்கிறது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது வியாபாரம் அதிகரிக்கச் செய்யும். அரசுக்கு வரியும் அதிகரிக்கும். அது போக தகுந்த ஊழியம் பெரும் மக்கள் வெறுமனே அரசின் உதவிக் கரத்தை வேண்டி நிற்க அவசியமற்று போகும். நாட்டின் நிதியை சரியான முன்னேற்றத்துக்கு வெவ்வேறு துறைகளில் பயன்படுத்த அரசுக்கும் இது வடிகாலாக அமையும்.
நமது நாட்டில் ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வை பற்றிய விவாதங்கள் எழும்பும் போதும் அது அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமைவதை காண முடிகிறது. இது வருத்தத்திற்குரிய ஒன்று. தனியார் துறை மீது கவனம் செலுத்தாத மெத்தன போக்கையே இது குறிக்கிறது. அரசின் இம்மாதிரியான முடிவுகளால் ஒரு சாரர் மட்டுமே பயனடைகிறார்கள்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. தனியார் மற்றும் அரசு துறை இரண்டுமே நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்கு வகிக்கிறது. தனியார் துறை உயர்ச்சியடையும் போது அரசு துறைக்கும் அது நலம் செய்கிறது. அரசின் நல்லாட்சியானது தனியார் துறை முன்னேற வழி செய்கிறது. அப்படி இருக்க ஒரு கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பார்க்கும் முறை தகாத ஒன்றாகும்.வரையறை ஊதியம் அமல் செய்துவிட்டால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என கேட்கலாம்..? அதன் முறையான செயல்பாடும் அவசியமாகிறது. சட்டதிட்டங்களும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் சரியாக அமைந்திடல் வேண்டும். அதுவே ஏழை தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க உதவும்.
முறையான ஊதியம் பெறும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம். இதனால் வெளியீடுகளுக்கும் அதிக வரவேற்பு ஏற்படும். அதிக வெளியீடுகள் செய்ய மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக வகை செய்கிறது. முறையான ஊதியம் பெறும் மக்கள் மன நிறைவோடு வேலையில் ஈடுபடுவார்கள். தொடர்ந்தாற் போல் இது வெளியீட்டை அதிகரிக்க உதவி புரியும்.
அதிகபடியான முதலாளிகள் அல்லது முதலீட்டாளர்கள் குறைந்த வருமானமே அவர்களின் வியாபார முன்னேற்றத்துக்கு வழி செய்வதாக எண்ணம் கொண்டுள்ளார்கள். குறைந்த வருமானம் அதிக லாபத்தை கொடுப்பதாக கருத்துகிறார்கள். இது குறுகிய சிந்தனையின் அடிப்படை முடிவுகள். குறைந்த வருமானத்தால் கைதேர்ந்த தொழிலாளிகள் அதிக நாட்கள் ஓரிடத்தில் வேலை செய்ய முனைவதில்லை. புதியவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் போது அவர்கள் வேலை பழகும் காலம் உட்பட வெளியீடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது.வரையறை ஊதியத்தை அமல் செய்ய சரியான கணக்கு முறைகள் அவசியம். தவறான கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிகபடியாகவோ அல்லது குறைவாகவோ ஊதியம் கொடுக்கப்பட்டால் பக்க விளைவுகளையே நாம் சந்திக்கக் கூடும். மலேசியாவில் இதற்கான முயற்சிகள் எவ்வகையில் இருக்கின்றன என சரிவர தெரிவதில்லை. ஊடகங்கள் இச்செய்திகளை மக்களிடம் சரிவர சமர்ப்பிக்க தவறி இருக்கின்றன என்றேக் கூற வேண்டும்.
நம் நாட்டில் அன்னிய தொழிலாளர்களின் வருகையும் வரையறை ஊதிய அமலாக்கத்திற்கு முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது. ‘நீ இந்த வேலையை செய்யாவிட்டால் பரவாயில்லை, அதற்காக ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்’ எனும் நிலை தான் இங்கு அதிகமாக இருக்கிறது. கொடுப்பதை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவதை உசிதமாக கருதுகிறார்கள் நம் மக்கள். காரணம் என்ன? அன்னிய தொழிலாளர்கள் அதே வேலையை குறைந்த வருமானத்தில் செய்து கொடுக்க எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள்.
நமது அரசு, தொழிலாளர்கள் விடயத்தில் கவனம் செலுத்த தவறி இருக்கிறதா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறதா எனும் நிலையே நீடிக்கிறது. இதை இடித்துரைத்து கேட்பார் இல்லை. காரணம் அச்சமே.
நம் நாட்டில் வருமையின் பிடியில் சிக்கி இறந்ததாக தகவல்கள் இல்லை ஆனால் மாசக் கடைசியில் செலவுகள் கை கடிக்க சீனரின் நகை அடகுக் கடையில் வரிசையில் நிற்போர் அதிகம். இதில் அதிகமானோர் நம் இந்தியர் என்பது வருத்தமான ஒன்றே. கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எவ்வகையில் போராடுகிறார்கள் என்பன வினாக் குறியே.
(பி.கு: அநங்கம் சிற்றிதழில் வெளிவந்த எனது கட்டுரை. இதழ் 4, மே 2009, பக்கம் 40)
12 comments:
பெரிய மேட்டரா இருக்கு!
இந்தியாவில் இது அமலுக்கு வந்துருச்சா?
முதலாளிமாருங்க விடமாட்டாங்களே!
வரையறை ஊதியம், மலேசியாவில் சாத்தியமா? இந்தியாவில் சாத்தியம் இல்லை.
இந்தியா வளர்ந்த நாடாவது எப்போது என்று பலர் கேட்கிறார்கள். அணு குண்டு முதல் ஏற்றுமதி வரை அதற்கு பல காரணம் கண்டு பிடித்து சொல்கிறார்கள். ஆனால் தொழிலாளிகளுக்கான வரையறை ஊதியம் பற்றி மிகப் பெரிய பொருளாதார அறிஞர்கள் கூட பேச மாட்டார்கள்.
நாங்கள் ஒரு நிமிஷம் சிந்தித்து பார்ப்போம். உலகில் எந்தெந்த நாடுகள் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் வருகின்றதோ. அங்கெல்லாம் வரையறை சம்பளம் பற்றிய சட்டம் இருக்கின்றது.
ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். சுவீடன் முதல் பிரான்ஸ் வரை, அடிப்படை சம்பளம் என்ற ஒன்று வைத்திருக்கிறார்கள். சாதாரண துப்பரவு தொழிலாளிக்கும், வங்கியில் குமாஸ்தா வேலை செய்பவருக்கும் ஆரம்பத்தில் ஒரே சம்பளம் வழங்கப்படும். வங்கியில் வேலை செய்பவர் காலப்போக்கில் தனது கல்வித் தகமையை மேம்படுத்துவதன் மூலம் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்பது மட்டுமே வித்தியாசம். இந்த தகவல் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கு நம்ப முடியாமல் இருக்கும்.
இந்தியாவில் இப்போதும் பிரிட்டிஷ் முறையை பின்பற்றுகிறார்கள். மலேசியாவிலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அது என்ன பிரிட்டிஷ் முறை? அடிப்படை தொழில்களில் வழங்கப்படும் சம்பளத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கும். உதாரணத்திற்கு பிரிட்டிஷ் முறையின் கீழ் துப்பரவுப் பணியாளருக்கு குறைந்த ஊதியமும், வங்கி ஊழியருக்கு அதிக சம்பளமும் வழங்கப்படுவது. பிரிட்டனில் இந்த இடைவெளியை தற்போது குறைத்து விட்டார்கள். ஆனால் முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளில் இப்போதும் பழைய முறை பின்பற்றப்படுகின்றது. இந்த விஷயத்தில் ஆள்பவர்களின் மனம் மாறவேண்டியுள்ளது.
தொழிலாளர் சம்பளம் அதிகரித்தால், பொருளின் விலை அதிகரிக்கும் என்பது உண்மை தான். அதே நேரம் அந்தப் பொருளை வாங்கும் பாவனையாளர்கள் தொழிலாளர்களும் தான். அமெரிக்காவில் "Be American, Buy American" என்று சொல்லி உள்நாட்டு பொருட்களை வாங்க ஊக்குவித்தது போல செய்யலாம். மக்கள் மனதில் வெளிநாட்டுப் பொருள் சிறந்தது என்ற அடிமைப் புத்தி மறைய வேண்டும்.
@ வால்பையன்
இந்தியாவில் அமல்படுத்த முடியும், அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிது வழி வகுக்கும். பழுதடைந்த இந்திய அரசியல் முறையில் இதற்கு வாய்ப்பு கொடுப்பார்களா? முதலாளி வர்க்கத்தினை போற்றும் செயலை தவிர்த்தால் அரசினால் இதை சாதிக்க முடியும்.
@ மணிபக்கம்
மலேசியாவில் சாத்தியமே. அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது தான் வருத்ததிற்குறிய ஒன்று. ஏன் இந்தியாவில் சாத்தியம் இல்லை?
@ கலையரசன்
வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் நாட்டுப்பற்றின்மையினாலும், பிரிஸ்திஜ் போன்றவையினாலும் உண்டாவது என சொல்ல முடியுமா? சிலர் வெளிநாட்டு பொருட்களையே போற்றி புகழ்கிறார்கள். இது ஜெர்மனிய தயாரிப்பு, ஜப்பானிய தயாரிப்பு என சொல்லிக் கொள்வதில் பிரியப்படுகிறார்கள். வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்றத் தாழ்வின் அடிப்படையில் அரசியல் நடத்திவிடலாம் எனும் போக்கும் இதற்கு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடும்.
சிந்திக்க வேண்டிய கட்டுரை நண்பா,
இந்தியாவில் இது போல நடக்கும்
வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை,
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எவ்வகையில் போராடுகிறார்கள் என்பன வினாக் குறியே.//
முற்றிலும் உண்மை. திருவிழாக்களில் ஒரு சட்டமன்ற , நாடளமன்ற உறுப்பினர் அல்லது கட்சி தலைவருக்கு மாலை அணிவித்து சில ஆயிரங்களை மட்டும் பெற்று நம்மி்னம் மாபெரும் மகிழ்ச்சி அடைவது அதைவிட கேவலம்.
//நமது நாட்டில் ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வை பற்றிய விவாதங்கள் எழும்பும் போதும் அது அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமைவதை காண முடிகிறது.//
ஏனெனில் இன்றைய நமது அரசு ஊழியர்கள் பெரும்பான்மையினர் மலாய்காரர் மற்றும் பூமி்புத்ராக்களை அதிகமாக கொண்டுள்ளதுதான் காரணம். அதுமட்டுமி்ன்றி PR பெற்ற சில ( இசுலாமி்ய) அன்னிய நாட்டவர்களுக்கு அடிமட்ட அரசாங்க வேலைகள் மற்றும் குத்தகைகள் வழங்கப் படுவதாக நம்பப்படுகிறது. எந்த அளவு உண்மையோ.
//நம் நாட்டில் அன்னிய தொழிலாளர்களின் வருகையும் வரையறை ஊதிய அமலாக்கத்திற்கு முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது//
இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார மற்றும் கலாசார அடிப்படையில் பாதிப்பது அனைவரும் அறிந்ததே. அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் பல நிறுவனங்களில் ஆட்சியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் இவர்களை ஆதரிப்பவர்கள் முதலாளிகளாக இருப்பதுதான் காரணம்.
நம் சமூகம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட என்ன செய்லாம்.
1) ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க அல்லது அரசாங்க சார்பு நிருவனங்களில் வேலை
2) ஏற்கனவே அரசாங்க அல்லது அரசாங்க சார்பு நிருவனங்களில் வேலைகளில் இருப்பவர்களுக்கு உரிய பதவி உயர்வு.
3) நமது அமைச்சர், துணை அமைச்சர்கள் மற்றும் மாநில இந்திய ஆட்சியாளர்கள் நமது தொழில் முனைவர்களுக்கு வியாபார பயிற்சி தருகிறோம் அட்டை வளர்க்க வாங்க குருவி வளர்க்க வாங்க என்பதை விடுத்து குறைந்த பட்சம் மாவட்ட அளவில் நிச்சய ஆதாயம் தரும் குத்தகைகள் ( உதாரணம் மண்டபம் பாதுகாத்தல், சிறு மேம்பாடு குத்தகை, நிகழ்ச்சி உபகரண பொருட்கள் சப்ளை ) பெற்று தர வேண்டும்.
4) நாமும் அடிக்கடி வேலைக்கு விடுமுறை எடுக்கும் பழக்கத்தை விட வேண்டும் ( இதைப்பற்றி அதிகம் எழுதலாம்)
//வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் நாட்டுப்பற்றின்மையினாலும், பிரிஸ்திஜ் போன்றவையினாலும் உண்டாவது என சொல்ல முடியுமா?//
அது சரி தான். நானும் பல ஐரோப்பிய நாட்டு மக்களைப் பார்த்திருக்கிறேன். தங்கள் நாட்டின் சொந்த உற்பத்திப் பொருட்களை பெருமையோடு பாவிப்பார்கள். அதற்காக வெளிநாட்டுப் பொருட்களை பாவிப்பதில்லை என்று சொல்ல வரவில்லை. தவிர்க்கவியலாது சந்தையில் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. மலிவாகவும் இருக்கின்றன. சில நேரம் தரம் கருதியும் வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவார்கள். உதாரணம் ஜப்பான் சோனி டி.வி. அரசாங்கம் சில கட்டுப்பாடுகளைப் போடுகின்றது.
வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் இருக்கிறது. இறக்குமதி செய்வதற்கு வரி அதிகம்.
எது எப்படி இருந்தாலும் யாரும் இங்கே வெளி நாட்டுப் பொருட்களைப் பாவிப்பதை ஒரு பிரிஸ்திஜ் ஆக கருதுவதில்லை.
|நம் நாட்டில் வருமையின் பிடியில் சிக்கி இறந்ததாக தகவல்கள் இல்லை|
உண்மையாவா? !!!
|கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எவ்வகையில் போராடுகிறார்கள் என்பன வினாக் குறியே.|
நல்லக் கேள்வி.
அருமையானக் கட்டுரை நல்ல அலசலாக இருந்தது.
நல்ல
/
மாசக் கடைசியில் செலவுகள் கை கடிக்க சீனரின் நகை அடகுக் கடையில் வரிசையில் நிற்போர் அதிகம். இதில் அதிகமானோர் நம் இந்தியர் என்பது வருத்தமான ஒன்றே. கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எவ்வகையில் போராடுகிறார்கள் என்பன வினாக் குறியே.
/
:((
இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் இந்தியாவுலதான் இருக்கும்னு நெனச்சேன். அங்க கூட இருக்கா? ஆச்சரியம் தான்.
@ அகநாழிகை
எந்நாடாக இருப்பினும் அமல்படுத்த சாத்தியங்கள் உண்டு... அந்நாட்டு அரசின் முயற்சியில் உள்ளது. வருகைக்கு நன்றி..
@ தமிழ்வாணன்
சிறப்பான கருத்துகள்.. இவற்றை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படுமே... :))
@ முத்துராமலிங்கம்
நன்றி...
@ மங்களூர் சிவா
வருகைக்கு நன்றி...
@ கலையரசன்
தகவலுக்கு நன்றி அன்பரே...
@ பப்பு
பிரச்சனைகள் இல்லாவிட்டால் அரசியல் இயந்திரம் செயல்பட சிரமமாகுமே..
Post a Comment