Thursday, April 02, 2009

வருச நாட்டு ஜமீன் கதை!!

புத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை
ஆசிரியர்: வடவீர பொன்னையா
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
விலை: ரூ50

புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக் கண்டவுடன் எடுத்து புரட்ட ஆரம்பித்தேன். உள்ளே மேலும் சில பழமையான படங்களோடும் ஓரமாய் இருக்கும் சிறு குறிப்புகளும் கவரும் வண்ணம் இருந்தன. சரி படித்துப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். வடவீர பொன்னையா என்ற எழுத்தாளரின் எழுத்தை முதல் முறை வாசித்தேன்.

இதைக் கதை என்று சொல்வதை விட நீள் சரித்திரக் கட்டுரை என்று தான் சொல்ல வேண்டும். சாபத்தால் சரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் உண்மைக் கதை எனும் கோடிட்ட வார்த்தைகளை முன்னமே தெரிவித்து விடுகிறார்கள். மூன்று தலைமுறையில் ஜமீனில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. கதையை கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் இட்டுச் சென்றிருப்பது ஆசிரியரின் பலம்.

இக்கதை சம்பந்தப்பட்ட மனிதர்களையும், குடும்ப நண்பர்களையும், வாரிசுகளையும் ஆசிரியர் நேரில் கண்டு சம்பவங்களை உறுதி செய்து சம்பவங்களை லாவகமாக கோர்த்து எழுதி இருக்கிறார். ஜமீன் மிரட்டல், ஏழை மக்கள், பளியர்கள், கவுடள் நம்பிக்கை, சாபம் என கதையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஈர்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஜமீன்கள் பெண்கள் விசயத்தில் பாரபட்சம் பார்க்காமல் ஏக போகமா வாழ்ந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் விலாவாரியா விவரிச்சு எழுதப்பட்டிருக்கிறது. சுவாரசியத்துக்காக சில புனைவுகள் சேர்க்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. ஜமீன் அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பதை விட ஜமீன் வாரிசுகளின் ஏகாந்த வாழ்க்கை முறையும், கணக்கு வழக்கு இல்லாமல் கடன் வாங்கும் போக்கும் காரணமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர் காலத்தில் ஆராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்ட தொல் பொருள் செய்திகளும் கதை போக்கில் சொல்லப்படுகிறது. கதையை படித்து முடித்த பிறகும் சில கதாப்பத்திரங்களும், சில இடங்களில் சொல்லப்படும் கருத்தும் இன்னமும் அழியாமலே இருக்கிறது.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு மனிதன் மனதளவில் சுதந்திரமாக செயல்படவும் வல்லமை பெறவும் துடிக்கிறான், எனவே மனிதர்கள் மனதில் தான் யுத்தங்கள் தொடங்குகின்றன. அவர்களின் மனங்களிலேதான் அமைதியும் உண்டாக வேண்டும் என சில வரிகள் நெஞ்சில் பதிகின்றன.

மூன்றாவது சாம்ராஜியத்தில் இருக்கும் ஜமீன் மைனர் பாண்டியன். இவரின் இறப்போடும் அதன் பின் இன்றளவில் அவர்களின் பரம்பரையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதாக கதை முடிக்கப்படுகிறது. இக்கதை எழுதும் போது மைனர் பாண்டி திருமணம் செய்து கொண்ட பெண் உயிரோடு இருந்திருக்கிறார். 73 வயது அவருக்கு.

அவருடைய புகைப்படத்தோடும் சில பேட்டிகள் போடப்பட்டிருக்கின்றன.மைனர் பாண்டிக்கு 34 வாயதாக இருந்த போது அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு 13 வயது. மாட்டு வண்டியில் போய் கொண்டிருக்கும் போது பார்த்தவுடன் பிடித்துப் போய் தூக்கிக் கொண்டு சென்று திருமணம் செய்துக் கொள்கிறார். கேட்க கேளியாகவும் கொடுமையாகவும் தான் இருக்கும்.

பாலிய விவாகம் என்பது அக்காலகட்டத்தில் பெரிய விசயமாக இருந்ததாக தெரியவில்லை. அவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்து வைத்தே அந்த ஆசாமிகளுக்கு அத்தனை மனைவிகளும் வைப்பாட்டிகளும் என்றால் இன்றய நிலையில் 29 அல்லது 30 வயதில் திருமணம் செய்வார்கள் என்றால் என்னாவது? சற்று சிந்த்திக்க வேண்டிய விசயம் தான். இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வேலை வெட்டி) இருந்திருக்குமோ? :)

அன்றைய நிலையிலேயே பெண்கள் விழிப்படைந்தார்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் வேலுத்தாயம்மா. இவர் கொண்டமனூர் சாமியப்ப நாயக்கரின் முதல் மனைவி. மைனர் பாண்டியனின் அம்மா. சுகபோகியாக இருக்கும் கணவனை விட்டுச் சென்று வாழ்கிறார். மைனர் பாண்டியும் பொறுப்பில்லாமல் இருக்கவும், அவரை விட்டும் தனித்து வாழ்கிறார். மைனர் பாண்டி இறந்தது 1951-ஆம் வருடம். வேலுதாயம்மா இறந்தது 1956-ஆம் வருடம். மைனர் பாண்டியின் இறப்புச் சடங்கிலும் அவர் கலந்துக் கொள்ளவில்லை. அப்படி ஒரு மனோதிடமான பெண். கணக்கு வழக்குகளை சீராக எழுதி கையெப்பம் இட்ட பிரதியையும் ஸ்கேன் செய்து போட்டிருக்கிறார்கள். இன்னும் பல விடயங்கள் பார்க்க படிக்க திகட்டாத தேனாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

உண்ணாம கெட்டுப் போச்சி உறவு,
பார்க்காம கெட்டுப் போச்சி பயிரு,
ஏறாம கெட்டுப் போச்சி குதிரை,
அடிக்காம கெட்டுப் போச்சு பிள்ளை,
முறுக்காம கெட்டுப்போச்சி மீசை.

சாபத்தோட வீரியத்துக்கு
சாம்ராச்யம் உரமாச்சு..
பூமியில பொதஞ்ச கதை
மறுபடியும் கருவாச்சு..
நல்ல சனங்க போற பாதையில
நல்ல விதை முளைக்கும்..
சரித்திரத்த சொல்லுகிற
சாட்சியாக இருக்கும்..

இப்படியாக சில கிராமிய பழமொழிகளும் மிக இலகுவாக கோர்க்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தை இன்னும் சிறப்பாக அச்சிட்டிருக்கலாம். ஆனந்த விகடன் சைசில் சிறுவர் புத்தகத்தை போல் இருக்கிறது. கள்ளிக் காட்டு இதிகாசத்தை போன்ற அளவில் அச்சிடப்பட்டிருந்தால் பக்கங்களும் கூடி இருக்கும். கையடக்கமாக படிப்பதற்கும் வசதியாக இருக்கும். எப்படி இருப்பினும், படித்து முடித்ததும், ஏதோ ஒரு தேடலுக்காக மீண்டும் படிக்கச் சொல்கிறது வருச நாட்டு ஜமீன் கதை.

30 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமையான முயற்சி விக்கி,
இதைப்போல எங்கள் ஊரில் இருக்கும் ஜமீன்தார்களைப் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. நிறைய தகவல் சேகரிக்க வேண்டி இருப்பதால் தள்ளிப் போட்டிருக்கிறேன். மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும்.

நட்புடன் ஜமால் said...

நல்ல எழுதியிருக்கீங்க.

அந்த புத்தகத்தை படித்தால் இவ்வளவு சுவையா இருக்குமா தெரியலை.

படிச்சி பார்ப்போம் ...

மாயவரத்தான் said...

இந்த 'வட வீர பொன்னய்யா' வேற யாருமில்லை.. விகடனின் பிரபல புகைப்படக்காரர் பொன்ஸீ. (பொன். சந்திரசேகரன்)

கிருஷ்ணா said...

புத்தகத்தையே படிச்சிட்ட மாதிரி இருக்கு!

சென்ஷி said...

:-)

எழுத்து விமர்சன நடை நல்லாயிருக்குது விக்கி...

இன்னும் படிக்காத புத்தகம். நோட் பண்ணிக்கிட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி :-)

வெங்கட்ராமன் said...

மன்னன் மகள் படிக்க வேண்டும் என்று வாங்கியிருக்கிறேன். அடுத்து வருஷ நாட்டு ஜமீன் கதை தான். . . .

Anonymous said...

உன்னுடைய விமர்சனம் மறுபடியும் அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லுகிறது. அலமாரியில் துயிலுகிற அதனைத் தூசி தட்ட வேண்டும்.

நூலைப் பற்றி உனக்கு என்ன விதமான விமர்சனம் இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் மூண்று தலைமுறைக் காலம் வருசநாட்டில் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வே ஏற்பட்டது. மைனர் தொழுநோயாளியாக உயிரை விடுகிற கட்டம் மனதை என்னவோ செய்தது. படித்துவிட்டு வருகிறேன்.

மலர்விழி said...

அருமையான பதிவு விக்னேஷ்...
புத்தகத்தைப் படித்தால் சுவாரிசியம் உண்டோ இல்லையோ...தங்களின் எழுத்து மெருகேறிக் கொண்டு வருகிறது...
விமர்சனத்திலேயே வேலுத்தாயம்மா என் மனதில் குடியேறிவிட்டார்..

தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி:)

ஆயில்யன் said...

நிறைய முறை வருச நாட்டு ஜமீன் கதை ஆ.வியிலும்,புத்தக விளம்பரத்தினையும் மட்டும் பார்த்து வேகமாய் புரட்டிய மனம் நிதானித்தது பதிவில்....!

வாய்ப்பு கிடைத்தால் நானும் படித்துப்பார்க்கின்றேன் !

புருனோ Bruno said...

பல வருடங்களுக்கு முன்னர் தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன்

ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர் என்பதில் சந்தேகமே இல்லை

சி தயாளன் said...

நல்ல பதிவு விக்கி...இப்படியான நூல்களை நீங்கள் தேடிப் பிடித்து படிப்பதுடன் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துவதை வரவேற்கிறேன்..:-))

Kalaiyarasan said...

தமிழகத்தின் கடந்த கால வரல்லற்றை பதிவு செய்யும் இது போன்ற புத்தகங்களும் வருகின்றது என்பதை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.

உங்களுக்கு கட்டுரை, கதை, மட்டுமல்ல புத்தக விமர்சனமும் நன்றாக வருகிறது. இலக்கியத்துலே தூள் கிளப்பெறீங்க.

கு.உஷாதேவி said...

இந்த புத்தகத்தை நான் படிவம் 5 பயிலும்போது படித்திருக்கிறேன். உள்ளே நிறைய கவர்ச்சியான படங்களும் உண்டு.

குமார் said...

வணக்கம் தோழாரே!
சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தப் புத்தகம். உங்கள் பதிவைப் படித்தப் பிறகு மீண்டும் மனது கதையை அசைப்போடுகின்றது. தமிழர்களின் களவியல் திருமணம், அரசர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தெளிவாக பதிவு செய்யப்பட்ட புத்தகம். நேரம் கிடைத்தால் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.

Anonymous said...

அருமை.

ஆளவந்தான் said...

//
லாவகமாக கோர்த்து எழுதி இருக்கிறார்
//
நீங்களும் தான் :)

ஆளவந்தான் said...

//
உண்ணாம கெட்டுப் போச்சி உறவு,
பார்க்காம கெட்டுப் போச்சி பயிரு,
ஏறாம கெட்டுப் போச்சி குதிரை,
அடிக்காம கெட்டுப் போச்சு பிள்ளை,
முறுக்காம கெட்டுப்போச்சி மீசை
//
சூப்பரு :)

ஆளவந்தான் said...

//
ஜமீன் அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பதை விட ஜமீன் வாரிசுகளின் ஏகாந்த வாழ்க்கை முறையும், கணக்கு வழக்கு இல்லாமல் கடன் வாங்கும் போக்கும் காரணமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
//
அது சாபத்தின் காரணமாகவுமிருக்லாமில்லையா?

ஆளவந்தான் said...

//
இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வேலை வெட்டி) இருந்திருக்குமோ? :)
//

வேலை வெட்டி எல்லாம் இருந்தது..க்டுமையாகவே உழைத்திருந்திருக்கின்றனர்.

ஆனா அவங்க வெட்டி ஆடம்பரத்திற்கு உழைக்கவில்லை, அதனால் தான் சுகபோகமா வாழ்ந்திருக்காங்க

ஆளவந்தான் said...

//
இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வேலை வெட்டி) இருந்திருக்குமோ? :)
//

வேலை வெட்டி எல்லாம் இருந்தது..க்டுமையாகவே உழைத்திருந்திருக்கின்றனர்.

ஆனா அவங்க வெட்டி ஆடம்பரத்திற்கு உழைக்கவில்லை, அதனால் தான் சுகபோகமா வாழ்ந்திருக்காங்க

அப்பாவி முரு said...

நல்ல பதிவு.,

பெண்கள் விசயத்தாலேயே பல ஜமீன்தார்கள், தங்களின் ஜமீன்களை இழந்துள்ளார்கள்.

நம்ம் ஊர் பக்கமும் பல் பழைய ஜமீனி வாரிசுகள் மிக கஷ்ட்டமான சூழ்நிலையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டுள்ளனர்.

Anonymous said...

anna vimarsanam arumaiyaga irukirathu! Ennakku antha kathai puttagattai padika aarvem varugirathu!very good keep it up! namma ilainyergal samuga seer kettil irunthu veliyaga oru nalla katturai eluthavum!vazhi korrum vagaiyil katturai amainthal sugam! thank you. take care!

தராசு said...

கலக்கல் விமர்சனம்.

கையில் எடுத்ததும் கீழே வைக்காமல் முழுவதும் படித்து முடித்து விட்டு வைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.

வடவீர பொன்னையா அருமையாக எழுதி இருப்பர். அதிலும் ஜமீந்தார் வேட்டைக்குச் செல்லும் காட்சியை வர்ணித்திருப்பார் பாருங்கள். அருமை.

RAHAWAJ said...

நல்ல விமர்சனம் விக்னேஷ்,கதையை படிக்கதூண்டுது

வால்பையன் said...

உங்களுடய அறிமுகமே படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா. நிச்சயமாக எழுதுங்கள்.

@ நட்புடன் ஜமால்

நன்றி... :) ஐஸ் தானே :)

@ மாயவரத்தான்

நன்றி...

@ கிருஷ்ணா

அப்படியா? நன்றி :)

@ சென்ஷி

நீண்ட நாட்கலுக்கு பிறகு வந்திருக்கிங்க... நிச்சயம் படிச்சி பாருங்க நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வெங்கட்ராமன்

வாங்க நண்பரே... கண்டிப்பாக படிச்சி பாருங்க.

@ உலவு

தகவலுக்கு நன்றி... அடுத்தடுத்த பதிவுகளில் மீண்டும் இதே விளம்பரப் பின்னூட்டத்தை போடாதீர்கள்.

@ விஜயகோபால்சாமி

நிச்சயமாக கதை அக்காலகட்டத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதை மறுக்க முடியாது.

@ மலர்விழி

வருகைக்கு நன்றி. பெண் என்பதால் கவர்ந்த்துவிட்டாரா? :)

@ ஆயில்யன்

நிச்சயம் படித்துப் பாருங்கள், வருகைக்கு நன்றி.. :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டாக்டர் புருனோ

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர் :)

@ டொன் லீ

பாஸ் வாய்ப்பு கிடைச்சா நீங்களும் படிச்சி பாருங்க சிறப்பாக இருக்கு. வருகைக்கு நன்றி.

@ கலையரசன்

உங்களைப் போன்றோரின் வாழ்த்துகளே எனக்கு ஊக்க மருந்து. கருத்துக்கு நன்றி. மீண்டும் வருக நண்பரே.

@ கு.உஷா

ஆஹா... புத்தகத்துக்கு நல்லாவே மார்கெட்டிங் கொடுக்குறிங்க... நான் எழுத்துகளை மட்டும் தான் படித்தேன்.

@ குமார்

வருகைக்கு நன்றி. நிச்சயம் படித்துப் பாருங்கள். உங்கள் பார்வையையும் எழுதுங்கள் :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தூயா

உங்களின் வருகைக்கும் நீண்டதொரு கருத்துக்கும் நன்றி தூய்ஸ்...

@ ஆளவந்தான்

நிதர்சனமான கருத்துகள். வருகைக்கு நன்றி.

@ அப்பாவி முரு

அக்கதைகளை உங்கள் பதிவினில் பதிவிடுங்கள். நாங்கள் அறிந்துக் கொள்ள வசதிபடும். வருகைக்கு நன்றி.

@ அனானி

நன்றி.

@ தராசு

வாங்க தராசு. கருத்துக்கு நன்றி...

@ ஜவஹர்

நன்றி.

@ வால்பையன்

நன்றி.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன், ஈப்போ said...

நல்ல ஒரு திறனாய்வு. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த விமர்சகர் ஆக முடியும். நடை நன்றாக இருக்கிறது. இப்போதே வாழ்த்துகள். அது சரி! உங்களுக்கு எங்கே அய்யா இந்த புத்தகங்கள் எல்லாம் கிடைக்கின்றன. நம்முடைய ஈப்போ நூலகத்தில் என்றால்... நானும் சேர்ந்து கொள்கிறேன். வாழ்த்துகள். பாராட்டுகள்.