Monday, November 17, 2008

அறிவை அழிக்கும் தீ!!!


மதிப்பிற்குரிய
(சா)தீய அன்பனுக்கு!
சனநாயக தேசத்தில்
சாதி வெறி பிடித்து
சால்ரா அடிக்கிறயா? - இல்லை
சடமென வாழ்கிறாயா?

ரத்த வெறி பிடித்த -நீ
ரத்தக் காட்டேரியா?- இல்லை
ரணங்கள் செய்யும்
ராட்சச பிசாசா?

சாதி
உனக்கு
சோறூட்டி சீராட்டி
வளர்த்த தாயா?- இல்லை
அன்பூட்டி அறிவூட்டி
வளர்த்த தந்தையா?

சாதியனே!
துப்பாக்கியைத் தூர எறி!
கத்திக்கு காணிக்கை செலுத்து.
கதறக் கதறக்
கண்டந்துண்டமாய் வெட்டு!
சனத்தொகையை பிணத்தொகையாய் மாற்று!

சாதி வெறி பிடித்த
ஞானியே!
உனக்குத் தேவை
மனித உடலின்
இரத்தமும் சதையும் தானே?
உடனே செய்!
சாதியெனும் மாயையில்
தீய்ந்து போ!

சாதியின் வேதத்தை
உபதேசிப்பாயா எனக்கு?
என்ன?
மனிதத்தை புதைக்க வேண்டுமா?
மயானத்தை விரிவு செய்ய வேண்டுமா?
மனமென ஒன்றிருந்தால்
அதை அப்புறப்படுத்த வேண்டுமா?

(சா)தீயில் குளித்து!
(சா)தீயில் நடந்து!
(சா)தீயை உண்டு!
(சா)தீயில் வாழ வேண்டுமா?

சாதியனே!
நாளை உனக்கொரு விபத்து நடக்கும்!
உன் உடல்
இரத்தம் கேட்கும்!
தாதியிடம் கேள்
என்ன சாதி இரத்தமென!
உனதில்லையெனில்
உடனே மடிந்து போ!

காலம்
உன் பெயர் சொல்லட்டும்!
அறிவு கெட்ட தமிழனென்று.

11 comments:

சுப.நற்குணன் - மலேசியா said...

தயவுசெய்து சாதியைத் திட்டாதீர்..

"ப்ராஹ்மணன்
சத்ரியன்
வைஷியன்
சூத்ரன் என்னும்
நால் வருணங்களை
நானே படைத்தேன்..!"
என்று இறைவனே
சொல்லிவிட்ட பின்பு
அதைப் பற்றி பேசலாமா?
அதைப் பற்றி எழுதலாமா?
அதைப் பற்றி சிந்திக்கலாமா?
அதைப் பற்றி கருத்து சொல்லலாமா?
கூடாது..
கூடவே கூடாது!

தயவுசெய்து சாதியைத் திட்டாதீர்..

அருள் said...

// சாதியனே!
நாளை உனக்கொரு விபத்து நடக்கும்!
உன் உடல்
இரத்தம் கேட்கும்!
தாதியிடம் கேள்
என்ன சாதி இரத்தமென!
உனதில்லையெனில்
உடனே மடிந்து போ! //


சூடான வரிகள்...
"உண்மை சுட தான் செய்யும்"
உங்கள் கோபம் நியாயம் தான்.

NicePyg said...

//தயவுசெய்து சாதியைத் திட்டாதீர்..

"ப்ராஹ்மணன்
சத்ரியன்
வைஷியன்
சூத்ரன் என்னும்
நால் வருணங்களை
நானே படைத்தேன்..!"
என்று இறைவனே
சொல்லிவிட்ட பின்பு
அதைப் பற்றி பேசலாமா?
அதைப் பற்றி எழுதலாமா?
அதைப் பற்றி சிந்திக்கலாமா?
அதைப் பற்றி கருத்து சொல்லலாமா?
கூடாது..
கூடவே கூடாது!

தயவுசெய்து சாதியைத் திட்டாதீர்..//

யாருங்க இது? கடவுளே சொல்லிட்டாராமே.. சீரியஸாவா? :)))))))))

ஹேமா said...

தமிழனைப்போல புத்திசாலியும் இல்லை.அவனைப்போல முட்டாளும் இல்லை.

VIKNESHWARAN said...

@ சுப.நற்குணன்

வருகைக்கு நன்றி ஐயா... நான் திட்டியும் ஏசியும் என்ன இருக்கிறது. எத்தனை தந்தை பெரியார்கள் வந்தாலும் திருந்தாத இனத்தின் நிலையைக் கண்டு மனம் வேதனையடைகிறேன்.

@ அருள்

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

@ NicePyg

வருகைக்கு நன்றி... நமக்குள் இருக்கும் அன்பும் பண்பும் தான் இறைமை. ஜாதியை பற்றிய கடவுள் சொல்லி இருந்தால் அப்படிபட்ட கடவுள் அவசியமா?

@ ஹேமா

வருகைக்கு நன்றி... சரியாக சொன்னீர்கள்...

K.USHA said...

//சாதி
உனக்கு
சோறூட்டி சீராட்டி
வளர்த்த தாயா?- இல்லை
அன்பூட்டி அறிவூட்டி
வளர்த்த தந்தையா?//

நாமல்லவா அதற்கு பாலூட்டி சீராட்டி அன்பூட்டி உற்சாகமூட்டி உயிர் கொடுத்து வரும் தலைமுறைக்கு பரிசளிக்கிறோம்...சாதி விடயத்தில் திருந்துவான் தமிழன் என்ற நம்மிக்கை உயிரற்ற ஜடத்துக்கு சமமாகிவிட்டது….
விக்கி, ஜாதி ஜாதி என்று பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கும் ஒவொரு தமிழனுக்கும் இந்த கவிதை சாட்டையடி….

VIKNESHWARAN said...

@ உஷா

வருகைக்கு நன்றி... மிகச் சரியாக சொன்னீர்கள். வீட்டில் வளர்க்கப்படும் ஜாதி தான் வெளியிலும் திரிகிறது...

E.Parthiban said...

சுப.நற்குணன்

/சாதியின் வேதத்தை
உபதேசிப்பாயா எனக்கு?/

நமக்குள் இருக்கும் அன்பும் பண்பும் தான் இறைமை. ஜாதியை பற்றிய கடவுள் சொல்லி இருந்தால் அப்படிபட்ட கடவுள் அவசியமா?

VIKNESHWARAN said...

@ ஈ.பார்த்திபன்

வருகைக்கு நன்றி... உங்கள் கருத்தினை ஆமோதிக்கிறேன்...

செவ்வந்தி said...

இப்போதைக்கு சா'தீயை' எவ்வளவு தண்ணி ஊத்தனாலும் அணைக்க முடியாது. இன்னும் பல நூற்றாண்டுகள் எடுக்கும் முழுவதுமாக சாதிப் பேயை அழிக்க! அதுவும், வாழ்ந்து முடித்தவர்களிடம் இனி நாம் பேச முடியாது, நம்மை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அதனைப்பற்றி காரசாரம் பேசலாம். ஆனால் இதற்கு விடியலே, நம்மை போன்ற இளைஞர்கள் திருமணத்திற்கும் திருமணத்திற்குப் பின் நம் வாரிசுகளிடமும் சா'தீயை' பற்ற வைக்காத போதுதான் உண்மையிலே ஆரம்பம்.

VIKNESHWARAN said...

@ செவ்வந்தி

வெளியே இல்லாவிட்டாலும் வீட்டில் ஜாதி வளர்கிறது என்பதை மறுக்க முடியாது... வருகைக்கு நன்றி..