Monday, June 08, 2009

கடன் கொடுக்கும் கலியுக சித்தர்கள்

சமீப காலமாக நான் அடிக்கடி காணும் விடயங்களில் கடன் கொடுப்பவர்களின் விளம்பரப் பலகையும் ஒன்றாகும். போகும் இடங்களில் ஏதுவாக காண முடிகிறது. 1000 ரிங்கிட் கடனுக்கு 950 ரிங்கிட் உடனடியாக கிடைக்கப் பெறும் என அவ்வறிவிப்பு சாலையோரங்களிலும் அங்காடி வரிசைகளின் இடுக்குகளிலும் காண முடிகிறது. இந்தக் கடன் கொடுப்பவர்களின் தாராள மனதை நினைக்கும் போது ஒவ்வொரு சமயங்களிலும் புல்லரித்து தான் போகிறது. என்னே ஒரு கருணை இம்மனிதர்களுக்கு.

இந்தப் பலகைகள் பாடு ஒரு பக்கம் என்றால் பேருந்து நிறுத்தங்களையும், கடைகளின் சுவர்களையும் கூட இந்தக் கணவான்கள் விட்டு வைத்தபாடில்லை. அங்குக் காணப்படும் ஒட்டிகளின் எண்ணிக்கை சுவர்களைக் கூட மறைத்துவிடுகின்றன. சரி இவ்வளவு தானா என மனதை தேற்றிக் கொள்ள முடிவதில்லை. வீட்டின் தபால் பெட்டிவரை இவர்களது 'உதவிக் கரம்' நீளவேச் செய்கிறது. கடன் உதவி சம்பந்தமாக ஒரு குட்டிக் கட்டுரையை எழுதிய வியாபார அட்டையை(பிசினஸ் கார்டு) இரண்டு மூன்று என தாராள மனதுடன் வீசிச் செல்கிறார்கள்.

கடன் கொடுக்கும் இந்தக் கலியுலக சித்தர்களின் பின்நாளைய கைங்காரியங்களைப் பற்றி மிகையாகவே அறிந்திருப்பினும் இன்னமும் மக்கள் அவ்வலையில் சிக்கித் தவிக்கும் அபத்தங்கள் புரியவில்லை. வட்டி முதலைகளின் கையில் தம் பிடரியைக் கொடுத்து பரிதவிப்பவரின் செய்திகள் நாளும் வளர்ந்து வரவேச் செய்கிறது. இதை முடக்க வேண்டும் மடக்க வேண்டும் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அரசின் கூத்தைப் பார்க்க நல்ல நகைச்சுவை விருந்தாகவும் இருக்கிறது.

இந்நிலை இன்று நேற்றல்ல பல காலமாகவே இருந்து வரும் ஒன்றென நன்கு அறிந்த விடயம். 97/98 பொருளாதார வீழ்ச்சியின் சமயம் வட்டி முதலைகளிடம் கடன் வாங்கி அதைத் திரும்பி செலுத்த முடியாத பலரும் தற்கொலைச் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். பணமில்லாமல் வட்டி பணம் செலுத்த முடியாத நிலை மட்டும் இதற்குக் காரணம் அல்ல. வட்டி முதலைகளின் சண்டியர் தனமும் கடனாளிகளை பலமான மன உழைச்சளுக்குள்ளாக்கி இருக்கிறது.கொலை மிரட்டல், பாலியல் தொல்லைகள், காயம் விளைவித்தல். மனைவி அல்லது பிள்ளைகளை கடத்திச் செல்லுதல், உடைமைகளை பாழ்படுத்துதல் என் வட்டி பணத்த வசூழிக்க இவர்கள் கையாலும் யுக்திகள் ஏராளம். கடன் வாங்கியவர் அதை திரும்பச் செலுத்த இயலாமல் சில சமயம் தலைமறைவாகிவிடுவதும் உண்டு. இதனால் கடனாளிகளின் குடும்பத்தார் வட்டி முதலைகளிடம் சிக்கித் தவித்த நிலைகளையும் பரவலாக நாம் அறிந்த ஒன்றே. சமீபத்தில் மக்களின் பார்வைக்குக் கிட்டிய செய்தி மூன்று கடனாளிகளை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து கழிவறையில் அடைத்து வைத்தச் சம்பவமாகும்.

இப்படிச் செய்வதில் இந்த வட்டி முதலைகளுக்கு என்ன இலாபம். ஒரு வேளை இவர்கள் பணம் படைத்த மன நோயாளிகளாக இருக்க வேண்டும். பணம் கொடுக்க முடியாதவனை துன்புறுத்துவதால் இவர்களின் பணம் திரும்பக் கிடைக்கப் பெறுமா? இல்லை இப்படி கொடுமை செய்து கடனைக் குறைத்துக் கொள்ள முயல்கிறார்களா? பழங்கால கொடுங்கோல் மன்னராட்சி புரிந்த ராஜாக்களின் மறுபிறப்பு இவர்கள் போலும்.

சரி ஆரம்பத்தில் சொன்ன விளம்பர விடயத்துக்கு வருவோம். இப்படி அப்பட்டமாக தமது விளம்பர பலகைகளை வைக்க நகராண்மைக் கழகங்கள் எவ்வகையில் அனுமதி கொடுக்கின்றன. முதலாவதாக இவ்விளம்பரப் பலகைகள் உரிமம் பெற்றவையாக தெரியவில்லை. உரிமம் பெற்ற விளம்பரப் பலகைகள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அகற்றப்படாவிட்டால் அதனை அகற்றுவது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட விளம்பர உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கிறார்கள். இப்படி பொது மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் விளம்பரப் பலகைகள் நெடுநாட்களாக காட்சிக்கு விடப்பட்டிருப்பது எதனால்?

அடுத்தபடியாக இந்த விளம்பரப் பலகைகளில் முகவரி, கடன் கொடுக்கும் நபரின் பெயர் போன்ற குறிப்புகள் இருப்பதில்லை. அதிகபட்சமாக கடன் கொடுப்பவரின் தொலைபேசி எண் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். மலேசிய தொலைப்பேசி எண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. அப்படி இருக்க காவல்துரையினர் இதனை ஆரம்ப நிலையில் கலைத்தெறியாத நிலை எதனால்?

பொருளாதார மந்த நிலை இவ்வட்டி முதலைகளுக்கு கரும்பாக இனிக்கச் செய்கிறது என்றேக் கூற வேண்டும். கடன் வாங்கி அவதிப் படுவோரின் நிலை அதிகரிக்கிறது என்றால் ஏன் அரசு அதை சரிவர கவனத்தில் கொள்ளவில்லை. இலட்சக் கணக்கில் செலவழிக்கும் பணத்தை மக்களின் நலனுக்கு இவர்கள் பயன் படுத்தாமால் போவது ஏன்?

கடன் வாங்கி மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கும் மக்களில் பொரும்பான்மையினர் நடுத்தர வர்கத்தினரே. இவர்கள் வாங்கும் கடன் அதிகபட்சமாக சில ஆயிரங்களில் ஆனதாகவே அறிய முடிகிறது. இலட்சக் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டும் மக்கள் பணத்தை வாயில் போட்டுக் கொண்டும் உண்டு கொழுத்து திரிவோர் இன்னமும் சொகுசு வாகனங்களில் தொந்தி வளர்த்து நிம்மதி பெருமூச்சிட்டே சுற்றித் திரிகிறார்கள்.வட்டி முதலைகள் விடயத்தில் கடன் கொடுக்கும் வியாபர தந்திரிகள் நிச்சயமாக பணம் படைத்தவர்கள் என்பதை நாம் நன்கறிந்த ஒன்று. இவர்களின் பண பலம் எவ்வகையில் சமூகத்தையும் அரசியலையும் பாதித்துள்ளது என்பது கேள்விக்குறியே. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது தான் இப்போதைய நிலை எனின் அது வருந்த தக்க ஒன்று. பூனையின் வருகைக்குக் காரணம் காவலாளி எனின் அதை என்ன சொல்வது? ஜக்கம்மாளுக்கே வெளிச்சம். :)

நாட்டின் கடனாளிகள் அதிகரிக்க காரணம் என்ன? முதலாவதாக மக்களின் தேவையில்லா செலவுகளால். இதனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மக்களின் கடமைகளில் ஒன்று. அது போக விலை வாசிகளின் கட்டுப்பாடு எவ்வகையில் இருக்கிறது என்பது கேட்பாறற்றுக் கிடக்கிறது. சகட்டு மேனிக்கு செலவுகள் மக்களின் சுமைகளை அதிகரிக்கும் விதமாகவே இருக்கிறது.

சேவைகளின் தர உயர்வுக்கு வழி செய்கிறோம் பேர்வழி என மார்தட்டிக் கொண்டு முடிந்த மட்டும் எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டு வெற்றி புன்னகைக்கும் அரசு மக்களின் வாழ்க்கை தரத்தை எவ்வகையில் நிர்ணயம் செய்ய முற்படுகிறார்கள் என்பன புரியாத புதிராகவே இருக்கிறது. பொது சேவைகளின் வழி வாழ்வியல் சுமையை குறைக்க எவ்வகையில் முனைப்புகள் காட்டி வருகிறார்கள் என்பன புரியாத புதிர் தான்.

சட்ட விரோதத்தை வளரவிட்டு கவனிப்பதும், மக்கள் தம் வாழ்க்கைக்கு போராட முற்பட்டால் அடித்து முடக்குவதும் தான் இந்நாளய நிலையாக இருக்கிறது. மக்களின் பாதுகாப்பு தரத்தை இதன் வழி மிக துள்ளியமாகவே அறிய முடிகிறது. கட்சி சண்டைகளையும், அரசியல் குழப்படிகளையும் அடுத்த தேர்தல் வரை பேசி தீர்க்கவே இவர்களுக்கு நேரம் போதாத பட்சத்தில் வேறு என்ன சொல்வது?

20 comments:

சி தயாளன் said...

அதென்ன 1000 ரிங்கிட் கடனுக்கு 950 ...? விளங்கவே இல்லை..?

Anonymous said...

4000 ருஉபாய் கடன் வாங்கி 52000 வரை வட்டி கட்டி பின் உயிர் தப்பிய அனுபவம் எனக்கு உண்டு

ஆ.ஞானசேகரன் said...

இபொழுது உள்ள நிலையில் கடன் அட்டைக்கு கொஞ்சம் டாட்டா சொல்லனும்

கார்க்கிபவா said...

:((.. நானும் இந்த மாதிரி கொடுமைய அனுபவிச்சு பதிவிட்டுருக்கிறேன் சகா.. மோசமா நடத்தறாங்க..

Anonymous said...

//அதிகபட்சமாக கடன் கொடுப்பவரின் தொலைபேசி எண் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். மலேசிய தொலைப்பேசி எண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. அப்படி இருக்க காவல்துரையினர் இதனை ஆரம்ப நிலையில் கலைத்தெறியாத நிலை எதனால்//

காவல்துரையினர், எனக்கு தெரிந்து பல வட்டி முதலைகளின் பாதுகாவலராக ( மாதா மாதாம் கிம்பளப் பணம் பெறுகின்றனர் ) மற்றும் பங்கு தாரர்களாக உள்ளனர். எப்பொழுதாவது இவர்களிடையே பிரச்சனைகள் எழும்போதுதான் சட்டம் சட்டென்று பாய்கின்றது.

இதனை நாம் பொதுவிலும் பேச முடியாது ஏனென்றால் உடனடியாக போலிஸ் படை தலைவர் மறுப்பு தெரிவிப்பார். ஒரு போலிஸ் காரர் மேல் எப்படி ஒரு போலிஸ் நிலையத்தில் புகார் செய்வது? புகார் செய்பவருக்கு நிகழ் கால எதிர்கால பாதுகாப்பு உண்டா? அது மட்டுமி்ன்றி ஒரு சாதாரன குடிமகன் ஒரு போலிஸ் காரர் மீது வழுவான சாட்சிகளை சேகரிப்பதும் கடினமே.
போலிஸ் காரர்கள் இம்மாதிரியான சட்ட விரோத காரியங்களில் இருந்து விடுபட்டால் மட்டுமே இதற்கு தீர்வு. எங்கள் ஊரில் ஒருவர் வட்டி முதலையாக மட்டும் இன்றி வரி செலுத்தாத மது பானங்களையும் விற்பது இங்குள்ள பெரும் பாலான மக்களுக்கு தெரியும் ஆனால் அங்கு அடிக்கடி வந்து போகும் போலிஸ் காரர்களுக்கு மட்டும் தெரியவே தெரியாது.
என் நலன் மட்டும் இன்றி என்னைச் சார்ந்தவர்கள் நலன் பொருட்டு பெயர் வெளியிட விருப்பமி்ல்லை.

sivanes said...

விக்கினேக்ஷ்வரன், பொருத்தமான‌ நேரத்தில் கொடுக்க வேண்டிய விக்ஷயத்தை படைத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! விளம்பரங்களுக்கு மயங்கினால் வாழ்க்கை இதுபோல் வேடிக்கைதான்! என்ன செய்வது ஒருசிலர் அதிஆபத்தான நேரங்களில் முன்யோசனையின்றி இதுபோன்ற வட்டி முதலைகளின் வாயில் தலையைக்கொடுத்து விடுகின்றனர்!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டொன் லீ

உதாரணமாக நீங்கள் 1000 ரிங்கிட் கடன் வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் கையில் 950 ரிங்கிட் தான் கொடுப்பார்கள். 50 ரிங்கிட் என்பது வட்டி கணக்கு.

@ அனானி

அப்படியா :( இனி ஆபத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

@ ஞானசேகரன்

ஆம் நிச்சயமாக... அது உயிரில்லா உயிர்க் கொல்லி :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கார்க்கி

நன்கு படித்தவர்கள் கூட இவர்களின் வலையில் சிக்கிக் கொள்வது என்பது வேதனைக்குறிய ஒன்று...

@ அனானி

முன்பு சொல்லியது தான். திருடன் நாட்டில் திருட்டு தவறில்லை என்றாகிறது. அப்படி இருக்க எத்தனை முறை இறை வணக்கம் செய்து என்ன பயன்...

@ சிவனேசு

உங்கள் கருத்து சரியானதே. முன் யோசனையின்றி செய்யும் காரியங்கள் எவ்வகையிலும் பயன் கொடுக்காது.

Subha said...

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன். வங்கிகளும் கூட கடன் பற்று அட்டைகளைக் கொடுத்து இவ்வாறே நடந்து கொள்கின்றன.

கோவி.கண்ணன் said...

அருமையான இடுகை, கடன் பற்றி உணர்ந்தே கம்பன்,

"கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று எழுதி வைத்தான்.

கார்க்கிபவா said...

/நன்கு படித்தவர்கள் கூட இவர்களின் வலையில் சிக்கிக் கொள்வது என்பது வேதனைக்குறிய ஒன்று.//

என்னை ஏன் இப்படி அசிங்கமா திட்டறீங்க? :))

இல்ல சகா, இன்ரைய சூழலில் லோன் வாங்காமல் வீடு வாங்க முடியாது.. நம்பித்தான் போறோம்.. எல்லாரும் இப்படி செய்தால் அரசு என்ன் செய்யுது?

வியா (Viyaa) said...

மலேசிய தொலைப்பேசி எண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. அப்படி இருக்க காவல்துரையினர் இதனை ஆரம்ப நிலையில் கலைத்தெறியாத நிலை எதனால்?

சிந்திக்க வேண்டிய விஷயம் தான் விக்கி..

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சுபா

உங்கள் கருத்துக்கு நன்றி... கடன் பற்று அட்டைகளை பயன்படுத்தி தவித்தவர்களின் நிலை பரவலாகவே காணப்படுகிறது.

@ கோவி.கண்ணன்

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் பாரி வேந்தன்னு சொல்லமாட்டாங்களா? கருத்துக்கு நன்றி அண்ணா.

@ கார்க்கி

:)) திட்டவில்லை சகா. நிஜத்தில் அப்படி தான் நடக்கிறது.

@ வியா

சிந்திக்க என்ன இருக்கு? :)) உள்ளங்கை நெல்லிக் கனிக்கு பூதக் கண்ணாடி கேட்ட கதையால இருக்கு...

Tamilvanan said...

அவசரத்திற்கு 1000 வெள்ளி கடன் வாங்கும் நபர் பெருவதோ 950 மட்டுமே. ஆனால் 6 மாதத்தில் திரும்ப செலுத்த வேண்டியதோ 1780 அதாவது மாதம் 297. மாத வட்டி 13 சதவீதம். சில நேரங்களில் அதி அவசரத்துக்கு வட்டி 20 சத வீதம் வரை செல்லும்.

அதிகம் பாதிக்கப்படுவோர் வசதி குறைந்தோர் அல்லது மத்திய நடுவர்க்கத்தினர் மட்டுமே. அவசரத்திற்கு அல்லது அதி அவசரத்துக்கு அவர்கள் நாடுவது அல்லது அவர்களுக்கு கைகொடுப்பது வட்டி முதலைகளே.
மக்களுக்கு ஆபத்து அவசர அவசிய நிலைகள் இருக்கும் வரை இந்த வட்டி பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை.
ஆனால் நமது அரசாங்கம் மனது வைத்தால், நிருவனங்களை (bail out) மீட்பது போல மக்களையும் (bail out) மீட்கலாம். எப்படி?

EPF வயதான காலதில் நிம்மதியாக வாழ ஆனால் இப்பொழுதே பிரச்சனைகளினால் மக்கள் வாழ்வினை நடத்த திண்டாடிக்கொண்டிருக்கும் போது வயதான காலதில் நிச்சயமான நிம்மதி ஏது?


EPF Account 1 இருந்து வெள்ளி 1000 முதல் 3000 வரை, குறைந்த ஆண்டு வட்டிக்கு கொடுத்து உதவி திரும்ப அதனை சம்பளத்திலியே பிடித்தம் கொள்ளலாம். பெற்ற கடனை திரும்ப செலுத்தியவர்கள் மட்டுமே மீண்டும் அவசரத்திற்கு அல்லது அதி அவசரத்துக்கு கடன் பெற முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கலாம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

உங்கள் கருத்து வரவேற்க தக்கது... நீங்கள் சொன்ன யுக்தி அரசு சீர்தூக்கி பார்க்க வேண்டிய ஓர் விடயமும் கூட... ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சாத்தியங்களும் உண்டு...

தராசு said...

இந்தமாதிரி கவர்ச்சி விளம்பரங்களில் சிக்கி வெளிவர முடியாமல் திணறியவர்களை நான் பார்த்திருக்கிறேன் விக்கி.

நல்ல எச்சரிக்கை.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தராசு

கருத்துக்கு நன்றி சார்...

Anonymous said...

ஏதாவது சொல்லணும். நிறைய எழுத்துப் பிழைகள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கலையரசன்

தகவலுக்கு நன்றி தலைவா....


@ புகழினி

உண்மைய சொல்லுங்க... நீங்க ஜெயலலிதா ஆளு தானே? சரி தலைவா நேரம் இருக்கும் போது திருத்துறேன். பத்தியை புரிந்துக் கொள்வதில் க்டுதல் இல்லையே...

cheena (சீனா) said...

இந்தியாவில் கந்து வட்டிக்காரர்கள் படுத்தும் பாடு சோல இயலாது - அப்படித்தான் - நாம் மாட்டிக்கொள்ளக் கூடாது - அவ்வளவு தான்