Tuesday, June 02, 2009

உறுபசி - நாவல் விமர்சனம்

நாவல்: உறுபசி
நயம்: சமுதாய நாவல்
பதிப்பகம்: உயிர்மை
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

மரணத்தைப் பற்றிய புரிதல்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வயதிலும் மாறுபட்ட எண்ணங்களாக வடிவம் கொண்டிருக்கும். சிறுவயதில் மரணம் என்றாலே மரண பயத்தில் ஆழ்ந்து போயிருக்கிறேன். மரணித்தவர்கள் பேயாக வந்து நம்மைப் பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சம் என்னுள் எப்போதுமே இருக்கும். அச்சமயம் என்னுள் உறுகொண்ட பேய்களுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் இருக்காது. இரவில் கண் மூடினால் ஒரு கருக்கிருட்டுத் திரள் என்னை மூழ்கச் செய்வதைப் போல் இருக்கும். அது விவரிக்க முடியாத அளவுக்கு பெரியதாக இருக்கும். கடல் அலை போல வரும். அந்த வயதில் எனக்கு தெரிந்த பேய் அந்த கருக்கிருட்டு சுருள்திரள்கள் தான்.

கொஞ்ச காலத்திற்குப்பின், பள்ளிக்கூட நாட்களில் பேய்ப்படம் பார்க்கவும் புரிந்துக் கொள்ளவும் முடிந்தது. அது முதல் என் புரிதலில் பேய்கள் தணியாத கோபம் கொண்ட அழுக்குப் பிடித்த மனித உருவங்களாகத் தோன்றின. இறப்பு கொண்ட வீட்டின் வெளியில் அப்பேய்கள் காவல் இருக்குமென்றும் அந்தப் பக்கம் போனால் நம்மைப் பிடித்துக் கொண்டுவிடும் என்றும் எண்ணம் நெடுநாட்களாகவே இருந்தது. பிறகு சொர்க்கம், நரகம், அமைதி கொள்ளா ஆன்மா, மறுபிறப்பு, முக்தி என என்னன்னவோ நிலைகளை கேட்டு படித்தறிய முடிந்தது.

எனது பத்தாவது வயதில் என் தாத்தாவின் மரணம் தான் நான் மிக அருகில் கண்ட மரணமாகும். இறந்த அவரது உடலை தொட்டுப் பார்த்த போது குளிர் சாதனப் பெட்டியில் வைத்த பொருளைப் போல் சில்லிட்டிருந்தது. மறுநாள் அவரை எரியூட்டி இறப்பு சடங்குகளை முடித்தார்கள். அன்றிரவு தாத்தா ஆவியாகவோ பேயாகவோ வரவேண்டும் என்றும் குறைந்தபட்சம் என் கனவிலாவது அவர் வந்து போக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. இன்றுவரை தாத்தா என் கனவில் வந்ததில்லை. பிறந்தது முதல் தாத்தாவோடு வளர்ந்தவனென்பதால் நெடு நாட்களாக அவரது நினைவுகளில் இருந்து மீளமுடியவில்லை. மரணத்தின் பயம் அச்சமயம் விடுபட்டிருந்தது.

தாத்தா இறந்தது முதல் என் நண்பன் என் வீட்டு பக்கம் வருவதை தவிர்த்து வந்தான். ஒருமுறை அவனை அழைத்த போது அவனுக்கு பயமாக இருப்பதாகவும், என் தாத்தாவின் ஆவி என் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும் என்றும் சொன்னான். நான் இல்லை என்று சொல்லியும் அவன் கேட்டபாடில்லை. அப்படியே இருந்தாலும் என் தாத்தா நல்லவர் உன்னை ஏதும் பண்ணமாட்டார் வா என்றேன். அவன் மறுத்துவிட்டான்.

எங்களது நட்பு பள்ளிக்கூட வளாகத்தோடு மட்டுமே இருந்தது. வீட்டுக்கு வருவதையோ வெளியில் சந்திப்பதையோ அவன் தவிர்த்துவிட்டிருந்தான். தாத்தாவின் மரணம் எங்களின் நட்பில் விரிசல் கோட்டை உண்டாக்கியது. அவனது அப்பாவுக்கு வேலை மாற்றம் கிடைத்து அவர்கள் வேற்றிடத்துக்குச் சென்றார்கள். ஆவி இருக்கும் இடத்திலிருந்து விடுதலைக் கிடைத்ததைப் போல் அவன் மிக மகிழ்ச்சியாக இருந்தான். அவன் செயல் எனக்கு எரிச்சலாக இருந்தது. அவனது பிரிவு எனக்கு பெரிதாக தோன்றவில்லை.

எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலைப் படித்த சமயம் மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் பலவாக என்னுள் எழும்பின. அழுத்தமான கதைக்கு அழுத்தமான சொற்களின் புனைவு நெஞ்சுக்கு மிகக்கனமாகவே இருக்கிறது. முன்னுரையில் உலர்ந்த சொற்கள் என ஆசிரியர் குறிப்பிடுவது போல நாவலைப் படிக்கும் போது நாமும் ஒன்றித்து வறண்டு போகிறோம்.

உறுபசி எனும் சொல்லின் புரிதல் கலவையாக மண்டிக் கிடக்கிறது. உறுபுகளின் பசி, உறுதல்களின் பசி, தீராத உறுதல்கள் எனக் கொள்ளலாமா? நாவலின் ஆரம்ப வரியே நம்மை கட்டி இழுத்து உள்ளே போடுகிறது. இதில் மென்மை குறைவு. கோபமும், தாபமும், குரூரமும், காமமும் எழும்பி நிற்கின்றன.

சமுதாயத்தைச் சார்ந்து முகமூடி அணிந்து வாழும் வாழ்க்கையைத் தவிர்த்த ஒருவனின் கதை தான் உறுபசி. சம்பத் எனும் கதை நாயகனின் இறப்பிற்கு பின் கதைச் சொல்லிகளான அழகர், ராமதுரை, மாரியப்பன், ஜெயந்தி(சம்பத்தின் மனைவி) மற்றும் யாழினி வழி அவன் வாழ்வின் அத்தியாயங்களை அறிந்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் காமமும், கோபமும், பேராசையும், வெறித் தன்மையும் இருக்கவே செய்கிறது. குடும்ப, சமூக நலனுக்காக நாம் அதை நம்முள் புதைத்து வைத்து வாழ்கிறோம். சம்பத் எனும் கதாபாத்திரம் சமுதாயத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சித்தரிக்கப்படுக்கிறது. இதனால் சமூகம் அவனிடம் வினோதபார்வைக் கொள்கிறது.

கல்லூரியில் தமிழ்ப்பிரிவில் பயிலும் மாணவனாக, சம்பத்தின் இளமைக்காலம் நமக்கு சொல்லப்படுகிறது. அவனது செயல்களில் எதிலும் முழுமையிருக்காது. எந்தச் செயலாகினும் அவனை ஒருவித மன பாதிப்பை ஏற்படுத்தி அதை முழுமையாக முடிக்காமல் விட்டுவிடுவான். அவனது நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவனை பாதிக்கச் செய்து மன பிரழ்வை உண்டாக்குகிறது. எப்படி அவன் நடவடிக்கை அவனை பாதிக்கிறது என்பதாகவும், மரணித்தின் முன் சம்பத்தை சுற்றி நடந்த சம்பவங்களின் பின்னணியிலும் கதை நகர்கிறது. அது சம்பத் தன் நண்பர்களிடம் சொல்லிய சம்பவமாகவும், நண்பர்கள் அவர்களாகவே கண்டவையாகவும் சொல்லப்படுகிறது.

சராசரி கமர்சியல் நாவலில் சொல்லப்படாத விடயங்களை மட்டுமே நாம் ஒவ்வொரு பக்கங்களிலும் வாசிக்கிறோம். சமுதாயத்தின் மறுபக்கத்தை மிக நேர்த்தியாகவே ஆசிரியர் நமக்கு திரையிட்டுக் காட்டுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வும் பிழியப்பட்டுள்ளது. படித்து முடிக்கும் வரையிலும் மரணம் எனும் பிம்பத்தின் ஊடே நாமும் பயணித்து திரும்புகிறோம்.

ஒரு சில இடங்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும், ராமதுரை சொல்லும் கதை அழகர் சொல்வதாக முடியும்படி இருப்பதையும் தவிர்த்திருக்க வேண்டும். படிப்பவரை குழப்பிவிடும் சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கிறது. நான் வாங்கியது இரண்டாம் பதிப்பு. இன்னமும் பிழைகள் கண்டறியப்படவில்லையா அல்லது அச்சுப் பிழையா என தெரியவில்லை. மற்றபடி உறுபசி நல்ல அனுபவமே.

20 comments:

Vinitha said...

strong review vignesh.

நாமக்கல் சிபி said...

Good Review!

வால்பையன் said...

அண்ணே எனக்கு பஞ்சு தலையணை பயன்படுத்தி தான் பழக்கம்!

சும்மா லுலுலாயிக்கு
இன்னும் வாங்கலை படித்தவுடன் என் பதிவும் உண்டு!

விழியன் said...

நல்ல விமர்சனம் விக்னேஷ்வரன்.

நான் வாசித்த முதல் பின்நவீனத்துவ நாவல் இது தான். அழகாக கோர்த்து
இருப்பார். வெறுமையாகவே பல இடங்களில் பயணித்தாலும் படித்து முடிக்கும்
வரை ஒரு வித மயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது.


எஸ்.ராவின் மற்ற படைப்புகளையும் வாசித்து விமர்சனம் தாருங்கள்.

K.USHA said...

இன்னிக்கி பேய் வரும் கவலைப்படாதிங்க....

Krishna Prabhu said...

'உறுபசி' இன்னும் வாசிக்கவில்லை. வாங்கிப் படிக்க வேண்டும் என்று தான் இருக்கிறேன். நல்ல அறிமுகம். தொடருங்கள்.

சென்ஷி said...

நல்லா எழுதியிருக்கீங்க விக்கி..

சில இடத்துல எஸ்.ராவோட பாதிப்பு அதிகமாவே தெரியறா மாதிரி எனக்குப்படுது..

குறிப்பா மரணம் பற்றிய அந்த உலர்ந்த சொற்கள்!

நான் இன்னமும் உறுபசி படிக்கலை.

VIKNESHWARAN said...

@ வினிதா

முதல் வருகைக்கும் முதல் பின்னூட்டட்திற்கும் நன்றி... நீங்கள் படிச்சிட்டிங்களா?

@ நாமக்கல் சிபி

நன்றி அண்ணே...

@ வால்பையன்

வால் அது சின்ன புத்தகன் தான்... நல்ல நாவல் படித்துப் பார்க்கவும் :))

@ விழியன்

மிக்க நன்றி... நிச்சயம் எழுதுவேன்... :))

VIKNESHWARAN said...

@ உஷா

வருகைக்கு நன்றி...

@ கிருஷ்ண பிரபு

நிச்சயமாக வாசித்துவிட்டு பதிவிடவும்...நல்ல நாவல்...

@ சென்ஷி

நன்றி அண்ணே... பின்னவீனதுவ நாவல் நிச்சயமா உங்களுக்கு பிடிக்குமே... கண்டிப்பா படிங்க...

கே.பாலமுருகன் said...

விக்கி, எஸ்.ரா வின் உறுபசி மற்றும் யாமம் நாவலை வைத்திருக்கிறேன். இன்னும் அதைப் படிப்பதற்கான நேரம் கிட்டவில்லை.

விமர்சனத்தின் முதல் பாதி தங்களின் பால்ய கால பேய்களின் பிம்பக் குறிப்புகள். இது குறித்து எஸ்.ரா கட்டுரை ஒன்றைப் படித்திருக்கிறேன். பேய்களை நாம் படைக்கிறோம், பிறகு சமூகத்தின் கற்பிதங்கள் பேய் குறித்த பிம்பங்களை உடைத்து, பாராம்பரிய உருவங்களை காட்டுகின்றன, கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதைத்தான் பதிவுக்குள் இருந்து சமூக உற்பத்தியைப் பெறுதல் என்கிற உளவியல் தத்துவம்.

நானும் சிறுவயதில் என் அறையிலுள்ள உடைந்த கண்ணாடி சன்னலில் வழியாக பல பேய்களைப் படைத்திருக்கிறேன். இல்லாத அந்தப் பேய்களுன், வந்துவிடுமோ என்கிர அச்சத்தில் உறங்கிய நாட்கள்தான் அதிகம். இப்பொழுது நினைத்தால், அது மிகப் பெரிய அழகியலாக தெரிகிறது.

விமர்சனத்தின் இரண்டாவது பகுதியில் உறுபசி நாவலை மிகவும் மேலோட்டமாக விமர்சித்துள்ளீர்கள். ஆழ்ந்த பார்வையும், கோட்பாடு சார்ந்த அணுகுமுறைகளும், மதிப்பீட்டுக் கொள்கைகளின் பயன்பாடுகள் என் விமர்சன கட்டமைப்பை நெருங்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து விமர்சியுங்கள், பல புத்தக விமர்சனங்களை வாசியுங்கள். முதிர்ச்சி பெறலாம். எனக்கும் விமர்சனப் பார்வை கைவரவில்லைத்தான். பழகிக் கொண்டிருக்கிறேன்.
மேலும் எஸ்.ரா நாவல் என்கிற மோகம் வெளிப்படாமல் அதிலுள்ள குறைபாடுகளையும் முன் வைத்த உங்களின் விமர்சனம் பாராட்டுதலுக்குரியது. வளரவும். வாழ்த்துகள்.

கே.பாலமுருகன் said...

மேலும் ஒரு சிறு நட்புமுறையிலான விமர்சனம் விக்கி.

* உறுபசி ஒரு பின்நவீனத்துவ நாவல் என்றும் மாய யதார்த்தவாத நாவல் என்றும் பல வாசகர்கள் சொல்லிக் கேட்டுருக்கிறேன். எஸ்.ரா அவர்களே ஒரு நேர்காணலில் உறுபசியை தனது முதல் கோட்பாடு சார்ந்த நாவல் என்றும் பிறகு யதார்த்த நாவலுக்குள் வந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

*ஆகையால் உங்களின் விமர்சனத்தில் அந்த பின்நவீனத்துவக் கூறுகளை தவிர்த்துவிட்டீர்களா? காரணம் அந்த விமர்சனத்தில் உங்களின் புரிதலில் அந்த நாவலுக்கே உரிய பின்நவீனத்துவ தன்மை வெளிப்படவில்லையே.

* வாசகனுக்கு ஒரு மிகப்பெரிய சுதந்திரம் உள்ளது. அவன் எப்படி பிரதியை அணுகுகிறான் என்றே. நீங்கள் அந்த நாவலின் உண்மை நிலையை, அதன் உருவகத்தைச் சொல்லிவிட்டு, அதில் எனக்குப் பிடித்த பகுதிகள், அல்லது நான் அதை எப்படிப் புரிந்து கொண்டேன் என்கிற மாற்றுப் புரிதலை முன் வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

*மேலும் விமர்சனத்தில், பிரதியின்(நாவாலின்) உத்தியையும் அதன் கதாபாத்திர படைப்புகளின் நுணுக்கங்களையும் அது வளர்தெடுக்கப்பட்ட நிலைகளையும் கொஞ்சம் கவனமாக பார்க்க வேண்டி உள்ளது.

VIKNESHWARAN said...

@ பாலமுருகன்

எனக்கு உங்களைப் போல ஆழமான பார்வைக் கொண்டு விமர்சிக்கத் தெரியவில்லை. இதை விமர்சனம் என்பதை விட அறிமுகம் என்றே நான் குறிப்பிட்டிருக்க வேண்டும்... விமர்சந்த்தில் எல்லவற்றையும் கொட்டிவிட்டால் அதை வாங்கி படிப்பவர்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் மேலோட்டமான குறிப்புகளை மட்டும் கொடுத்திருக்கிறேன்.

சேவியர் said...

எஸ்.ரா எழுத்துக்களில் ஒரு வசீகரம் உண்டு.. உங்கள் விமர்சனத்திலும் அது மிளிர்வது அழகு !

pukalini said...

தலைப்பை பின் தொடரவில்லை.

VIKNESHWARAN said...

@ சேவியர்

நன்றி அண்ணா...

@ புகழினி

எப்போதுமே புரியற மாதிரி எழுத மாட்டிங்களா :(

சிவனேசு said...

விக்னேக்ஷ்வரன், நல்ல முயற்சி, நன்றாக இருக்கிற்து உங்கள் படைப்பு, கண்டிப்பாக படித்தாகவேண்டும் எனும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.

தாத்தாவின் மறைவையும் அத‌ன் தொட‌ர் நிக‌ழ்வுக‌ளையும் அழ‌காக‌ குறிப்பிட்டிருந்தீர்க‌ள், அது என‌க்குள் உ‌றைந்திருந்த‌ ஒரு நினைவலையை இங்கே பகிரத்தூண்டியது! எனை வளர்த்த தந்தை வழிப்பாட்டி என் 7 வயதில் மரணப்படுக்கையில், நாட்கள் கடந்து வாரங்கள் இரண்டைத்தொட்டது, உயிர் பிரியவில்லை, உறவுகள் உயிர் பிரியக்காத்திருந்தனர், நான் என் பாட்டி உயிர்பிழைக்க எனக்குத்தெரிந்த ராமஜெயத்தை பள்ளிஏடுகளில் ஏற்றிக்கொன்டிருந்தேன், விசயம் தெரிந்த என் அத்தை எனை முறைத்து ஏசி எழுதவிடாது தடுத்தார்!(அவர் தாய் சீக்கிரம் போய் சேர வேண்டும் என்று அத்தனை அக்கறை!?) மசிவேனா நான் தொடர்ந்து எழுதினேன், இருந்தாலும் இரண்டொரு நாளில் என் பாட்டி இறந்துவிட்டார், என் சுற்றங்களை நான் வெறுத்தேன், இன்று யதார்த்தம் புரிகிறது, எனோ மன்னிக்க மட்டும் மனம் வருவதில்லை அவர்களை!

விஜய்கோபால்சாமி said...

மகனே, நேற்று மதியம் இரண்டு மணிக்கு என்னை அப்பா என்று அழைக்க ஒரு மகள் பிறந்திருக்கிறாள். தமிழகத்திலிருக்கிற பதிவர்கள் பலருக்கும் குறுஞ்செய்தி வாயிலாகத் தகவல் தெரிவித்துவிட்டேன். பலரும் வாழ்த்துச் செய்திகளால் திணறடிக்கிறார்கள். தற்சமயம் பதிவெழுதி அறிவிக்குமளவுக்கு அவகாசமில்லாததால் உனக்குத் தெரிவிப்பதில் தாமதமாகிவிட்டது. (உன்னுடைய தொலைபேசி எண் கைவசமில்லை, மன்னிக்க). ஒரு சிறிய உதவி, மகள் பிறந்த செய்தியை பதிவு ஒன்றின் மூலமாக அனைவருக்கும் அறிவிக்க முடியுமா? முடிந்தால், வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்ததாகவும் எழுது.

நன்றிகள்
விஜய்கோபால்சாமி

VIKNESHWARAN said...

@ சிவனேசு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ விஜய்கோபால்சாமி

வாழ்த்துகள் சித்தப்பு....

மனோகரன் கிருஸ்ணன் said...

நல்ல கதை விமர்சானம் விக்கி.வார்தை கோவைகள் அருமை.ஒரு கதையை படித்தது போன்ற உணர்வு.தமிழ் நாட்டின் கதை விமர்சாகரின் பானியை விட உங்கள் நடை அருமையாக இருக்கிறது. விக்கி......வேலை பளுவின் காரணத்தால் பின்னோட்டம் விட முடியாமைக்கு வருந்துகிறேன்....இன்னும் சிறிது காலத்தில் மலேசியா தமிழ் எழுத்துலகில் நிங்கள் பேசபடும் மனிதரவீர்,உங்களுக்கு பாரட்டுக்கள் விக்கி.......

VIKNESHWARAN said...

@ மனோகரன்

மிகையாகவே புகழ்கிறீர்கள் :)) உங்கள் அன்புக்கு நன்றி...