ஒருவர் சரியென சொல்வது மற்றவருக்குப் பிசகாக தோணலாம். உலகில் இது சரி, இது தான் நியாயம் என ஒரு விடயத்தை அவ்வளவு எளிதாக வரையறுத்து விட முடிவதில்லை. சித்தனைகளும் கருத்து முரண்பாடுகளும் மனிதனின் எண்ண வெளிபாடுகளை வலுவாகவே ஆக்ரமித்துள்ளன. இதை 'யின் யாங்' எனும் சீனத்து கபூசியஸ் தத்துவ முறையில் எதிர்வினை முரண்பாடுகள் என அழகாக விவரித்துள்ளார்கள்.சரி கருத்து கந்தசாமித்தனத்தை விட்டுவிட்டு நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். முன்பு ஒசாமா, சதாம் ஹுசேன், அல் கொய்தா, இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா என ஆதரவளித்து பேசிய மலாய் நாளேடுகள் தாம் இன்று பிரபாகரனை உலக தீவிரவாதியென கிழிகிழியென கிழித்து நார்நாராக்கி காயப்போட்டு இருக்கிறது. வழக்கம் போல கேட்பார் இல்லை. ஒசாமா துப்பாக்கி எடுத்தால் ஜிகாத். பிரபாகரன் துப்பாக்கி எடுத்தால் தீவிரவாதம்.
கடந்த ஞாயிறு நடைபெற்ற அமைதி பேரணி சம்பந்தமாக மலாய் அரசியல் தலைவர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் இலங்கையில் ஏற்பட்ட நிலை இங்கு பின்பற்றபட்டுவிடுமோ என்ற எண்ணமே இவர்களின் வசைபாடல்களின் அப்பட்டமாக தெரிகிறது. இன போராட்டம் தவறென சொல்பவர்கள் இஸ்லாமிய நாடுகளில் ஏற்படும் மத போராட்டத்துக்கு குரல் கொடுப்பது மட்டும் நியாயமாகுமா? கையில் வய்ன் கோப்பையை வைத்துக் கொண்டு குடிக்காரனாக இருக்காதே அது தவறு என அறிவுரை சொன்னானாம் எவனோ ஒருவன்.
எதனால் மக்களிடையே இப்படிபட்ட மங்குஸ்தின்* தனமான சிந்தனைகள். நாம் இங்கு எடுத்துக் கொண்ட உதாரணத்தையே காண்போம். ஒசாமாவையோ அல்லது சதாம் ஹுசேனையோ அவர்கள் கவனிக்கும் போது இஸ்லாம் எனும் போர்வையில் நின்று கவனிக்க முற்படுகிறார்கள். அதே சமயம் பிரபாகரன் அவர்களுக்கு அன்னியம். யாரோ ஒரு தீவிரவாதி. அதே போல் ஒசாமாவும் சதாமும் பலருக்கு தீவிரவாதியாகவும் மேலும் பலருக்கு தேவ தூதுவனாகவும் தெரிகிறார்கள். இதில் யாரை நாம் குறை சொல்ல.இவர் செய்தது தப்பு அவர் செய்தது நியாயம் என நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அப்படி சொன்னால் என் டவுசரை கழட்டி ஓட ஓட விரட்டியடிக்க சில சொம்பு தூக்கிகள் வந்துவிடுவார்கள் என்பது நான் சொல்லி தெரிய வேண்டும் என்றில்லை. இப்படி ஒரு கட்டமைப்பிற்குள் இருந்துக்கொண்டு ஒரு விசயத்தை அணுகுகிறார்கள். அவர்களுக்கு சாதகமாக அது சரி தவறு என்றும் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் செய்யும் தவறுகளை விட அடுத்த வீட்டுப் பிள்ளைகள் செய்யும் தவறுகள் தாம் பெரிதாக தெரியுமாம். அப்படிபட்டது தான் இந்நிலையும். இப்படி ஒரு கட்டமைப்புக்குள் தங்களைத் திணித்துக் கொண்டு தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தான் இன்ன சாதியன் என சொல்லிக் கொள்ளும் பச்சைப் பார்ப்பானியத்தனத்துக்கும் என்ன வித்தியாசத்தைக் காண முடியும். என்னைப் பொறுத்தமட்டில் இரண்டிற்கும் கிஞ்சித்தும் வித்தியாசம் கிடையாது என்றே சொல்வேன்.
இதே சிந்தனை யுக்தியை ஒரு நாடளவில் எடுத்துக் கொண்டு பார்ப்போம். மக்களாட்சி கொண்ட நாட்டில், மக்கள் தேர்வின் அடிப்படையிலேயே ஆட்சி அமைக்கப்படுகிறது. திருடர்களின் நாட்டில் திருடு தவறில்லை என்ற சட்டத்தை அமல் செய்யப்பட்டால் திருடு தவறில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளலாகுமா? உலக வாழ்க்கையில் நமது சிந்தனைகள் எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? நமது வாழ்க்கையை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும் என மார் தட்டிக் கொள்ளலாம். இன்று எத்தனை நாடுகளில் அத்தேசத்து மக்கள் தாம் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதன் அடிப்படையில் மக்களாட்சியே சிறந்த ஆட்சி முறையென நாம் சொல்லலாகுமா?
பிரச்சனைகளின்றி அரசியலில் காய் நகர்த்த முடியாது. இன்றையச் சூழலில் சொந்த உறவுகளுக்குள் கூட பணத்தை கடன் கொடுக்கும் போது வட்டியையும் சொல்லிவிட்டுத்தான் கொடுக்கிறார்கள். இன்றோ அதிசயகரமாக அமெரிக்கா, ஜப்பான், சீனா, நோர்வே என பல நாடுகளும் இலங்கைக்கு பண உதவி செய்து வருகிறது. இதைத் தான் 'ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியோவ்வ்வ்வ்' என்பார்கள் போலும்.இலங்கை, காஷ்மீர் இவ்விரண்டு இடங்களும் அதீத வளர்ச்சியடையக் கூடிய இடங்கள். உலக வர்த்தகத்திற்கு இலங்கை சிறந்த துறைமுகமாக அமையக் கூடும். காஷ்மீர் உலகப் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தளமாக அமையக் கூடிய ஓர் இடம். இவ்வளவு காலமாகவும் இவ்விடங்களில் தீவிரவாத அல்லது இனவாத பிரச்சனைகள் நீடித்தவண்ணமே உள்ளது. இதற்கு உலக நாடுகளும் ஒரு காரணம். வெள்ளையன் தமது ஆதிக்கத்தை விட்டுச் செல்லும் போது எல்லா இடங்களிலும் இப்படிபட்ட பிரச்சனைகளை விட்டுச் சென்றிருக்கவே செய்கிறான். இலங்கை சிறந்த துரைமுகமாக அமையுமெனில் அது சிங்கை போன்ற நாடுகளை பாதிக்கக் கூடுமென பொருளாதார நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இன்று அதீத வளர்ச்சியடையக் கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. உலக நாடுகளுக்கு இவற்றை கவனிக்க ஓர் இடம் வேண்டும். தென் பகுதியில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் நாளை காஷ்மீர் பாகிஸ்தானுக்குத்தான் என சொல்லுமானால் அதில் அதிசயிக்க ஒன்றும் இல்லை. 2013-ல் இந்தியா வல்லரசாகுமா என ஜாதகம் கணிக்கும் ஜோதிட வல்லுனர்கள் அதனைச் சுற்றியுள்ள ஏனைய நாடுகளின் ஜாதகத்திலும் தங்களது ஒற்றைக் கண்ணை வைத்துக் கொள்வது நலம் பயக்கும். எதிர்காலத்தில் சீனா இந்தியா மீது படையெடுக்குமா? என்ற ஜோதிடக் கேள்வியுடன் என் புலம்பல்களை கொட்டித் தீர்த்துக் கொள்கிறேன்.












