எனது பாஸ்போர்ட், இமிகிரேஷனுக்கான வெள்ளை அட்டையும், சுங்கத்துறைக்கான நீல அட்டையும் |
சரித்திர சுவடுகளை படித்து உணர்ந்து கொள்வதிலும், நேரிடையாக கண்டு உணர்வதிலும் காத தூர வேறுபாடுகள் உண்டு. முன் நோக்கி ஓடும் முன்னோடிகள் சரித்திரத்தை பழம் பெருமை பேசும் கருவியாகவே கருதுகிறார்கள். அதை தூர எரிந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
வரலாற்று பின்னணிகளை அலசல் செய்து தெரிந்து கொள்வதில் எனக்கு அலாதி பிரியம். முடிந்த அளவில் அதை இங்கு பகிர்ந்தும் வந்துள்ளேன். இப்பொழுதும் ஒரு சுவாரசியமான பயணத்தை முடிந்த மட்டில் இங்கு கொடுக்க எத்தனிக்கிறேன்.
சியம் ரிப் கம்போடியாவின் இரண்டாவது பெருநகரம். முதல் நிலையில் உள்ளது அதன் தலைநகரான ப்நோம் பேன். கம்போடியா ஆசியாவில் மூன்றாம் நிலையில் இருக்கும் ஏழை நாடு. பல போர்களாலும் படையெடுப்புகளாலும் பலமான அடிகளை வாங்கிய நாடு. இன்னமும் அதன் தாக்கத்தை நாம் அங்கு காண முடிகிறது. போல் போட்டின் ஆட்சி காலத்தின் யுத்த கால நிகழ்வுகளை வாசிக்க விரும்புவோர் Survival in the Killing Fields எனும் நூலினை வாசித்துப் பார்க்கலாம்.
தரையிறங்கும் முன் |
அதிக வளர்ச்சி என ஏதும் கூற முடியாத நகரம் சியம் ரிப். 20 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஒரு கிராமப் பகுதியில் வாழ்ந்திருப்பீர்கள் என்றால் அது தான் இன்றைய சியம் ரிப். நகரப் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதிகள் காணப்படுகிறது. நான் சென்றது அதன் மழை கால சமயத்தில். கால்வாய் வசதிகள் போதுமானதாக அமைக்கப்படவில்லை என்பதால் சிறு மழைக்குக் கூட நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. சியம் என்பது தாய்லாந்தின் புரதான பெயர். சியம் ரிப் என்பது தாய்லாந்து வீழ்ந்த பகுதி என அறியப்படுகிறது. கம்போடியர்கள் இன்றளவிலும் தாய்லாந்துக்காரர்களை தன் எதிரியாகவே கருதுகிறார்கள்.
எல்லையோர வாய்க்கால் வரப்பு தகறாருகள் இவர்களுக்கு உண்டு. கம்போடிய தாய்லாந்து எல்லையில் இருக்கும் ஒரு புரதான கோவில் யாருக்கு சொந்தம் என்பதிலான பிரச்சனை இன்னும் நிலுவையில் உள்ளது. தாய்லாந்தில் இருந்து கம்போடியாவுக்கு பயணம் செய்வது ஒரு மலை முகட்டில் இருந்து உங்களை கீழே உருட்டிவிடுவதற்கு சமமாகும். மிக மோசமான பாதைகளை கடந்து வந்தாக வேண்டும். இரு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வருமானமும் யுனேஸ்கோவின் மாணியமும் இதற்கு முக்கிய காரணம். இருவரும் சலிக்காமல் விடாப்பிடியாகவே இருக்கிறார்கள்.
![]() |
விமான நிலையத்திற்கு வெளியே- துடைத்து வைத்த சுத்தம் |
மலேசியர்கள் கம்போடியாச் செல்ல விசா தேவை இல்லை. விசா கட்டுப்பாடு உள்ள நாடுகள் கம்போடிய இமிகிரேஷனில் 'Visa On Arrival' எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதற்கான கட்டணம் தெரியவில்லை. மலேசியர்கள் விசா இல்லாமல் 30 நாட்களுக்கான பயண உரிமத்தை பெற்றுக் கொள்ள முடியும். 30 நாட்களுக்கும் அதிகமாக தங்க விரும்புவோர் விசா நிபந்தனைக்குட்படுவார்கள்.
சியம் ரிப் முழுவதும் சுற்றுலா பயணிகளை நம்பி செயல்படுகிறது. சுற்றுலா பயணிகள் இல்லாத சியம் ரிப் நகரத்தை இவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்துக் கலாச்சாரத்தையும் மரபுக் கலைகளையும் அமல்படுத்திய ஒரு பழம் பெரும் நாகரீகத்தை காண புற்றிசல்களை போல் கூட்டம் கிளம்பி வந்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஐரோப்பிய வெள்ளைத் தோல்கள் அதிக அளவில் வருகிறார்கள். அதனை அடுத்து ஜப்பானியர்களும் சீனர்களும் அதிகமாக வருகை புரிகிறார்கள் என்பது சற்று ஆச்சரியமான தகவல் தான்.
![]() |
விமான நிலையத்தினுள் இந்த வெள்ளை யானை பலரையும் கவர்ந்தது |
வாட் என்பது கோவிலை குறிக்கும். இன்றய அங்கோர் எனப்படும் சமவெளி முன் ஒரு காலத்தில் யசோதரபுரம், ஹரிஹரலாயம், ஈஸ்வரபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. அங்கோர் வாட் என்பது சூரியவர்மன் எனும் கெமர்(கம்போடியா) அரசனால் கட்டப்பட்ட கோவிலாகும். இன்றும் அது தமிழர்களால் கட்டபட்டது எனவதிடுவோர் உண்டு. சூரியவர்மன் தமிழன் என சொல்பவர்களும் உண்டு. அங்கு வாழ்ந்த மக்கள் இந்துவாக இருந்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் நிச்சயமாக அந்த மண்ணின் மைந்தர்களாகிய கம்போடியர்கள் தான். அக்கோவில்களை கட்டி எழுப்பியதும் கம்போடிய அரசர்கள் தான். ஹிந்து மதமும் அரசாட்சி முறைகளும் வணிகத்தின் வழி அங்கு பரப்பப்பட்டுள்ளது.
அங்கோர் பகுதியில் நூற்றுக்கும் மெற்பட்ட கோவில்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று நம்மால் காண முடிந்தது அவற்றில் சொற்பமானவை மட்டுமே. பல கோவில்கள் போர்களலும் இயற்கை பேரிடர்களாலும் பலமான பாதிப்பிற்குட்பட்டுள்ளன. சிற்ப கலை திருட்டுகளும் நடந்துள்ளன. இதில் அங்கோர் வாட் மட்டும் கொஞ்சம் தப்பித்துவிட்டது. அதுவே இன்றளவும் முழுமையாக காணப்படுகிறது. அதனால் தான் என்னவோ சியம் ரிப் போகும் பலரும் அங்கோர் வாட் காணச் செல்வதாக அதை ஒரு ‘லெண்ட் மார்க்காக’ குறிப்பிடுகிறார்கள்.
![]() |
எல்லையோர சர்ச்சைக்கு காரணமான Preah Viher கோவில் - Photo thanks to TOGO website |
நான், மனைவி, அப்பா, அம்மா, என் நண்பர் மாறன் மற்றும் அவர் மனைவி என 6 பேர் இந்த அங்கோர் பயணத்தில் கலந்துக் கொண்டோம். ஏர் ஆசியாவின் மலிவு விற்பனையின் போது போக வர விமான சீட்டு ஒரு ஆளுக்கு 270 ரிங்கிட் ஆனது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சியம் ரிப் விமான நிலையத்துக்கு 2.30 மணி நேர பயணம். தரையிறங்கும் முன் அந்நாட்டின் நிலபரப்பு மிக விசித்திரமாகவே காட்சியளித்தது. சமவெளியும் நீர் நிலை பகுதிகளும் அங்கும் இங்குமாக காணப்பட்டது.
பயணத்திற்கு முன்பாகவே ஹோட்டல் மற்றும் பயண வழிகாட்டியையும் முன் பதிவு செய்திருந்தேன். சியம் ரிப்பின் ஹோட்டல்கள் மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. TripAdvisor, Booking, AirAsia Go, Agoda போன்ற இணைய தளங்கள் இதற்கு மிகவும் பயனாக இருந்தன. பயண வழிகாட்டிக்கு ஒரு சில நிருவனங்களை அனுகினேன். தேர்ந்தெடுக்க நினைத்த வழிகாட்டியை இணைய பயனர்கள் அவர்களின் பயண அனுபவங்களில் எழுதியதின் அடிப்படையில் தேர்வு செய்தேன். எனது நல்லூழ், கோல் ச்சேன் எனும் அவ்வழிகாட்டி அருமையான மனிதராக அமைந்தார்.
சியம் ரிப் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விசா பிரச்சனைகள் ஏதும் இல்லாததால் இமிகிரேஷன் விவகாரங்கள் இனிதே முடிந்தது. விசா வேண்டுவோர் ஒரு பக்கம் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தார்கள். 30 நாள் முத்திரையோடு கம்போடியாவில் காலடி வைத்தோம். ச்சேன் எனது பெயர் பலகையோடு காத்திருந்தார். விசாலமான இருக்கைகள் கொண்ட ‘வேனுக்கு’ எங்களை அழைத்துச் சென்றார். அதிசயமாக வேனின் கதவுகளை காணவில்லை. ‘நண்பா இது மலேசியா இல்லை. இந்த வண்டியின் கதவுகள் அந்தப் பக்கம் இருக்கிறது பார்’ என்றார் ச்சேன். கம்போடியாவின் வண்டிகள் யாவும் இட பக்க வழக்கம் கொண்டவை. நமது போகும் வழி அவர்களுக்கு வரும் வழியென சாலை அமைப்பு. அறியாமையின் நகைப்போடு எங்களின் விடுதியை நோக்கி பயணப்பட்டோம்...
பயணங்கள் தொடரும்...