Thursday, July 30, 2009

கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடு

கலையகம் ஆசிரியர் கலையரசனுடனான கேள்வி பதில் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.

11) இன்றைய நிலையில் இணைய தளம் மாற்று ஊடகமாக அமைந்திருக்கிறதென்பதை மறுக்க இயலாது. இதன் வீச்சு மக்களின் அரசியல் சிந்தனைக்கும் மாற்றங்களுக்கும் தகுந்த ஒன்றுதானா?

பெரும்பான்மை மக்கள் தகவல் அறிவதற்காக இன்றும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளையே நம்பி இருக்கின்றனர். இணையத்தளத்தை ஊடகமாக பாவிப்பது ஓரளவு படித்த மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வேறோருவிதமாக சொன்னால், மத்தியதர வர்க்கத்தின் எண்ணவோட்டத்தை இணையம் பிரதிபலிக்கின்றது. இவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் மிகக் குறைவு. 5% இருந்தாலே அபூர்வம். இணையத்தில் பலரது வரவேற்பை பெற்று அமர்க்களமாக முன்வைக்கப்படும் எதிர்வுகூறல்கள் பின்னர் பொய்த்துப் போவதை அனுபவத்தில் கண்டு கொள்ளலாம். இவர்களது இணைய உலகம், பெரும்பான்மை மக்களின் நிஜ உலகில் இருந்து அந்நியப்பட்டிருப்பதே இதற்கு காரணம். சனத்தொகையில் முக்கால்வாசிப்பேர் இணையத்தை பயன்படுத்தும் மேலை நாடுகளில் அது ஓரளவு மாற்றத்தை கொண்டு வரலாம். இருப்பினும் அங்கேயும் ஏற்கனவே அறிமுகமான வெகுஜன ஊடக கலாச்சாரம் ஆட்டிப்படைக்கின்றது. நாம் நேரில் காணும் சமுதாயத்தின் கண்ணாடியாகத் தான் இணையமும் அமைந்துள்ளது.

12) ஒஸ்திரியோடொவிஸ்க்கிய் போன்ற நாவல்கள் புரட்சிகளைப் பற்றிய பார்வையை மக்களிடம் எடுத்துரைக்க பங்காற்றியவற்றுள் ஒன்று. தற்சமயம் அது அவ்வளவாக பேசப்படும் ஒன்றல்லாமல் போய்விட்டது. அது ஏன்?

ஒரு காலம் இருந்தது. சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசின் செல்வாக்கு காரணமாக பல்வேறு மூன்றாம் உலக நாடுகளிலும் சோஷலிசக் கருத்துகள் பரவியிருந்தன. பல நாடுகளில் வெகுஜன அரசியல்வாதிகள் சோஷலிசம் பேசினார்கள். உதாரணத்திற்கு, இந்தியாவில் நேரு. அந்தக்காலங்களில் சோவியத் தனது நட்புனாடுகளில் புரட்சிகர நாவல்களை பரப்ப முடிந்தது. இன்று காலம் மாறிவிட்டது. அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டு பின்பற்றும் நாடுகள் அதிகரித்து வருகின்றன. அரசு எவ்வழியோ, குடிமக்களும் மாறி விட்டார்கள்.

13) உங்களைக் கவர்ந்த அரசியல் புத்தகங்கள் அல்லது நிச்சயம் படிக்க வேண்டியவற்றுள் எதை குறிப்பிடுவீர்கள்?

மார்க்சிம் கார்கி எழுதிய "யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்". ஒரு மனிதன் தனது சொந்த அனுபவங்களில் இருந்து எவ்வளவு விஷயத்தை கற்றுக் கொள்ளலாம் எனக் கூறும் அவரது சுயசரிதை. லாஹிர சாங்கிருத்தையர் எழுதிய "வால்காவில் இருந்து கங்கை வரை". மனித இனம் எவ்வாறு தோன்றி பரி
ணமித்தது என்பதை சுவையாக கதை போல சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மேற்குறிப்பிட்ட நாவல்களை சிறுவயதில் வாசித்திருந்த போதிலும், இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

14) கடற் கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடுகளென சிங்கபூர் போன்றவற்றை நீங்கள் குறிப்பிட்டு எழுதியது சர்ச்சயை ஏற்படுத்திய ஒன்று. இது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். உங்கள் நிலைபாடு என்ன?

உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை என்ற ஒன்று எங்காவது இருக்கிறதா? ஒவ்வொரு பணக்கார நாட்டிற்கும் இருண்ட பக்கம் ஒன்றுண்டு. சாதாரண கிரிமினல் குறுக்கு வழயில் பணம் சம்பாதித்து சமூகத்தில் பெரும்புள்ளியாக வருவது போலத் தான் நாடுகளும். மேன் நிலைக்கு வந்த பிறகு எல்லோரும் தமது கசப்பான கடந்த காலத்தை மறைப்பது இயற்கை தானே? இதிலே சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்கா?

15) மலேசியாவில் வெகுண்டெழுந்த ஹிண்ட்டிராஃப் இயக்கம் தற்சமயம் ஒரு அரசியல் கட்சியென மாறிவிட்டிருக்கிறது. அதற்குள் சில பிரிவினைகள் வேறு. இவ்வியகத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை மறுக்க இயலாது. நெடுநாளைய அரசியல் மாற்றத்துக்கு இது போன்ற இயக்கங்களின் நடவடிக்கை சரியான ஒன்றென கருதுகிறீர்களா?

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் இந்திய வம்சாவழியினரின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசு மலாய் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இனப் பாகுபாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நியாயமானவை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, மலாய் பெரும்பான்மையினர் அரசு பக்கம் நிற்பதை மறுக்க முடியாது. (அரசு வழங்கும் சலுகைகள் முக்கிய காரணம்) இதிலே கவனிக்கப்பட வேண்டியது, பெரும்பான்மை மக்களிடையே எமக்கான ஆதரவு சக்திகளை திரட்டிக் கொள்வது முக்கியம். ஹிண்ட்ராப் அப்படியான செயல் திட்டம் வைத்திருந்ததா? இவர்களது ஆரம்ப கட்ட போராட்டமே பிரிட்டிஷ் தூதுவராலயத்தை நோக்கியதாக, பிரிட்டிஷ் அரசிடம் நஷ்ட ஈடு கோருவதாகத் தான் அமைந்திருந்தது. தங்கள் கோரிக்கைக்கு கனவான்களின் தேசமான பிரிட்டன் செவி கொடுக்கும் என்ற வெகுளித்தனம் தான் காரணம். அது தான் போகட்டும், பெயரிலேயே "இந்து" அடையாளத்தை புகுத்தியதன் மூலம், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த இந்திய வம்சாவளியினரை எட்டி நிற்க வைத்தார்கள். ஹிண்ட்ராப் அறிக்கையில் பிற மலேசிய சிறுபான்மை மக்களான சீனர்கள், மற்றும் சாராவாக் பிரதேசத்தில் வாழும் பழங்குடியினருடன் ஒன்றிணைந்த போராட்டம் பற்றிய குறிப்புகள் இல்லை. இந்தியவம்சாவளி சமூகத்தின் பொதுப் பிரச்சினை, இந்து மதத்தின் பிரச்சினையாக திசைதிருப்பி விடப்பட்டது. தனது அதிகாரத்தை நிலை நிறுத்த, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரித்து வரும் அரசின் நோக்கமும் அது தான்.

16) பொருளாதார நிவர்த்திக்காக வளர்ச்சியடைந்த நாடுகள் பல திட்டங்களில் முன்னோக்கியிருக்கும் இவ்வேளையில் அவற்றிக்கு பலிக் கடாவாக மூன்றாம் உலக நாடுகள் சில பாதிப்படைவதை அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் உணராமல் தான் இருக்கிறார்களோ?

அரசியல் தலைவர்களில் பல பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். சாமானிய மக்களுக்கு சிக்கலான விஷயமெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே புரியும். இதிலே கவனிக்கப்பட வேண்டியது, அரசியல் என்பது என்ன தான் பொதுநலம் சார்ந்த துறையாக இருப்பினும், அதை நடத்துபவர்கள் தமது சுயநலம் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். சனத்தொகையில் அரைவாசி வறுமையில் உழன்றாலும் தனது குடும்பம் நன்றாக வாழ்கிறது என்று திருப்திப்படும் தலைவர்களே அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இந்தப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற நடுத்தர வர்க்கம். அவர்களுக்கும் அதிகம் உடலுழைப்பைக் கோராத தொழில், அதற்கேற்ற ஊதியம் போன்றன கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாய் திறக்க மாட்டார்கள். கிராமத்தில் இருக்கும் சாதாரண குப்பனும், சுப்பனும், ஆண்டவரின் சாபத்திற்கு ஆளாகி விட்டோமா, என்று தான் புரிந்து கொள்வார்கள்.

17) ஒரு பக்க பார்வையைக் கொண்ட உலக அரசியலை பின் நவீனதுவம் மறுக்கிறது. பல திறப்பட்ட சிந்தனைகளையும் மாற்றுக் கருத்தையும் அது ஆதரிப்பதாக இருப்பதால் ஒரு நிலை கலாச்சார பிடியில் இருப்பவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகும் நிலை அல்லது கலாச்சார குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறீர்களா?

இருண்ட காலம், மீளுயிர்ப்புக் காலம், நவீன காலம் என்று மக்களின் பண்பாடு சார்ந்த வளர்ச்சியை வகைப்படுத்துகிறார்கள். அந்த வகையில் இப்போது நடப்பது பின் நவீனத்துவக் காலம். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சித்தாந்தம் தேடி தவித்துக் கொண்டிருந்த புத்திஜீவிகள் பின் நவீனத்துவ கருத்தியலை தோற்றுவித்தார்கள். கலாச்சாரக் குழப்பம் ஏற்பட்டதாக ஒரு மாயை நிலவியது உண்மை தான். ஆனால் பின் நவீனத்துவமே ஒரு கலாச்சாரமாகிப் போனதைக் காண்கிறேன். எப்போதும் உலக வரலாற்றில் குறிப்பிட்ட சில காலம் வெற்றிடம் ஏற்படும். முன்பு இருந்த ஆதிக்க கலாச்சாரத்திற்கும், பின்னர் வரப்போகும் புதிய கலாச்சாரத்திற்கும் இடையில் தோன்றும் சிறிது கால இடைவெளியில் பல திறப்பட்ட சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம் நிலவும்.

18) ஏகப்பட்ட சமரசங்களுக்கிடையே தன்னை அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஒபாமா தகுதியாக்கிக் கொண்டார். உலக மக்களுக்கு இவரிடம் இருக்கும் எதிர்ப்பார்ப்புகள் அதிகமான ஒன்றே. தனி மனிதராக ஒபாமா விரும்பினாலும் அவர் இருக்கும் அமைப்பின் செல்வாக்கை மீறி அவர் செயல்படுவது சாத்தியம் தானா?

அவர் எதை சாதிக்க விரும்பினார்? ஒபாமா வருவதற்கு முன்னரே அதிகார மட்டத்தில் சில மாற்றங்கள் தேவை என உணரப்பட்டது. அதற்கேற்ற ஆளாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதியாக யார் வந்தாலும், அரச இயந்திரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டு தான் இருக்கும். கொள்கை வகுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளை மக்கள் தெரிவு செய்வதில்லை. உலக மக்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு, ஊடகங்கள் கிளப்பி விட்ட வெப்பத்தின் வெளிப்பாடு.

19) இன்றய அரசியலில் உணவு தட்டுப்பாடு சம்பந்தமான வாதங்கள் அதிகமாகவே இருக்கிறது. மக்களின் 'லிவிங் கோஸ்ட்' அதிகமாகியிருக்கும் அதே வேலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மந்தகர நிலையில் இருக்கிறதே?

பல நாடுகளில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தன. அதே போல உணவுத் தட்டுபாடு நிலவுவது, உணவு உற்பத்தி, விநியோகத் துறையில் முதலீடு செய்திருக்கலாம் நிறுவனங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதப்படுகின்றது. எப்போதும் லாபத்தை குறிக்கோளாக கொண்ட வர்த்தக நிறுவனங்கள், மக்கள் நலன் குறித்து சிந்திப்பதில்லை. பண வீக்கத்தால் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது. இருப்பினும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் என்ன விலை கொடுத்தேனும் வாங்கியாக வேண்டும். அதே நேரம் பன்முகப் பட்ட நுகர்வுப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது உண்மை தான். ஆனால் தற்போது நடப்பது பொருளாதார மறுசீரமைப்பு. இதன் விளைவுகளை சில வருடங்கள் கழித்து உணரலாம்.

20) புத்தகம் ஒன்று எழுதி வருவதாக அறிகிறேன். அதைப் பற்றிய மோலோட்ட தகவல்களை அல்லது எதை சார்ந்தது என்பதையோ குறிப்பிட முடியுமா?

ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஈழப்போர் காரணமாக, ஒரு அகதி எவ்வாறு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஐரோப்பிய நாடொன்றில் அடைக்கலம் கோரும் வரை இடையறாத பயணத்தில் ஏற்படும் இன்னல்கள். புகலிடம் கோரிய நாட்டில் அதிகாரிகளின் திமிரான மெத்தனப் போக்கு. ஐரோப்பிய அரசுகளின் உள் நோக்கம் கொண்ட அகதி அரசியல். இவை போன்ற பல தகவல்களை விரிவாக வழங்க முயற்சித்துள்ளேன். இந்த நூலில் குறிப்பிடப்படும் பல சம்பவங்கள் சொந்த அனுபவத்தினூடாக பெறப்பட்டவை. நூல் வெளிவந்த பின்னர், அதனை பிற மொழிகளில் மொழிபெயர்க்க சில நண்பர்கள் விரும்புகின்றனர். இதை விட நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளையும் நூலாக வெளியிட இரண்டு பதிப்பகங்கள் முன்வந்துள்ளன. அனேகமாக மூன்று நூல்களையும் அடுத்த வருட தொடக்கத்தில் சந்தையில் வாங்கலா
ம்.

21) இந்தியா வல்லரசாகுமா?

அயலில் இருக்கும் குட்டி நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளைப் பொறுத்த வரை இந்தியா எப்போதும் வல்லரசு தான். அமெரிக்காவின் நிழலின் கீழ் பிராந்திய வல்லரசாக இருக்கின்றது. இதைத் தவிர உலக வல்லரசாவது நடக்கக் கூடிய விஷயமல்ல. அணு குண்டு வைத்திருப்பதற்காக ஒரு நாடு வல்லரசாகி விடுமானால், பாகிஸ்தான், வட-கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் வல்லரசுகள் தான்.

22) நீங்கள் பார்த்து வியந்த நாடு?

என்னைக் கவர்ந்த நாடு எகிப்து. ஆப்பிரிக்கக் கண்டத்தில், ஐந்தாயிரம் ஆண்டிற்கு முந்திய நாகரீகம் இன்றைக்கும் சிதைவுறாமல் பார்த்து வியக்கும் வண்ணம் நிலைத்து நிற்கின்றது. இன்றும் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

23) வலையில் எழுதும் கட்டுரைகளுக்கு மாட்டி விடுவதற்கென்றே சில கேள்விகள் கேட்கப்படும் போது கோபப் பட்டதுண்டா?

ஒன்றுமே தெரியாதவர்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்கலாம். ஆனால் சில பேர் புரிந்தாலும் புரியாத மாதிரி பிடிவாதமாக இருப்பார்கள். அப்படியானவர்கள் எரிச்சலூட்டுகின்றனர். இது வலையில் வருபவர்கள் மட்டுமல்ல, சில நண்பர்கள், உறவினர்கள் கூட அப்படி நடந்து கொள்ளகின்றனர்.

24) வளர்ந்த நாடுகளின் இன்றய பொருளாதார வளர்ச்சி திட்டத்தில் மூன்றாம் உலக நாடு ஒன்றும் அதீத வளர்ச்சியடையும் என குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த நாடாக இருக்கக் கூடும்?

எந்த நாட்டையும் குறிப்பிட்டு எதிர்வு கூற விரும்பவில்லை. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, ஆப்பிரிக்காவில் லிபியா, ஆசியாவில் சீனா ஆகிய நாடுகள் தற்போது உள்ள உலக பொருளாதார ஒழுங்கிற்கு நிகரான மாற்றுத் திட்டங்களை முன்வைத்து, செயல்படுத்தி வருகின்றன. அனேகமாக எல்லோரும் டாலர் வீழ்ச்சியடையும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்றிருக்கும் உலகம் நாளை இருக்கப் போவதில்லை.

25) மூன்றாம் உலக யுத்தம் பற்றிய உங்கள் பார்வை?

முதலில் உலக யுத்தம் என்றால் என்ன? ஐரோப்பிய நாடுகள் அதிகாரப் போட்டிக்காக அணி பிரிந்து போரிட்டார்கள். பின்னர் போரினால் ஆன பயன் எதுவுமில்லை என்று உணர்ந்து, ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்தார்கள். ஐரோப்பியர்கள் போரின்றி சமாதானமாக வாழ்வதால், அதை உலக சமாதானமாக அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்களது போர்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மூன்றாம் உலக யுத்தம் எப்போதோ தொடங்கி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் தான் அவற்றை ஒன்று சேர்த்துப் பார்த்து புரிந்து கொள்வதில்லை.

13 comments:

வினவு said...

பயனுள்ள கேள்விகள், தேடலைத் தூண்டும் பதில்கள், பதிவுலக அரட்டைகளுக்கு மத்தியில் இத்தகைய முயற்சிகளை எல்லோரும் வரவேற்கவேண்டும். நன்றி, தோழர்கள் விக்னேஷ்வரன், கலையரசன் !

வினவு

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

மிகவும் அருமையான நேர்காணல். வலைப் பதிவுகளில் இந்த நேர்காணல் சற்று வித்தியாசமாக இருக்கிறது. முயற்சிக்குப் பாராட்டுகள். தொடர்ந்து செயல் படுங்கள். வாழ்த்துகள். இந்த்ச் சமயத்தில் ‘தமிழ்ப் பூங்கா’வை நடத்தி வரும் சிவனேசு, ‘மாடப்புறா’வை நடத்தி வரும் குமரன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
வளருட்டும் உங்களுடைய எழுத்துப் பணிகள்.

ttpian said...

கடவுள் செய்தால் திருக்கல்யாணம்!
திருவேடுபறி
திருக்கிரிக்கெட்
திருப்"பார்"

யாசவி said...

where is the details abt s'pore

I can't find

cheena (சீனா) said...

இந்நேர்கணல்கள் இரண்டு அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் நடந்தது - எனக்குப் புரியவில்லை - ஆனால் நேர்காணல் என்பது இது மாதிரித்தான் இருக்க வேண்டும் - யாரை நேர் காணப் போகிறோமோ அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு அவரை மேலும் வெளி உலகிற்குக் காட்ட - தகுதியான கேள்விகள் கேட்க வேண்டும் - அதில் விக்கி முதல் பரிசு பெறுகிறார்

நல்வாழ்த்துகள் விக்கி

Tamilvanan said...

மேலும் பல நேர்காணல்களை எதிர் பார்க்கிறேன்.

வால்பையன் said...

//மூன்றாம் உலக யுத்தம் எப்போதோ தொடங்கி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் தான் அவற்றை ஒன்று சேர்த்துப் பார்த்து புரிந்து கொள்வதில்லை.//

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!

கே.பாலமுருகன் said...

ஹிண்ட்ராப் இயக்கம் செய்த "இந்துத்துவா" போராட்டம் என்கிர மாயை அவர்கள் அறிந்தே செய்ததா அல்லது மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்கிற அவசரத்தில் "இந்து" என்கிற சொல் பிறரை அன்னியப்படுத்தியதை அறியாமல் நிகழ்ந்ததா என்று தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அதனை முன்னெடுத்து சென்ற உதயகுமார் அவர்களை நேர்காணல் செய்யுமாறு விக்கியிடம் பரிந்துரை செய்கிறேன்.
(அப்பபடா விக்கிக்கு ஒரு வேலை வச்சசச்சி)

கே.பாலமுருகன் said...

//யாரை நேர் காணப் போகிறோமோ அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு அவரை மேலும் வெளி உலகிற்குக் காட்ட - தகுதியான கேள்விகள் கேட்க வேண்டும் - அதில் விக்கி முதல் பரிசு பெறுகிறார்//

நேர்காணலில்கூட பரிசு போட்டியெல்லாம் வந்துவிட்டதா?
விக்கி பச்சை மண்ணு,
விக்கியிடம் இருக்கும் சிறந்த பழக்கமே புளோக்கில் பதிவிடுவது அல்ல, அதிகமாக புத்தகங்கள் வாசிப்பதும், இணைய வாசிப்பும்தான். இது அவரின் தேடலுக்கு விரிவை ஏற்படுத்துகிறது. வாழ்த்துகள் விக்கி

Vinitha said...

Happy Friendship Day!

malar said...

வாழ்த்துகள் விக்னேஷ்...
தொடருங்கள் தங்கள் நேர்கானல் பணியை :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வினவு

நன்றி வினவு, இன்னும் சைபர் கிரைம் ஆராய்ச்சிகள் நடக்குதா? :)

@ ஹரேஷ்

நன்றி

@ டிபியன்

நன்றி...

@ யாசவி

சில காரணங்களால் இங்கு கொடுக்க முடியவில்லை, தனிமடலில் அனுகவும், தலைப்பும் அதனால் தான் மாற்றப்பட்டிருக்கு.

@ சீனா

உங்கள் அன்புக்கு நன்றி ஐயா...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்வாணன்

தொடர் ஆதரவுக்கு நன்றி...;)

@ வால்பையன்

பாஸ் நீங்க ஒரு ஜீனியஸ்...

@ பாலமுருகன்

ஆஹா.... நேர்காணல்... அதுக்குலாம் நிறைய பேர் இருக்காங்க எசமான்... சரி எனக்கு தலைசுத்துது பிறகு பேசுவோம் :)

@ வினிதா

நன்றி

@ மலர்விழி

நன்றி