Tuesday, June 23, 2009

அர்த்தமற்ற பொழுதுகள்

காதுத் துவாரங்களில் பஞ்சுகளை அப்பியதைப் போல் நிசப்த நிலை அவனுள் எழும்பி அழுத்துவதாக உணர்ந்தான். அச்சூழ்நிலைக்கு கிஞ்சித்தும் பயன்படாத கோப உணர்ச்சி அபரிமிதமாகவே அவனை ஆட்கொண்டிருந்தது. கையாளாகாத கோபம். இயலாமை கோபத்தின் காரணம் என அரிஸ்டாட்டலின் வரிகளை அச்சமயம் அவனிம் உபதேசித்திருந்தால் சொன்னவன் நிலை அதோகதியாகிவிட்டிருக்கும். பேய் கோபம் அவனுக்கு.

சூரிய வெப்பம் சாலையெங்கும் நிரம்பியிருந்தது. இயற்கை தனது சேவைகளை வழக்கம் போல் தடைகளின்றி நடத்திக் கொண்டிருந்த அற்புத நாட்களில் அதுவும் ஒன்று தான். அவனுக்கோ கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. உலகில் தீமைகள் நிறைந்துக் கொண்டு வருவதாக அதைக் கருதினான். அந்த இருள் தம் வாழ்வையும் பாழ் செய்யப் போகும் அறிகுறியாக எதிர்கால சிந்தனைகள் அவனுள் அலைக்கழித்தன.

பத்து நிமிடங்களுக்கு முன் நண்பனோடு கேலியும் கிண்டலுமாகத் தான் பேசிக் கொண்டிருந்தான். நண்பனைக் கவனித்தான். பேயறைந்த முகமாக வாடியிருந்தான். தோளில் கை வைத்தபடியாக ஒரு காவலாளி அவனை காவல் வாகனத்தை நோக்கி தள்ளிக் கொண்டு போனார். அவனது நிலையும் அப்படியே. அவனை பின்னால் நின்றிருந்த வேறொறு வாகனத்தை நோக்கி தள்ளிச் சென்றார்கள்.

போலிஸில் பிடிபடுவது அவனுக்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே இவ்வனுபவம் அவனுக்கு பழக்கப் பட்டிருந்தது. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் கூட இப்படித்தான் எதிர்பாரா விதமாக போலிஸிடம் பிடிப்பட்டான்.

அன்று அவன் மட்டுமல்ல அவனோடு இருந்த எட்டு பேரும் கொத்தாக மாட்டிக் கொண்டார்கள். எட்டு பேரும் ஈறும் பேனுமாக கூடிக் கூத்தடிக்கும் நண்பர் கூட்டம் தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விளையாட்டு வழக்கத்தில் இருக்கும். ஆனால் எல்லாக் காலங்களிலும் தவறாமல் இடம் பெறுவது சீட்டாட்டமாக தான் இருக்கும்.

இடைநிலைப் பள்ளியில் அவர்களுக்கு அது இறுதி ஆண்டாகும். அவனும் சரி அவனது சகாக்களும் சரி, எல்லோரும் சுமாராக படிக்கும் மாணவர்கள் தான். வீட்டுக்குப் போய் சாப்பிட்டதும் 'டியூசன்' என்று சொல்லிக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.படிக்காத அந்த டியூசனுக்கு மாதம் தவறாமல் வீட்டில் பணம் பறிக்கப்படுவது எழுதப்படாத விதி. அவனது பெற்றோருக்குப் பிள்ளை மேல் நம்பிக்கை என்பதை விட, இன்றைய நவநாகரிக உலகின் அடாத வேலைப் பளுவால் பாதிக்கப்பட்ட ஜீவன்களுள் நாங்களும் அடக்கம் எனச் சொல்லிக் கொள்ளும் சமூகத்தின் அங்கத்தவர்கள் என்பதே தகும். பிள்ளை தனக்கானதைப் பார்த்துக் கொள்வான், தன் கடமை பணத்தைக் கொடுத்தால் முடிந்தது என கருதுவோர்.

வார நாட்களில் இவர்களின் அழிச்சாட்டியம் அதிகமாகத் தான் இருக்கும். வார இறுதிகளில் அபரிமிதம் என்று தான் சொல்ல வேண்டும். எல்லோரும் பக்கத்துப் பக்கத்து குடியிருப்புகளில் வசிப்பவர்கள். இவர்களுக்கு வசதியாக அமைந்த சந்திப்பு இடம் ஒன்று உண்டு. பாழடைந்த பங்களாவோ ஆளில்லாத குடிசையோ இல்லை. பிரதான சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் பெட்ரோல் நிலையத்திற்குப் பின்னால் கேட்பாரற்ற சிறு காடு உண்டு. அக்காட்டில் இருந்த ஒரு பெருமரத்தின் காலடிதான் இந்நண்பர்கள் கூட்டணி சங்கமிக்குமிடம்.

சுவாசப் பைக்கு கனத்த காற்றாக வெண்சுருட்டுகளை ஊதிப் பழகியது அம்மரத்தடியின் பொழுதுகளில் தான். காசிருக்கும் சமயங்களில் 'சபை'யில் பீர் மற்றும் விஸ்கி போன்ற வஸ்த்துகளுக்கும் சிறப்பிடம் கொடுப்பார்கள். மாதக் கடைசியின் ஒரு சனிக்கிழமையின் பொழுது அப்படி தான், தன் வசமிருந்த கொஞ்ச நஞ்ச சில்லரைகளை வைத்துச் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். மாற்று உடையிலிருந்த காவலர்கள் சட்டென சுற்றி வளைத்துப் பிடித்தார்கள்.

ஈரக்குலை நடுங்கிப் போனது அவர்களுக்கு. படுவேகமாகவும் கடுமையாகவும் சோதனையிடபட்டார்கள். மரத்தடியில் கிடைத்த பொருட்களை கைப்பற்றிய போலிஸ்காரர்கள் முகத்தில் வியப்புக் குறியுடன் எல்லோரையும் தலையில் தட்டி, ஓட்டி வந்திருந்த ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தார்கள்.

ஸ்டேஷனில் சற்றே கடுமையான குரலில் மேலோட்ட விசாரணை நடத்தியவர்கள் அவர்களின் குடும்பத் தகவல்களை அறிந்துக் கொண்டு தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். தகவல் கிடைத்து வந்தவர்களில் சில கோபக்கார அப்பாக்கள் பொறி பறக்க இரண்டொரு அறைவிட்டு பிள்ளைகளை வீட்டுக்கு இட்டுச் சென்றார்கள்.

வீட்டுப் பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு கும்பல் ஆபத்தான கருவிகளுடன் சண்டைக்கு காத்திருப்பதாகவும் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வந்ததை வைத்து அவ்விடம் விரைந்ததாக சொல்லி வைத்தார் ஒரு போலிஸ்காரர். நண்பர்களுக்கு 'எவன் டா சொன்னவனா இருப்பான்' என புத்தி சடுதியில் விரைந்தது. 'இவனா தான் இருக்கனும்', 'அவனாதான் இருக்கனும்' என கணக்கு தீர்மானங்கள் ஓரிரு கெட்ட வார்த்தைகளுடன் மண்டையில் மச மசத்துக் கொண்டிருந்தன. அடுத்து வந்த சில தினங்களுக்கு யார் போலிஸில் போட்டு கொடுத்த ஆசாமி எனும் பேச்சு தான் அதிகமிருந்தது.

சூதாடிய குற்றத்திற்கு புகார் பதிவு செய்யப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தினத்தில் நீதி மன்றம் வரச் சொல்லி இருந்தார்கள். கதையின் ஆரம்பத்தில் பிடிபட்ட இருவரும் தங்களது பெயரை காவல் நிலையத்தில் கையெப்பமிட்டது அது தான் முதல் முறையாகும். அவன் சிவ தயாளன் எனும் தமது பெயரை ஆங்கிலத்தில் 'எஸ்' வடிவம் போட்டு கிறுக்கினான். அடுத்தவன் மருதன். பின்னார் அனைவருமாக கையெழுத்துப் போட்டுக் கிளம்பினார்கள்.

வீட்டில் தாய் தந்தையினரிடம் தான் விளையாடவில்லையென்றும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், வலுக்கட்டாயமாக அவனை அங்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்றும் பழங் காலத்து பொய்யையே சொல்லி வைத்தான். இரண்டு மூன்று நாட்களுக்கு சிவ தயாளனுக்கு அவ்வப்போது நெஞ்சில் சுருக்கென ஊசியேற்றும் விதமாக அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பொய்யை வீட்டில் நம்பினார்களா என இன்று வரை அவனுக்கு தெரியாது.

வாரங்கள் ஓரிரண்டு நகர்ந்ததும் நண்பர்கள் இயல்பு நிலைக்க்கு திரும்பினார்கள். தம்மை மாட்டி விட்டவர்களாக இருக்கக் கூடுமென சில சண்டைகள் வந்தன. சிறு வயதில் பந்து விளையாட்டின் சமயம் கள்ள ஆட்டம் ஆடினார்கள் என ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு பிரிந்துபோன குழுக்களாகி இருந்தார்கள். அச்சண்டை எப்படி எப்படியோ சுழன்று சுற்றி அன்றைய நிலையில் பெரும் பகையாகிவிட்டிருந்தது. போலிஸில் மாட்டிவிட்ட பிரச்சனையால் அவ்வப்போது அடித்துக் கொண்டார்கள். கெட்ட வார்த்தைகளில் முகம் சிவக்க ஆத்திர வடுவேறியவர்களாக கத்தி தீர்த்துக் கொண்டார்கள். உன்ன விட மாட்டேண்டா என தமிழ் திரைப்படத்தின் தாக்கத்தால் ஓரிரு வசனங்கள் பேசிக் கொண்டார்கள்.

நீதி மன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும் நாளும் வந்தது. சீட்டுக் கட்டையும், விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட தொகை 2 ரிங்கிட் 25 காசையும் நீதிபதியின் பார்வைக்கு வைத்திருந்தார்கள். புகார் படிக்கும் போது தொகையை சொன்னவுடன் நீதிமன்றம் 'கொல்; என சிரித்து வைத்தது. சூதாடிய குற்றத்தை ஒப்புக் கொண்டதினாலும் குறைந்த வயது மாணவர்களாக இருந்ததாலும் 100 வெள்ளி அபராதமும் எச்சரிக்கையும் கொடுத்து அனுப்பினார்கள்.வழக்கன்று அவன் வீட்டினர் யாரும் வந்திருக்கவில்லை. 200 வெள்ளி 'பைன்' போடுவார்கள் என சொல்லி காசு வாங்கி வந்திருந்தான். அதனால் 100 வெள்ளி லாப கணக்கில் சேர்ந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் நகர்ந்து விட்டிருந்தது.

இன்று நண்பர் கூட்டம் பல இடங்களுக்கு பிரிந்து விட்டது. சிலர் வெளியூரில் வேலை செய்தபடி இருந்தார்கள், சிலர் வேற்றிடத்தில் தங்கி படித்து வந்தார்கள், ஒருவன் ஐந்தாம் படிவ பரிட்சை முடிந்ததும் காதலியைக் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். அவனால் ஏனையோர் அவர் குடும்பத்தில் மொத்தடிப்பட்ட கதைகள் வேறு. அதில் சிவாவும் மருதனும் மட்டும் ஒன்றாக இருந்தார்கள். ஒரு தனியார் கல்லூரியில் விண்ணப்பம் செய்து கடமைக்குப் படித்து வந்தார்கள். நண்பர்கள் ஊர் திரும்பும் சமயங்களில் சந்தித்துக் கொண்டார்கள். கொண்டாட்டங்கள் குறைந்துவிட்டிருந்தது. சமய்ங்களில் இளயவர்கள் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொள்வதை காணும் போது சிவாவுக்கு தன்னையறியாமல் ஒரு மந்தகச் சிரிப்பு எழும்பிச் செல்லும்.

அன்றய தினம் இருவரும் புதிதாக திரைக்கு வந்திருந்த ஒரு படத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். இவன் குளித்துக் கிளம்பிக் கொண்டிருந்த சமயம் மருதன் காரில் வந்து நின்றிருந்தான். அவன் அப்பா எங்கோ சென்று வந்ததாகவும். காரை வீட்டின் வெளியில் நிறுத்திவிட்டு அலுப்பில் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான். ”நான் கமுக்கமா ஓட்டிக்கிட்டு வந்துட்டேன். பிறகு கேட்டால் சொல்லிக்கலாம்.நீ கிளம்பு நாம படம் பார்க்க போகலாம்” என்றான். அவனும் கிளம்பினான். பத்திரிக்கையில் படித்த படத்தின் கிசுகிசுகளையும் விமர்சனத்தையும் உலக அதிசயத்தில் இதுவும் ஒன்று என்பது போல் சிலாகித்துப் பேசிக் கொண்டார்கள்.

எதிரில் போலிஸ் தடுப்புக் காவல் இருப்பதைக் கண்ட போது கூட பரிசோதனைக்கு 'லைசன்ஸ்' இருக்கிறதா என கேட்பார்கள் என்று தான் நினைத்தார்கள். இப்போது பிடித்துக் கொண்டு காவல் நிலையம் வரை இழுத்துச் செல்வார்கள் என்றதும் பயத்தில் இருவருக்கும் உடல் கிடுகிடுத்துப் போனது. கொஞ்சம் குழம்பியும் போனார்கள். முன்பு கேள்விப்பட்டிருக்கிறான். ஒரு குற்றச் செயலில் இருவர் மாட்டிக் கொண்டால் இப்படித் தான் தனித் தனியாக வெவ்வேறு விதமாக கேட்டு விசாரிப்பார்கள் என்று. காரில் சென்றுக் கொண்டிருக்கும் இத்தருணம் மருதனிடம் என்ன கேட்டிருப்பார்கள் என்றும் அவன் என்ன சொல்லி இருப்பான் என்றும் பலமாகவே யோசித்துக் கொண்டிருந்தான். மருதனுக்கும் அதே சிந்தனை தான்.

காவல் நிலையத்தில் ஒரு போலிஸ்காரர் தனது வறட்டுக் குரலில் மிரட்டி விசாரித்தார். பலமாக அடித்துவிடுவதைப் போல் பாவனை செய்தார். ஆனால் அடிக்கவில்லை. வந்தவுடனே இருவரிடம் இருந்த பொருட்களையும் பரிசோதித்து எடுத்து வைத்துக் கொண்டார்கள். வீட்டில் செய்தி சொல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அடையாள அட்டை எண் வழியாக பரி சோதித்து பழைய சூதாட்டப்புகாரைப் பற்றி விசாரித்து வைத்தார்கள். நெடு நேரமாக வராண்டாவில் அமர வைத்திருந்தார்கள். காரில் என்ன விசாரித்தார்கள் என குசுகுசுத்துப் பேசிக் கொண்டார்கள். வந்து போகும் காவல் அதிகாரிகள் ஒரு சிலரைத் தவிர எல்லோருமாக கேட்டு வைத்தார்கள். மிரட்டினார்கள், நீ என்ன 'கேங்' தலைவனா என ஒரு அதிகாரி இருவரின் இடுப்பையும் கிள்ளினார்.

அந்தி மறைந்து இரவு எட்டிப் பார்க்க ஆரம்பித்த நேரமாக இருந்தது. வீட்டில் இருந்து வருவார்கள் எனும் எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் எத்தனித்திருந்தது. மற்ற இடங்களை நோட்டமிட்டதை விட கண்கள் வாசல் பக்கமே அதிகமிருந்தது. இரவு ஓர் அதிகாரி வந்தார். இருவரையும் படிவம் ஒன்றில் கையெப்பமிட சொல்லி காவல் நிலைய கட்டிடத்தில் சற்றே தள்ளி வேறிடத்தில் இருந்த சிறையில் அடைத்தார்கள்.

சிறைச்சாலையின் முதல் அனுபவம் அவர்களிடம் வில்லப் புன்னகை பூத்தது. பெரிய அறை. பத்துப் பதினைந்து பேர் இருந்தார்கள். இங்கு வருகையாளர்கள் சகஜம் என்பதைப் போல் உள்ளே அனுப்பப்பட இவர்களைக் யாரும் கண்டுக் கொள்ளவில்லை. படுத்திருந்த ஓரிரு தலைகள் ஏறிட்டுச் சாய்ந்து கொண்டது. நுழைவாயிலின் பக்கத்தில் இருவருமாக அமர்ந்துக் கொண்டார்கள்.

என்ன 'கேசு' என ஒருவன் ஆரம்பித்தான். நடந்ததைச் சொன்னார்கள். அறிந்திராத சட்டத்தின் கோட்பாட்டு எண்களைக் கூறி அந்தக் 'கேசா' என்றான். மேலும் பல மாதிரியானக் கேள்விகளைக் கேட்டார்கள். கேள்விக் கேட்டவனோடு மேலும் சிலர் சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் பேச தாம் பெரிய குற்றம் செய்து வந்ததைப் போல் தோன்றியது. இருவருக்கும் விழி நீர் முட்டிக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டார்கள். இவர்களைப் பாடச் சொன்னார்கள். இவர்கள் அமைதியைக் கண்டு அடிக்க வருவதைப் போல் பயம் காட்டினார்கள். துக்கத்தை அடக்கிக் கொண்டு பாடினார்கள்.

அந்த அறை இருட்டிக் கிடந்தது. விளக்குகள் இருக்கிறதா என அறிய முடியவில்லை. ஒரு கழிப்பிடமும் பக்கத்தில் குழாயும் இருக்கக் கண்டனர். ஒருவன் கொஞ்சமாக குழாய் நீரை திறந்துவிட்டு கைக்குட்டையின் கால் வாசியாக இருக்கக் கண்ட துணியால் தேய்துக் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தான். ஒருவன் சுவர் ஓரமாக மேல் எக்கி எதையோ சுரண்டினான். காகிதத்தில் வைத்து சுருட்டி சுவர் இடுக்கிலிருந்த தீக்குச்சியால் உரசி பற்ற வைத்து இழுத்துக் கொண்டிருந்தான். சிலர் உறங்கிக் கொண்டும், சிலர் பேசிக் கொண்டும் விநோதமாக பொழுதுகள் நகர்ந்தன. நேரம் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. தூக்கமும் சிறைக்கு பயந்த ஒன்றாய் வர மறுத்தது.

நள்ளிரவில் அவர்கள் குடும்பத்தார் வந்ததாகவும் காலையில் உயர் அதிகாரியிடம் பேசி அழைத்துக் கொள்ள சொன்னதாகவும் காவலர் ஒருவர் செய்தி சொல்லிச் சென்றார். அத்தருணம் சுவாசித்த காற்றில் கொஞ்சம் ஈரம் பொதிந்திருப்பதாய் இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். டேய் பசங்களா வெளிய போனதும் இத இத வாங்கி பின்னால 'கேட்' வழியா உள்ள தூக்கி போட்டிடுங்க. நாங்க மத்தியானம் வெளிய சுத்தம் பண்ண போகும் போது எடுத்துக்கிறோம் என சில பட்டியலை சொல்லி வைத்தார்கள். இருவரும் சரியென தலையாட்டி வைத்தார்கள். சிறு கப்பில் 'சீராப்பு' நீரையும் ரொட்டி துண்டுகளையும் கொடுத்தார்கள். அது காலை பசியாற என புரிந்துக் கொள்ள முடிந்தது.


சுமார் ஒன்பதரை மணியளவில் அவர்களை வெளியே வரச் சொன்னார்கள். உயர் அதிகாரியின் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்ட போது மருதனின் அப்பா உயர் அதிகாரியோடு பேசிக் கொண்டிருந்தார். சில காகிதங்களைக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பிடிபட்ட நாளன்று காரின் பின் பக்கம் பள பளக்க தீட்டப்பட்ட கோடரி ஒன்று காகிதத்தால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை பற்றியதாகத் தான் அப்பேச்சு இருந்தது. அக்கோடரி தாக்குதலுக்கு பயன்படுத்த வைத்திருந்ததாகப் போலீஸ் சந்தேகித்துக் கைது செய்ய நேர்ந்ததாகப் பெற்றோரிடம் சொன்னார்கள். அக்கோடரி மருதனின் அப்பா வேலையிடத்தில் உபயோகிப்பதாகவும், வேலையிடம், பட்டை தீட்டிய ரசீது என எல்லாவற்றையும் எடுத்துக் கூறி அவர்களை வெளியாக்கினார்கள்.

கையெழுத்துப் போட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். சிவாவும் மருதனும் காரில் அமர்ந்திருந்தார்கள். முதலில் அவ்வதிகாரி கூறியது நினைவை உறுத்தியது. வாகனத்தில் தாக்குதலுக்குக்குரிய ஆயுதம் வைக்கப்பட்டிருபதாக செய்தியறிந்து பிடித்ததாக அவர் சொன்னார். யார் சொல்லி இருக்கக் கூடும் என பலத்த சிந்தனையில் இருவரும் மூழ்கிக் கிடந்தார்கள். கார் சாலையில் விரைந்துக் கொண்டிருந்தது. பூமியில் வெளிச்சம் கொட்டிக் கிடப்பதை சிவா உணர்ந்தான். வீட்டிற்கு போனதும் புத்தி சொல்ல அவனது பொற்றோர் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

(பி.கு:இது 'உரையாடல், சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட எனது ஆக்கம்)

26 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்களோடு மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்!

(போய் கதையை படிச்சுட்டு அப்பாலிக்கா வாரேன்!)

அப்பாவி முரு said...

//இருந்த எட்டு பேரும் கொத்தாக மாட்டிக் கொண்டார்கள். எட்டு பேரும் ஈறும் பேனுமாக கூடிக் கூத்தடிக்கும் நண்பர் கூட்டம் தான்//

//உன்ன விட மாட்டேண்டா என தமிழ் திரைப்படத்தின் தாக்கத்தால் ஓரிரு வசனங்கள் பேசிக் கொண்டார்கள்.//

விக்கியோட டச்,

//நீ என்ன 'கேங்' தலைவனா என ஒரு அதிகாரி இருவரின் இடுப்பையும் கிள்ளினார்//

தண்டனைக்கு இடுப்பை கிள்ளுறதா?

ஆவ்வ்வ்வ்

சென்ஷி said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் விக்கி! :)

மங்களூர் சிவா said...

/

தண்டனைக்கு இடுப்பை கிள்ளுறதா?

ஆவ்வ்வ்வ்
/

repeatey

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் விக்கி! :)
/
repeatey

விஜய் ஆனந்த் said...

அனுபவக்கதை நல்லா இருக்கு விக்கி!!!

இராம்/Raam said...

கதையோட நீளத்தை குறைச்சிருக்கலாம்.... மத்தப்படி நல்லா வந்திருக்கு விக்கி... :)

நட்புடன் ஜமால் said...

காதுத் துவாரங்களில் பஞ்சுகளை அப்பியதைப் போல் நிசப்த நிலை\\

துவக்கமே நிமிர்ந்து உட்கார்ந்து படிப்பில் கவணம் செலுத்த வைக்கின்றது.


\\சிறைச்சாலையின் முதல் அனுபவம் அவர்களிடம் வில்லப் புன்னகை பூத்தது. \\

ஒரு மிரட்டலாத்தான் இருக்கு.


\\வீட்டிற்கு போனதும் புத்தி சொல்ல அவனது பொற்றோர் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.\\

இது இரசிக்கும்படியாக இருந்தது.


வெற்றியடைய வாழ்த்துகள்.

வால்பையன் said...

பதின்மவயதின் நிலையையும், உணர்வுகளையும் எழுத்தால் வடித்துள்ளீர்கள்

மலேசியாவில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன்!

ரவி said...

கொஞ்சம் கொலைவெறியோடு பல புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் போல...

அந்த தடம் கதையில் நன்றாக தெரிகிறது...

நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்...அதாவது இன்னும் எளிமையாக சொன்னால், கொஞ்சம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக இருந்திருக்கலாம்...

100 வெள்ளி எறநூறு வெள்ளி என்று சொல்வதற்கு பதில் ரூபாயில் சொல்லியிருக்கலாம். கொஞ்சம் நேட்டிவிட்டி டச் கிடைத்திருக்கும்.

என்னைப்பொறுத்தவரை வெள்ளி என்றால் வெள்ளி கொலுசு தான் ஹி ஹி...

அப்புறம் நான்கு சந்திப்பிழைகள், மூன்று எழுத்துப்பிழைகளை தவிர்த்திருந்து இருக்கலாம்...

சீட்டாடி மாட்டி போலீஸ் கையால் இடுப்பில் கிள்ளு வாங்குவது ஒன்றும் பெரிய டெரட் ஆன சம்பவம் இல்லாததால் பெரிதாக கவரவில்லை...

முடிவு என்று எதுவும் இல்லாததும், முடிவில் பெரிய ட்விஸ்ட் இல்லாததும் மொக்கையாகிப்போக வழிவகுத்துவிட்டது...

மதிப்பெண் வேண்டும் என்றால் சொல்லுங்க...இல்லை என்றால் இன்னும் நல்ல தீம் அல்லது கதைக்கருவோடு எழுத முயலவும்...

Prabhu said...

நல்லாருக்கு. நீங்க ஜெயிக்கனும்.

//உன்ன விட மாட்டேண்டா என தமிழ் திரைப்படத்தின் தாக்கத்தால் ஓரிரு வசனங்கள் பேசிக் கொண்டார்கள்.//
தமிழ் சினிமா பாத்து ரொம்ப கெட்டு போயிட்டீங்க. கதை நம்ம ஊரு மாதிரிதான் இருக்கு. ஆனா, ரிங்கிட்னு சொல்லும் போது தான் உங்க ஊரு மாதிரி தெரியுது.

கார்க்கிபவா said...

இந்த கதைக்கு இவ்வளவு நீளம் சற்றே அயற்சியை தருகிறது.

வெள்ளிக்கு பதிலாய் ரூபாய்ன்னு சொல்லி இருக்கலாம்.

பதினம் வயதை பற்றி எழுதும்போதும் இந்த இறுக்கம் தேவையா? இன்னும் கொஞ்சம் காமெடி தெளிச்சிருக்கலாம்..

//கேலியும் கிண்டலுமாகத் தான் பேசிக் கொண்டிருந்தான்//

இதை நேரிடையாக சொல்லாமல் செயலில் வர்ணித்திருக்கலாம்..


எனக்கு ஓக்கேதான்.. போட்டியில் முடிவு எங்கள் கையில் விட்ட மூன்றாவது கதை என நினைக்கிரேன்..

வாழ்த்துகள்

Unknown said...

//--பிள்ளை தனக்கானதைப் பார்த்துக் கொள்வான், தன் கடமை பணத்தைக் கொடுத்தால் முடிந்தது என கருதுவோர்.--//

இங்க உங்களோட கருத்தை ரசித்தேன் விக்கி.

ஆரம்பத்திலேயே நிமிர்ந்து உட்கார வைத்து விட்டீர்கள். எளிமையான வார்த்தைகளைக் கையாண்டிருப்பது நன்று.

வெற்றி பெற வாழ்த்துக்கள் விக்கி.

sivanes said...

அவனது பெற்றோருக்குப் பிள்ளை மேல் நம்பிக்கை என்பதை விட, இன்றைய நவநாகரிக உலகின் அடாத வேலைப் பளுவால் பாதிக்கப்பட்ட ஜீவன்களுள் நாங்களும் அடக்கம் எனச் சொல்லிக் கொள்ளும் சமூகத்தின் அங்கத்தவர்கள் என்பதே தகும். பிள்ளை தனக்கானதைப் பார்த்துக் கொள்வான், தன் கடமை பணத்தைக் கொடுத்தால் முடிந்தது என கருதுவோர்

என்ன செய்வது? இதுதானே நடுத்தரவர்க்கத்தின் இயல்பாகிப்போய்விட்டது!
நல்ல முயற்சி, நீங்கள் நிச்சயம் வெற்றி பெறவேண்டும், வாழ்த்துக்களோடு

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆயில்யன்

என்ன அண்ணே பாதி கதை படிச்சிட்டு ஓடிட்டிங்களா :)))

@ அப்பாவி முரு

கருத்துக்கு நன்றி.

@ சென்ஷி

நன்றி

@ சிவா

நன்றி

@ ராம்

நன்றி

@ ஜமால்

நன்றி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வால்பையன்

நல்லா காமிடி பண்றிங்க.... இக்கதைக்கான பொதுவாஅ கருத்துகள்.

1. புரியலை
2. முடிவு இல்லை
3. இது கதை தானா

அப்புரம் எப்படி.... :))

@ ரவி

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி.. நிச்சயமாக நல்ல கதை ஒன்றை தயார் செய்கிறேன். உங்கள் எடுத்துக் காட்டுக்கு நன்றி.

@ பப்பு

வாழ்த்துக்கு நன்றி. :)

@ கார்க்கி

நன்றி சகா.

@ கிருஷ்ண பிரபு

உங்கள் கருத்து மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மிக்க நன்றி...

@ சிவனேசு

இக்கதை பங்கெடுப்பிற்காக எழுதியது. தகுதி இருந்தால் நிச்சயம் கிடைப்பது கிடைக்கும். உங்கள் வாழ்த்துக்கு நன்றி...

cheena (சீனா) said...

வெற்றி பெற நல்வாழ்த்துகள்

கதை உண்மையாகவே நன்றாக இருக்கிறது

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜய் ஆனந்த்

இது கற்பனைக் கதை மட்டுமே... :))

@ சீனா

நன்றி ஐயா...

வெண்பூ said...

அருமையா எழுதியிருக்கீங்க விக்கி.. உள்மன உணர்வுகளை அழகா சொல்லியிருக்கீங்க.. முடிவும் நன்றாக இருக்கிறது. வெற்றிக்கு வாழ்த்துகள்

வெண்பூ said...

கார்க்கி, செந்தழல் ரவி..

விக்கி மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர். அவருக்கு வெள்ளிதான் நேட்டிவிட்டி. ரூபாய் என்று சொல்வதுதான் அவருக்கு அந்நியமாகப்படும். இந்த கதை மலேசியாவில் நடப்பதாக நினைக்கிறேன். சரியா விக்கி??

Athisha said...

நண்பா.. உனது அதிகபட்ச வாசிப்பு உனது எழுத்தில் அப்படியே பிரதிபலிக்கிறது.

முடிவை என் கையில் விட்டது நல்லாருக்கு.

மற்றபடி குறை - நீளம்தான்

Anonymous said...

கையாளாகாத

சமய்ங்களில்//

?

நல்ல கதை. நீளம் தான் ஜாஸ்தி :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வெண்பூ

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி... உண்மையாகவே ரிங்கிட் என்றிருப்பது தான் கதைக்கு இயல்பாக இருப்பதாக எனக்குப்பட்டது. அது வாசிப்பவரை முகம் சுழிக்க வைக்குமென எதிர்பார்க்கல... மலேசியாவில் ரிங்கிட்/வெள்ளி தான் சொல்வாங்க.

@ அதிஷா

நன்றி மாம்ஸ்... 4 பக்க கதை போர் அடித்தால் தான் நீளமாக தெரியும். உண்மை விமர்சனத்துக்கு நன்றி நண்பா.

@ அனானி

வாழ்த்துக்கு நன்றி

மனோவியம் said...

எப்படி வீக்கி.....இப்படி எல்லாம் சிந்திக்கிறிங்க.....ரொம்ப நல்ல இருக்கு.உன்மையான சமுதாய நடப்பை அப்படியே படம் பிடிச்சிருக்கிங்க.......வாழ்க! வாழ்துக்கள்.

மனோகரன் said...

எப்படி வீக்கி.....இப்படி எல்லாம் சிந்திக்கிறிங்க.....ரொம்ப நல்ல இருக்கு.உன்மையான சமுதாய நடப்பை அப்படியே படம் பிடிச்சிருக்கிங்க.......வாழ்க! வாழ்துகள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மனோகரன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...