Friday, December 28, 2018

NO SEX PLEASE, WE'RE JAPANESE - ஆவணப் படம்NO SEX PLEASE, WE'RE JAPANESE எனும் ஆவணப்படம் படம் பார்த்தேன். 2013-ஆம் ஆண்டு இந்த டாக்குமெண்டிரியைப் பதிவு செய்திருக்கிறார்கள். கால தாமதமாக பார்த்திருப்பினும் தற்போதய ஜப்பானிய சூழ்நிலையில் இது இன்னமும் பேசு பொருளாகவே உள்ளது. ஜப்பானில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடும் சரிவை எதிர் நோக்கிச் செல்வதையும், அதன் காரணங்களையும் எதிர்கால விளைவுகளையும் இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் The Mystery of Why Japanese People Are Having So Few Babies மற்றும் No Babies In Japan எனும் தலைப்பிலும் சில ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஒரு சிறு நகரைக் காண்பிக்கிறார்கள். சுமார் 1 லட்சம் மக்கள் வாழ்ந்த பகுதி அது. 29 பள்ளிக்கூடங்கள் அங்கிருந்துள்ளன. தற்சமயம் ஒரே ஒரு பள்ளிக்கூடத்தை மட்டும் ஒப்புக்கு ஓட்டிக் கொண்டுள்ளார்கள். அங்கே குழந்தைகளைக் காண்பது அரிதாகிவிட்டது. குழந்தைகளுக்கான கோளிக்கை மையங்கள் கூட வெகு நாட்களாக மூடப்பட்டுவிட்டன. இன்னும் சில நாட்களில் அங்கிருக்கும் புதர்கள் அவற்றை மொத்தமாக சாப்பிட்டுவிடும் நிலையைக் காண முடிகிறது.

ஒட்டு மொத்த நகரமும் பேர் அமைதியாக உள்ளது. அந்த நகரின் மருத்துவமனையைக் காண்பிக்கிறார்கள். குழந்தைகளை பிரசவிக்கும் பகுதி வெகுநாட்களாக பயன்படுத்தப்படாமல் பழைய பொருட்களை சேகரிக்கும் கிடங்கு போல் உள்ளது.

100 வயதைக் கடந்த ஜப்பானியர்கள் மட்டும் ஏறக்குறைய 50000க்கும் அதிமானோர் அந்நாட்டில் உள்ளனர். நாளுக்கு நாள் அங்கு சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். தேசத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைத்து ஓய்ந்த அவர்களின் நலனைக் காக்கும் பொறுப்பு 
மறைமுகமாக இளய தலைமுறையிடம் விடப்படுகிறது. அதாவது ஜனத்தொகையின் எண்ணிக்கைக் குறைவதால் வரி வசூல் குறையும். குறைந்துவரும் வரியைக் கொண்டு அரிகரித்துவரும் பணி ஓய்வு பெற்ற குடிமக்களின் நலன் காக்க வேண்டும். குருவித் தலையில் வைக்கப்படும் பறை தான் இந்தச் சூழ்நிலை.

உலகில் அதிகமான முதியவர்கள் சிறையில் இருக்கும் நாடும் ஜப்பான் தான். சிறைக் கைதிகளில் 20% விழுக்காட்டினர் 60 வயதைக் கடந்தவர்கள். அதிக வயதான கைதியின் வயது 87. குடித்துவிட்டுப் பணம் செலுத்தாமல் போனது, சிறுநீர் கழித்தது, சண்டைப் போட்டது, குப்பைப் போட்டது என பல குற்றங்களின் பேரில் உள்ளே வந்தவர்கள். நெடுநேரம் உழைத்த மக்கள். தனிமைக் கொண்ட முதுமை வாழ்க்கை அவர்களைப் போர் அடிக்கச் செய்துள்ளது. விடுதலையாகும் சில வாரங்களில் மீண்டும் குற்றம் புரிந்து சிறை வந்துவிடுகிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் வெகு விரைவாக முன்னேரிய நாடு ஜப்பான். கட்டொழுங்கும் உழைப்பும் ஜப்பானின் அடையாளமாக அமைந்தது. பொருளாதார நிலையில் மூன்றாம் இடத்தை எட்டிப் பிடித்தப் பின் அதன் நிலை நிலுவைக் கண்டது. காரணங்களில் ஒன்று பிறப்பின் விகிதாச்சாரம். இன்னும் 40 ஆண்டுகளில் ஜப்பானியர்களின் ஜனத்தொகை மூன்றில் ஒருப் பகுதியாக குறையுமென கணக்கிடுகிறார்கள்.

தோக்கியோ நகரில் இரு இளைஞர்கள், கசிந்துருகி காதலிக்கிறார்கள். அவர்களுடைய காதலிகள் பதுமைகளைப் போல் இருப்பதாகச் சொல்கிறார்கள். பள்ளி முடிந்ததும் வேளிக்கு வெளியே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அந்தக் காதலிகள் நிஜப் பெண்கள் அல்ல. நிண்தெண்டோ விளையாட்டுக் கருவியில் இருக்கும் பொம்மைகள். டிஜிட்டல் காதலர்கள் டி.ராஜெந்திரைப் போல் நாயகியின் கையைப் பிடிக்காமலேயே காதலிக்கிறார்கள்.

இப்படி இவர்கள் காதலைத் தேடவும், காதலிக்கவும் 16-17 மாடியில் ஒரு கட்டிடத்தைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். இளைஞர்களை கொஞ்சிக் கண் சிமிட்டி ஆயிரக் கணக்கான அனிமே காதலிகள் தினமும் அவர்களை வரவேற்கிறார்கள். அந்தக் கட்டிடம் தினம் தினம் திருவிழாக் கோளம் காண்கிறது.

ஜப்பானிய பணியிட கலாச்சாரத்தைப் பேசும் போது தனது வேலையிடத்திற்கு ஒரு பணியாளன் கொடுக்க வேண்டிய அற்பணிப்புகளைக் குறிப்பிடுகிறார்கள். உடல் நலம் இல்லை என மருத்துவ விடுப்பு எடுப்பவர்கள் மறுநாள் வேலைக்கு வந்து சக பணியாளர்களுக்கு சிரமம் கொடுத்ததற்காக அனைவர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்க வேண்டும். வருடாந்திர ஓய்வான 10 நாட்களில் பாதியைக் கூட அவர்கள் முடிப்பதில்லை. வேலை நேரம் முடிந்த பின்னர் பணியிட அற்பணிப்பு எனும் பெயரில் அதிக நேரம் உழைப்பது அவர்களின் கலாச்சாரத்தில் ஊன்றிவிட்டது. நமது கலாச்சாரத்தில் கூறிக் கொள்ளும் 'life' அங்கில்லை. இதில் காதல், கல்யாணம், குழந்தை என்பதெல்லாம் கூடுதல் சுமை என்பதாகவே பார்க்கப்படுகிறது.

ஜப்பானியர்களின் ஆண் பெண் உறவு அதன் இனக் கவர்ச்சியை இழந்துக் கொண்டுள்ளது. பணிச் சுமையும், பொருளாதார சுமையும் இன்றய இந்நிலைக்கு பெரும் பங்காற்றியுள்ளன. காதல், உரசல், முத்தம் எல்லாம் சுத்த பேத்தலான விசயமாகிவிட்டது. இலகுவாக கிடைக்கும் பாலியல் சேவைகளும் ஜப்பானிய குழந்தைகள் பிறப்பின் வீழ்ச்சிக்கான காரணமாக முன் வைக்கப்படுகிறது. ஜப்பானிய அரசு இன்னமும் தீர்வு காணாத சாமூதாயச் சிக்கலாக இந்நிலை அங்கே உள்ளது.

ஜப்பானுக்கு நேர் மாறான சமுதாயச் சிக்கல் உள்ள நாட்டில் இந்த ஆவணப்படம் முடிவடைகிறது.

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆகா, அப்படியா! நான் வியக்கும் நாடுகள் யப்பானும், சுவிசும் - யப்பானை நேரில் பார்த்ததில்லை. NHK என்னும் ஆங்கில தொலைக்காட்சி மூலம் தினமும் பார்ப்பேன். வாழ்க்கையில் பார்க்க நினைக்கும் நாடும். ஆனால் நீங்கள் கூறியுள்ள பிரச்சனைகள் -வித்தியாசமானதாகவுள்ளது. சட்டதிட்டக் கட்டமைப்பென்பது வாழ்க்கையில் அழுத்தம்மிக்கது அதன் பாதிப்பு அங்கு சகல வயதினரையும் பாதிக்கிறதென்பது தெரிகிறது. தற்கொலை அதிகமென்பது மகிழ்விற்குரியதல்ல! இவற்றிலிருந்து மீள்வார்களென நம்புவோம்.

Marthandan Yathamaniam said...

மீண்டும் உங்கள் படைப்புகளை இங்கு படிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Vikneshwara Adakkalam said...

@ யோகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா... இரண்டாம் உலகப் போரின் சமயம் தமது மக்களுக்காக நாடு பிடிக்க எத்தனித்த நாட்டின் நிலை இன்று மாறி வருகிறது... வளர்ச்சி எனும் பெயரில் கடும் அழுத்தத்தையே அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்...

@ மாறன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே