Friday, August 29, 2008

புதைந்த நினைவுகள் (2)

பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும் வரை இடைப்பட்ட காலத்தில் அதிகமாகத் தமிழ் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கல்வி முறையின் மாற்றம் எனச் சொல்வதை விட நான் தான் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளவில்லையென சொன்னால் மிகவும் தகும்.

ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் சமயம் என் சனி ஞாயிறுகளை அதிகமாக வாசிப்பிற்கே செலவழிப்பேன். அப்படி படித்த புத்தகங்களில் பல என்னுள் இன்னமும் நீங்காமல் இருக்கின்றன. ஆனால் இப்போது அப்புத்தகங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே. விசாரித்துப் பார்த்ததில் பலருக்கும் அப்புத்தகங்களை பற்றிய தகவல்கள் தெரியாமலே இருக்கிறது.

இப்போதெல்லாம் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பதை தவிர்க்கிறேன். முடிந்த மட்டும் அவை என் சேகரிப்பில் இருப்பதே நலம் என நினைக்கிறேன். புத்தகங்களை இரவல் கொடுப்பதையும் முடிந்த அளவு தவிர்க்கிறேன். போன புத்தகங்கள் பல திரும்பாமலே தங்கிவிடுவது தான் இதற்குக் காரணம். அதனால் தான் நல்ல சேகரிப்புகளை இரவல் கொடுக்கவே மனம் வரவில்லை. நன்கு அறிந்த நண்பர்கள் ஓரிரண்டு பேர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

மலரே குறிஞ்சி மலரே

இது புத்தகத்தின் தலைப்பு இல்லை. எனக்கு 11/12 வாயதாக இருந்த சமயம் நயனம் என்ற வார இதழில் வந்த தொடர்கதையின் தலைப்பு. பத்திரிக்கைகளில் வரும் தொடர்களை படிக்க அதிக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இத்தொடரை முதல் முறை படித்த போதே அதன் தாக்கம் என்னுல் ஒட்டிக் கொண்டது.

தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. தோட்டத்தில் பிறந்து நன்கு படித்து வாழ்வில் முன்னேறி வரும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதலிலும் அதன் பின்னணிகளிலும் கதை நகர்கிறது. அவன் காதலிப்பது இரப்பர் பால் தொழிற்சாலை வைத்திருக்கும் ஒரு சீன முதலாளியின் மகளை.

பல எதிர்ப்புகளுக்குப் பிறகு முடிவில் காத்திருப்பது என்னவோ பெரும் சோகமே. அவர்கள் ஓடிப்போக நினைக்கும் சமயம் மெய் லின் எனும் அவன் காதலியின் வீட்டில் தீ பிடித்து அவள் இறந்துப் போகிறாள். பல வருடங்கள் கழிந்து அத்தோட்டத்திற்கு வருகை தரும் அந்த இளைஞனின் (கிழவன்) மனத் திரையில் பழைய சோகங்கள் படர்வதாக கதை முடியும்.

இக்கதாசிரியரின் பெயர் தியாகராஜன் என நினைக்கிறேன். வெளி தோற்றத்தை வைத்து மனிதனை எடை போடாதிருத்தலை பற்றி பல இடங்களில் மிகவும் அழகாகச் சொல்லி இருப்பார். இக்கதை நாவலாக வந்ததா என தெரியவில்லை. அப்படி இருப்பின் தெரிந்தவர்கள் சொல்லவும்.

கண்ணீர் சொல்லும் கதை

சஞ்சிக் கூலிகளாக மலாயா வந்தவர்களில் ஒருவரின் சுயசரிதமாக இந்நாவல் அமைந்திருக்கும். தோட்ட மக்கள் பட்ட கஷ்டங்கள். அவர்களுக்குள் அமைதியாக உருவாகிய அமைப்புகள், போராட்டம் எனக் கதை நகரும். கதையின் நாயகன் தாய் தந்தையின்றி வாழும் இளைஞன். அவன் சாதாரண தோட்டத் தொழிலாளி.

கால மாற்றத்தில் அவனுக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டு எதிர்பாரா விதமாக விபத்திற்குள்ளாகிறான். இறுதியில் பிச்சை எடுக்கும் நிலையில் தெருவுக்கு வந்த தமிழனுக்கு நம் தமிழினம் என்ன செய்கிறது எனக் கதை முடியும். இந்நாவலை எழுதியவர் இரா.ராஜேந்திரன் என ஞாபகம். ஆனால் குறிப்பாக சொல்ல முடியவில்லை.

ஊனம் ஒரு தடையல்ல

விசக் காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவன் ஒருவன் கால்கள் ஊனமாகிறான். சிறு வயதில் தந்தையைப் பறி கொடுத்த அவனுக்குத் தாய் மட்டுமே துணை. ஊனமாக இருக்கும் அந்த ஏழை மாணவனை சில மாணவர்கள் வெறுக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். அதை பொருட்டாக கொள்ளாமல் அவன் படித்து சாதனை புரிவது கதையின் சுருக்கம்.

கண்ணாடி மலை

பள்ளி விடுமுறையில் சுற்றுலா போகும் மணவர்களை சுற்றி கதை நடக்கும். இதை படித்த போது இம்மலை உண்மையாகவே பினாங்கில் இருக்கும் என நினைத்தேன். அப்பாவிடம் அழைத்துப் போகவும் சொல்லி இருக்கிறேன். பின்னாட்களில் தான் அது புனைவு என்பதை உணர்ந்தேன்.

மிஸ்திரி பெத்தா ராசிய (MISTERI PETA RAHSIA)

இது ஒரு மலாய் நாவல். அதன் அர்த்தம் ‘இரகசிய வரைபடத்தின் மர்மங்கள்' எனப் பொருள்படும். ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரசியம் குன்றாத மர்மக் கதை. நாயகனுக்கு ஒரு கெடுதலும் நடந்துவிடக் கூடாதே என நம் மனதுல் ஒரு உந்துதல் இருந்துக் கொண்டே இருக்கும். அதுவே கடைசி வரை கதையை நாம் கருத்தூன்றி படிக்கவும் துணை புரிகிறது.

இவற்றை தவிர்த்து மஞ்சள் வீடு, ஏணிப் படிகள் என இன்னும் பல பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றையும் பட்டியலிட இப்பதிவு போதாது. இங்கு சொல்லி இருப்பவை நான் மிக இரசித்தவை. இப்புத்தகங்கள் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

11 comments:

A N A N T H E N said...

சிறு வயது தொட்டே வாசிப்பு பழக்கமா? அருமை.
இந்த கதையின் சுருக்கத்தைப் படிக்கும் போது, எனக்கும் முழுக்கதை படிக்கனுமுன்னு ஆசை வருது... ஆனாலும், பிறவி குணம்... படிக்க விடுமா?

குறிஞ்சி மலரே மற்றும் கண்ணாடி மலை - கதை, நல்லா இருக்கும்ன்னு தெரியுது உங்க விமர்சனத்துலேந்து

பகிர்வுக்கு நன்றி

தமிழ் பிரியன் said...

11, 12 வய்சில் இருந்து வாசிக்க ஆரம்பிச்சாட்டா.. பலே! புத்தகங்கள் அறிமுகத்திற்கு நன்றி!

நிஜமா நல்லவன் said...

உங்க எழுத்துக்களை படிக்கும் போதே நீங்க சிறு வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கம் உள்ளவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன்...சரி தான்!

விஜய் ஆனந்த் said...

நன்று!!!

உடையார் முடிச்சாச்சா??

ஹம்ம்ம்...நீங்க முடிச்சவுடனே ஓசி வாங்கலாம்னு பாத்தேன்...ஆனா அதுக்குள்ள இப்படி சொல்லிட்டீங்களே...அவ்வ்வ்வ்...

தமிழன்... said...

நிறைய வாசிப்பிங்க போல...

தமிழன்... said...

ஆமா ஸ்ரேயா படம் என்னத்துக்கு..:)

ஹேமா said...

விக்கி,புத்தகங்கள் வாசிப்பதில் எனக்கும் ஆர்வம் அதிகம்.ஆனால் இங்கு புத்தகங்கள் கிடைப்பது குறைவு.கிடைப்பவற்றை வாசிப்பேன்.நீங்களும் இரவல் தரமாட்டேன் என்றுவிட்டீர்கள்.
பரவாயில்லை.

அதிஷா said...

இவ்ளோ புக்கா... அவ்வ்வ்வ்வ்

ச்சின்னப் பையன் said...

இன்னும் பல நல்ல புத்தகங்கள் படித்திட வாழ்த்துக்கள்!!!

மலர்விழி said...

படிக்கும் பழக்கம் நிறைந்த உங்கள் நினைவுகள் அருமை, அதிலும் எழுத்தாளர்களையும் நினைவுக்கொண்டுள்ளீர்களே சிறப்பு! ஆமா...புதைந்த நினைவிற்கு ஸ்ரேயா எதற்கு???

பகிர்வுக்கு நன்றி.

VIKNESHWARAN said...

@ஆனந்தன்

பின்னூட்டத்திற்கு நன்றி... மீண்டும் வருக.

@தமிழ் பிரியன்

நன்றி தமிழ் பிரியன். அப்போது வாசித்தது இடையில் பல காலம் விடுபட்டுவிட்டது.

@நிஜமா நல்லவன்

ஆஹா...

@விஜய் ஆனந்த்

நன்றி தல... உடையார் இன்னும் முடிக்கல...

@தமிழன்

நிறையா வசிப்பது இல்லைங்க... ஸ்ரேயா படமா... என் எழுத்துக்கு கவர்ச்சி குறைவா இருக்குனு கவர்ச்சி கொடுக்கிறேன்.

@ஹேமா

நன்றி ஹேமா... மீண்டும் வாங்க...

@அதிஷா

நன்றி அதிஷா

@ச்சின்னப் பையன்

நன்றி

@மலர்விழி

நன்றி