Monday, June 03, 2013

கடலின் மொழி - மரணம், கடத்தல், கொலைகள்

சோலை மலரொளியோ உனது
சுந்தர புன்னகைதான்
நீலக் கடல் அலையோ
உந்தன் நெஞ்சின் அலைகளடி - பாரதி

புன்னகை மனிதர்களிடம் இருக்கும் ஓர் அழகிய அம்சம். அது அன்பின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டு வருகிறது.  

இந்த பகுதியில் நான் எழுத நினைப்பது திரங்கானுவின் (Terengganu) கடல் மற்றும் தீவுகள் சார்ந்த செய்திகள்.  இதை சென்ற பதிவின் தொடர்ச்சியாக படிக்கலாம். அதை தவிர்த்து படிப்பவர்களுக்கும் சிரமம் இருக்காது என்றே கருதுகிறேன். 

திரங்கானுவின் கடலோர பகுதிகளில் குளிப்பதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. காரணம் இதன் கரையோர பகுதிகள் மிக ஆழமானவை. அதை மீறி சில விபத்துகள் நடந்து பார்த்திருக்கிறேன். இந்த மாநிலத்தின் பெரும்பாலானோர் மலாய்காரர்கள். கொஞ்சம் சீனர்கள். மிகக் கொஞ்சமான இந்தியர்கள். அவர்களில் 95% வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தம் அனுப்பப்பட்ட அரசு ஊழியர்கள். இதை தவிர்த்து மாணவர்கள், நல்லொழுக்க கட்டுப்பாட்டில் இருக்கும் குற்றவாலிகள், தனியார் நிறுவன ஊழியர்களையும் காண முடிகிறது. 

குடியுரிமை இலாக்காவின் குவார்டர்ஸ் எனது வசிப்பிடமாக இருந்தது. கடற்கரைக்கு பக்கத்தில் அமைந்த அரசு குடியிப்பு அது. நான் பணி புரிந்த அலுவலகம் குடியிருப்பிலிருந்து 5 நிமிட தூரத்தில் இருந்தது. 

நான் அங்கு தங்கிய காலகட்டத்தில் உணவு பிரச்சனைகள் இருந்ததில்லை. அங்கிருந்த உணவு வழக்கத்திற்கு என்னை பழக்கிக் கொண்டேன் என்றே கருதுகிறேன். இங்கு வசிக்கும் பெரும்பான்மையினர் முடிந்த அளவிற்கு எல்லா வேளைகளிலும் சோறு சாப்பிடுகிறார்கள். அதாவது காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை சோறு மட்டுமே. விதவிதமான டிசைன்களில் அரிசி சார்ந்த சமையல்கள் இங்கு கிடைக்கின்றன. உணவு சார்ந்த செய்திகளை வேறொரு தனிப் பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

’லோக்கல் பூட்’ சலித்துப் போன நன்நாள் ஒன்றில் இந்திய உணவுக்கு நாக்கு ஏங்கியது. எனது தேடுதல் வேட்டையில் அங்கிருந்த இந்திய மற்றும் மாமாக் (இந்து முஸ்லிம்) உணவகங்களை அறிந்துக் கொண்டேன். Tanjung KTT எனும் உணவகத்தை சிலாங்கூர் (Selangor) மாநிலத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் வழிநடத்தி வந்தனர். திரங்கானுவில் நான் கண்ட முதல் தமிழ்ப் பெயர் பலகை இந்த கடையில் மட்டுமே. சில நாட்களில் நான் அங்கு ரெகுலர் கஸ்டமராகிவிட்டேன். பல நண்பர்கள் அங்கு நட்பு வட்டத்தில் பெருகினர்.   

நன்நடத்தை கண்காணிப்பில் வந்திருந்த இளைஞன் ஒருவனை இந்த கடையில் சந்தித்தேன். இந்த சம்பவம் நடந்தது 2010-ஆம் ஆண்டு. ஒரு தமிழ் குடும்பம் மூட்டை முடுச்சுகளோடு வந்திருந்தார்கள். அவர்களுக்கு திரங்கானுவில் யாரையும் தெரிந்திருக்கவில்லை. தேடி பிடித்து KTT உணவகத்திற்கு வந்திருந்தனர். 

அப்போது நானும் என் நண்பரும் உணவருந்திக் கொண்டிருந்தோம். பொதுவாக இப்படி மூட்டை முடிச்சுடன் வருகிறவர்கள் பிள்ளைகளை ’யூனிவர்சிட்டியில்’ அல்லது ’போலிடெக்னிக்கில்’ சேர்க்க வந்தவர்களாக இருப்பது வழக்கம். வந்திருந்தவர்கள் தன் பையன் நன்நடத்தை காரணமாக இங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரத்தில் திரங்கானுவில் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளதாக சொன்னார்கள். அந்த பையன் குடும்பத்தில் கடைசி மகன். எல்லோரும் அவன் மீது மிகுந்த பாசத்தோடு இருந்ததையும் காண முடிந்தது. 

அவன் இருபது வயது இளைஞன். அவனது ஊர் கோவில் திருவிழாவில் சண்டை சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு நன்நடத்தை கண்காணிப்பிற்கு திரங்கானு அனுப்பட்டிருக்கிறான். அவனுக்கு தங்கும் இடம் தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக உணவகம் வைத்திருந்த அந்த சகோதரர் ஏற்பாடு செய்து கொடுத்தார். “ஐயா புள்ளைய உங்களை நம்பி விட்டுட்டு போறோம். பார்த்துக்குங்க” என்றார் அவன் அம்மா. “உங்க புள்ள கையையும், நாக்கும் சும்மா இருந்தா இங்க எந்த பிரச்சனையும் வராது”, என்றார் என் நண்பர்.

நன்நடத்தையில் இருப்பவர் குறிப்பிட்ட ஊரை தாண்டி செல்ல கூடாது. இரவு எட்டு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடது. குறிப்பிட்ட நாளில் காவல் நிலையத்தில் தன் இருப்பை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். அந்த இளைஞன் ஒரு உணவகத்தில் வேலை செய்து கொண்டு அங்கு தங்கி வந்தான். பார்க்கும் சமயங்களில் மிக மரியாதையோடு பேசுவான். நன்நடத்தை கண்காணிப்பில் இருக்கும் வேறு சில ஆட்களோடு சில முறை அவனை வெளியில் கண்டிருக்கிறேன்.

ஒரு நாள் திடீரென அவனது மரண செய்தி கிட்டியது. சம்பவ இடத்திற்கு வேறு சில நண்பர்களோடு சென்றிருந்தேன். மொத்தம் 5 பேர் கடலில் மூழ்கி இறந்திருந்தார்கள். அந்த கடல் பகுதி அவனக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. ஒவ்வொரு பிணமான தேடி எடுக்கப்பட்டது. அந்த இளைஞனின் பிணம் மறு நாள் தான் கிடைத்தது. பாறைகள் நிறைந்த அக்கடல் பகுதியில் அவன் உடல் முட்டி மோதி மோசமாக சதை கிழிந்து இரத்தக் கசிவுடன் காணப்பட்டது.


அங்கிருந்த மலாய்க்கார குடியானவர் ஒருவர் மரணச் சம்பவங்கள் அங்கு வருடாவருடம் நிகழும் ஒன்றென கூறினார். இப்படி ஏற்படும் மரணங்கள் அமானுஷ்ய சங்கதிகளோடு சேர்த்து பேசப்படுகிறது. கடலில் இருந்து ஏதோ ஒரு இசை கருவி மீட்டும் சத்தம் கேட்ட ஓரிரு நாட்களில் இப்படி துர்மரணங்கள் நடப்பதாக அவர் சொன்னார். அந்த இளைஞனின் மரணத்திற்கு இரண்டு வாரத்தில் அந்த இடத்தில் மீண்டும் மூன்று சுற்று பயணிகள் மரணித்திருந்ததை பத்திரிக்கையில் படித்தேன். குளிக்க தடை செய்த இடத்தில் குளிப்பதே இந்த மரணங்களுக்கு காரணம். பயணிகள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். பேய் பிசாசுகளை குறை சொல்வதில் அர்த்தமில்லை.

முன் சொன்னது போல் இந்த மாநிலத்தின் பிரதான சாலைக்கும் கடல் பரப்புக்குமான தூரம் மிக குறைவு. மழைக் காலங்களில் கடல் வெள்ளம் சாலை வரை முட்டிச் செல்லும். காற்றழுத்தம் மிகுந்த மழை நாட்களில் இப்படி நடப்பதாக கேள்விபட்டேன். பொதுவாக திரங்கானுவின் சாலைகள் துடைத்து வைத்ததை போல் சுத்தமாக இருக்கும். வெள்ளம் ஏற்பட்ட பின் சாலைகள் தன் தலையில் குப்பையை கொட்டிக் கொண்டதை போல் காட்சியளிக்கும். கிழக்குகரை நெடுஞ்சாலை வேலைகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. அனேகமாக 2013 இறுதிக்குள் அந்தச் சாலைகள் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும் என நம்பப்படுகிறது.  

ஒரு சமயம் ஏராலமான இரப்பர் கட்டிகள் ஆலைகளால் கரைக்கு ஒதுக்கப்பட்டது. சுற்றுவட்டார மக்கள் அவற்றை சேகரித்து விற்பனைக்கு எடுத்துச் சென்றனர். எப்படி இரப்பர் கட்டிகள் அங்கு வந்ததென அறிவார் இல்லை. தென் சீன கடல்பகுதியில் சென்ற கப்பலில் இருந்து விழுந்திருக்கலாம் அல்லது யாராவது கொட்டிவிட்டிருக்கலாம். இரப்பர் கட்டிகளில் ரிஷி மூலம் யாருக்கும் தெரியாமலே போனது.

தென் சீன கடல் பகுதிகளில் மீன் பிடி தொழில் பிரசித்தி பெற்றது. மலேசியர்களை தவிர்த்து, தாய்லாந்து, பிலிப்பின், கம்போடியா மற்றும் வியட்நாம் நாட்டுக்காரர்களும் இக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். கடல் எல்லைகளுக்குட்பட்டே அந்தந்த நாட்டவர்கள் மீன் பிடிக்க முடியும். இருப்பினும் எல்லை மீறல்கள் நடக்கவே செய்கிறது.


முகவரி இல்லாத பிணங்களும் இங்கு கரை ஒதுங்குவது உண்டு. கடளுக்குள் நடக்கும் கைகலப்பில் சில கொலைகளும் நேர்கின்றன. கொலை செய்தவனும் கொலை செய்யப்பட்டவனும் யார் என்றே தெரியாமலே போவதும் உண்டு. வெளிநாட்டவர் மரணித்திருப்பார் எனில் கண்டு பிடிப்பதில் பல சிக்கல்கள் உண்டு. எந்த நாட்டவர் என அடையாளத்தை தேடுவதற்கே நெடு நாட்களாகும்.

வழமை போல் அலுவலக வேலையில் இருந்த ஒரு நாள் இரு இந்தோசீன இளைஞர்கள் குடியுரிமை இலாக்காவின் விசாரனைக்கு கொண்டு வரப்பட்டார்கள். இரண்டு நாட்களாக போகும் இடம்  தெரியாமல் கடற்கரை ஓரம் படுத்து உரங்கி இருக்கிறார்கள் அவர்கள். விசாரனையின் போது இருவரும் வியட்நாமியர்கள் என தெரிய வந்தது. அந்த பகுதியில் வசித்த மக்கள் புகார் கொடுத்து அவர்கள் விசாரனைக்கு அழைத்து வரப்பட்டனர். ஒருவனுக்கு 15 வயது மற்றொருவனுக்கு 19 வயது. பல ஆண்டுகளாக கரையை பார்க்காமல் கப்பலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்திருக்கின்றார்கள். அவர்களது முதலாளி ஒரு தாய்லாந்துகாரன். (பொரும்பாலன தாய்லாந்து மீனவர்கள் வியட்நாமியர்களை வேலைக்கு அமர்த்தில் கொள்வதை பின்நாட்களில் அறிந்தேன்). வருமானம் ஏதும் இல்லாமல் உழைத்திருக்கிறார்கள். கரை தெரிந்த ஒரு நாள் இருவரும் கடலில் குதித்து கரைக்கு தப்பி இருக்கிறார்கள்.

கடல் சார்ந்த வணிகத்தில் நிகழும் மேலும் ஒரு குற்றச் செயல் டீசல் திருட்டு. அரசாங்கத்தினால் மலேசிய மீனவர்களுக்கு கொடுக்கப்படும் டீசல் விலை 1.20 ரிங்கிட். மலேசிய சந்தையின் உண்மையான விலை 1.80 ரிங்கிட். தாய்லாந்தில் 3.00 ரிங்கிட், பிலிப்பின் 2.70 ரிங்கிட் என ஏனைய நாடுகளில் டீசல் எண்ணையின் விலை மிக அதிகம். இப்படி கொடுக்கப்படும் மலிவான டீசல் உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. பலமான முயற்சிகள் பல எடுக்கப்பட்டும் இந்த கடத்தல் சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்தபடியே உள்ளது வருத்தத்துக்குறியது. மேலும் போதை பொருள் கடத்தல்களும் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன. 

அலைகள் ஒவ்வொரு முறையும் கடலை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதன் எழிலை இரசிக்கும் மனிதர்களிடம் தனது துயர சம்பவங்களையும் சொல்ல முயற்சித்துக் கொண்டுள்ளது.

பயணங்கள் தொடரும்...

8 comments:

Tamilvanan said...

இந்த பதிவின் மூலம் திரங்கானு மாநிலம் பற்றி மேலும் சில விசயங்களை தெரிந்து கொண்டேன். நன்று. எழுத்து பிழைகளை கவனிக்கவும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

நன்றி தமிழ்வாணன். சிலவற்றை திருத்தி இருக்கிறேன். மேலும் பிழைகள் இருப்பின் சொல்லவும். கருத்திற்கு நன்றி.

A N A N T H E N said...

ஏற்கனவே சொன்னதுதான். பத்து பிரிங்கி போலத்தான் அங்கேயும் என்று நினைத்து இருந்தேன். உங்க பதிவு படிச்சதும் தெரிஞ்சது, திரங்கானு வேற மாதிரிதான். அந்த நன்னடத்தை காரணமா வந்த பையன் கதை படிக்க கொஞ்சம் சோகமா இருந்தது. நேருல பாத்து பழகினவங்களுககு அந்த மரணம் இன்னும் உருக்கமா இருந்திருக்குமில்ல...

Arinarayanan said...

விக்கி, நல்ல எழுத்து நடை. ஒற்றுப்பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. அவற்றைத் தவிர்த்துவிட்டால் சிறப்பாக இருக்கும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனந்தன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அவன் அப்படி ஆனதுக்கு அவன் குடும்பத்தினருக்கும் பங்கு உண்டு. அதீத பாசமும் ஆபத்தானதே.

@ அரிநாராயணன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. நான் இங்கு தமிழில் எழுதிக் கொண்டிருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம். நெடு நாள் கழித்து எழுதுவதால் கொஞ்சம் தடுமாற்றமாக உள்ளது. வரும் பதிவுகளில் முடிந்த வரை பிழைகளை தவிர்க்கிறேன்.

கீதமஞ்சரி said...

வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_25.html

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_25.html?showComment=1390607435662#c947129308205581039
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கீத மஞ்சரி @ ரூபன்

உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. வலைச்சரத்தில் என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள் பல...