Tuesday, November 10, 2009

தேடல்-(சிறுகதை)

இன்று தேடி பிடித்துவிட வேண்டும் எனும் உறுதி அவளுள் எத்தனித்தது. எப்படி தேட போகிறாள்? அதற்கான பதில் எப்படியாவது என்பது தான். ஈப்போ பேருந்து நிலையத்தில் ஆரவாரம் குறைந்திருந்தது. மாலை மங்கிக் கொண்டிருந்தது. ஒரு பச்சை பேருந்து முக்கியபடி கருப்புப் புகையை இருமி சென்றது.

பக்கத்தில் சிறு பட்டறை. கருப்பெண்ணையால் முக்கியெடுத்ததைப் போல் இருந்தது. மெக்கானிக் மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு கயிற்றைப் பிடித்து இரண்டு இழு இழுத்தான். அது இஞ்ஜினாக இருக்க வேண்டும். உறுமிக் கொண்டு எழுந்தது. பட்ட... பட்ட.. வென சத்தத்துடன் இறைந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு பாகத்தை முடுக்கினான். அழுத்தம் கொடுக்கவும் உர்ர்ர்... உர்ர்ர்... என ஆத்திரத்தோடு புகையைக் கக்கியது. கடுப்பேறியவனாக ஸ்பானரை தூக்கியெறிந்துவிட்டு எதையோ செய்துக் கொண்டிருந்தான். முதலாளியின் மேல் கோபமாக இருக்கலாம்.

அதிகப்படியான வண்டிகள் இல்லை. அவளுக்குக் கண் எரிச்சல் ஏற்பட்டது. முகத்தையும் கண்களையும் துடைத்துக் கொண்டாள். அவ்விடம் கதகதத்துக் கொண்டிருந்தது. உடல் கசகசத்தது. அவள் எதையும் பொருட்படுத்துபவளாக தெரியவில்லை. அவள் பொறுமை இழந்திருந்தாள். நினைப்பவை கிடுகிடுவென முடிந்திட வேண்டுமென தன்னை அவரசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

கைக்குட்டையால் முகத்தருகே விசிறிக் கொண்டிருந்தாள்.

வெட வெடவென வளர்ந்த தேகம் கொண்ட ஒருவன். படிய சீவிய தலை. செண்ட் வாசம் தூக்கலாக இருந்தது. அவள் அருகில் வந்தவன் திடீரென கேட்டான்.

"வர்றீயா...'

சட்டென ஆத்திரம் அடைந்தவளாக காரி உமிழ்ந்தாள்.

"செத்து போனாலும் திருந்த மாட்டானுங்க..." என்றவளாக பென்ச் மீது அமர்த்தி வைத்திருந்த தன் பிள்ளையையும் தோள் பையையும் தூக்கிக் கொண்டு தூர போனாள்.

அவன் வேறு பக்கமாக நடந்துக் கொண்டிருந்தான். நெடு நேரமாக இவளைக் கவனித்திருப்பானோ என்னவோ. இருக்கலாம்...

ஓர் ஆண் மீது இவளுக்கு இருக்கும் தேடலைப் போலவே அவனுக்கும் பெண்கள் மீதான தேடல்கள். இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ தேடல்களில் எத்தனையோ பேர்கள். தேடல்களை நோக்கி ஓட்டம் எடுக்கும் வாழ்க்கை இந்த இரு நபர்களுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. மேற் சொன்ன அவன் எனும் கதாபாத்திரத்தை இவ்விடத்தில் நாம் விட்டுவிடலாம் . இக்கதையில் நாம் கவனிப்பது அவளை. அவள் பெயர் மாரி. மாரியம்மாள் எனும் அவளை மாரி என்று தான் அழைப்பார்கள். அவசர உலகிற்காக சுருக்கிக் கொண்ட பெயர்.

விறுவிறுவென பேருந்தில் ஏறிக் கொண்டாள். அவளை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஒரு மூளையில் அமர்ந்துக் கொண்டாள். ஆத்திரம் தணிந்திருக்கவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு தன் பிள்ளையைப் பார்த்தாள். அது உறங்கிக் கொண்டிருந்தது.

மாரிக்கு அவள் கணவன் இருக்கும் இடம் சரிவர தெரியாது. நான்கு வருடங்களுக்கு முன்பு அவனை முதன் முதலாக சந்தித்தாள். அவனை பார்த்தவுடன் அவளுக்கு பிடித்து போய்விட்டது. அத்தருனங்கள் அவளுக்கு இனிமையாக இருந்தது. அவனை அடிக்கடி சந்திக்க தோன்றியது. பின் காதல் கல்யாணம் எல்லாம் எல்லாக் கதைகளிலும் வருவதைப் போல் அறிந்த செய்திகள் தான்.

அன்று அவன் மீது இருந்தது இனிமையான காதல். இன்றும் அவன் மீது காதல் இருக்க வேண்டும். இல்லையென்றால் எதற்காக அவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். கணவன் இல்லாமல் அவளால் வாழ முடியாதா? ஒரே பிள்ளை. சம்பாதிக்கும் திறன் மிக்க பெண், மாரி. அவளால் வாழ்ந்துக் காட்ட முடியும். இருப்பினும் அவனைத் தேடுகிறாள். பல இடங்களில் தேடிவிட்டாள். இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறாள்.

மாரி அவனை திருமணம் செய்துக் கொள்ள போவதாக சொன்ன போது பலமான எதிர்ப்பு கிளம்பியது.

“அவனை பார்க்க சரியானவனாவே தெரியல... எப்படி டீ உனக்கு மட்டும் தோனுது,” என மாரியின் அம்மா பொறிந்து தள்ளினாள்.

வீட்டில் இப்படி பேசுவது மாரிக்கு பிடிக்கவில்லை. இரகசியமாக அவனை திருமணம் செய்துக் கொண்டு தனியாக வாழ்ந்தாள். நாட்கள் கசங்க வாழ்க்கையும் கசந்தது. அவர்களுக்குள் அடிக்கடி சில பல மன வருத்தங்கள்.

பிள்ளை பிறந்து சில மாதங்களுக்கு பின் சந்திரனின் வேலையிடத்தில் பிரச்சனை ஏற்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டான். வாழ்க்கையின் வருத்தங்கள் ஆட்டுவித்தது. சில மாதங்களில் தலைநகருக்கு வேலைக்கு போவதாக சொல்லிக் கொண்டு கிளம்பினான். பிறகு அந்தப் பக்கம் தலைக்காட்டுவதை நிறுத்திக் கொண்டான்.

"உன் புருசன் வரதில்லையா?'

"வெளிய வேலை செய்யராரு..." இப்படியாகதான் அந்த சாம்பாசனைகள் ஆரம்பித்தன.

ஒரு முறை அவள் அப்பா வந்திருந்தார். "அழாக் குறையா அப்பவே சொல்லித் தொலைச்சோமே... கேட்டியாடி... கூருகெட்ட கழுதை.... எங்கப் போய் தொலைஞ்சானோ கேடுகெட்டவன்..."

மாரி அமைதியாக தான் இருந்தாள். பேசுவதற்கு அவளுக்கு ஆயிரம் வார்த்தைகள் இருந்தன. அவள் பேச விருப்பம் கொள்ளவில்லை. மோசம் போனேன் என ஒப்பாரியும் வைக்கவில்லை.

ஏன் அவன் வரவில்லை. அவளிடம் ஈர்ப்பு இழந்தவனாகிவிட்டானா? அவனுக்கு மேலும் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம். கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்டவன். பிடிவாதம் கோபம் என சில குணங்கள் அவனுக்குள் உயிர்ப்பித்திருந்தன.

மழை சோவென அடித்துப் பெயர்த்துக் கொண்டிருந்தது. தலைநகர் நசநசத்துக் கிடந்தது. மாரிக்கு மழை வெயில் எனும் கணக்கெல்லாம் மறந்து பல காலம் ஆகிவிட்டிருந்தது. பிள்ளையை தூக்கிக் கொண்டு அவன் வேலைப் பார்க்குமிடம் விரைந்தாள். காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் ஓர் அசுர வேகம் அவளிடம் காண முடிந்தது.

அவனுக்கு இது வேலை நேரம் தானா? ஒரு முறை அவன் மாரியிடம் சொல்லியிருந்தான். அவன் வெலை செய்யுமிடம் அல்லது செய்த இடம் இது தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டாள். வேலை நேரம் எதுவாக இருந்தால் என்ன. காத்திருந்து கவனித்துவிடலாம்.

மாரி நெடுநேரமாக அவ்விடம் காத்திருந்தாள். அங்கும் இங்குமாக அலைந்து தேடினாள். பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அவன் முன்பு தங்கியிருந்ததாக சொன்ன இடத்துக்குச் சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தாள். அது இன்னமும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. அவன் பார்த்திருந்ததை விட பிள்ளை அதிகமாக வளர்ந்துவிட்டது. இந்தப் பிள்ளையை பார்த்ததும் அவன் உணர்ச்சியை காண வேண்டும் என மாரி நினைத்துக் கொண்டாள். இது அவன் பிள்ளை. நிச்சயம் அவனுக்கு பிடிக்கும். மனம் உறுகி வெம்பி கண்ணீர் கசிவதாகவும் அவன் முகத்தை நினைத்துக் கொண்டாள். அவளுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

அவன் தங்கியதாக சொன்னது ஒரு பிரமச்சாரிகள் தங்கும் விடுதி. முடிந்தவரை தேடினாள். அவ்விடம் சுத்தம் குறைவாக இருந்தது. ஊசிப்போன வாடை. கலைத்துப் போனவளாக விடுதியின் முன் சென்றாள். நடமாடும் ஆடவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள். நேரம் ஆக சினமும் வெறுப்பும் அதிகரித்தது. கொஞ்ச நேரம் அழுது தீர்த்தாள்.

அவள் இருப்பிடம் திரும்பிய சமயம் நட்ட நடு நிசியாகி இருந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் கொட்டிக் கிடந்த காட்சி இரம்யமாக இருந்தது. அவற்றை இரசிக்கும் மன நிலையை அவள் தொலைத்திருந்தாள்.

விறுவிருவென நடந்து தன் கல்லறைக்குள் மறைந்துப் போனாள். ஏதோ ஓர் மூளையில் வெட்டியான் புதிய பிணத்திற்கு குழி வெட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

நாளைக்கும் மாரி சந்திரனை தேடி புரப்படுவாள். 'வர்றீயா' எனக் கேட்கும் இளைஞனை சந்திக்க நேரிடலாம்.

13 comments:

மனோவியம் said...

பேய்க் கதையா....பயமா இருக்கு......எங்க என்னை தேடி வந்துடுமோனு எனக்கு பயமாக இருக்கு.......பேய்யானாலும் கூட காரி உமிழ்வதை விட்டுவிடாதோ....தமிழ் பேய்ங்க செத்தக் பேய்க்கு கூட திருந்த மாட்டாங்க போல இருக்கு.......// "செத்து போனாலும் திருந்த மாட்டானுங்க..." // பேய்ங்களுக்கு இப்படி கரிசனையாக கதை எழுதற நீங்க ரொம்ப ரொம்ப நல்லவஙக....... நண்பரே....அசத்திட்டிங்க போங்க...ரம்மியமான எழுத்து நடை....வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

Thamiz Priyan said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் விக்கி!

Jackiesekar said...

நட்சத்திர பதிவராக வந்ததுக்கு வாழ்த்தக்கள் மற்றும் கதை அருமை.. நண்பா...

ஜெகதீசன் said...

அய்யோ.... பயந்துட்டேன்..... :)

Anonymous said...

ஏன் அய்யா இந்த "வெட்டியான்"பெயரை இன்னும் உபயோகத்தில் வைதிருகிரிர்கள்
அதிகமாக ஆங்கில வார்த்தைகள் ,படிக்கும்போது வெறுப்பாக இருக்கிறது .வாழ்த்துக்கள் அய்யா .

Tamilparks said...

கதை மிகவும அருமையாக உள்ளது, தாங்கள் விரும்பினால் எமது தமிழ்த்தோட்டம் வலை இதழுக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம் அவை வெளியிட ஆவலாக உள்ளோம்...

அப்பாவி முரு said...

:)

Subbiah Veerappan said...

/////விறுவிருவென நடந்து தன் கல்லறைக்குள் மறைந்துப் போனாள். ஏதோ ஓர் மூளையில் வெட்டியான் புதிய பிணத்திற்கு குழி வெட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
நாளைக்கும் மாரி சந்திரனை தேடி புரப்படுவாள். 'வர்றீயா' எனக் கேட்கும் இளைஞனை சந்திக்க நேரிடலாம். /////

என்ன விக்னேஷ் ஒருவித பயமுறுத்தலுடன் கதையை முடித்திருக்கிறீர்கள்?
நட்சத்திர வாழ்த்துக்கள்!

deepa said...

nice...
படித்தேன்..
ரசித்தேன்...
நட்சத்திரத்திற்கு சின்ன
வானவில் வாழ்த்துக்கள்..
nxt tym suriyanai
meet pannalam kva...
:)

Tamilvanan said...

//ஓர் ஆண் மீது இவளுக்கு இருக்கும் தேடலைப் போலவே அவனுக்கும் பெண்கள் மீதான தேடல்கள். இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ தேடல்களில் எத்தனையோ பேர்கள். தேடல்களை நோக்கி ஓட்டம் எடுக்கும் வாழ்க்கை இந்த இரு நபர்களுக்கு மட்டும் விதிவிலக்கல்ல.//
ந‌ன்று.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மனோகரன்

ஹா ஹா ஹா... உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே... விளையாட்டு போக்கில் எழுதியது.

@ தமிழ் பிரியன்

நன்றி தலைவா

@ ஜேக்கிசேகர்

நன்றி நண்பரே

@ ஜெகதீசன்

நன்றி...

@ அனானி

சரிங்கய்யா...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தமிழ்

நன்றி. வாய்ப்பிருப்பின் அனுப்புகிறேன்.

@ அப்பாவி முரு

வருகைக்கு நன்றி...

@ சுப்பையா ஐயா

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ டீபா

நன்றி

@ தமிழ்வாணன்

நன்றி

Govind said...

kathai mudinthatha Vicky? enna siru kathaiyaa? illai KADUGU kathaiya??
Nalla irukku. innum konjam eluthunggalen. Thodarnthu elutha neraya VAAIPPI iruke!?