மலை போல கிடு கிடுவென ஏறிய எரிபொருள் விலை முக்கி முனகி இப்போது கொஞ்சம் அப்போது கொஞ்சமென சிரமப்பட்டு இறங்கி வந்திருக்கிறது. எரி பொருள் விலை ஏற்றத்தில் பெரிதளவில் அழுத்தம் கொண்டு பேசப்படுவது பெட்ரேல் மற்றும் டீசல் எண்ணெய்களின் விலை. மனிதனின் அன்றாட பயணங்களுக்கு முக்கிய பயன்பாட்டு பொருளாக அமைந்துவிட்டது பெட்ரோல் மற்றும் டீசல்.
எண்ணெய் விலையின் ஏற்றத்தால் நமது அன்றாட வாழ்வின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. அத்தி பூத்தாற் போல் தற்சமயம் அரசாங்கம் எண்ணெய் விலையைக் குறைத்து உள்ளது. ஆனால் வியாபாரிகள் பொருட்களின் விலையை குறைத்து உள்ளார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
நாங்கள் இன்னமும் காத்திருக்கிறோம். அரசாங்கம் இன்னமும் எண்ணெய் விலையை குறைக்க வாய்ப்பிருக்கிறது. முழுமையாக குறைத்தவுடன் நாங்களும் பொருட்களின் விலையை மொத்தமாய் இறக்கிவிடுவோம் என்பது ஒரு சில வியாபார தரப்பினரின் வாதமாக அமைகிறது. இந்தக் காத்திருப்பு எவ்வளவு நாட்களுக்கு அமையும் என யார் அறிவார்? இலவு காத்த கிளியாக ஆவதற்கான வாய்ப்புகளே அதிகமாய் நிரம்பிக் கிடப்பதை நாம் காண்கிறோம்.
தொடர்ந்து பெருநாட் காலங்கள் வந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் பொருட்களின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு அது நிம்மதியைக் கொடுக்கும் விடயமாய் அமையும். ஆனால் பல தரப்பினர்கள் எண்ணெய் விலையை காரணம்காட்டி பொருட்களின் விலையை குறைக்காமல் இருப்பதும், அதைக் காரணம்காட்டி லாபம் ஈட்டுவதில் முனைப்பு கொள்வதும் தண்டிக்கத் தக்கச் செயல். இதை அரசாங்கம் கவனதில் எடுத்துக் கொள்ளுமா? விலை கட்டுபாடு மற்றும் பயனிட்டாளர்கள் அமைச்சு ஏன் இதை காண தவறிவிடுகிறது என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
பெருநாட்கள் வரும் காலங்களில், வாடிக்கையாளர்களின் செலவு செய்யும் மனப்பான்மை வியாபாரிகள் நன்கு அறிந்த விடயம் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது என்றே சொல்ல வேண்டும். வியாபார தந்திரிகள் இதுவே வாடிக்கையாளர்களை தூண்டில் போடும் தக்க தருணமாய் கருதுகிறார்கள். அங்காடிகளிலும் வியாபார மையங்களிலும் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன.
மலிவு விற்பனை, தீபாவளி சிறப்புக் கழிவு, சிறபுக் கழிவு விற்பனை, நம்ப முடியாத விலைக் குறைப்பு என பல விதமான மனதை மயக்கும் வார்த்தைகளில் ஊடகங்கள் கத்திக் கதறுகின்றன. மதி மயங்கி இவ்வாறான விளம்பரங்களால் பாதிக்கப்படுவோர் பலர் இருக்கவே செய்கிறார்கள்.
சிறந்த முறையில் சிந்தித்துச் செயல்படுங்கள் என அறிவுரைகளை அள்ளி வீசும் ஊடகங்களே நம்பிக்கை இல்லா பல விளம்பரங்களுக்கு ஒத்து ஊதுகின்றன. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிக் கொள்ளும் இந்நிலையை நம்மில் எத்தனை பேர் சிந்தித்திருப்போம்?
சிந்தித்துச் செலவிடுங்கள் என எத்தனை முறை சொன்னாலும் ஆசைக்கு அடிமைப்பட்டு மனம் போன போக்கில் நாமே நமது செலவுகளை அதிகரித்துக் கொள்கிறோம்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மலேசிய மாபெரும் வியாபாரச் சந்தையில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் அதிகாமன லாபத்தையே ஈட்டியுள்ளார்கள். கடந்த வருட மொத்த வியாபாரம் 151கோடி ரிங்கிட் எனவும் இவ்வருடம் அது 188கோடி ரிங்கிட் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பொருட்களின் விலையேற்றத்தில் இந்நிலை சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று. பொருளாதார நெருக்கடியை உணராமல் செலவு செய்யும் கலாச்சாரத்தில் நம் நாட்டு மக்கள் ஊறிவிட்டார்களா? அல்லது பணக்கார வர்கம் மட்டும் கண்னை மூடிக் கொண்டு செலவு செய்கிறார்களா?
பொருட்களின் விலையேற்றத்தை பற்றிய செய்தி சேகரிப்புகளில் விலை அதிகரிப்பின் தாக்கத்தினை அதிக அளவில் வெளியிட்டிருக்கும் நம் நாட்டு மக்கள் செலவுகளையும் கண்னை மூடிக் கொண்டு தான் செய்கிறார்களா?
உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் 1 ரிங்கிட்டுக்கு 3 பலகாரங்கள் என விற்பனையாகிக் கொண்டிருந்த காலம் போய் 2 ரிங்கிட்டுக்கு 5 பலகாரங்கள் என ஆகிவிட்டது. சிற்றங்காடி வியாபாரிகள் மாவு விலையை காரணம் காட்டுகிறார்கள். ஓரிரண்டு பலகாரங்கள் வாங்குபவர்களுக்கு ஒரு பலகாரம் 50சென் என விலை போடுகிறார்கள்.
இன்றைய நிலையில் விலைவாசி குறைவதற்கான சாத்தியக் கூறுகள் இம்மியளவும் இல்லையென்றே தெரிகிறது. பொருட்களின் விலை கட்டுபாடு மொத்த வியாபாரிகளின் கையில் இருப்பதாகவும் தங்களால் அதை நிவர்த்தி செய்ய இயலாது என்பதே பல வியாபாரிகளின் விளக்கமாக இருக்கிறது. அப்படியென்றால் மொத்த வியாபாரிகளின் இந்நடவடிக்கை அரசாங்கத்தின் பார்வைக்கு அப்பாற்பட்டுதான் இருக்கிறதா?
மலேசிய பயனிட்டாளர் சங்கத் தலைவரின் விளக்கவுரையில் எரி பொருள் விலை குறைக்கப்பட்டிருப்பினும் பொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லாது இருப்பதை சங்கம் அறிந்திருப்பதாகவே கூறினார்.
பொருட்களின் விலையை குறைக்கும் கட்டுபாடுகளோ அல்லது சட்டமோ இல்லாமல் இருக்கும் பொருட்டு இப்பிரச்சனைக்கு சரியான தீர்வுகள் எடுக்க முடியாமல் இருப்பதாக அவர் கருத்துரைத்துள்ளார். ஒரு சில அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுபடுத்த மட்டுமே அரசாங்கத்திற்கு உரிமையுள்ளதை இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சரியான முறையில் செலவுகளை கையாளப்படாமல் போகுமாயின் நிச்சயம் நிலைமை இன்னும் மோசமடையும் என்பது வெட்ட வெளிச்சம். விலை குறைப்பிற்கான நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் சிந்தித்துச் செயல்படுவோமாயின் நிச்சயம் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும்.
10 comments:
அரசியலும் பொருளாதாரமும் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணிகளாக விளங்கி வருகின்றன.
பொருட்களின் விலையேற்றம் சுமையாக இருந்தாலும், மக்கள் நாளடைவில் அம்மாற்றத்தோடு ஒன்றிப் போய்விடுவதனால் வியாபாரிகள் விலையைக் குறைப்பதில்லை.
அரசாங்கமும் பாராமுகமாக இருந்து வருகிறது. மலேசியாவை நெருங்கி வரும் பொருளாதார நெருக்கடியை மேற்கோள் காட்டி பொருட்ட்கள் மேலும் விலையேற்றத்தைக் கண்டால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.
தாங்கள் கூறியுள்ளபடி, மக்கள் சிந்தித்து செலவு செய்ய வேண்டும்..!
வணிகர்களின் எண்ணமும் இலக்கும் வேறு; பயனீட்டாளர்களின் எண்ணமும் இலக்கும் வேறு. பயனீட்டாளர்களின் நன்மையை எண்ணாமல் இருந்தால் இலக்கை எளிதில் அடையலாம் என்பது வணிகர்களுக்குத் தெரியும்.
பெப்பெப்பே
இப்போது உலகம் முழுவதும் இதே நிலை தான்,நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒன்று
இவன்
WWW.TAMILKUDUMBAM.COM
பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துக்க
விலையேற்றம் என்பது அங்குமட்டுமல்ல உலகம் முழுவதிலும் அதிகரித்திருக்கின்றது.
நல்ல பதிவு, ஆனால் மலேசியப் பதிவர்கள் மட்டும் ரசிக்கும் விதமாக அமைந்துவிட்டது. சற்றே உலக நிலவரத்தையும் அலசியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும். நல்ல முயற்சி
விக்கி வணக்கம்.விலையேற்றத்தின் அட்டகாசம் உலகெங்குமே.யார் கேள்வி கேட்க முடியும் என்கிற மாதிரித்தான் எல்லா அரசாங்கங்களும்.
அருமையான பதிப்பு. சிந்தனையைத் தூண்டும் குறிப்புகள். வணங்குகிறேன்!
@சதீசு குமார்
வருகைக்கு நன்றி. பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி அரசியல் பிரச்சனைகளை மூடி மறைக்க பார்க்கிறார்களோ என்னவோ...
@அ.நம்பி
மிகவும் எளிமையாக விளக்கம் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா. வருகைக்கு நன்றி..
@ஆட்காட்டி
என்ன சொல்லவரிங்க.. மக்கள் ஊமையாக இருக்க வேண்டும் என்றா... இல்லை நீ என்ன சொன்னாலும் நடப்பதுதான் நடக்கும் என்றா?
@தமிழ் குடும்பம்
வருகைக்கு நன்றி... உங்கள் விளம்பர பின்னூட்டங்களை பல பதிவுகளில் காண முடிகிறது. மீண்டும் நீங்கள் விளம்பர பதிவிட்டீர்கள் என்றால் அது வெளியிடப்படாது.
@ச.இலங்கேஸ்வரன்
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...
@விஜய்கோபால்சாமி
மிக்க நன்றி...
@ஹேமா
சரியாக சொன்னீர்கள்...
@மு.வேலன்
மிக்க நன்றி அன்பரே... உங்கள் பதிவுகள் அருமை..
நான் நக்கல் பண்ணினன். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. மக்கள் இனியாவது விழிப்பார்களா?
Post a Comment